முல்லைப் பெரியாறு வறண்ட ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஒரு காலத்தில் காலம் வழங்கிய அருட்கொடையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு முல்லைப் பெரியாறு தமிழர்களுக்கு ஒரு கேள்விக்குறியாக ஆகிவிட்டது. கேரளத்தின் பிடிவாதப் போக்கால் நமது உரிமைகளைப் பாதுகாக்க நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கிறது.

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய அணைக் கட்ட மத்திய அரசு தந்த தவறான அனுமதியின் பேரில் ஆய்வு நடத்தியுள்ளது. கேரள நீர்ப் பாசனத் துறை நிர்வாகப் பொறியாளர் ஜார்ஜ் டேனியல் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட 3 கி.மீ. பகுதியில் ஆய்வுப் பணியை தொடங்கினர்.

தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், சட்டத்தின் ஆட்சியை மிதித்து கேரளா தான்தோன்றித் தனமாக முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். தொடர்ந்து இப்பிரச்சினையில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி கொடுத்த நாளிலிருந்து முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய நியாயமான எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்தும், செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்று கேரள அரசு நடந்து கொள்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நடந்து கொண்டப் போக்கைக் கண்டிக்கின்ற வகையில் தி.மு.க. சார்பில் தலைவர் கலைஞர் பங்கேற்கும் கண்டனக் கூட்டம் 1.1. 2009 அன்று மதுரையில் நடக்க இருக்கின்றது.

தலைவர் கலைஞர் அவர்கள் 8.10.2009 அன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அக்கடிதம் வருமாறு:

கடந்த 16ஆம் தேதி நடந்த தேசிய வன விலங்குகள் வாரியத்தின் நிலைக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாக மிகுந்த வேதனையுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்தக் கூட்டம் குறித்து தகவல் வெளியான உடனேயே, முல்லைப் பெரியாறு பிரச்சினை ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கடந்த மாதம் 22ஆம் தேதி மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷூக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

முல்லைப் பெரியாறு நதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்வதற்கு கேரள அரசுக்கு அனுமதி அளிப்பது பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு, இது இருதரப்புப் பிரச்சினை என்பதால் தமிழக அரசிடம் கலந்தாலோசிக்குமாறு மத்திய அமைச்சரை அக்கடிதத்தில் நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

அந்தக் கடிதத்துக்கு மத்திய அமைச்சர் பதிலளிக்காதது மட்டுமல்ல, தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமலேயே ஆய்வு நடத்த கேரள அரசுக்கு அவர் அனுமதி அளித்துவிட்டார். அத்துடன், மத்திய அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தின் செய்திக் குறிப்பு பத்தி 4.2(8)ல், “முல்லைப் பெரியாறு அணை 113 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதுடன், அது பலவீனமாக இருப்பதால் எதிர்காலத்தில் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்ற தகவல்களை பரிசீலித்தும், விரிவான விவாதத்துக்குப் பின்பும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட நிபுணர் குழு கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புடன் இருப்பதாக நற்சான்று வழங்கியிருப்பதை இவ்விடத்தே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, அணை வலுவானதா அல்லது வலுவற்றதா என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தேசிய வனவிலங்கு வாரிய நிலைக் குழுவுக்கு எள் அளவும் இல்லை.

அதனால்தான் வேறுவழியின்றி, இந்தப் பிரச்சினையில் கேரள அரசுக்கு கடந்த 6ஆம் தேதி வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து 7.10.2009 அன்று உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நேற்று அணுக வேண்டியதாயிற்று. மேலும், 16.9.2009 அன்று நடைபெற்ற கூட்டத்தின் விவாதக் குறிப்பில் இந்த பிரச்சினைக் குறித்து எந்த நீதிமன்றத்திலும் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அடுத்த விசாரணை 20.10.2009 அன்று நடைபெறவுள்ளது என்பதால் இது உண்மைக்கு மாறான தகவல் ஆகும். இதையும் நான் கடந்த 22.9.2009 அன்று எழுதிய கடிதத்தில் ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் கவனத்துக் கொண்டு சென்றுள்ளேன்.

இந்நிலையில் தாங்கள் (பிரதமர்) இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, தவறான தகவல்களின் அடிப்படையில் கேரள அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதி மன்றத்தில் இப்பிரச்சினைக்காக தமிழக அரசு சார்பில் வழக்கு என தொடர் நடவடிக்கைகளை கழக அரசு மேற்கொண்டது.

