சென்னையின் பாரிமுனை பகுதி பற்றி சில பதிவுகள்…

கடந்த 18.09.2014 அன்று வெளியான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ முதல் பக்கத்தில், ‘Chennai’s oldest telephone line is ringing loud and clear at 100’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையின் முதல் தொலைபேசி நிலையம் சி. ஆதிகேசவ செட்டியை நிர்வாக இயக்குநராக கொண்டு இயங்க ஆரம்பித்தது என்ற செய்தியும், ஆங்கில இந்து இதழில் (11.08.2014) மெட்ரோ ப்ளஸ் இணைப்பில் ‘On the Theatre trail’ என்ற தலைப்பில் சீனிவாச இராமானுஜர் எழுதிய ஜார்ஜ் டவுன் பத்தியும் படித்தவுடன் கடந்தகால நினைவுகள் மலரும் நினைவுகளாக மலர்ந்தது.

கடந்த 1970களில் சென்னை சட்டக் கல்லூரி மாணவராக படித்துக் கொண்டு, பிராட்வேயிலிருந்த சென்னைப் பல்கலைக் கழக விடுதி கிளப்பில் தங்கியிருந்த காலத்திலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தபோதும், சகாக்களோடு பாரிமுனை பகுதியில் கால் பதிக்காத இடம் கிடையாது. அந்த சகாக்களில் பலரும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், வெளிநாட்டுத் தூதரகங்களில் பொறுப்புகளிலும், இந்தியாவின் பல பகுதிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவும் பதவிகளிலும், வழக்கறிஞர்களாகவும் உள்ளனர். தம்புச் செட்டித் தெரு, லிங்கி செட்டித் தெரு, முதல் லைன் கடற்கரை சாலை, அரண்மனைகாரர் தெரு, பிராட்வே, பவழக்காரத் தெரு, செம்புதாஸ் தெரு, லோன்ஸ் ஸ்கொயர், ஆண்டர்சன் தெரு, பந்தர் தெரு என பாய்க்கடை வரை நடந்து திரிந்த காலங்கள், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தியை படித்தவுடன் நினைவில் நிழலாடுகிறது.
பேரறிஞர் அண்ணா, இரா.செழியன் அறையில் 1950-60களின் காலகட்டத்தில் தங்கிய பகுதி (தற்போது தமிழ்நாடு கூட்டுறவு வங்கி கட்டடம்), பவழக்கார தெரு, தேவராஜ முதலி தெரு, கோகலே அரங்கம் போன்றவை தி.மு.க. வரலாற்றில் இடம் பெற்ற இடங்களாகும். மக்கள் திரள் முன் பண்டித நேரு முதல் பல தலைவர்கள் பேசிய அரங்கம், அரண்மனைக்காரர் தெருவில் உள்ள கோகலே அரங்கமாகும்.

இன்றைக்கும் ஒய்.எம்.சி.ஏ.வில் உள்ள நைநான்ஸ் உணவு விடுதியில் கிடைக்கும் சிக்கன் பிரைட் ரைசும், சிக்கன் லெக் பீஸ் கறியும், புட்டிங் சுவையாக இருக்கும். தம்புச் செட்டித் தெருவில் உள்ள உடுப்பி ஓட்டல், அரண்மனைக்காரர் தெருவில் உள்ள பாலிமர் உணவு விடுதி, சட்டக் கல்லூரி எதிரில் உள்ள அம்பிஸ் கஃபே போன்றவற்றில் சுவையான சைவ உணவுகள், அளவற்ற மதிய சாப்பாடு கிடைக்கும். பவழக்கார தெருவில் உள்ள இட்லி கடையில் சூடான இட்லி மற்றும் ஆந்திரா உணவுகள் நள்ளிரவு வரையும் கிடைக்கும். குறளகம் வந்தபின் பதநீருக்கு பஞ்சமில்லை.

