திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தல் பிரசாரம் சூடு பறக்கிறது. தி.மு.க. காங்கிரஸ்  விடுதலைச் சிறுத்தைகள் என்று ஒரு அணியும், அ.தி.மு.க. ம.தி.மு.க. என்று ஒரு அணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தனி மேடையில் பிரச்சாரம் செய்யப் போவதாக கூறி பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. இது என்ன உறவோ? என்ன பிரிவோ? தெரியவில்லை. தலைவர் என்பவர் தினமும் இயக்கத் தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும். காடாறு மாதம், நாடாறு மாதம் என்ற நிலையில் வசதியாக மலை வாசஸ்தலத்தில் ஆறு மாதமும், தேர்தல் காலத்தில் மட்டும் மக்கள் முன் தென்படுவதும் வேடிக்கையாக இருக்கின்றது. சித்திரை திருவிழாவின்போது அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கு அழகர் கோவிலிலிருந்து மதுரையை நோக்கி வரும்பொழுது, வழியில் உள்ள ஒவ்வொரு மண்டபமாக பக்தர்களுக்கு தரிசனம் தருவதுபோல், தேவைப்படும் போது மட்டும் தொண்டர்களுக்கு தரிசனம் தரும் தலைமை ஜனநாயகத்திற்கு நல்லதா? எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்படும் தலைவரிடம் மக்கள் நலப் பணிகளை எப்படி எதிர்பார்க்க முடியும். அதே நேரம் பொதுவுடைமை எனும் மாபெரும் தத்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ள மார்க்சிஸ்டுகள், சுயமரியாதை காரணமாகவே தனித்து பிரசாரம் செய்கிறார்களோ என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

தோழமையை இதயசுத்தியோடு மதிக்க வேண்டும். அந்த இயல்பு தமிழக முதல்வர் கலைஞருக்கு உண்டு. கலைஞர் அவர்கள் அவசர நிலை காலத்தில், ஜனநாயகத்தைக் காக்க வேண்டி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திரா காந்தியை எதிர்த்தார். அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம். தோழைமை என்று வந்துவிட்டால் தனக்கு லாபம் நட்டம் என்று கணக்கு போடாமல் தோழமை உணர்வோடு மரியாதை தருபவர் கலைஞர் அவர்கள். அம்மாதிரியான தன்மைகள் இருக்கின்ற தலைவர்கள் இந்தியாவில் இன்றைக்கு விரல் விட்டு எண்ணக் கூடிய நிலை ஆகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜர், இராஜாஜி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், காயிதே மில்லத், பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்களோடு கலைஞர் கொண்டிருந்த நட்பும், தோழமையும் பாராட்டக் கூடியதாகும். அதேபோல் தேர்தல் காலத்தில் அந்த தலைவர்களுடன் இணைந்து கலைஞர் பணியாற்றியதை அந்த தலைவர்களே பாராட்டி உள்ளனர். இன்றைக்கு அரசியல் நிலை மாறினாலும், கலைஞர் தன்னுடைய பாணியை மாற்றாமல், மாற்றான்தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு எனும் கொள்கை கொண்டு, ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்குபவர் கலைஞர் அவர்கள்.

அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றப் பணிகள், அய்ந்து முறை தமிழக முதல்வர், அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு தி.மு.க.வை தலைமையேற்று வழிநடத்தியவர், எவ்வளவோ சோதனைகள், சுடுமணல் பயணங்கள் என்ற வேதனைகளையெல்லாம் தன்னகத்தே வைத்துக் கொண்டு தி.மு.க.வையும், தமிழகத்தின் நலன்களையும் மனதில் கொண்டு ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருப்பவர் கலைஞர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், இராஜாஜி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், காயிதே மில்லத், ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி அதேபோல வடபுலத்து தலைவர்களான ஷேக் அப்துல்லா, நீலம் சஞ்சீவ ரெட்டி, பட்நாயக், அகாலிதள தலைவர் மறைந்த குருநாம் சிங், வி.பி.சிங், போன்ற பல ஆளுமைமிக்க தலைவர்களோடு பழகி அவர்களின் அன்பையும் பெற்றவர். இன்றைக்கு அவருடைய சம வயதில் வாஜ்பாய், ஜோதிபாசு, குஜ்ரால், கருணாகரன் போன்ற ஒரு சிலரே வாழ்கின்றனர்.