மத்தியச் சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது தவறான நடவடிக்கைக்கு முன்னுதாரணமாகி விட்டது. சம்பந்தப்பட்ட தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் இவ்வாறு அறிவித்திருப்பது கவலைக்குரிய செய்தியாகும்; சமஷ்டி அமைப்பில் மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையில் முழு அளவு தண்ணீரைத் தேக்க தொடர்ந்து கேரளம் வேண்டா வெறுப்பாக எதிர்ப்புத் தெரிவித்து சண்டித்தனம் செய்து வருகிறது. தமிழக அரசு, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அது நிலுவையில் உள்ள நிலையில் இம்மாதிரி சர்ச்சைகள் வருவது நல்லதல்ல. கேரள அரசுக்கு ஆய்வு நடத்த அனுமதி கொடுத்த ஆவணத்தையும் தமிழக அரசுக்கு உடனே அனுப்பவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கே.வி. தங்கபாலு மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சரின் இந்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், ஒருதலைபட்சமான இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அதேபோல தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனமும் கண்டித்துள்ளார். முன்னுக்குப் பின் முரணாக உச்சநீதிமன்ற ஆணைக்கு புறம்பாக மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கேரளத்திற்கு சாதகமாக நடந்துகொண்டுள்ள போக்கை அனைத்து சார்பினரும் கண்டித்துள்ளனர்.

தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் இருக்கும்பொழுது, மத்திய மாநில உறவுகளை மதிக்காமல் ஒருதலைபட்சமாக ஜெய்ராம் ரமேஷ் நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சியைத் தந்தது. ஒரு பக்கம் மழுப்பலான பதிலை ஜெய்ராம் ரமேஷ் கூறினாலும், கேரள நீர்வளத் துறை அமைச்சர் எம்.கே.பிரேமச்சந்திரன் தனது பேட்டியில் சொன்ன செய்திகள் யாவும் அதிர்ச்சியைத் தருகின்றது. அவர் குறிப்பிட்டதாவது:

கடந்த 2007ம் ஆண்டில் கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, புதிய அணை கட்டுவதற்கான துணை கோட்ட அலுவலகம் வல்லக்கடவுவில் 19.11.2007 அன்று திறக்கப்பட்டது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பே ஆய்வுப் பணிகள் தொடங்கிவிட்டன. புதிய அணை கட்ட அப்பகுதியில் 10 கி.மீ. பரப்பளவில் ஆய்வு நடத்த வேண்டும். 7 கி.மீ. பரப்பளவில் ஆய்வுப் பணிகள் முடிந்துவிட்டது. மீதமுள்ள 3 கி.மீ. பகுதி வன விலங்குகள் சரணாலயத்தின் கீழ் வருவதால்தான் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. கேரளாவுக்குச் சொந்தமான இடத்தில் புதிய அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை. வனப்பகுதியில் ஆய்வு நடத்த மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழகம் தீர்மானித்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

 கேரள அரசில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் உணர்வுகள் யாவும் உண்மைக்குப் புறம்பாக உள்ளது என்பது அம்மாநில அமைச்சர் பிரேமச்சந்திரனின் பேட்டியிலேயே தெரிகிறது. மாநிலங்களிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க அக்கறை இல்லாமல் மேலும் பிரச்சினை ஆக்குவதுதான் அவர்களுடைய வாடிக்கையாகிவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களுக்கு அதிக அதிகாரமும், தனித்தன்மை வேண்டும் என்று ஒரு பக்கம் குரல் கொடுத்தாலும், ஆட்சியில் உள்ள அவர்களது பிரதிநிதிகள் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பது ஏன் என்று தெரியவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி.பரதன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம், முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை அறியாமல், அது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறியிருப்பதும் எப்படி என்று தெரியவில்லை. ஏற்கனவே மத்திய அரசு ஒரு குழு அமைத்து, அணையின் பலத்தை பரிசோதித்து அதுகுறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அணை பலமாக உள்ளது என்று சொல்லிய பின்பும் ஏன் இப்படி பரதன் சொன்னார் என்று தெரியவில்லை. இப்பிரச்சினை குறித்து 1980, 1983, 1996, 1997 என பல கட்டங்களில் அணையினுடைய பலம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் முல்லைப் பெரியாறு பற்றி 21.08.2009 ஜனசக்தி ஏட்டில் பரதன் கருத்துக்கு முற்றிலும் மாறாக எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ளதாவது:

1979ஆம் ஆண்டு கேரள பத்திரிகையாளர் ஒருவர் அணையின் பலம் குறைவாக உள்ளதால் நீர் அதிகமாகக் கசிகிறது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார். கேரள அரசு பிரச்சினையை எழுப்பியது. விவரமறிந்த தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் புகார் தெரிவித்தது. மத்திய அரசு கேரள அரசை விவரம் கேட்டது. அணை பலகீனமாக உள்ளது என்றும், அணையைப் பலப்படுத்திய பின்பு 152 அடி தண்ணீர் தேக்கலாம் என்றும், அதுவரை 136 அடி உயரத்திலேயே தண்ணீர் மட்டம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள். ஒரு வல்லுநர் குழுவை அனுப்பி ஆய்வு செய்யும்படி கோரியது. ஆய்வுக் குழுவினர் அணையைப் பார்வையிட்டு, அணை பலமாக உள்ளது என்றும், நீர்க்கசிவு அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக இல்லையென்றும், கேரளம் சந்தேகப்படுவதால், அணையில் சில வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும் ஆலோசனைக் கூறியது. அந்த அடிப்படையில் நீர் மட்டம் 132 அடியாகக் குறைக்கப்பட்டது.

சுமார் 30 கோடி ரூபாய் செலவில் வலுவான கம்பிகளைப் பதித்து, பழைய அணையின் மேற்கு பக்கத்தில் மேலும் 33 அடி அகலத்திற்குமேல் கான்கிரீட் அமைத்து, பழைய அணையோடு சேர்த்து 152 அடி உயரத்திற்கு பலப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு செய்து முடித்துள்ளது. இந்தப் பலப்படுத்தும் பணியைச் செய்யவிடாமல் பல இடையூறுகளைக் கேரள அரசு செய்தது என்பது வருந்தத்தக்கதாகும். பலப்படுத்தும் பணி நடந்த பின்பும்கூட 152 அடி தண்ணீரைத் தேக்க கேரள அரசு சம்மதிக்கவில்லை. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. பேபி அணை என்ற சிறு பகுதி வேலை முடிகின்றவரை 142 அடி தண்ணீரைத் தேக்க கேரளம் அனுமதிக்க வேண்டுமென்று 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதையும் கேரளம் அமல்படுத்தவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவரின் குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் தமிழ் மாநில விவசாய சங்கப் பொதுச் செயலாளர் மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் பதில் கூறிவிட்டார்! தேவையில்லாமல் வீண் சர்ச்சையைச் செய்வது தமிழ்நாடு அரசா? கேரள அரசா? அணை பலவீனமாகி விட்டது என்று புரளியைக் கிளப்பியது யார் என்பதையும் கூட துரைமாணிக்கம் தெரிவித்து விட்டார். இதுவே பரதனுக்கு பதிலாக அமையும். மூத்த அரசியல் தலைவரான பரதன் தமிழ்நாட்டில் உள்ள தன்னுடைய கட்சியின் நிலைப்பாடுத் தெரியாமல் இம்மாதிரி பேசுவது வேடிக்கையாக மட்டுமல்லாமல், கண்டிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

முற்றும் அறிந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் போகிற போக்கில் இப்படி சொல்லிவிட்டுப் போவது அவர்கள் சார்ந்த மாபெரும் இயக்கத்திற்கு உகந்ததல்ல. தமிழர்களுடைய உரிமைப் பிரச்சினையில் அச்சுதானந்தன் அரசு சீண்டிப் பார்ப்பது அழகல்ல. இதே அச்சுதானந்தன் தன்னுடைய கட்சியில் உள்ள பினராய் விஜயனிடம் மோதிக் கொண்டு விளையாடியது போல் தமிழகத்தை நினைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு காலம் பதில் சொல்லும்.

பிரச்சினையில் உள்ள முல்லைப் பெரியாறின் 113 வருட வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் நமக்கு பல செய்திகள் கிடைக்கின்றன.

