ஐ.நா. மன்றத்தின் 64ஆம் ஆண்டு கூட்டத் தொடரை அதன் புதிய தலைவர் அலி டிரெக்கி துவக்கி வைத்து பேசும்பொழுது, ஐ.நா. மன்றம் தனது நம்பகத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள, அதன் பாதுகாப்பு மன்றத்தில் பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆப்பிரிக்க லிபிய நாட்டைச் சேர்ந்த டிரெக்கி வளரும் மற்றும் பிற்பட்ட நாடுகளின் பிரதிநிதியாக எதிர்காலத்தில் விளங்குவார் என்று நம்புகிறோம். ஐ.நா. மன்றத்தில் தொடர்ந்து குறிப்பிட்ட சில வளர்ந்த நாடுகளின் கையே மேலோங்கி உள்ளது. இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக சேர தொடர் முயற்சிகள் செய்தும் அவை முயற்சியாகவே இருக்கிறது. வளரும் நாடுகளுக்கும் பின் தங்கிய நாடுகளுக்கும் உரிய அங்கீகாரத்தை ஐ.நா. மன்றம் வழங்க வேண்டும்

பிரதமர் மன்மோகன் சிங் வீட்டோ அதிகாரமற்ற உறுப்பினர் பதவியை பாதுகாப்பு அவையில் இந்தியாவால் ஏற்க இயலாது எனக் கூறினார். வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக இந்தியா நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்துள்ளது. பிரான்ஸ், ரஷ்யா போன்ற பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மட்டுமல்லாமல் ஜப்பான், ஜெர்மன், பிரேசில் போன்ற பல்வேறு நாடுகளும் இந்தியாவின் கோரிக்கைக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தன.

1995ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடிய ஐ.நா. சபை பல்வேறு மகத்தான பணிகளையும் சேவைகளையும் ஆற்றி வருகிறது. 1945ல் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் 51 நாடுகள் கலந்து கொண்டு ஐ.நா. அமைப்பிற்கு அச்சாரம் போட்டன. 1946ஆம் ஆண்டில் பாதுகாப்பு சபை செயல்படத் தொடங்கியது.

உலக அளவில் இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சனை, இந்தோனேசியா, நெதர்லாந்து மோதல் (1949), 1948ல் பெர்லின் முற்றுகை, தென்கொரியா வடகொரியா பிரச்சனை, திபெத்தில் சீனப் படையெடுப்பு, 1956இல் சூயஸ் கால்வாய் குறித்து இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை, ஹங்கேரியில் ரஷ்யத் தலையீடு, காங்கோ போர், இந்தியா பாகிஸ்தான் போர் என பல்வேறு உலகப் பிரச்சனைகளில் ஐ.நா. தலையிட்டு அமைதியை நிலை நாட்டியதை நீண்ட பட்டியலிடலாம். இலங்கையில் ஈழத் தமிழரைக் காக்கும் பணியையும் ஐ.நா. மேற்கொண்டது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் வீட்டோ எனும் சிறப்பு ரத்து அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டுமென இந்தியா விரும்புகிறது.

ஐ.நா. தலைமைச் செயலராக இருந்த புத்ரோஸ் கலி, 1992இல் பாதுகாப்பு சபையில் அதிகமான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமென விரும்பினார். அதன்பின் உலக அளவில் இக்கருத்துக்கு ஆதரவு வலுத்தது. இந்தியாவைப் போன்ற நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக வேண்டுமென ஜெர்மனியும் ஜப்பானும் வலியுறுத்தின.

