இந்தியாவில் எழுத்தறிவற்றோர் 35 சதவீதம் உள்ளனர். ஒன்றாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் ஒருவர் மட்டுமே +2 எனும் பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டுகிறார். மேல்தட்டு மக்கள் மட்டுமே தொடர்ந்து கேந்திரிய வித்யாலயங்கள் போன்ற பாடசாலைகளில் சேர்ந்து வசதியானக் கல்வியைப் பெறுகின்றனர். இந்த பாரபட்சம் கூடாது என்ற நிலையில் சமச்சீர் கல்வி முறை கண்டறியப்பட்டது. கல்வி என்பது மனித இனத்திற்கு அவசியத் தேவையாகும். கல்வி அடிப்படை உரிமையாக மட்டுமல்லாமல் கட்டாயக் கல்வி வேண்டும் என்று நீண்டகாலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. கல்வி ஏற்றத் தாழ்வு இல்லாமல் சம உரிமையோடு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் தமிழக முதல்வர் கலைஞர் சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாடு விடுதலை பெற்ற பின் கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதை வழங்குவதில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. கிராமப்புற மாணவர்களுக்கும், சமுதாயத்தில் அடித்தளத்தில் உள்ளவர்களுக்கும் சிறப்பான முறையில் கல்வி வசதிகள் சென்றடையவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகி கல்விக் கட்டணங்களும் உயர்ந்ததால் மேட்டுக்குடி மக்கள்தான் உயர்ரகமான கல்வியைப் பெறமுடிந்தது. ஆனால் சமுதாயத்தில் கீழ்த்தட்டு மற்றும் கிராமப்புற மக்கள், அந்த அளவுக்கு தங்களுடைய குழந்தைச் செல்வங்களை பல கல்வி நிலையங்களில் சேர்க்க முடியாமல் தவித்தது உண்டு. தாங்கள் எப்பாடு பட்டாலும் தங்களுடைய குழந்தைகளுக்கு தரமான கல்வி தரவேண்டும் என்று கடன் வாங்கி படிக்க வைக்கின்ற அவலநிலை இருக்கின்றது. இதற்கு காரணம் என்னவென்றால் சமச்சீரான கல்வி எல்லா பள்ளிகளிலும் இல்லாத நிலைமைதான்.

மத்திய அரசு நடத்துகின்ற சி.பி.எஸ்.இ. என்ற கல்வி திட்டம் இதற்கு என்று தனியாக பாடத் திட்டங்கள், பாட நூல்கள், வித்தியாசமான தேர்வு முறைகள் உள்ளன. மாநில அரசு நடத்தும் ஸ்டேட் போர்டு என்ற கல்வி முறை, தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தும் மெட்ரிகுலேசன் கல்வி முறை, அதற்கடுத்து ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டம் இப்படி பல வகையான கல்வித் திட்டங்கள், தேர்வுகள், தனித்தனியாக சான்றிதழ்கள் என்ற நிலை இன்றைக்கு இருக்கின்றது. மத்திய அரசு நடத்துகின்ற சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கல்வியின் தரம் உயர்ந்து இருக்கின்றது என்று மாணவர்கள் அப்பள்ளிகளில் சேர்வதில் போட்டி அதிகமாக இருக்கின்றது. இவையாவும் நகர்ப்புற அளவில் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் அதிகமான மதிப்பெண்கள் பெற்று மேற்படிப்புக்கு தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால் அரசு உதவி பெறுகின்ற பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் கல்வி தரம் இந்த அளவு இல்லாமல் பெரிய வித்தியாசம் ஏற்படுவதால் இயற்கையாகவே கிராமத்தில் உள்ள கீழ்த்தட்டு மாணவர்கள் பல அவலங்களுக்கு உள்ளாகின்றனர். 

இந்த பாடத் திட்டத்தில் இயற்கைச் சூழல், மாறி வருகின்ற நிலைகள், இன்றைய தேவைகள் போன்றவற்றை அறிந்து அதற்கான பாடத் திட்டங்கள் முடிவு செய்யப்படும். மனப்பாடம் என்ற திறன் மட்டுமல்லாமல் மாணவர்களின் உண்மையான திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கல்வித் திட்டம் அமையும்.

கோத்தாரி குழு குறிபிப்பிட்டவாறு ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30க்கு மேல் போகாது. இன்றைக்கு கிராமப்புறங்களில் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளி என்ற நிலைமை மாறி 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் இத்திட்டத்தால் மாற்றங்கள் ஏற்படும். எனவே ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் என்றிருந்தால் மாணவர்களின் மீது தனி கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் முறைப்படுத்தப்பட்ட ஒரே வகையான கல்வி முறையும், பாடத் திட்டங்களும் அமையும். கடந்த காலங்களில் ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவர்கள் எளிதாக போட்டித் தேர்வுகளில் கிராமப்புற மாணவர்களைவிட முன்னிலையில் இருந்தனர். இத்திட்டத்தினால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை களையப்படும். மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதிகள் பார்க்கப்படுவதில்லை. மற்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதிகள் வைத்துள்ளது போன்ற நடைமுறை மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் இனிமேல் வரும். தற்போது பல மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான தகுதிகள் இல்லாதவர்கள்கூட பாடங்களை போதிக்கின்றனர்.