மதுரை மாவட்டத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சங்களின் பாதிப்பால் மக்கள் மடிந்தும், வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தும் சென்றனர். இந்நிலையில் சேதுபதி மன்னர் வைகையாற்றில் வருகின்ற வெள்ளத்தை தடுத்து நீர்ப்பாசன திட்டங்களை நிறுவிட திவான் முத்து இருளப்ப பிள்ளையிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் நிதி வசதி இல்லாமல் அப்போது திட்டம் நிறைவேறவில்லை.

திருநெல்வேலி மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 1,830 மீட்டர் உயரத்திலுள்ள சிவகிரி சுந்தரமலைதான் முல்லைப் பெரியாறின் நதிமூலம் ஆகும். தமிழகத்தில் உற்பத்தி ஆகும் நதி நீர் நமக்கு கிடைக்க மறுப்பதும் நியாயமல்ல. இப்பகுதி அதிக மழை பெய்யும் பகுதியாகும். எனவே ஆண்டு ஒன்றுக்கு 172 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கிறது. இந்த நீரின் வடிமுகப் பகுதியின் கல்லாடா, இடுக்கி, வலிக்கடவு என பதினாறு அணைகள் கட்டப்பட்டுள்ளன. பெரியாறு, கேரளத்தில் பாய்ந்து வீணாக அரபிக் கடலில் சங்கமிக்கிறது. ஆகவே இந்தப் பெரியாற்றின் நீரைத் தேக்கி அணை கட்டினால் தென் மாவட்டங்களை வளப்படுத்தலாம் என்ற எண்ணம் அப்போதைய ஆட்சியாளர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் அதற்கான போதுமான நிதி ஆதாரம் இல்லாமையால் திட்டம் நிறைவேற்ற முடியாத கனவாக இருந்தது. 

1808ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் கால்டுவெல் இப்பிரச்சினை குறித்து ஆராய்ந்து தண்ணீரை திருப்ப வாய்க்கால் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். அதுவும் நடைபெறவில்லை. 1850 ஆம் ஆண்டு சின்ன முல்லை ஆற்றில் அணை கட்டும் பணிகள் துவக்கப்பட்டன. கொடிய நோய் பரவியதால் அப்பணியில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு மேஜர் ரைவீஸ், மேஜர் பெயின் இப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய தொடங்கினர். 1867இல் 162 அடி உயரத்திற்கு பெரியாற்றில் ரைவிஸ் முயற்சியில் காடு மலைகளை வெட்டி மண் அணை கட்டப்பட்டது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.17.49 லட்சம் ஆகும்.

அதன் பின்னர் லெப்டினட் பென்னி குயிக் இப்பணியில் பொறுப்பேற்றார். ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் துயரத்தைப் பார்த்த பென்னி குயிக் பெரியாறு அணையைப் பற்றிய திட்டத்தைத் தயாரித்தார். சிவகிரியில் தோன்றி பெரியாறு 48 கிலோ மீட்டர் பரப்பளவு கடந்து முல்லை ஆற்றில் சங்கமிக்கிறது. மேற்கண்ட இரண்டு ஆறும் கிழக்குத் திருப்பி, அவ்வாறு திருப்பி விடப்பட்ட நீரை மலையைக் கடந்து தமிழகத்தில் கொண்டுவர திட்டம் தீட்டினார் பென்னி குயிக். அதுவே முல்லைப் பெரியாறு அணை நீர்த் திட்டம். 