ஒரு சமயம் கோட்டயத்தில் மலையாள மனோரமா பத்திரிகையாளருடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, அன்றைய மலையாள பத்திரிகை ஒன்றில் கலைஞர், ஜோதிபாசு, கருணாகரன் ஆகிய மூவரைப் பற்றி முதலமைச்சர்கள் என்ற நிலையில் ஒரு மதிப்பீடு வந்திருந்ததை காட்டினார். அதில் சாதாரண, எளிய குடும்பத்தில் பிறந்து அரசியலில் இவ்வளவு உச்சத்துக்கு வந்தவர், என்றென்றும் காலத்தால் அழிக்க முடியாத பணிகளை செய்தவர் கலைஞர் என்றும், சமூக நீதி, மாநிலங்களுக்க சுயாட்சி உரிமை என்ற வேட்கையின் வாய்க்காலை அமைத்தவர் கலைஞர் என்றும் குறிப்பிட்டிருந்தது பெருமையாக இருந்தது.

திருக்குவளையில் பிறந்து, அந்த இளம் பிராயத்திலேயே தமிழ் உணர்வு, சமூக நீதி சிந்தனை என்ற துடிப்போடு அரும்பு மீசை முளைத்த வயதில் திருவாரூரில் கொடி பிடித்து வலம் வந்தவர். பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளை வென்றெடுக்க, காலம் தந்த அருட்கொடைதான் கலைஞர் அவர்கள். அண்ணாவைப் போன்று பேச்சாற்றல், எழுத்தாற்றல், தலைமைப் பண்பாற்றல் என ஒருசேர வந்தவர்தான் கலைஞர் அவர்கள். இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இந்த அருங்குணங்கள் உண்டு. அவர் எழுதிய பிரிட்டிஷ் வரலாறு இன்றைக்கும் சிரஞ்சீவியாக இருக்கிறது. சிந்தனையாற்றல், ஆட்சி நிர்வாகத் திறன், கட்சியை கொண்டு செல்கின்ற தலைமைப் பண்பு ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவர் கலைஞர் அவர்கள். எந்த சோதனை வந்தாலும் அதை எதிர்கொள்கின்ற போர்குணத்தை கொண்ட கலைஞருக்கு நிகர் கலைஞர் அவர்களே.

அவர் திரைப்படத் துறையில் எழுதிய வசனங்கள் யாவும் அனைவரின் நெஞ்சங்களில் பதிந்த மணிவாசகங்களாகும். பராசக்தி, மனோகரா போன்ற திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள வசனங்களை இன்றைக்குக் கேட்டாலும் கையில் உள்ள மயிர்க்கால்கள் துடித்து நிற்கும். அப்படிப்பட்ட வீரமும், சிந்தனையும், விவேகமும் தருகின்ற வசனங்கள் அரசியலுக்கு வருகின்றவர்களுக்கு பாலபாடமாகும். கவிதை, கட்டுரை, அன்றாட நிகழ்வுகள் பற்றிய விமர்சன அறிக்கைகள், உடன்பிறப்புகளுக்கு கடிதங்கள், தென்பாண்டி சிங்கம், பண்டார வன்னியன் போன்ற புதினங்கள், குறளோவியம், சங்கத் தமிழ், தொல்காப்பிய பூங்கா போன்ற தமிழ் பொக்கிஷங்களுக்கு உரைநயங்கள், தமிழ்நாட்டு அரசியல் வரலாறு ஏன் இந்திய அரசியல் வரலாற்றைத் தெரிந்து கொள்ள நெஞ்சுக்கு நிதி போன்ற இவையாவும் தமிழகத்திற்கு கிடைக்கப் பெற்ற இலக்கிய சீதனங்களாகும். கலைஞர் போன்று சலியாமல், சளைக்காமல் பணியாற்றிய அரசியல் தலைவர்கள் உண்டா?

இருபத்தி ஆறாவது அகவையில் அடியெடுத்து வைத்த காலத்தில் கோவில்பட்டியில் 26,27.8.1950 ஆகிய இரண்டு நாள் நடைபெற்ற மாநாட்டில் பேசிய நீண்ட உரையில், கலைஞர் பேசிய வார்த்தைகள் இன்றைக்கும் கழகத் தோழனுக்கு சாசனமாக அமைந்துள்ளது. அவர் அழைப்பும், அந்த உரையும் இன்றைக்கும் படிக்க படிக்க சிந்திக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் செய்கிறது. இதோ அந்த உரையின் ஒரு பத்தி:

“தலைமை வகிப்பது என்பது கட்சியிலே ஒரு நட்சத்திரத்தை உண்டாக்குவது என்பதல்ல. அப்படி தலைமை வகிப்பவர்கள் கருதினாலும் அல்லது தலைமை வகிப்பவரைப் பற்றிக் கருதினாலும் அது பெரும் தவறு! வரப் போகும் போராட்டங்களிலே இதுவரை கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் வரிசைக் கிரமமாக களத்திலே நிறுத்தப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர்களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தைக் கேட்டுக் கொள்வதெல்லாம் ‘எங்களை எதிர்காலப் போராட்டத்தின் தளபதிகளாக்குங்கள்’ என்பதுதான்! மார்பிலே வேல்தாங்கி மரணத்தை அணைப்போமே தவிர மாற்றாரிடம் சரண்புக மாட்டோம். மாசற்றக் கொள்கைகளை எதிரிகட்குக் காணிக்கையாக்க மாட்டோம். இந்த உறுதியோடுதான் இன்றைய மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறேன்.”

“வாரீர் வாரீர் .. ... வாலிப வீரர்களே! வைர நெஞ்சுடைத் தோழியர்களே! வண்மை நிறை பெரியோர்களே! .. .. என அழைக்கிறேன்”

இப்படி கழகத்தை தமிழகத்தின் பட்டி, தொட்டி, பட்டிணக் கரை வரை  வசதிகள் இல்லாத காலத்தில் சைக்கிளிலும், மாட்டு வண்டியிலும் சென்று பிரச்சாரத்தை கழகத்தின் துவக்கக் காலத்தில் முடுக்கியவர் கலைஞர். பல இடங்களில் தங்குவதற்கும், மின் வசதி இல்லாத போதும் கால்நடையாக சென்று கொள்கை முழக்கங்கள் செய்து, ஏதோ தெரிந்த கட்சிக்காரர் வீட்டின் திண்ணையில் உறங்கி பணி செய்தவர். அவரது வரலாறு இன்றைக்கு பலரை நெறிப்படுத்தும் வாழ்க்கை நெறிமுறைகளாகும். அய்ந்து முறை கலைஞரின் ஆட்சி காலத்தில் எவ்வளவோ மக்கள் நலத் திட்டங்களை தீட்டியுள்ளார்.

மத்தியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக, கலைஞர் அவர்களுடைய பார்வையும் அகில இந்திய பிரச்சனைகளை தீர்க்கவும் மற்றும் அகில இந்திய தலைவர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ளது. இதற்கு பல நிகழ்வுகளும், சம்பவங்களும் உண்டு. காங்கிரஸ் பிளவுண்டு இந்திரா தலைமையில் ஆளும் காங்கிரஸ் என்றும், நிஜலிங்கப்பா தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் 60களின் இறுதியில் ஏற்பட்ட பொழுது இந்திரா காந்தி அவர்களுடைய ஆட்சியை காக்க கலைஞர் அவர்கள் ஆதரவு கரம் நீட்டி ஆதரவை தெரிவித்ததனால்தான் அன்றைக்கு மன்னர் மான்ய ஒழிப்பு, பொதுவுடைமை தத்துவத்திற்கு ஏற்ற வகையில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கு கலைஞர் அவர்களின் ஆதரவே காரணம். அவை அன்றைய பிரதமர் இந்திராவின் ஆளுமைக்கு வலு சேர்க்கும் வகையில் அச்சாரம் போட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நடந்த பெரும்பாலான நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.கழகம் தோழமை கொண்டுள்ள கட்சிகள்தான் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்திரா காந்தி காலத்திலும், ஜனதா ஆட்சியில் மொரார்ஜி தேசாய் பிரதமரான போதும், அதன்பின் 80ல் இந்திரா மீண்டும் பிரதமரான போதும், 90ல் வி.பி.சிங் பொறுப்பேற்ற போதும், தேவகவுடா, குஜ்ரால் ஆட்சி காலத்திலும், 99இல் வாஜ்பாய் பிரதமரானபோதும், 2004ல் தொடங்கி இன்றைக்கு வரை மன்மோகன் சிங் பிரதமராக நீடிப்பதற்கு கலைஞர் அவர்களின் பங்களிப்பும் தோழமையும் இதில் பிரதானமாகும். இதுமாதிரி மற்ற அகில இந்திய தலைவர்களின் பங்களிப்பு இல்லை, நாட்டில் நிலையான ஆட்சி அமைத்திட வேண்டிய முன்முயற்சிக்கு கலைஞருடைய அணுகுமுறையே காரணமாகும்.