சமச்சீர் கல்வி திட்டத்தைப் பற்றி அறிய முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதுகுறித்தான விவாதங்கள் நடத்தப்பட்டு சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று இன்றைய கலைஞர் அரசு அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் கல்வி பற்றி அறிய அமைக்கப்பட்ட 1966இல் கோத்தாரி கமிஷன், 1991இல் இராமமூர்த்தி கமிஷன், 1993இல் யஷ்பால் கமிஷன் போன்றவை சமச்சீர் பொதுக்கல்வி வேண்டும் என்றுதான் பரிந்துரை செய்தன. நாட்டின் விடுதலைக்கு முன்பும் பின்பும் மெக்காலே கல்வி முறை இருந்தது. அந்த நடைமுறை கல்வி பலருக்கு எட்டாக்கனியாக இருந்தது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பொதுக் கல்வி கற்பித்தல் குழு ஒன்று 1813ல் ஆங்கிலேயர் ஆட்சியில், பென்டிங் பிரபு காலத்தில் நடைமுறைக்கு வந்தது. அதை ஒழுங்குப்படுத்த மெக்காலே என்ற ஆங்கிலேயர் நியமிக்கப்பட்டார். இவர் கொண்டுவந்த திட்டத்தில் பல குழப்பங்கள் இருந்தன. பயிற்று மொழி குறித்து அந்தந்த வட்டாரங்களின் முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. சமஸ்கிருதம், அரபி போன்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த மெக்காலே, தாய்மொழி வழி போதனைக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை. ஆனால் ஒரு சில பயன்கள் மெக்காலே திட்டத்தில் இருந்தது. குருகுலம் முறை என்று இருந்ததை புத்தகங்கள் வடிவாக நடைமுறைக்கு வந்தது. இதனால் கல்வியின் மீது மக்களுக்கு ஒரு அக்கறையும் ஏற்பட்டது. மெக்காலே கொண்டு வந்த கல்வி முறை பலருக்கு கைக்கொடுத்தது. மெக்காலேயின் 13 பக்க கல்வி குறிப்பு 1835 பிப்ரவரி 2ஆம் நாள் பென்டிங் பிரபுவிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை இந்தியாவின் மண் வாசனைக்கு ஏற்ற வகையில் அமையவில்லை என்றாலும் அன்றைக்கு புதிய கல்வி முறை கண்ணைத் திறக்க வைத்தது.

இன்றைக்கு சமச்சீர் கல்வித் திட்டம் தமிழகத்தில் முதல் கட்டமாக முதல் வகுப்பிலும், 6ஆம் வகுப்பிலும் துவங்க இருக்கின்றது. இக்கல்வியினால் கிராமப்புற பள்ளிகளும், அரசு உதவி பெறுகின்ற நகர்ப்புற பள்ளிகளும் அடிப்படை கட்டமைப்பு பெறும். அங்கு பயிலும் மாணவர்களின் கல்வி தரமும் உயரும். பெற்றோர்கள் இதற்காக அதிக கட்டணம் கட்டி பள்ளிகளில் சேர்ப்பதற்காக நாள்கணக்கில் அலையும் பிரச்சனைகளும் தீரும்.

இன்றைக்கு மாணவர்கள் பாடப்புத்தகங்களை பொதி சுமப்பது போல் பள்ளிக்கு சுமந்து செல்கின்ற வேதனையான காட்சியை காண்கின்றோம். அதற்கும் எதிர்காலத்தில் பரிகாரம் கிடைத்துவிட்டது. பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு அலுப்பும், பயமும் இல்லாத கல்வி அவசியம். அடியாத பிள்ளை படியாது என்று சொன்னாலும் குழந்தைகளை அதிகமாக மிரட்டினால் கல்வியின் மீதே அவர்களுக்கு அக்கறை இல்லாமல் போய்விடும். டெல்லியில் மாநகராட்சி பள்ளி ஒன்றில், ஷானுகான் என்ற மாணவி ஆங்கில எழுத்துக்களை மனனம் செய்து ஒப்புவிக்கவில்லை என்ற காரணத்திற்காக ஆசிரியை அந்த குழந்தை மீது கோபமுற்று அவரது தலையை பிடித்து மேசையில் மோதி தட்டியதாலும், மேலும் வெயிலில் அதிக நேரம் நிற்க வைத்ததால் மாணவி சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து விட்டார். இப்படி பல சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பது வேதனைத் தருகிறது. இப்படியான கார்ப்ரல் பனிஷ்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற பள்ளி தண்டனைகள் தமிழகம், ஆந்திரம், மேற்கு வங்களம் போன்ற மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் இம்மாதிரியான தண்டனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகளை கண்ணியமாக நடத்த வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளது. இத்தகைய செயல்களை தடை செய்ய மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இம்மாதிரி பிரச்சனைகள் சமச்சீர் கல்வித் திட்டத்தில் இருக்காது என தெரிவிக்கப் பட்டுள்ளது. அடிப்படை வசதி இல்லாத பள்ளிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க முடியாது. எனவே, கும்பகோணத்தில் நடைபெற்ற துயர சம்பவங்களை போல் எதுவும் எதிர்காலத்தில் ஏற்படாது. கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் நகர்ப்புற மாணவர்களின் கல்வித் தரமும் குறைந்து விடாமல் இத்திட்டம் பாதுகாக்கும். ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் சமன்படுத்தப்பட்ட இந்தக் கல்வி முறை சமதர்ம சமுதாயத்தை நிச்சயம் ஏற்படுத்தும். 