முல்லைப் பெரியாறு அணைக் கட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட் இடம், அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உரியவையாக இருந்ததால் முறைப்படி அணுகி, ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த இடம் தமிழர்களுக்குச் சொந்தமானது. தவறுதலாக திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட இடம் என்று அணுகப்பட்டது என்ற வாதமும் வலுவாக இருக்கிறது. அதன்படி 1886ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் நாள் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் ஆங்கிலேய அரசு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி அணையில் தேக்கப்படும் நீரை தமிழக மக்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அணையைக் கட்டுவதால் மூழ்கிப் போகும் 8,000 ஏக்கர் நிலங்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.5 வீதம் 40,000 ரூபாய் வருடத்திற்கு திருவாங்கூர் சமஸ்தானத்திற்குக் கொடுப்பதாக ஒப்பந்தமாகியது. இந்த குத்தகை 999 வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கும். ஆங்கிலேயரான பென்னி குயிக், ஆங்கிலேய அரசின் நிதி உதவியுடன், பிரிட்டிஷ் ராணுவத்தின் பொறியியல் பிரிவின் துணையுடன் முல்லைப் பெரியாறு அணையின் கட்டுமானப் பணிகளைத் துவக்கினார். ஏறத்தாழ பாதிப் பணிகள் முடிவடைந்த நிலையில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெள்ளத்தினால் கட்டப்பட்ட அணை காணாமல் போனது. அதற்குப் பின்பு அணை கட்டுவதற்கு ஆங்கிலேய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய முன்வரவில்லை. ஆனாலும் தென் மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பென்னி குயிக் தமது சேமிப்புகள், இங்கிலாந்திலுள்ள தனது சொத்துக்களை விற்று கிடைத்த பணம் மற்றும் நண்பர்களிடமிருந்து பெறப்பட்ட கடன் போன்றவற்றின் துணையுடன் பெரியாறு அணையை ஒன்பது ஆண்டுகளில் கட்டி முடித்தார். சுமார் 65 லட்சம் மதிப்பீட்டில் அணை பணிகள் கற்களாலும், செங்கற் கொடியாலும் உருவாக்கப்பட்ட இந்த அணையை பாராட்டி அவர் செலவு செய்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தது அப்போதைய ஆங்கில அரசு. இன்று முல்லைப் பெரியாறு அணை இருப்பதற்கு முழுமுதற் காரணம் பென்னி குயிக் என்றால் மிகையாகாது. அவரது நினைவாக மதுரையில் அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 1893ஆம் ஆண்டு கட்டப்பட்ட அணை மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வில் வளமேற்றியது. அதன்பின்பு 1953ஆம் ஆண்டு பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த முதல்வர் ராஜாஜி தனது தூதராக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.இராமமூர்த்தியை அப்போதைய கொச்சி முதல்வரான பட்டம் தாணுப்பிள்ளையைச் சந்திக்கச் செய்து, பெரியாற்றிலிருந்து திருப்பி விடப்பட்ட தண்ணீரை மின் உற்பத்திக்காகப் பயன்படுத்த ஒப்பந்தம் போடப்பட்டது.

பல ஆண்டுகள் எவ்விதப் பிரச்சினையும் இன்றி இருந்த நிலையில் கேரளாவின் முன்னணிப் பத்திரிகை ஒன்று திடீரென தமிழக உரிமைகளை, நலன்களை பாதிக்கக் கூடிய வகையில் முல்லைப் பெரியாறு அணை உடையும் நிலையில் இருப்பதாகத் தவறாகச் செய்தி வெளியிட்டது. அந்தத் தவறான செய்தியைக் கொண்டு கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்குவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதுமட்டுமல்லாமல் திட்டமிட்டு போலியான கிராபிக்ஸ் சி.டி.யை கேரளாவில் ஆட்சியாளர்களின் துணையோடு தவறான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. இவர்களது கோரிக்கையின் விளைவாக அப்போதைய மத்திய அரசின் நீர்வளத் துறை ஆணையர் கே.சி.தாமஸ் அணையைப் பார்வையிட வந்தார்.

அணையைப் பார்வையிட்ட பின்பு அணை எவ்வித சேதமும் அடையவில்லையென்றும், ஆனாலும் கேரள மக்களின் விருப்பத்திற்கிணங்க அணையைப் பலப்படுத்தும் பணியை தமிழகம் செய்யலாம் என்றும், அதுவரை அணையில் நீர்மட்டம் 136 அடி மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு 12.54 கோடியை அணையைப் பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்தது. அணை தொடர்பாக நிலவி வரும் சில தகவல்களைப் பார்த்தோமானால் கேரள அரசினால் பரப்பப்படும் தகவல் வதந்தி என்று தெரிய வரும். எடுத்துக்காட்டாக அணையில் அனுமதிக்கப்பட்ட நீர் கசிவு 248.71 லிட்டர். ஆனால் அணையின் தற்போதைய நீர் கசிவு 44.64 லிட்டர் மட்டுமே. மேலும் வலுவான பாறையின் மீது அடித்தளம் அமைத்து முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளதால் நிலநடுக்கமே ஏற்பட்டாலும் அணைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.

மேலும் 113 ஆண்டுகளுக்கு முன்பு சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதால், அணை வலுவாக உள்ளது. மேலும் கேரள அரசின் வாதப்படி, பென்னி குயிக் அணையின் ஆயுட்காலம் 50 ஆண்டுகள் என்று எங்கும் சொல்லவில்லை.