செங்கல்பட்டில் பிறந்த பிரபல பாலிவுட் நடிகை வகிதா ரஹ்மான் போன்ற பல பாலிவுட் நடிகை, நடிகரெல்லாம் வந்து தங்கிய விடுதி தான் தம்புச் செட்டி தெருவின் தெற்கு முனையில் இருந்த உடுப்பி ஓட்டல். தமிழ்நாட்டில் பிற்காலத்தில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி, எங்கள் நெல்லை பகுதியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ராஜாஜி குஞ்சிதபாதம், சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு, கோவை கம்பன், பி.ஜி. கருத்திருமன், தூத்துக்குடி ஏ.பி.சி.வீரபாகு, சங்கரன்கோயில் அம்பலவாணன் பிள்ளை போன்றோர்களை அங்கு சென்று சந்தித்ததுண்டு.

பாரி நிலையம், திருநெல்வேலி சைவச் சித்தாந்தக் கழகம் போன்ற பல பதிப்பகங்கள் பிராட்வே பகுதியில் இருந்தன. இரத்தின நாயகர் பதிப்பகம் கொண்டித் தோப்பில் இருக்கின்றது. எழுத்தாளர்களான மு.வ., அகிலன், நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, தி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், வல்லிக்கண்ணன், நகுலன் போன்ற பல ஆளுமைகள் இப்பகுதியில் உலாவியதை பார்த்ததுண்டு. அதிகாலையிலேயே காய்கறிகள் வந்து சேரும் கொத்தவால்சாவடி இங்குதான் இருந்தது.
கம்யூனிஸ்டு கட்சியின் ஜனசக்தி ஏடு பிராட்வேயிலிருந்து வெளிவந்தது. தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்டு தலைவர்களும், அக்கட்சியின் கூரியர்களாக பணியாற்றியவர்களும் பிராட்வே தெருவில் நடமாடாமல் இருந்திருக்க முடியாது. ஜனசக்தி ஏடு வெளிவந்த சிகப்பு சாயம் பூசிய கட்டடத்திற்குள், ஜீவா, பி. ராமமூர்த்தி, பாலதண்டாயுதம், ஜெயகாந்தன் போன்ற தலைவர்கள் வருவது வாடிக்கை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவரும், எங்கள் பகுதியைச் சேர்ந்தவருமான மறைந்த சோ.அழகரிசாமி எம்.எல்.ஏ. (கோவில்பட்டி) என்னை பல சமயம் அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள பேனாக் கடையில் பல வகையான பேனாக்கள் உண்டு. விரும்பிய பேனாவை வாங்கிக் கொடுப்பார்.

என்.எஸ்.ஸி.போஸ் ரோடு, குறளகம் எதிரில் ஜெட் பேனா கடையும், சட்டக் கல்லூரிக்கு எதிரில், தமிழ் மீது பற்றுக்கொண்ட கேரள நாயர் ஒருவர் நடத்திய பேப்பர் கடையும் பிரபலம். அந்த பேப்பர் கடையில் இந்திய, வெளிநாட்டு பத்திரிகைகள் அனைத்தும் கிடைக்கும். குறிப்பாக அன்றைக்கு வெளிவந்த கணையாழி, தற்போது நின்று போன ஆங்கில ஏடுகளான இல்லஸ்டிரேட்டட் வீக்லி, ஆன் லுக்கர், சுயராஜ்யா, லிங்க், கரண்ட், பிளிட்ஸ், மெயில் (தினசரி – மாலை) உட்பட தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்ற காரவன், ஈ.பி.டபிள்யூ., மெயின்ஸ்ட்ரீம், செமினார் மற்றும் வெளிநாட்டு ஏடுகளான Life,Imprint போன்ற ஏடுகள் கிடைக்கும். நான் கடைக்கு வருவதைப் பார்த்தவுடனேயே நான் விரும்பும் ஏடுகளை கையில் கொடுத்து விடுவார். பாரிமுனையில் ஹேண்ட்லூம் கடை, இராமகிருஷ்ணா ஸ்வீட்ஸ், பி.டி. பெல்ஸ் புத்தகக் கடை, நியோ ரங்க விலாஸ் போன்றவற்றையெல்லாம் மறக்க முடியாது.

