வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்


தெற்குச் சீமையில் உள்ள நிமிர வைக்கும் நெல்லைக்கு வரலாறு, அரசியல், இலக்கியம், வீரம், கொடை, சமயங்கள் போன்ற ஒவ்வொரு துறையிலும் ஒரு முக்கியத்துவமும், ஒரு நெடிய சரித்திரமும் தனித்தனியாக உண்டு. நெல்லையின் அடையாளங்கள் வித்தியாசமானவை. முத்திரைகள் ஆழமாகவும், அதிசயமாகவும், அற்புதமாகவும் வரலாற்றுச் சுவட்டில் நெல்லைக்கு அமைந்துவிட்டது. தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் அடையாளமே ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் ஆகும். தற்போது இவ்வூர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் உள்ளது. வரலாற்றுத் தொல்லியல் தொன்மையில் இதுவே முதன்மை ஆதாரமாகும். வற்றாத ஜீவநதியாம் பொருநையின் தென்கரையில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் பொன்னக்குடி பேருந்து நிலையத்தின் அருகில் மேட்டுப்பாங்காக அமைந்துள்ளது இவ்வூர். நெல்லையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

19ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் இரயில் இருப்புப் பாதை அமைக்க மண்ணைத் தோண்டும்பொழுது சரித்திர சம்பந்தமான பழம் பொருட்கள் சிக்கின. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் வரை இரயில் பாதை அமைக்க ஆங்கில அரசு திட்டம் தீட்டியபொழுது இடையில் வைணவ மடத்திற்கான ஒரு இடம் நம்மாழ்வார் வாழ்ந்த ஆழ்வார் திருநகரில் இருந்தது. அதை மடத்தின் பொறுப்பாளர் சடகோப ஆச்சாரியார் இரயில்வே நிர்வாகத்திற்கு கொடுக்க மறுத்துவிட்டார். ஆங்கில அரசு அந்நிலத்திற்கு வருட குத்தகையாக நான்கணா கொடுக்க முன்வந்தபோது சடகோப ஆச்சாரியார் சம்மதித்தார். இந்த நான்கணா வாடகையை சமீபகாலம் வரை தொடர்வதாக அவ்வட்டார வைணவ பெரியார்கள் சொல்கின்றனர்.

கி.பி.17ஆம் நூற்றாண்டில் ஆதிச்ச நாடார் என்ற பரம்பரையினர் பற்றிய கல்வெட்டுகள் இங்கே உள்ளன. எனவே அந்த குடும்பத்தின் பெயரால் இவ்வூர் இப்பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம் என்ற விவாதங்கள் உள்ளன. இப்பகுதியில் பறம்பு என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் தொல்லியல் ஆதாரங்கள் 18ஆம் நூற்றாண்டிலேயே கண்டறியப்பட்டது. வெள்ளுர் என்ற கிராமத்தின் உள்ளமைப்பே இந்த ஆதிச்சநல்லூர் என வருவாய்த் துறை ஆவணங்கள் சொல்கின்றன. இந்த வெள்ளுரில் இறந்தவர்களுடைய உடல்களை முதுமக்கள் தாழியில் வைத்து இவ்விடத்தில் புதைக்கப் பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கு அருகே உள்ள கொங்கராயன்குறிச்சி பொருநை ஆற்றின் வடபுறத்தில் அமைந்திருந்தாலும் அக்கிராமத்திற்கும் ஆதிச்சநல்லூருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும் அங்கு கட்டிடங்கள் கட்டுகின்ற செங்கற்கள் ஆதியில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த பழங்கால மனிதனின் சான்றுகள் இன்று வரை கண்டெடுக்கப்படவில்லை. ஆனால், புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் சாயர்புரம், திருவைகுண்டம் ஆகிய ஊர்களில் புரூஸ்புட் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலப் பொருட்களும் செம்புக் காலப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதுமக்கள் தாழிகள் பிரதானமானது. தொன்மையான நாகரிகத்தின் சின்னங்காளாயுள்ள பல பொருட்களும், உரோம நாணயங்களும், இரும்புக் கருவிகள், நவரத்தின மணிகள் முதலியவைகளும் கிடைத்துள்ளன. கி.மு.1200லேயே ஆதிச்சநல்லூரில் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. 

