தலைவர் கலைஞர் அவர்களின் சமச்சீர் கல்வித் திட்டம்
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
மானுடத்துக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி என்பது அவசியத் தேவையாகும். கல்வி அடிப்படை உரிமையாக மட்டுமல்லாமல் கட்டாயக் கல்வி வேண்டும் என்று நீண்டகாலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. கல்வி ஏற்றத் தாழ்வு இல்லாமல் சம உரிமையோடு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தலைவர் கலைஞர் அவர்களுக்கு இருப்பதால் சமச்சீர் கல்வியை தமிழகத்திற்கு அர்ப்பணிக்க இருக்கின்றார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், ஜீவா போன்றவர்களுடைய கனவு தலைவர் கலைஞர் அவர்களால் அண்ணா நூற்றாண்டு விழாவில் நனவாகி விட்டது.
நாடு விடுதலை பெற்ற பின் கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதை வழங்குவதில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. கிராமப்புற மாணவர்களுக்கும், சமுதாயத்தில் அடித்தளத்தில் உள்ளவர்களுக்கும் சிறப்பான முறையில் கல்வி வசதிகள் சென்றடையவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகி கல்விக் கட்டணங்களும் உயர்ந்ததால் மேட்டுக்குடி மக்கள்தான் உயர்ரகமான கல்வியைப் பெறமுடிந்தது. ஆனால் சமுதாயத்தில் கீழ்த்தட்டு மக்கள் அந்த அளவுக்கு தங்களுடைய குழந்தைச் செல்வங்களை பல கல்வி நிலையங்களில் சேர்க்க முடியாமல் தவித்தது உண்டு. தாங்கள் எப்பாடு பட்டாலும் தங்களுடைய குழந்தைகளுக்கு தரமான கல்வி தரவேண்டும் என்று கடன் வாங்கி படிக்க வைக்கின்ற அவலநிலை இருக்கின்றது. இதற்கு காரணம் என்னவென்றால் சமச்சீரான கல்வி எல்லா பாடசாலைகளிலும் இல்லாத நிலைமைதான்.
மத்திய அரசு நடத்துகின்ற சி.பி.எஸ்.இ. என்ற கல்வி திட்டம் இதற்கு என்று தனியாக பாடத் திட்டங்கள், பாட நூல்கள், வித்தியாசமான தேர்வு முறைகள் உள்ளன. மாநில அரசு நடத்தும் ஸ்டேட் போர்டு என்ற கல்வி முறை, தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தும் மெட்ரிகுலேசன் கல்வி முறை, அதற்கடுத்து ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டம் இப்படி பல வகையான கல்வித் திட்டங்கள், தேர்வுகள், தனித்தனியாக சான்றிதழ்கள் என்ற நிலை இன்றைக்கு இருக்கின்றது. மத்திய அரசு நடத்துகின்ற சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கல்வியின் தரம் உயர்ந்து இருக்கின்றது என்று மாணவர்கள் அப்பள்ளிகளில் சேர்வதில் போட்டி அதிகமாக இருக்கின்றது. இவையாவும் நகர்ப்புற அளவில் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் அதிகமான மதிப்பெண்கள் பெற்று மேற்படிப்புக்கு தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால் அரசு உதவி பெறுகின்ற பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் கல்வி தரம் இந்த அளவு இல்லாமல் பெரிய வித்தியாசம் ஏற்படுவதால் இயற்கையாகவே கிராமத்தில் உள்ள கீழ்த்தட்டு மாணவர்கள் பல அவலங்களுக்கு உள்ளாகின்றனர். இவற்றையெல்லாம் உணர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வி திட்டத்தை அறிவித்து அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கச் செய்துள்ளார்.
இன்றைக்கு கிராமப்புறங்களில் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளி என்ற நிலைமை மாறி 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் இத்திட்டத்தால் மாற்றங்கள் ஏற்படும். எனவே ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் என்றிருந்தால் மாணவர்களின் மீது தனி கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் முறைப்படுத்தப்பட்ட ஒரே வகையான கல்வி முறையும், பாடத் திட்டங்களும் அமையும். கடந்த காலங்களில் ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவர்கள் எளிதாக போட்டித் தேர்வுகளில் கிராமப்புற மாணவர்களைவிட முன்னிலையில் இருந்தனர். இத்திட்டத்தினால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை களையப்படும். மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதிகள் பார்க்கப்படுவதில்லை. மற்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதிகள் வைத்துள்ளது போன்ற நடைமுறை மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் இனிமேல் வரும். தற்போது பல மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான தகுதிகள் இல்லாதவர்கள்கூட பாடங்களை போதிக்கின்றனர்.