நீதிபதி ராஜமன்னார் தலைமையில் டாக்டர் ஏ.லட்சுமண சாமி முதலியார், பி.சந்திரா ரெட்டி ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு ஒரு குழு கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டு, மத்திய மாநில உறவுகளும் அதனிடையே அதிகார பகிர்வு குறித்து ஆராய்ந்து சுமார் ஒன்றரை ஆண்டு காலம் இதுகுறித்து கருத்துகளை அகில இந்திய அளவில் பல தரப்பினரிடம் கேட்கப்பட்டு ஒரு அற்புதமான அறிக்கையை 27.5.1977இல் கலைஞரிடம் அந்த குழுவினர் வழங்கினர். இந்த அறிக்கை இன்றைக்கும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அரிய ஆவணமாகும். 

மாநில சுயாட்சி என்பது விடுதலைக்கு முன்பே விவாதிக்கப்பட்ட பிரச்சனையாகும். 1916ல் மதன்மோகன் மாளவியா, சாப்ரூ, ஜின்னா போன்றோர் அடங்கிய 19 பேர் கொண்ட குழு அறிக்கை லக்னோவில் வெளியிடப்பட்டது. அதில் மாநில எல்லைக்குள் முழு சுயாட்சி வேண்டும் என்று கூறியிருந்தனர். அதுவே ‘லக்னோ ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. 3.4.1946ஆம் ஆண்டு அப்துல் கலாம் ஆசாத் போக்குவரத்து, வெளியுறவு, பாதுகாப்பு போன்ற துறைகள் மத்திய அரசிடம் வைத்துக் கொண்டு மற்ற துறைகளை மாநிலங்களுக்கு வழங்கி தன்னாட்சியாக தரவேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். 11.12.1944ல் காங்கிரஸ் கட்சி அறிக்கையிலும் மாநிலங்களின் தன்னாட்சி என்று அறிவிப்பு செய்தது. அதற்கு பிறகு இதுகுறித்து பல காலம் விவாதிக்காமல் இருந்து, அறிஞர் அண்ணா 1967ல் தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சியை வலியுறுத்தினார். இந்த அரிய தொடர் பணியை கலைஞர் அவர்கள் ஆற்றுகிறார். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பலம் சேர்க்கவே இக்கோரிக்கை ஆகும். இதில் வெற்றியும் பெற்று வருகிறார்.

நாடு விடுதலை நாளில் அந்தந்த மாநில முதல்வர்களே மாநிலங்களில் கொடியேற்றி வைக்கும் உரிமை, சேதுக் கால்வாய் திட்டம், தமிழ் செம்மொழி, சமூகநீதி கொள்கையில் பல சாதனைகள், கண்ணொளி திட்டம், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு அரிசி, தொலைக்காட்சி பெட்டிகள், உடல் காப்பீட்டுத் திட்டங்கள், மகளிர் நலத் திட்டங்கள் என இதுபோன்ற பலவற்றை இந்த எழுத்தில் அடக்கிச் சொல்ல முடியாது. முதல்வரானாலும், எதிர்க்கட்சித் தலைவரானாலும் ஆற்ற வேண்டிய கடமைகளை தொய்வில்லாமல் கலைஞர் அவர்கள் ஆற்றி வருகிறார். மற்றவர்களைப் போன்று மலைப் பிரதேசத்தில் ஆறு மாதம், சென்னையில் ஆறு மாதம் என்றில்லாமல், வருடத்தின் ஒவ்வொரு நாளும் கோட்டை, முரசொலி அலுவலகம், அறிவாலயம் என நித்தமும் பணிகளை கவனித்து வருகின்றவர் கலைஞர் அவர்கள். கழகத்தின் கடைக்கோடி தொண்டன் மட்டுமல்லாமல், எவரும் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம். மக்களின் தலைவர் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப கலைஞர் அவர்கள் விளங்குகிறார். இந்த சூழலில் அருந்ததியர் மாநாட்டில் அறிவித்த அறிவிப்பு அனைவராலும் வேதனையோடு விவாதிக்கப்படுகிறது. கலைஞர் அவர்களுடைய சேவை தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் இந்திய திருநாட்டிற்கே அவசியமாகும்.

கடந்த 65 ஆண்டுகளாக கலைஞர் அவர்களைப் பற்றிய செய்திகளே இல்லாமல் எந்த நாளேடும் வெளிவந்தது கிடையாது. காலணி தைக்கும் தொழிலாளி முதல் கவர்னர் வரை கலைஞரின் சாதனைகளைப் போற்றுகின்றனர். அண்ணா கழகத்தை துவக்கிய காலத்தில், கழகம் சட்டமன்றத்திற்குள் போகுமா, போகாதா என்று விவாதிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு உலகமே போற்றும் வகையில் தமிழகத்திற்கு புதிய சட்டமன்ற கட்டடத்தை கலைஞர் அவர்கள் அர்ப்பணிக்க உள்ளார். இத்தகைய வரலாற்று மாற்றங்களை கலைஞர் ஒருவர்தான் நடத்திக் காட்ட முடியும்.