ஆனாலும் மத்திய நீர்வளத் துறைத் தலைவர் கே.சி.தாமஸ் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசானது அணையைப் பலப்படுத்தியது. அணையைப் பலப்படுத்திய பின்பும் கேரள அரசு அணையின் நீர் 142 அடி தேக்குவதற்கு அனுமதியளிக்கவில்லை. பின் கேரள நீதிமன்றங்களிலும் தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் ஒரே வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கினை எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் இரு மாநில முதல்வர்களும் பேசி தீர்வு காண வேண்டுமென்று வலியுறுத்தியது. ஆனால் இரு மாநில முதல்வர்களின் பேச்சில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் மத்திய அரசு தொழில்நுட்ப வல்லுனர் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு பிரச்சினைகள் பற்றி விவாதித்து கேரள அரசின் பிரதிநிதிகள் தன் முன்பு கொண்டு வந்த 12 எதிர்ப்புகளையும் பரிசீலித்து அதில் எவ்வித உண்மையும் இல்லையென்று கூறி தள்ளுபடி செய்து தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சபர்வால், தாக்கர் மற்றும் பாலசுப்பிரமணியம் அடங்கிய பெஞ்ச் 27.2.2006 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

“நிலநடுக்கம் உட்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்புக் குறித்து ஆராயப்பட்டுள்ளது. நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்தில் எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொண்டதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.”

“அணையின் எல்லாப் பகுதிகளும் பாதுகாப்பாகவே உள்ளன. அணையினைப் பலப்படுத்தும் பணிகளைச் செயல்படுத்த விடாமல் தடுப்பதற்கான எந்தவிதக் காரணமும் எங்களுக்குத் தெரியவில்லை” என்று தெளிவாக உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ஆதரவாக பெரியாறு அணையில் 142 அடி உயரம் நீரைத் தேக்குவதற்கு ஏற்பத் தீர்ப்பு அளித்துவிட்டது.

உடனே கேரள அரசானது மேற்கண்ட தீர்ப்பினை மதிக்காமல் கேரள சட்டமன்றத்தில் தமிழகத்தின் ஆதிபத்தியத்தை தகர்க்கின்ற வகையில் அவசரச் சட்டம் இயற்றியது.

முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைக்கும் உயரத்தின் அளவைக் குறைத்ததனால் தமிழகத்தில் பாசனப் பகுதி ஏறத்தாழ இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவு குறைந்து விட்டது. ஏறத்தாழ ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஏக்கர் நிலம் கடுமையாகப் பாதிக்கப்படும். மின் உற்பத்தி ஏறத்தாழ 75 கோடி அளவுக்கு குறைந்துவிட்டது. மேலும் 140 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அணையில் 40 சதவிகிதம் அளவுக்கு உற்பத்தித் திறன் குறைந்துவிட்டது.

அணையின் நீர் மட்டம் குறைந்தாலும் அணை அமைந்துள்ள எட்டாயிரம் ஏக்கர் நிலத்திற்கும் தமிழக அரசு குத்தகைப் பணம் இன்று வரையில் தவறாமல் செலுத்தி வருகிறது.

அரபிக் கடலில் வீணாகக் கடலில் கலக்கும் நீரின் அளவு 2313 கன மீட்டர். ஆனால் பெரியாறு அணையில் நாம் கூடுதலாக தேக்கி வைக்கக் கோருவது 126 மில்லி கன மீட்டர் மட்டுமே. ஆனாலும் வீணாகக் கடலில் கலக்க விடுவோமே ஒழிய தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர் தர அனுமதிக்க மாட்டோம் என்று கேரள அரசு வெட்டி வாதம் செய்கிறது.

கேரளா, தமிழகத்திலிருந்து அரிசி, மின்சாரம், பால், சிமெண்ட், மணல், காய்கறி, ஆடு, மாடு, கோழிகள் உண்ணும் தீவனங்கள் போன்ற அத்தியாவசிய பண்டங்களைப் பெற்றுக்கொண்டு வேண்டுமென்றே பிடிவாதப் போக்கோடு நடந்து கொள்வதையும் உலகவாதம் பேசும் இன்றைய கேரள ஆட்சியாளர்களின் நிலையை நாம் அனைவரும் ஒருகுரலாகக் கண்டிக்க வேண்டும்.

