சமீப காலமாக கடலினுடைய சீற்றம் அதிகரித்து வருகின்றது. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கடல் அலையின் வேகத்தால் கடல்நீர் உட்புகுந்தது. குமரி மாவட்டத்திலும் தொடர்ந்து, தேங்காப்பட்டினம் பகுதியில் உள்ள இராமன் துறை, புத்தன் துறை, கடியப்பட்டினம், குளச்சல், பூத்துறை போன்ற பகுதிகளில் கடல் உள்வந்து வீடுகளும், கிறித்துவ தேவாலயங்களும் சேதமடைந்துள்ளன. தேங்காப்பட்டினம் ரம்யமான கடற்கரையாகும். இங்கு ஆர்ப்பரித்து எழுகின்ற கடல் காட்சி அற்புதமாக இருக்கும். இங்கு பொழிமுகம் என்பது ஆறும் கடலும் சங்கமிக்கும் இடமாகும். இங்குள்ள படகு சேவையை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புவது உண்டு. அங்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இருந்த கடல் உள்வாங்கி விட்டது. நாளுக்கு நாள் தேங்காப்பட்டினத்தின் பரப்பு குறைந்து வருகின்றது. அங்குள்ள வள்ளவிளை, தூத்தூர், முள்ளுர், இனயம்புத்தன் துறை, ராஜாக்கமங்கலம் போன்ற கடலோர பகுதிகளிலும் கடல் அலைகள் பேரிரைச்சலோடு 25 மீட்டருக்கு மேல் சீறிவந்து அங்குள்ள வீடுகளை தரைமட்டமாக்கியது இங்கு பல இடங்களில் கடற்கரை சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனி ஆடி மாதங்களில் அலைகளின் வேகம் சற்று அதிகமாக இருக்கும். தற்போது அலைகளின் வீச்சுகள் பயங்கரமாக இருக்கிறது. இதனால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டு அங்குள்ள மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்து வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த கடல் அரிப்பைத் தடுக்க தற்காலிக நடவடிக்கை இல்லாமல் நிரந்தரமாக கடல் அரிப்பு தடுப்பு திட்டங்களைக் கொண்டு வரவேண்டும்.     அதுபோலவே முட்டம், குமரி முனை போன்ற கடற்கரை பகுதிகள் மட்டும் அல்லாமல் நெல்லை மாவட்டத்தின் உவரி போன்ற பகுதிகளிலும் கடலின் சீற்றம் அவ்வப்போது ஏற்படுகின்றது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய வட்டாரங்களிலும் இதே பாதிப்பு. இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரையை ஒட்டிய இராமேஸ்வரம், வாலிநோக்கம் மற்றும் வேதாரண்யம், கோடியக்கரை போன்ற இடங்களில் கடல் கொந்தளிப்பு. 

அலைகள் சீறிவரும் கடலை ‘கத்தும் தரங்கம்’ என்று அழைத்தனர். எனவே, கடல் அருகில் இருந்த ஊர் தரங்கம்பாடி என்று மாறியதாக செய்திகள் உள்ளன. கடந்த காலங்களில் லெமோரியா கண்டம் கடலால் பாதிக்கப்பட்டது. பூம்புகார் நகரம், மாமல்லபுரம், 1964ல் தனுஷ்கோடி ஆகிய நகரங்களும் கடல் அலைகளால் அழிந்தன என்பது வரலாற்றுச் செய்திகள். கடல் அலைகளை; அலைகள், பொங்கும் அலைகள், புயல் அலைகள், சுனாமி என்று வகைப்படுத்தலாம். தட்பவெப்பம், கால மாற்றங்களுக்கேற்ப, பூமியின் நிலைமைக்கு ஏற்றவாறு இவை ஏற்படுகின்றது. 

கடந்த 2004இல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின் கிழக்கு கடற்கரை ஓரங்களில் தமிழகத்தில் மட்டுமல்லாமல், ஒரிசா எல்லை வரை இதேபோல இயற்கையின் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மெரினாவுக்கு அடுத்த நீண்ட கடற்கரையான கடலூர் கடற்கரையும் பாதிப்பில் உள்ளது. தாழங்குடாவிலிருந்து கடலூர் வரை உள்ள 3 கி.மீ. நீண்ட கடற்கரையை ‘சில்வர் பீச்’ என்று அழைப்பார்கள். இந்த பரப்பும் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. திருச்செந்தூரில் மட்டும் கடல் தன்னகத்தே உள்வாங்கி கொள்கின்ற வித்தியாசமான நிலை காணப்படுகின்றது. இந்த இயற்கை மாற்றங்கள் விநோதமாகப்பட்டாலும் இதுகுறித்த அக்கறையோடு, நமது பாதுகாப்புக்காக ஆய்வுகளும் செய்யப்பட வேண்டும். கடல் சார்ந்த நெய்தல் பகுதி மூலம் நாட்டிற்கு பல அரிய நன்மைகள் ஏற்படுகின்றன.