மாணவர்களுடைய அடிப்படைக் கல்வியே அவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும். வசதியற்ற குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் இன்றைக்கும் கல்வி பெறமுடியாமல் அன்றாடம் ஏதோ வேலைக்குச் செல்கின்ற நிலைமைதான் இருக்கின்றது. இம்மாதிரி கொடிய நிலைகளிலிருந்து விடுபட, கீழ்த்தட்டில் உள்ளோருக்கு அரிதாக இருந்த தரமான கல்வியை வழங்க தமிழக அரசு திட்டமிட்டது காலத்தின் அருட்கொடையாகும். இதை கலைஞர் அரசு எல்லாருக்கும் எல்லாம் என்ற நோக்கில் அறிவித்ததை அரசியல் மனமாச்சரியங்கள் கடந்து இன்முகத்தோடு வரவேற்று ஆதரவையும் தரவேண்டும். ஒரு திட்டத்தில் சாதக பாதக சூழல் இருக்கத்தான் செய்யும்; அதில் கிடைக்கும் நன்மைகளை மட்டும் நாம் கண்டு கொள்ள வேண்டும்.

இது அகில இந்திய அளவில் மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டும். இத்திட்டம் இந்தியாவில் ஆந்திரத்தில் ஓரளவு நடைமுறையில் இருந்தாலும் தமிழகத்தில் முழு முயற்சியோடும் தனி கவனத்தோடும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான வெளிநாடுகளில் கல்வி வழங்குவதில் அனைவருக்கும் ஏற்றத் தாழ்வற்ற ஒரே மாதிரி கல்வி திட்டம் உள்ளது. இந்த அரிய திட்டத்தை நிறைவேற்றியதற்காக கிராமப்புற மக்களும், கீழ்த்தட்டில் உள்ள மக்களும் ஏற்றம் பெறுவர். 

இயற்கை வளங்களான காடுகள், தண்ணீர், காற்று, அணுக்கள் கூட மானுடத்தின் கைக்குள் வந்துவிட்டது. நிலக்கரி, பெட்ரோல், டீசல் எரிவாயு மற்றும் கனிம ஆதாரங்கள் அனைத்தும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட இயற்கையின் கொடைகளை இன்று மனித சமுதாயம் நுகர்ந்து வருகிறது. கார்பன் டை ஆக்சைடு, நைட்ரசன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்றவை பெட்ரோல், டீசல் எரிவாயுக்கள் எரிப்பதால் வெளியேறுகின்றன. மீத்தேன் வாயு விவசாய நிலங்களில் உருவாகிறது. இந்தியாவில் 8 லட்சம் டன் பெட்ரோலும், 30 லட்சம் டன் டீசலும் மாதம்தோறும் உபயோகப்படுத்தப்படுகிறது. உலக அளவில் 8,115 லட்சம் பேரல் டீசல் எரிக்கப்படுகிறது. இதனால் வருடம் ஒன்றுக்கு உலகளவில் 20 மில்லியன், 20,000 கோடி டன் கார்பன் டை ஆக்சைடு கழிவாக வெளியேறுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு கடலில் கரைகிறது. இதனால் கடலும் அமிலத் தன்மை கொண்டதாகி விடுகிறது. இதன் மூலம் புவி வெப்பமடைவதால் சைபிரியாவில் உள்ள பனி மலைகளும் உருகி தண்ணீர் ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும். வெப்பம் அதிகரிக்க வறட்சி ஏற்படும். பூச்சிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதை உணர மறுத்தால் நமது வருங்கால சந்ததியினர் சந்திக்க நேரும் பயங்கரமான இயற்கைச் சீற்றங்களை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.

நமது முன்னோர்கள் நமக்கு நல்லதொரு உலகத்தை நல்ல காற்று, நல்ல மண், நல்ல தண்ணீர் என்று வளமான உலகத்தை விட்டுச் சென்றனர். தொழிற் புரட்சி, விஞ்ஞான வளர்ச்சி என்கிற பெயரில் நாம் பூமிப் பந்தை மாசுபடுத்தி ஓர் ஆபத்தான உலகை வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லப் போகிறோம். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாமல் போனால் நாம் மனிதன் என்கிற பெயரில் அழைக்கப்படக்கூடத் தகுதி அற்றவர்கள். சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இதுவே. தாமதித்தால் ஆபத்து காத்திருக்கிறது.