கிரேக்க வீரன் அட்லஸின் வரலாற்றைப் படித்துள்ளோம். ஆம்; இந்த உலகை தொட்டுத் தூக்கி தோளில் சுமந்தான். அதுபோல சவால்களையும், தமிழர் பிரச்சினைகளுக்காக நியாயங்களை பெற தன் தோளில் தூக்கி சுமக்க தமிழகத்திற்கு வராது வந்த மாமணி கலைஞர் அவர்கள். 

இன்றைக்கு அரசியல் சதுரங்கத்தில் குறை சொல்வதற்கு ஒரு எல்லை இல்லாமல் போய்விட்டது. இயேசுநாதர் முதல்வராகி, நபிகள் நாயகம் நிதியமைச்சராகி, மகாவீரர் வருவாய்த் துறை அமைச்சராகி, புத்தர் தொழில் துறை அமைச்சராகி, இராமானுஜர் சமூகநீதி அமைச்சராகி, திருமூலர் அறநிலையத் துறை அமைச்சராகி, வள்ளலார் உணவுத் துறை அமைச்சராகி, கன்பூசியஸ் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தாலும் குறை சொல்லுகின்ற காலம் இது. குறையொன்றுமில்லை என்று சொல்ல மனது வராது. வசைபாடிகள் ஏதாவது பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். நரியை ஊளையிடக் கூடாது என்று உத்தரவிட முடியுமா? எவ்வளவோ திட்டங்களை தமிழகத்திற்கு கலைஞர் அவர்கள் அர்ப்பணித்தாலும் ஊளையிடுபவர்கள் ஊளையிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். அவற்றையெல்லாம் மீறி கலைஞர் அவர்களின் சாதனைகள் காலத்தால் அழியாத சரித்திர சாதனைகளாக உள்ளன.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாது என்ற நிலையில் கலைஞர் அவர்களுடைய கீர்த்தியும், மேன்மையும், ஆளுமையும் தமிழக அரசியல் வரலாற்றில் மக்களின் நினைவில் இருக்கும் மற்றத் தலைவர்களைக் காட்டிலும் நீண்ட தூரமும், நீண்ட காலமுமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் பயணித்த சுவடுகள் நமக்கு வழிகாட்டுகின்றன. 

ஒளவை கால் நடையாகவே பல ஊர்களுக்குச் சென்றவர். போகிற வழியில் பலருடைய குடும்ப வாழ்க்கை அவலங்களை அவர் கண்ணுற நேர்ந்தது. மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட பல கணவன்களை அவர் கண்டிருக்கிறார். ‘இந்த மாதிரிப் பெண்ணோடு நீ எதுக்கய்யா வாழறே. பேசாம சந்நியாசியாய் மாறி விடலாமே’ என்ற கருத்தில் ஒரு பாடலை அவர் பாடினார்.

பத்தாவுக் கேற்ற பதிவிரதை யுண்டானால்

எத்தாலும் குடி யிருக்கலாம் சற்றேனும்

ஏறு மாறாக விருப்பாளே யாயின்

கூறாமல் சந்நியாசங்க கொள்

என்பது பாடல். உன்னிடம் எவ்வளவு பணமிருந்து என்ன பிரயோசனம். ஓர் அரக்கியிடம் மாட்டிக் கொண்டு அவதிப்படுவதைவிட நீ இறப்பதே தகுதியாகும் என்று சொல்லுமளவிற்குச் சென்று விடுகிறார் அவர். அந்த மாதிரி கொடூர தன்மையான குணங்கள் கொண்டவரிடமிருந்து மக்களை கலைஞர் அவர்கள் பாதுகாத்துள்ளார்.

சமநிலை, சமநீதி என்ற நிலையில் சமுதாயம் மாறவேண்டும் என்று கம்பன் காவியத்தில் குறிப்பிடுகின்றான்.

எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே

இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ

அந்த கம்பனின் திட்டத்தை கலைஞர் அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார். தமிழகம் வெற்றி நடை போடவும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க கலைஞர் அவர்களின் சேவை தமிழகத்திற்கு தேவை! வாழ்க கலைஞர் அவர்கள்!!