மீனவர்களும் கடலுக்கு செல்ல முடியவில்லை. மீன் வளமும் குறைந்து விட்டது. ஆற்றுநீர் கடலுக்குச் செல்வதால் மீன் வளம் பெருகுகிறது. கடல் அரிப்பைத் தடுக்கவும் மீனவர்களுடைய கட்டு மரங்களை நிறுத்தவும் கடல் ஆழமுள்ள பகுதிகளில் தூண்டில் வளைவுகள் என்ற அமைப்பை கட்ட 1999ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் திட்டமிடப்பட்டது. இம்மாதிரி முறை கேரளத்தில் முதன்முதலாக கடைப்பிடிக்கப்பட்டது. கற்களைப் போட்டு கடல் அரிப்பைத் தடுக்க சுழியுள்ள பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படுகின்றன. காற்றின் வேகம் உள்ள பகுதிகளிலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு கடலின் பல பகுதிகளில் தூண்டில் வளைவு அமைப்பதால் கடல் சீற்றமும் அதிகமாகிறது.

இந்தியாவில் தமிழகத்திலும், குஜராத்திலும் தான் முத்து வளம் உள்ளது. குறிப்பாக மன்னார் வளைகுடாவில் ‘பில்டோ ப்யூக்டோ’ என்று அழைக்கப்படுகின்ற முத்துச் சிப்பிகள் கடற்கரை ஓரத்திலிருந்து 1020 கி.மீ. தூரத்திலும், 1424 கி.மீ. ஆழப் பகுதியில் உள்ளது. கடலில் சிப்பிகளுக்கு தேவையான இயற்கை உணவுகளும் இல்லாமல் போய்விட்டது. கடல் அலைகளின் கொந்தளிப்பால் முத்துச் சிப்பிகள் உருமாற்றம் அடைவதிலும் சிக்கல்கள் உள்ளன. இன்றைக்கு லட்சக்கணக்கில் முத்துச் சிப்பிகள் சேகரிக்கப்பட்டாலும் அவற்றில் முத்துகள் கிடைப்பதில்லை. முத்துச் சிப்பிகளை எடுக்கப் பயன்படும் மடிவலைகளால் முற்றிலும் உருவாகும் சிப்பிகளாக வருவதில்லை. உப்புத் தொழிலும் சீரழிந்து வருகிறது. தூத்துக்குடியில் உப்பளத் தொழில் ஓங்கி வளர்ந்த பகுதியில் உப்புத் தொழிலாளர்கள் இன்று வாடுகின்றனர். இதுவும் இயற்கையின் மாற்றமாகும்.

கடல் மட்டம் உயருதல், மழை காலத்தில் கடும் வெயில், கோடையில் ஒரு சில நேரங்களில் மழை, உலகம் வெப்பமயம் என்ற இயற்கையின் மாற்றங்களை கேட்டால் ‘கிளைமேட் சேன்ஞ்ச்’ என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. கிழக்கு கடற்கரை பகுதியில் நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், விஜயநாராயணம், சென்னைக்கு அருகே உள்ள கல்பாக்கம் போன்ற இடங்களில் அணு சம்பந்தமான கேந்திரங்கள் உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து ஆபத்துக்கள் வந்தால் இந்த அணு நிலையங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதனால் ஏற்படும் பின் விளைவுகள் உயிரினங்கள் அனைத்திற்கும் பெரிய கேட்டையும் விளைவிக்கும். இன்றைக்கு இமய மலையில் கூட பனிப் பாறைகள் உருகிவிட்டன. கங்கை, சிந்து உற்பத்தியாகும் இடங்கள் மட்டுமல்லாமல், சிரபுஞ்சியில்கூட வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கின்றது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். பூமியின் சராசரி தட்பவெப்ப நிலை 15 டிகிரி செல்சியஸ் என்கிறார்கள். இதில் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை பசுமை படர்ந்த திட்டுக்களாலான படலம் என்பது இயற்கையின் அருட்கொடை. சூரிய கதிர்கள் பூமியில் படும்பொழுது இந்தப் படலம் வெப்பத்தை பூமியின் மேல் படாமல் காக்கின்றது. இந்த ஓசோன் பகுதி தன்மை இழந்து விட்டதாகவும், இதில் ஓட்டைகள் உள்ளதாகவும், அதனால் சூரிய வெப்பம் பூமியைத் தாக்குவதாக சொல்கின்றனர்.