கேரளாவில் உள்ள இலக்கியக் கர்த்தாக்களும் மற்றும் சில சமூக ஆர்வலர்களும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மறுப்பது நியாயமற்ற செயல் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். மலையாள இலக்கியவாதி பால்சாக்ரைய தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பது முறையற்ற செயல் என்று ஆனந்த விகடனில் தான் அளித்த பேட்டியில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரைப் போலவே தாமசும் இதே குரலை ஒலித்துள்ளார்.

புதிய அணை கட்ட வேண்டுமென்று கேரள அரசின் நடவடிக்கையில் நியாயமில்லை. ஏனெனில் புதிய அணை கட்டுவதற்கான வாய்ப்பு சிறிதளவும் இல்லை. ஆனாலும் வேண்டுமென்றே இந்த வாதத்தை எடுத்து வைக்கிறது கேரளா. குறிப்பாக 999 வருடங்கள் தமிழகத்தின் குத்தகை உரிமை அடியோடு கையைவிட்டுப் போகும். மேலும் புதிய அணையால் இடுக்கிப் பகுதிக்கு தண்ணீர் அளவு முழுவதும் சென்றுவிடும். தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 13.5 டி.எம்.சி. தண்ணீர் இழப்பு ஏற்படும்.

கழக ஆட்சியில் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பல கடிதங்கள் கேரள அரசுக்கு தலைவர் கலைஞருடைய முயற்சியால் அனுப்பப்பட்டது. அக்கடிதங்கள், 2.12.96, 29.3.97, 7.11.97, 18.11.97, 3.12.97, 9.12.97. 10.12.97, 11.12.97, 15.12.97, 8.1.98, 20.1.98, 24.2.98, 3.4.98, 28.5.98, 13.6.98,2.7.98, 13.8.98, 21.8.98, 30.9.98, 13.10.98, 6.7.99, 14.7.99, 22.7.99, 5.8.99, 24.5.99, 25.5.99, 05.08.99 என பல காலக்கட்டங்களில் அனுப்பப்பட்டன. இக்கடிதங்கள் முறைப்படி இப்பிரச்சினைக் குறித்து எழுதப்பட்டவை. 

இக்கடிதங்களில் பேபி அணை பலப்படுத்துவது குறித்தும் குறிப்பிடப் பட்டிருந்தது. இதில் 24.2.98இல் தலைவர் கலைஞர் அவர்கள் கேரள முதல்வருக்கு விரிவான கடிதம் எழுதினார். 24.5.99 அன்று பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்விசை அமைச்சருக்கு விரிவான கடிதம் எழுதினார். 13.8.98 அன்று இருமாநில நீர்வளத் துறை அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. கேரள அரசுடன் அதிகாரிகள் மட்டத்திலான விரிவான பல பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டது. முதல்வர் கலைஞர் அவர்களே 5.4.2000 அன்று திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அப்பேச்சுவார்த்தையின் போது, முல்லைப் பெரியாறு சம்பந்தமான 7.12.1886 ஒப்பந்தம் மற்றும் கலைஞர் ஆட்சியில் 25.9.1970 அன்று போடப்பட்ட ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் பிரச்சினைகளை பேச வேண்டும் என வலியுறுத்தினார். முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நதி நீர் வழித் தடங்கள் மூலமாக மறிக்கக் கூடாது போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து அப்போது பேசப்பட்டது.

அதன்பின் 19.5.2000இல் டில்லியில் நடைபெற்ற இரு மாநில முதல்வர்களுடனான பேச்சுவார்த்தையிலும் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டார். மத்திய நீர்வளத் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கேரளாவின் பிடிவாதத்தால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. மத்திய நீர் வளத் துறை அமைச்சகம், நீரியல் பொறியாளர்கள் 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. நீர் வள ஆணைய உறுப்பினர் பி.கே.மிட்டல் தலைமையில் அமைந்த அக்குழு 10.10.2000 அன்று அணையைப் பார்வையிட்டது. முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று மிட்டல் குழு கருத்துத் தெரிவித்தது. இதில் தமிழக, கேரள பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கேரள பிரதிநிதி 12 ஆட்சேபங்களை எழுத்துமூலமாக கூறினார். அந்த ஆட்சேபங்கள் குறித்து 19.10.200 அன்று டில்லியில் இக்குழு கூடி விவாதித்தது. அந்த 12 ஆட்சேபங்களையும் ஆய்ந்து மறுத்து உரிய பதில்களையும் இக்குழு வழங்கியது. அக்கூட்டத்தில் பெரியாறு அணைக்கு வரக்கூடிய அதிகப்பட்ச நீர் பெருக்கு விநாடிக்கு 2 இலட்சத்து 12 ஆயிரம் கன அடி என்று மிட்டல் குழு உறுதி செய்தது. இதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது.

