பழவேற்காடு அன்று, தமிழ் மன்னர்கள், நாயக்கர் மன்னர்களின் கேந்திர பகுதி; ஆதியில் கீர்த்தி பெற்ற துறைமுகம்; போர்ச்சுகீசியர்கள், டச்சு வணிகர்கள் வியந்த நெய்தல் நிலம். அன்றைய மேற்கத்தியர்கள் விரும்பிய கிராம்பு, லவங்கம் போன்ற பொருட்கள் ஏற்றுமதியான துறை. இந்து, கிறித்துவம், இஸ்லாம் என மத நல்லிணக்கத்தை அன்றே நிலைநாட்டிய தமிழ் மண். இன்று, வைகறை, கறுக்கல் பொழுதில் குளிமையான உப்பு காற்று; பறவைகளின் சத்தம்; உயரமான சவுக்கு மரங்கள் மற்றும் அதன் கிளைகளின் அமைதியான அசைவுகள், மணல் பரப்புகள் என ரம்மியான நிலை. ஆனால் அந்த இயற்கைச் சூழலை பாதிக்கும் அளவில் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் என்று அறுவருக்கத்தக்க சில காட்சிகள் நடைபெறுகின்றன.

ஒரிசா மாநிலத்தில் உள்ள சில்கா என்ற ஏரிக்கு அடுத்து பழவேற்காடு புலிக்காட் ஏரி இந்தியாவில் இரண்டாவது பெரிய உப்பு ஏரியாகும். பழவேற்காடு ஏரி 60 கிலோ மீட்டர் நீளம், 17.5 கிலோ மீட்டர் அகலம் கொண்டது. தண்ணீர் கொள்ளளவை கொண்டு அவ்வப்போது இதன் அமைப்புகள் மாறுகின்றன. இதன் சராசரி ஆழம் 1 மீட்டர் ஆகும். அதிகபட்சம் 8லிருந்து 10 மீட்டர் ஆழம் ஆகும். இதன் தென் பகுதியில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டமும் வடபகுதியில் ஆந்திரத்தின் நெல்லூர் மாவட்டமும் உள்ளது. தமிழகத்தில் உள்ள புலிகாட் என்ற கிராமத்தைக் கொண்டே இந்த ஏரியை புலிக்காட் (பழவேற்காடு) ஏரி என்று அழைக்கப்பட்டது. இந்திய சர்வே ஆவணங்களிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, பேராசிரியர் ஜெயபால் அசாரியா போன்றோர் பல ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர். இங்குள்ள கோயிலில் கல்வெட்டுகள் குறித்து மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் மேற்கொண்டார். பழவேற்காடு என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வாயில் வராததால் புலிக்காட் என்று அழைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

தலாமி குறிப்பிட்ட பொதுகெ என்பது புலிக்காட் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். நக்கீரரால் சொல்லப்பட்ட பவுத்திரி கோட்டம் என்பது இப்பகுதிதான் என்று அழைக்கப்படுகிறது. பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள ஏரியின் மேற்கே திருப்பாலைவனம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள சிவன் கோவிலை ராஜேந்திர சோழன் கட்டினார். அங்கு பாலை மரம் தலவிருட்சமாக இருந்ததால் பாலைக்காடு என்றும் ஆதியில் அழைக்கப்பட்டது. பாலைக்காடு பாலையூர் ஆனது.

பாலையூர் கோட்டத்தின் அருகில் இந்த பழவேற்காடு அமைந்ததாகவும் அதை ஆனந்தராயன் பட்டினம் என்றும் 1400 முதல் 1521 வரை அழைக்கப்பட்டது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இங்கு அமைந்துள்ள ஈஸ்வரர், ஆதிநாராயணன் பெருமாள் கோவில்கள் யாவும் தற்பொழுது அழிவு நிலையில் உள்ளன. ஒரு சமயத்தில் கடல் சீற்றத்தால் வெள்ளக் காடாக பழவேற்காடு அழிவில் இருந்தபொழுது இரண்டு முட்டைகள் தண்ணீரில் மிதந்து வந்ததாகவும், தண்ணீர் உயரம் எழும்ப எழும்ப முட்டையும் அதற்கேற்றவாறு மிதந்து வந்து முட்டை உடைந்து குஞ்சுகள் வெளியே வரும்பொழுது தாய் பறவை அய்யுற்று வேதனை அடைந்தது. அந்நேரத்தில் தாய் பறவை இறைவனை வேண்டியதால் ஈஸ்வரன் தான் அதன் சேய் பறவைகளை காப்பாற்றினார் என்ற நம்பிக்கை உண்டு. இதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணதேவராயர் பறவைகளை இறைவன் காத்த பகுதியில் ஈஸ்வரன் கோவிலை நிறுவியதாக சைவ மார்க்க செய்திகள் சொல்கின்றன. அதன் பக்கத்தில் ஆதிநாராயணன் என்ற வைணவ கோயிலும் நிறுவப்பட்டது. இவையாவும் பக்தி வழி செய்திகளாகும். வேல மரங்கள் அதிகமாக இருந்ததால் வேலன்காடு, வேற்காடு பின் பழவேற்காடு என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