ஓசோனில் ஏற்பட்ட ஓட்டைக்கு காரணம் குளோரோ புளோரோ கார்பன் ஆகும். ரெப்ரிஜிரேட்டர், ஏ.சி. கருவிகள், ஸ்ப்ரே, பெட்ரோல், டீசல், தரையைத் துடைக்கப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள வேதியல் பொருளிலிருந்து கார்பன் வானத்தை நோக்கிச் செல்லும் போது சூரியனின் அல்ட்ரா வய்லட் கதிர்களால் குளோரின் பிரிகிறது. இந்த குளோரின் ஓசோனை அடையும்பொழுது ஓசோன் படலம் ஓட்டையடைகின்றது. இதைத் தடுக்கும் வகையில் 1992ல் மான்ட்ரியல் நகரில் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டில் ஓசோனை பாதிக்கும் பொருட்களை குறைக்க வேண்டும் என பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொழிற்சாலை புகைகள், வாகன கழிவுகள், பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்றவற்றிலிருந்து வாயுக்களைத் தாக்கும் நச்சுத் தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் பூமியின் வெப்பம் கூடுதலாகி விட்டது. தற்பொழுது ஏறியுள்ள 0.6 டிகிரி செல்சியஸ், எதிர்காலத்திலும் இதே நிலைமை நீடித்தால் 4 டிகிரி ஏறிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து, 16 ஆண்டுகளுக்கு முன் ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற ஐ.நா. உச்சி மாநாட்டில் தெளிவான முடிவு எடுக்கப்பட்ட பொழுதும், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

கடல் உட்புகுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து நீரின் சுவையும் கெட்டு விட்டது. அதுமட்டுமல்லாமல் மண் வளம், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் யாவும் குறையும். நூற்றாண்டு காலம் இருந்த ஆலமரம் போன்ற பெரும் விருட்சங்கள்கூட அழிந்துவிடும்.

ஏற்கனவே பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் உள்ள குறிப்பாக தென் மாநிலங்களில் இதுவரை பூகம்பங்கள் ஏற்படவில்லை. ஆனால் நில அதிர்வுகள் உணரப்பட்ட சம்பவங்கள் தொடர்கின்றன. 

மரங்கள் வெட்டப்பட்டதாலும் பறவைகளின் நடமாட்டமும் குறைந்துவிட்டன. ராஜஸ்தானில் உள்ள தார்பாலைவனத்தில் ஆண்டுதோறும் 0.1 கி.மீ. அளவிற்கு அதன் பரப்பு கூடுதலாக விரிந்து வருகிறது. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்களின் இடப்பெயர்ச்சியும் இதற்கு ஒரு காரணமாகும். தொழிற்சாலைகளின் கழிவுகள் சரியாக சுத்திகரிக்கப்படாதது போன்றவை தட்பவெப்ப நிலையின் மாற்றத்திற்கு காரணங்களாகும்.

புவி வெப்பத்தால் உலகில் உள்ள பனிப் பர்வதங்கள் உருகி ஆறுகள் உற்பத்தி நின்றுவிடும். கடலுக்கு செல்கின்ற நீர்வரத்து இருக்காது. எனவே, உலகளவில் கடலின் மட்டம் உயரும். 2100இல் கடல் மட்டம் 1 மீட்டர் அளவு உயரும் என்று கூறுகின்றனர். பூமி வெப்பம் 1.8 டிகிரி முதல் 4 டிகிரி அதிகரித்தால் கடல் மட்டம் மேலும் உயர்ந்து பருவகால மாற்றங்களால் சுனாமி, வறட்சி, புயல், திடீர் வெள்ளம், கனமழை, கடும் வெயில் என்று மாயாஜாலமாக காட்சிகள் அரங்கேறும். இதனால் மனித குலமே இந்த பூமிப் பந்தில் பெரும் அழிவுக்கு உள்ளாகும். இதைத் தடுக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க உலகளவில் சகலரும் பாடுபட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அந்த கடமையை செய்யவில்லை என்றால் பேரபாயம் ஏற்படும். இதில் நாடுகள், அரசியல், மதம், இனம், கலாச்சாரம் என்று பாராமல் அனைவரும் உலக அளவில் ஒன்றுபட வேண்டிய தருணமாகும் இது.