இந்தியாவின் கோரிக்கை சமீபத்தில் எழுந்த கோரிக்கை அல்ல. காமன்வெல்த் குழுக் கூட்டம் லண்டனில் 1945இல் நடைபெற்றபோது இந்தியா இக்கோரிக்கையை வலியுறுத்தியது. இச்சமயத்தில் தான் சான்பிரான்சிஸ்கோவில் ஐ.நா. அமைப்புப் பணிகளும், ஐ.நா. சாசன வரைவுப் பணிகளும் நடைபெற்றன. இந்தியா சார்பில் சர்.ஏ. ராமசாமி முதலியார், சர். பெரோஸ்கான், பரோடா திவானாக இருந்த வி.டி.கிருஷ்ணமாச்சாரி, கே.பி.எஸ். மேனன் ஆகியோர் காமன்வெல்த் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

நிரந்தர உறுப்பு நாடுகள் பிற உறுப்பு நாடுகளின் மேல் தங்களின் கண்காணிப்பு வேலைகளைக் பார்ப்பது சரியல்ல என்பதை இந்தக் குழு வலியுறுத்தியது. அச்சமயத்தில் ஆஸ்திரேலியா, யுகோஸ்லாவியா போன்ற நாடுகள் இந்தியாவுக்குத் துணை நின்றன. இந்தியா நிரந்தர உறுப்பினர் பதவி பெறும் என்ற நம்பிக்கையை கனடாவும் வெளிப்படுத்தியது. இந்தப் பின்னணியில் சுமார் 60 ஆண்டுகளாக இந்தியாவின் கோரிக்கைக்குப் பல்வேறு நாடுகளின் ஆதரவு இருந்தபோதும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

உலக அமைதி, சகோதரத்துவம் என்ற கொள்கையில் மற்ற நாடுகளைவிட இந்தியா தீவிரமாகவும் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது. அணி சாராக் கொள்கை விஷயத்தில் அப்போதைய பிரதமர் நேருவுடன் யுகோஸ்லாவியா அதிபர் மார்ஷல் டிட்டோ, எகிப்து அதிபர் நாசர், இந்தோனேசிய அதிபர் சுகர்னோ போன்றவர்கள் உலக அமைதிக்கென ஆற்றியப் பணிகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.

பாலஸ்தீனப் பிரச்சனை, காங்கோ பிரச்சனை, சூயஸ் கால்வாய் போன்ற சர்வதேசப் பிரச்சனைகளிலும் இந்தியாவின் நடவடிக்கைகள் நடுநிலையில் இருந்தன. நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்ற 5 நாடுகள்கூட போர் தொடுத்துள்ளன. இந்தியா எக்காலத்திலும் தானாக போருக்குச் சென்றது கிடையாது. சீனாவும், பாகிஸ்தானும் சீண்டிப் பார்த்ததன் விளைவே கடந்தகாலப் போர்கள். உலக அமைதியின் தூதனான இந்தியாவை, வீட்டோ அதிகாரம் இன்றி, பாதுகாப்பு சபையில் சேர்ப்பது முறையற்றதாகும்.

ஐ.நா. பொதுசபைக் கூட்டம் லண்டனில் ஜனவரி 10, 2007இல் நடைபெற்றது. பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளை ஐ.நா.வின் பொதுக்குழுதான் தீர்மானிக்கும். இது ஐ.நா. மன்றத்தின் இதயமாகத் திகழும். வரவு செலவு கணக்குகள், ஐ.நா.வின் பணிகள், கொள்கைகள் போன்றவற்றையும் முடிவு செய்யும்.

இந்தியா உறுப்பினராக விரும்பும் பாதுகாப்பு சபை 5 நிலையான உறுப்பினர்களைப் கொண்டு, 1963ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 15 உறுப்பினர்களுடன் செயலாற்றுகிறது. இந்த அமைப்பு 1946 ஜனவரி 12இல் அமைக்கப்பட்டது. ஐ.நா.வின் உயிர்க்கூறு இந்த பாதுகாப்பு மன்றமாகும். இதன் தீர்ப்புகள் முடிவுகள் யாவும் கட்டாயம் செயல்படுத்தும் அதிகாரம் பெற்றவை. பொருளாதாரத் தடைகள் அறிவிப்பு, இம்மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