பாலைக்காடு என்பது பழைய கட்டா என்று மருவி பாலிக்காட், பின் புலிகாட் ஆனது என செய்திகளும் உள்ளன. இங்கிருந்து வணிகத்திற்கு அனுப்பப்பட்ட வேட்டிகள் பிற நாடுகளுக்கு செள்றதாகவும் எனவே அவை பாலைக்காட்டு துணிகள் என்று பெயர் ஏற்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான பல விளக்கங்கள் புலிக்காட் பழவேற்காடு குறித்து உள்ளது. பழவேற்காடு ஏரியின் சூலூர்பேட்டை பகுதியில் செய்யப்பட்ட ஆய்வில் துறைமுகத்தோடு கூடிய கடற்கரை 6000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.

1515ல் இங்கு போர்ச்சுகீசியர்கள் தேவாலயம் கட்டினர். அவர்கள் மூலம் இங்கு கடல் வணிகமும் நடைபெற்றது. பின்னர் இப்பகுதி டச்சுக்காரர்கள் வசம் சென்றது. 1525ல் இந்த துறைமுகம் வழியாக மிளகு, கிராம்பு, சந்தனம், துணிகள், வெள்ளி ஈயம் போன்றவற்றை வெளிநாட்டவர் எடுத்துச் சென்றனர். இங்கு பல்வேறு மதங்கள், கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் 30,000 பேருக்கு மேல் வசித்ததாகவும் அறியப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் இப்பகுதி சென்றது. அருகே உள்ள சென்னப்ப பட்டனம் (இன்றைய சென்னை) சிறப்பு பெற்றவுடன் இந்த துறைமுகத்தினுடைய முக்கியத்துவம் படிப்படியாக குறைந்தது. 1627 தொடர்ந்து 1679, 1776, 1864 ஆகிய ஆண்டுகளில் வீசிய கடும் புயல்களால் கடல் நீர் பழவேற்காட்டிற்குள் உட்புகுந்து அப்பகுதியே அழிவிற்குள்ளானது. அதன் பின்தான் உப்பு ஏரியாக உருப்பெற்று இன்றைய பழவேற்காடு ஏரியாகும். பாலாறு ஆதியில் இங்குதான் கடலில் சங்கமித்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு பழமையில் சிறப்புப் பெற்ற பழவேற்காடு ஏரியில் பறவைகள் வருகின்ற சரணாலயமாக இயற்கையாகவே அமைந்துவிட்டது. பழவேற்காடு 50க்கும் மேற்பட்ட மணல் திட்டுகளாகவும் குன்றுகளாகவும் தீவு வடிவில் அமைந்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுகணை தளம் இதன் ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது.

இவ்வளவு இயற்கை வளம் கொண்ட பழவேற்காடு ஏரி, மீன் பிடித் தொழில் மூலமே ரூ.50 கோடி அந்நியச் செலாவணி ஒரு ஆண்டிற்கு கிடைக்கின்றது. இந்த ஏரியை சுற்றியுள்ள பகுதியும் அதன் தொடர்பும் தமிழகத்திற்கு உரிமையானதாகும். 70% மீனவர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள். மீதி உள்ள மீனவர்களே ஏரியின் வடபுறத்தில் ஆந்திர எல்லையில் உள்ளனர். ஆரணி ஆறு, ஆந்திராவில் இருந்து சுவர்ணமுகி, கலங்கி போன்ற ஆறுகள் இந்த ஏரியில் வந்து சேருகின்றன. 150 மீட்டர் தூரம் வரை கரையில்லாமல் இருப்பதால் கடல் நீர் உட்புகுந்து உப்பு நீராகி விட்டது. நீர் வற்றும்பொழுது இந்த தூரத்தை சுவர் வைத்து தடுத்தால் கடல் நீர் ஏரிக்குள் வருவதை தடுக்கவும் செய்யலாம். மழை காலத்தில் வரும் தண்ணீரை சேமிக்கவும் வசதியாக இருக்கும். இந்த ஏரியின் மூலம் 25 டி.எம்.சி. தண்ணீரை சென்னை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவைக்கு சேமிக்கலாம். அதுமட்டுமல்லாமல் இதனால் புதிய அனல் மின் நிலையங்களும் பயன் பெறும்.