சமச்சீர் கல்வி திட்டத்தைப் பற்றி அறிய முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, இத்திட்டம் குறித்து ஆய்ந்து ஒரு விரிவான அறிக்கையை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கி, அதுகுறித்தான விவாதங்கள் நடத்தப்பட்டு சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கழக அரசு அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் கல்வி பற்றி அறிய அமைக்கப்பட்ட 1966இல் கோத்தாரி கமிஷன், 1991இல் இராமமூர்த்தி கமிஷன், 1993இல் யஷ்பால் கமிஷன் போன்றவை சமச்சீர் பொதுக்கல்வி வேண்டும் என்றுதான் பரிந்துரை செய்தன. நாட்டின் விடுதலைக்கு முன்பும் பின்பும் மெக்காலே கல்வி முறை இருந்தது. அந்த நடைமுறை கல்வி பலருக்கு எட்டாக்கனியாக இருந்தது.
இத்திட்டம் முதல் கட்டமாக முதல் வகுப்பிலும், 6ஆம் வகுப்பிலும் துவங்க இருக்கின்றது. இக்கல்வியினால் கிராமப்புற பள்ளிகளும், அரசு உதவி பெறுகின்ற நகர்ப்புற பள்ளிகளும் அடிப்படை கட்டமைப்பு பெறும். அங்கு பயிலும் மாணவர்களின் கல்வி தரமும் உயரும். பெற்றோர்கள் இதற்காக அதிக கட்டணம் கட்டி பள்ளிகளில் சேர்ப்பதற்காக நாள்கணக்கில் அலையும் பிரச்சனைகளும் தீரும்.
இன்றைக்கு மாணவர்கள் பாடப்புத்தகங்களை பொதி சுமப்பது போல் பள்ளிக்கு சுமந்து செல்கின்ற வேதனையான காட்சியை காண்கின்றோம். அதற்கும் எதிர்காலத்தில் பரிகாரம் கிடைத்துவிட்டது. கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் நகர்ப்புற மாணவர்களின் கல்வித் தரமும் குறைந்து விடாமல் இத்திட்டம் பாதுகாக்கும். ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் சமன்படுத்தப்பட்ட இந்தக் கல்வி முறை சமதர்ம சமுதாயத்தை நிச்சயம் ஏற்படுத்தும். அந்த தூய நோக்கத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வி திட்டத்தை அறிவித்தது காலத்தால் எவரும் செய்ய முடியாத அரிய சாதனையாகும்.
மாணவர்களுடைய அடிப்படைக் கல்வியே அவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும். வசதியற்றவர்கள் இன்றைக்கும் கல்வி பெறமுடியாமல் அன்றாடம் ஏதோ வேலைக்குச் செல்கின்ற நிலைமைதான் இருக்கின்றது. இம்மாதிரி கொடிய நிலைகளிலிருந்து விடுபட, கீழ்த்தட்டில் உள்ளோருக்கு அரிதாக இருந்த தரமான கல்வியை வழங்க கழக அரசு திட்டமிட்டது காலத்தின் அருட்கொடையாகும். இதை கலைஞர் அவர்கள் எல்லாருக்கும் எல்லாம் என்ற நோக்கில் அறிவித்ததை அரசியல் மனமாச்சரியங்கள் கடந்து இன்முகத்தோடு வரவேற்று ஆதரவையும் தரவேண்டும்.
இது அகில இந்திய அளவில் மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டும். இத்திட்டம் இந்தியாவில் ஆந்திரத்தில் ஓரளவு நடைமுறையில் இருந்தாலும் தமிழகத்தில் முழு முயற்சியோடும் தனி கவனத்தோடும் கலைஞர் அரசு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த அரிய திட்டத்தை நிறைவேற்றியதற்காக கிராமப்புற மக்களும், கீழ்த்தட்டில் உள்ள மக்களும் என்றென்றும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்றி கடன்பட்டவர்கள் ஆவர்.