பிராட்வேயில் உள்ள சென்னைப் பல்கலைக் கழக யூனிவர்சிட்டி கிளப் மாணவர் விடுதியில் தங்கியிருந்தபொழுது மினர்வா, பிராட்வே, பிரபாத், முருகன் போன்ற இப்பகுதி தியேட்டர்களில் இரவுக் காட்சிகளுக்கு, இரவு 9 மணிக்கு செல்வது உண்டு. குறிப்பாக மினர்வா தியேட்டரில் ஆங்கில திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்படும். சென்னைக்கு ஒரு அடையாளமாகத் திகழ்ந்த மினர்வா தியேட்டர் இன்றைக்கு பாட்சா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அதனுடைய பழைய வடிவம் மாறிவிட்டது. மினர்வாவில் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், தலைவர் கலைஞர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஆர். வெங்கட்ராமன், வி.வி.கிரி, சென்னை மாநில கவர்னராக இருந்த ஜெயசாமராஜ உடையார், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜோதி வெங்கடாசலம், ராமையா, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி, திரைப்படத் துறையைச் சார்ந்த ஆளுமைகளான மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன், ஜெமினி கணேசன், பானுமதி, பத்மினி, எஸ்.ஜி. வரலட்சுமி என்று பலரும் இந்த திரையரங்குகளில் குறிப்பாக ஆங்கிலப் படங்களை பார்க்க வருவதுண்டு.
பொங்கல், தீபாவளி சமயத்தில் புதிய படங்கள் வெளியிடும் தருவாயில் மக்கள் திரள் அலைமோதும். அப்போதெல்லாம் திரைப்படங்கள் 100 நாளை தாண்டி, 150 நாள்கள்கூட ஒரே தியேட்டரில் திரையிடப்பட்டது. கால மாற்றத்தினால் இன்றைக்கு ஒரு காலத்தில் போற்றப்பட்ட இந்த அரங்கங்கள் மனதில் நினைவுகளாக உள்ளன. இன்னொரு செய்தி. தி.மு.க. பங்கேற்ற முதல் பொதுத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா, நாஞ்சிலார் என அழைக்கப்பட்ட நாஞ்சில் கி. மனோகரனை, நாகப்பட்டினம் நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளராக அறிவிக்க நினைத்தபொழுது, காலை 11 மணியளவில் அவரை எங்கு தேடியும் அகப்படவில்லை. உடனே அண்ணா சொன்னார்; மனோகரனை மினர்வா தியேட்டரில் போய் பாருங்கள் என்று வேடிக்கையாக சொன்னது உண்மையாக இருந்தது. நாஞ்சிலார் மினர்வா தியேட்டரில் படம் பார்க்கும்பொழுதே வேட்பாளர் ஆனார்.

பிராட்வேயில் இருந்த யூனிவர்சிட்டி கிளப்பில் சுவையான, சூடான உணவு எப்பொழுதும் கிடைக்கும். அந்த கிளப்பில் கெஸ்ட்டோடு (விருந்தினர்) உண்பதுதான் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களின் வாடிக்கை. அங்கு குறிப்பாக பில்டர் காபி, மசால் தோசை, லெக் பீஸ் சிக்கன், பிரியாணி ஆகியவை வரவேற்பைப் பெற்றதாகும். அதுமட்டுமல்லாமல் பிரிட்டிஷ்காரர்களால் வடிவமைக்கப்பட்டு அவர்கள் பயன்படுத்திய நூலகம், ஜிம், டேபிள் டென்னிஸ் அரங்கம் என்று சகல வசதிகளோடு இருக்கும். காலை படுக்கையிலிருந்து எழுந்தவுடன் அறைக்கு காபி அல்லது தேநீர் வந்து சேர்ந்துவிடும். வேறு எந்த கல்லூரி விடுதியிலும் இம்மாதிரியான அனுமதி கிடையாது. இந்த விடுதியில் தங்கி படித்தவர்கள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் என பலரைச் சொல்லலாம். தலைமறைவாக வாழ்ந்த, ஆந்திரா மக்கள் யுத்த பிரதிநிதிகள் இந்த விடுதியில் அவ்வப்போது தென்படுவார்கள். இன்றைக்கு அந்த விடுதி தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை வசம் சென்றுவிட்டது. அந்த விடுதியை இன்றைக்கு இடிபாடோடு பார்க்க மனது ஒப்பவில்லை. அந்த விடுதியில் தங்கி படித்த முன்னால் மாணவர்கள் திரும்பவும் கூடினால் மகிழ்ச்சியாக இருக்கும்!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-09-2020

Share Button
Share