அடிக்கடி ஆந்திர மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. 1956இல் மொழிவாரி மாநிலம் பிரித்தபொழுது இதன் வடகரை ஆந்திரத்தில் சேர்க்கப்பட்டதால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. நம்மிடமிருந்து சித்தூர், நெல்லூர் மற்றும் திருப்பதி ஆகியவை ஆந்திராவிடம் சென்று விட்டதால், பாலாறு, பழவேற்காடு போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.  தமிழக மீனவர்களை ஆந்திர காவல் துறையினர் துன்புறுத்துகின்றனர்.

தெலுங்கு கங்கையைவிட, பழவேற்காடு ஏரியில் திட்டமிட்டு மழை நீரையும் சேமித்து உப்பு சேராத வண்ணம் நடவடிக்கை மேற்கொண்டால், ஒரு பக்கம் குடி தண்ணீருக்கும், இன்னொரு பக்கம் மீன் பிடி தொழிலுக்கும் தனியாக ஒரு பகுதியை அமைத்தால் இந்த ஏரி முழு பயனையும் நமக்கு தரும். ஆந்திர அரசு, பாலாறு பிரச்சனை போன்று இதிலும் தேவையற்ற சர்ச்சையை செய்து வருகின்றது. சமீபத்தில்கூட ஆந்திர எல்லை அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பட்டை குப்பம் கிராமம் மற்றும் பீமனவாரி கிராமம் அருகே உள்ள 1.5 ஏக்கர் நிலம் குறித்து தமிழக ஆந்திர எல்லையோர கிராமத்தினரிடையே சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. ஆந்திர அரசு தமிழக மீனவர்களின் ஆதிபத்யத்தை சற்றும் மதிக்காமல் நடந்து கொள்வது வாடிக்கையாகி விட்டது.

இது ஒரு அற்புதமான சுற்றுலா தளமாகவும் உள்ளது. பொன்னேரியில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் இருக்கின்ற இப்பகுதியை சுற்றுலா முக்கியத்துவம் பெறக் கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இங்கு மணல் திட்டுகளாக உள்ள சிறு தீவுகளில் உள்ள சவுக்குத் தோப்பு இடங்கள் பார்ப்பதற்கு பரவசமாக இருக்கும். காட்டுபள்ளி, காலாஞ்சி, வயலூர் போன்ற கிராமங்கள் இந்த ஏரியை சுற்றியுள்ளன. இங்கு போக்குவரத்திற்கு படகுகள்தான் பயன்படுத்தப் படுகின்றது. பழவேற்காட்டை சுற்றுலா மய்யமாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து அதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இங்கு சமூக விரோதிகள் மது குடிப்பதற்காக வருவதால் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வரவே அச்சப்படுகின்றனர். குடித்துவிட்டு படகில் செல்வதால் விபத்து ஏற்பட்டு பல மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கோ உண்பதற்கோ உரிய விடுதிகள் இல்லை. காவல் துறை பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும். இந்த ஏரியை சுற்றிவர மீனவர்களின் படகுகளில்தான் செல்ல வேண்டும் என்பதால் ரூ.350 முதல் ரூ.400 வரை தரவேண்டும். முட்டுக்காட்டில் இருப்பது போன்ற நவீன விசைப் படகுகளை இங்கு அரசு இயக்க ஏற்பாடு செய்தால் வசதியாக இருக்கும். இன்றைக்கு இங்கு சுற்றுசூழல் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏரிக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படலாம். இந்த ஏரியை சுற்றுலா மய்யமாக்க மாநில அரசு 2.60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதன்மூலம் படகுத் துறை, சுற்றுலா தகவல் மய்யம், வாட்சிங் டவர் ஆகிய வசதிகள் செய்ய இத்தொகை ஒதுக்கப்பட்டது என்று அரசு தகவல் சொல்கிறது.

500, 400 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்மைப்பட்ட பழவேற்காடு கவனிப்பாரற்ற நிலையில் இருப்பது கவலையை தருகின்றது. தொன்மையால் சிறப்புப் பெற்ற இயற்கை தந்த இந்த அருட்கொடையை பழவேற்காட்டை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.