பிரம்மராஜன்

பிரம்மராஜன் நவீன தமிழ் இயக்கத்தின் முக்கிய புள்ளி. கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், மீட்சி சிற்றிதழின் ஆசிரியர். அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் பாங்குற அற்புத பணிகளை இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு செய்து வருகின்றார். லத்தீன் அமெரிக்க சிறுகதைகள், உலகக் கவிதைகள், ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் போன்ற பல படைப்புகளை நமக்கு வழங்கியுள்ளார். இசையிலும் இவருக்கு நாட்டம் உண்டு. சேலத்தில் ஆச்சாரமான வைணவக் குடும்பத்தில் பிறந்து சைவத்தைப் போற்றி பொதுத் தளத்தில் அனைவரும் சமன்பாடான நலன்கள் பெற வேண்டுமென்ற கருத்தோட்டத்தைக் கொண்டவர். இப்படி அலட்டல் இல்லாத ஆளுமைகளை நாம் கொண்டாட வேண்டும். அவர் மொழிபெயர்த்த கவிதை:

இந்த லண்டன் நகரின் புதிர்ச்சுழல்வழிகளில்
மனிதத் தொழில்களிலேயே மிகவும் விநோதமானதைத்
தேர்ந்தெடுத்திருக்கிறேன் –
ஒவ்வொன்றுமே அதனதன் வழியில் விநோதமானது என்றாலும் கூட.
சிக்காமல் நழுவும் பாதரசத்தில்
சித்துமணிக்கல்லினைத் தேடித்திரிந்த பொன்மாற்றுக்காரர்கள் போல
நான் சாதாரன வார்த்தைகளை மாற்றுவேன் –
சீட்டாட்டத்தில் கள்ளத்தனம் செய்பவனின் குறியிடப்பட்ட சீட்டுகள்,
ஜனங்களின் பிரயோகங்கள் அவற்றினுடையதேயான மந்திரத்தை ஈந்துவிட
‘தோர்’ உத்வேகப் புத்துணர்ச்சியாயும் திடீர் வெடிப்பாகவும்
இடியாயும் வழிபாடுமாய் இருந்த காலத்தில் போல
என்னுடைய முறை வருகையில் நித்தியத்துவமான விஷயங்களைச் சொல்வேன்.
பரனின் பெரும் எதிரொலியாக இருப்பதிலிருந்து
தகுதி இழந்துவிடாதபடி பார்த்துக் கொள்வேன்.
நானாக இருக்கும் இந்த தூசி அழிவற்றதாக ஆகும்.
ஒரு பெண் என் காதலைப் பகிர்ந்து கொள்வாளாயின்
என் கவிதை ஒரே மையத்தைக் கொண்ட சொர்க்கங்களின்
பத்தாவது கோளத்தினை உரசிச் செல்லும்.
ஒருத்தி என் அன்பை உதறிச் செல்வாளாயின்
காலத்தின் ஊடாக அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும்
ஒரு அகண்ட நதியென என் வருத்தத்திலிருந்து என் இசையை உருவாக்குவேன்.
நானே பாதி பார்த்து மறந்து போகும் முகமாவேன்.
ஆசிர்வாதம் மிகுந்த விதியைக் கொண்ட காட்டிக் கொடுப்பவனாய் இருத்தலை
ஏற்றுக் கொண்ட யூதாஸ் ஆவேன்.
சதுப்பு நிலங்களில் இருக்கும் ‘காலிபனும்’ நானாவேன்.
நம்பிக்கையோ பயமோ இன்றி இறக்கும் கூலிக் கொலைகாரனாகவும் ஆவேன்.
தலைவிதியால் மோதிரம் திருப்பப்படுதலை பீதியுடன் பார்த்த
பாலி கிரேட்டஸும் நானாக ஆவேன்.
பாரசீகம் எனக்கு நைட்டிங்கேல் பறவையையும்
ரோம் எனக்கு உடைவாளையும் தரும்.
அவசங்களும் முகமூடிகளும் புத்துயிர்ப்புகளும்
எனது விதியை நெய்து, நெய்ததைப் பிரிக்கும்
பிறகு ஏதோ ஒரு புள்ளியில்
நான் ராபர்ட் ப்ரெளனிங் ஆவேன்.

  • ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் என்ற கவிஞனின் உலகம்

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
02.09.2020

Share Button
Share