இந்த அகழ்வாராய்ச்சிக் களத்தை, ஜெர்மனியைச் சார்ந்த ஜாகர் 1876இல் வெளிக் கொணர்ந்தார். அவருக்குப் பின்பு 1889 1905 வரை அலெக்சாந்தர் இப்பணிக்குக் கண்காணிப்பாளராகவும், தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின், தாஸ்டர், சக்கர்மேன் இப்பணிகளை மேற்கொண்டனர். பாரீஸ் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த லூயி பணிகளாலும் பல உண்மைகள் தெரியவந்தன. இங்கு கிடைத்த எலும்புக் கூடுகள் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைமைக் கண்காணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி தலைமையில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. ஆதிச்சநல்லூரில் மூன்று கட்டங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. தற்போது மத்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரி திருமதி. சத்யபாமா பத்ரிநாத் குழுவினர் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 60க்கு 60 பரப்பளவில் மட்டும் 150 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றி குவியல் குவியலாக அருகருகிலேயே கிடைத்துள்ளன. எனவே இந்த இடம் பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமது முன்னோர்களின் இடுகாடு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழிகளின் அடர்த்தியான எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், இந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆதியில் தொடர்ச்சியாக வாழ்ந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் பண்டைய பயன்பாட்டுப் பானை ஓடுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. 137 பெரிய பானை ஓடுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. பானை ஓட்டுக் குறியீடுகளைக் கொண்டு பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டது. இங்கு விதவிதமான எழுத்து அல்லது கீறல் வடிவங்கள் கொண்ட பல்வேறு எழுத்து ஓடுகள் வெவ்வேறு இடங்களில் கிடைத்துள்ளன. ஆனால் இந்த அனைத்து வடிவக் கீறல்களும் கொண்ட பானை ஓடுகள் ஆதிச்சநல்லூர் என்ற ஒரே இடத்து அகழ்வாராய்ச்சிக் களத்தில் கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு அம்சம் என்று கருதப்படுகிறது.

இங்கு ஒரு கிராமத்தில் மக்கள் ஒரே இடத்தில் வாழ்ந்துள்ளனர். ஆய்வில் கிடைத்தவை மணிப்பூர் பல்கலைக் கழகத்தில் உள்ள தெர்மோ லுமினிகள் ஆய்வு என்ற சோதனையைச் செய்துதரும் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை முழு ஆய்வு செய்த அந்த மையம் ஆய்வறிக்கையை அனுப்பி வைத்தது. அதன்படி இவ்வாழ்வியல் தளம் கி.மு.500ஆம் ஆண்டுவாக்கில் புழக்கத்தில் இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஆதிச்சநல்லூரில் இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகம் தழைத்தோங்கித் தொடர்ந்து இயங்கியது என்ற வரலாற்று உண்மை உரிய தொழில்நுட்பச் சான்றுகளோடு நிரூபிக்கப்பட்டுள்ளது.

பண்டையத் தமிழர்களின் புதைகுழிகள் தொடர்பாகச் சங்க இலக்கியங்களில் பல்வேறு நிலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள புதைகுழிகளில் இருப்பது கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளனர். சங்க இலக்கிய வருணனைகள் என்பவை வெறும் கற்பனையல்ல, உண்மையின் விவரிப்புகளே என்பதை நிரூபிக்க ஆதிச்சநல்லூர் ஆதார நல்லூராய் விளங்குகிறது.

ஈரோடு போன்ற பல்வேறு இடங்களில் குகையினுள் வரைவுக் காட்சிகளைக் காணலாம். இதேபோன்ற மெகாலிதீக் வரைவுக் குறியீடுகளை ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளிலும் பார்க்கலாம். முதுமக்கள் தாழிகள் பலவற்றில் மனித எலும்புக் கூடுகள் முழுமையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாகப் பத்து மனித எலும்புக் கூடுகள் திரட்டப்பட்டன. இவற்றை ஆய்வு செய்வதன் மூலமாக அந்த எலும்புக் கூடுகளுக்கு உரியோர் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். இங்குக் கிடைத்த ஒரே ஒரு முதுமக்கள் தாழி கவனத்தைக் கவரும் விதமாகக் புதுமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அந்த முதுமக்கள் தாழியின் உள்பக்கமாகக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்ளும் வகையில் கைப்பிடி அமைப்புகள் காணப்படுகின்றன. வேறு எங்கும் இதுபோன்ற அமைப்பைக் காண முடியாது.

ஆதிச்சநல்லூரில் நடந்த முதல் கட்ட அகழ்வாராய்ச்சியின்போது கொற்கை, மாறமங்கலம், கழுகுமலை அருகே உள்ள பழங்கோட்டை, கரட்டு மலையிலும் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. ஆங்கிலேய அரசு 1876ல் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சேரன்மகாதேவி, தூத்துக்குடி, இங்குள்ள புதுக்கோட்டை அடுத்துள்ள நல்லமலை போன்ற இடங்களில் வரலாற்று ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுத்தது. இம்மாதிரி குமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம், திருவெட்டாறு, தோவாளை போன்ற பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். கரிவலம்வந்த நல்லூரில் காட்ரின் மன்னரது காசுகள் கிடைத்துள்ளன. தமிழரின் வணிக வரலாற்றுக்கு இது ஆதாரமாக உள்ளது.

நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர், தென்காசி, அம்பை மற்றும் விருதுநகர் அருகேயுள்ள பாவாலி, வெல்லூர், செங்குந்தபுரம், சாத்தூர் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை, செவல்பட்டி, மேட்டுப்பட்டி, இருங்குடி, சிவகாசி அருகேயுள்ள எதிர்கோட்டை, திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, மல்லி, நத்தம்பட்டி, இராஜபாளையம் அருகேயுள்ள சோழபுரம், கொள்ளகொண்டன் தேவதானம், இராஜகுலமாரன், சேத்தூர் ஆகிய இடங்களில் அகழ்வராய்ச்சி ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவையாவும் ஒருவித ஒற்றுமையைக் கொண்டுள்ளது.

இங்கே சமண தீர்த்தங்கரர் அடையாளங்கள் இருந்தது. இதை பண்டித நேரு அவர்கள் பார்த்து அதிசயப்பட்ட செய்திகளும் உண்டு. இந்த அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதை முழுமைப் பெறும் வகையிலும், பயன்பெறும் வகையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியத் தொல்லியல் துறை இந்தப் பணியில் இறங்கிப் பழங்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றிய ஆராய்ச்சிகளை நடத்தியவண்ணம் இருக்கிறது. இங்கே கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழி, பானைகளைக் கொண்டு பார்க்கும்பொழுது இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மூத்த குடிமக்களாக இருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர். 

கால்டுவெல் “தென்னிந்தியாவில் மிகப் பெரிய பழைமையான நாகரிகமாக சிறந்து விளங்கியது பொருநைக் கரையிலேயே” என்று கூறுவார். எனவே பொருநை நாகரிகத்தைக் கொண்டு திருநெல்வேலிக்குச் சீமை என்ற சிறப்புப் பெயர் வரப்பெற்றுள்ளது. தென்பாண்டி நாடு என்பதும் இதன் பெருமை மிக்க பெயராகும். இதன் வரலாறே பாண்டி நாட்டின் வரலாறு கி.மு. 600லிருந்து 15ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய மன்னர் தொடர்பு இம்மாவட்டத்திற்கு உண்டு. பாண்டியருக்குப் பெருமையளித்த முத்துக்குளித்தல் இன்று வரை நடைபெறும் ஒன்றாகும். 

மத்திய மாநில அரசுகள் இந்த ஆராய்ச்சிகளை கண்காணித்து உரிய நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். தொல்காப்பியம், சங்க இலக்கியங்களைக் கொண்டு இந்த ஆராய்ச்சியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். 

ஆதிச்சநல்லூர் பூமிக்குள் நமது முன்னோர்களின் எத்தனையோ உடல்களும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் முடங்கி இருக்கலாம். புதைந்த அந்த இருப்புகள் யாவற்றையும் நாம் கண்டாக வேண்டும். சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்ட இந்த தமிழர் நாகரிகத்தை நாம் அறிய வேண்டாமா?

இவ்வளவு முக்கியமான ஆதிச்சநல்லூர் வெறும் கட்டாந்தரையாக இல்லாமல் பன்னாட்டு அளவில் கீர்த்தி சேர்க்கின்ற வரலாற்று ஆய்வு மையமாகவும், உலகத்தினர் அனைவரையும் ஈர்க்கின்ற வரலாறு, கலாச்சாரக் கல்வியை வழங்கும் கலாசாலைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்றப் பொருட்களை அங்கேயே ஒரு அருங்காட்சியகம் அமைத்து வைக்க வேண்டும். மேலும் வெவ்வெறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளப் பொருட்களையும் இந்த காட்சியகத்திற்கு கொண்டு வந்து அவற்றை பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மார்கோபோலோ, யுவான் சுவாங் போன்றவர்கள் குறிப்பிட்டுள்ள இப்பகுதியிலுள்ள கொற்கை, பழைய காயல் போன்ற பகுதிகளைப் பற்றியும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இங்குதான் வைணவர்கள் வணங்கும் நவதிருப்பதிகளும், கிருஷ்ணாபுரமும் உண்டு. சூரனை சம்ஹாரம் செய்த செந்தூரும் இங்குதான் உள்ளது. கிறித்து மார்க்கத்தைப் பரப்பிய புனித சவேரியார் ஜெபித்த மனப்பாடு வங்கக் கடல் அருகே உள்ள குகையும் உள்ளது. சைவமும், வைணவமும், கிறித்துவமும், இஸ்லாமும் மதநல்லிணக்கத்தோடு வளர்ந்த தொட்டில் மண்ணாகும் இது. இந்து மதத்தினர் கிறித்துவ தேவாலயம் கட்ட இடம் கொடுத்தனர். இஸ்லாமியர்கள் இந்துக்களின் திருவிழாக்களில் பங்கேற்ற செய்திகளும் இம்மண்ணில் உண்டு. இந்தப் பின்னணியில் ஆதிச்சநல்லூர் அகழ்வராய்ச்சி மட்டுமல்லாமல் வேறு வகையிலான வரலாற்று ஆய்வுகளும் நடத்தினால் இன்னும் அற்புதமான செய்திகள் கிடைக்கும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.