அனைத்துலக அமைதி, பாதுகாப்பு போன்ற முக்கிய பணிகளில் பாதுகாப்பு மன்றம்தான் முடிவெடுக்கும். ரத்து அதிகாரம் பெற்ற 5 நாடுகளில் எந்த ஒரு நாடேனும் எதிர்த்து வாக்களித்தாலும் தீர்மானம் கைவிடப்படும். சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாக இம்மன்றம் விளங்குகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபை அமைதிப் படைகள் 1947இல் கிரீஸ் நாட்டுக்குச் சென்றதும், 1948இல் பாலஸ்தீனத்திற்கும் பின் காஷ்மீருக்குச் சென்றதும், காங்கோவுக்குச் சென்றதும் பாராட்டக் கூடிய நடவடிக்கைகளாகும்.

1959இல் தென் கொரியாவுக்குள் வடகொரியா ஊடுருவியபோது உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் அமைதியை நிலைநாட்டியது. இப்போரில் அமெரிக்கப் படைத் தளபதி மேக் ஆர்தர் தலைமை ஏற்றதால் ‘மேக் ஆர்தர் போர்’ என்று இப்போர் அழைக்கப்பட்டது. இப்போரில் ஐ.நா. மன்றத்தின் கொடியைப் பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பு சபையின் யோசனைகளுக்கு மாறாக மேக் ஆர்தர் நடந்து கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐ.நா.வின் கட்டுப்பாடு குலையக்கூடிய வகையில் ஆதிக்க சக்திகள் நடந்து கொண்டன. இம்மாதிரியான ஆதிக்க சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா. எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்.

மேலும் ஜெனீவா, அம்மானில் இயங்கிவரும் பொருளாதார மற்றும் சமூக மன்றம், ஹேகில் இயங்குகின்ற சர்வதேச நீதிமன்றம், சின்னஞ்சிறு நாடுகளின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பாட்சி மன்றம் முதல் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமைச் செயலகம் வரை பல்வேறு ஐ.நா. அமைப்புகள் உலக நாடுகளின் அமைதிக்கும் நலன்களுக்கும் பன்முக வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு வருகின்றன.

ஐ.நா. மன்ற விவாதத்தில் குறிப்பிட்ட நாடுகள் மட்டுமல்லாமல் உறுப்பு நாடுகள் அனைத்தும் பங்கேற்கும் சூழலை உருவாக்க வேண்டும்

உலகை பயமுறுத்தும் பூமி வெப்பமாவதை தடுப்பது குறித்து வருகின்ற டிசம்பரில் நடைபெறும் கோபன்ஹேகன் மாநாட்டில் விவாதித்து உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு உடன்படாத நாடுகள் மீது பொருளாதார தடைகளை உலகளவில் விதிக்க வேண்டும். அமெரிக்கா போன்ற பெரியண்ணனாக இருந்தாலும் இந்த விஷயத்தில் எந்தத் தயக்கமும் காட்டக் கூடாது.

உலக அளவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை அனைவரின் கூட்டு முயற்சியைக் கொண்டு ஒழிக்க அனைவரின் முயற்சிகளும் இதய சுத்தியோடு இருக்க வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பிரச்சனைகள் தீர்வு காண முடியாமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாலஸ்தீனப் பிரச்சனை, இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் போன்றவை நிரந்தரமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும்.

உலகத்தின் உச்ச அமைப்பான ஐ.நா. மன்றத்தின் யோசனைகளை ஏற்காமல் பல சமயங்களில் வல்லரசுகள் நடந்து கொண்டுள்ளன. இதில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா ஐ.நா. மன்றத்தைப் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இன்றைக்கும் ஐ.நா.வின் ஆளுமை கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதிகாரம் கொண்ட அவையாக இதை மாற்றி மேலும் பல சீர்திருத்தங்களை அந்த அவையில் கொண்டு வர வேண்டும்.