இவ்வாறான நிலையில்தான் கேரள பத்திரிகைகள் தவறான வகையில் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்ற பொய்யான செய்திகளை 12.12.2000 அன்று வெளியிட்டன. அதை வைத்துக் கொண்டும் இந்த குழுவிடம் திரும்பவும் கேரள அரசு 5வது முறையாக 5.1.2001 அன்று டில்லியில் கூடியபோது முட்டுக்கட்டைப் போடும் வகையில் ஒரு மனுவை அளித்து. ஆனால் அனைத்துப் பிரச்சினைகளிலும் உரிய பதிலை இந்தக் குழு கேரளாவுக்கு அளித்தப் பிறகும், தொடர்ந்து பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டு இருந்தது கேரளா. 23.1.2001 அன்று நடந்த இக்குழுக் கூட்டத்தில் நிபுணர்கள் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்யும் அறிக்கையும், கேரள உறுப்பினர் கையெழுத்துப் போட மறுத்தால் உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தள்ளிப் போனது. அதன் பின்னர்தான் உச்சநீதிமன்றம் 142 அடி வரையில் நீர் தேக்கலாம் என்ற ஆணையை வழங்கியது.

திரும்பவும் கேரள அரசு, 15.3.2006 அன்று நீர்வளப் பாதுகாப்பு (திருத்தம்) 2006 என்ற சட்டத்தை கேரள சட்டமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொண்டு வந்தது. பின்பு 27.7.2006 அன்று உச்சநீதிமன்றத்தை கேரளா அணுகி 142 அடி வரை நீரை தேக்கலாம் என்ற ஆணையை மறுபரிசீலனை செய்யக் கோரி அளித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், இரு மாநில அரசுகளும் இதுகுறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 29.11.2006 அன்று முதல்வர் கலைஞர், கேரள முதல்வர் அச்சுதானந்தன் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் தமிழக அமைச்சர் திரு. துரைமுருகன், கேரள அமைச்சர் திரு. பிரேமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால், கேரளாவின் முரட்டுப் பிடிவாதப் போக்கால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருமாநில நீர்வளத் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தைத் தொடரலாம் என்று அப்போது முடிவெடுக்கப்பட்து. அந்த அடிப்படையில் 18.12.2006 அன்று இரு மாநில நீர்ப்பாசன அமைச்சர்கள் பேசியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இவ்வாறு பரமபத விளையாட்டாக இப்பிரச்சினையை ஆக்கிவிட்டது கேரளா.

உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே பாயும் நதிகள் நைல், யூப்ரடிஸ், ஜோர்டான் குறிப்பாக இந்தியாவில் கங்கை நதி பிரச்சினையில் வங்காளதேசத்திற்கும் இந்தியாவுக்கும் உள்ள சிக்கல், சிந்து நதியில் பாகிஸ்தானோடு உள்ள சிக்கல் குறித்து முடிவெடுக்கும்போது, நாட்டின் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள முல்லைப் பெரியாறு சிக்கலுக்கு தீர்வு ஏற்படவில்லையே என்ற கவலை ஏற்படுகிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக உச்சநீதிமன்றம் கேரள அரசை கண்டித்தது. கடந்த 22.10.2009 அன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், எம்.கே.சர்மா, ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சின் முன் தமிழகத்தின் சார்பில் கே.பராசரண் ஆஜராகி, அணை பலமாக இருக்கிறது என்றும், கேரள அரசு வேறு ஒரு புதிய அணை கட்ட முயற்சி செய்கிறது என்று உரிய ஆதாரங்களோடு வாதம் செய்தார். கேரள அரசின் சார்பில் ராஜீவ் தவண் ஆஜர் ஆனார்.

அவர் தனது வாதத்தின்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் நீதிபதிகள், ‘அப்படியானால் உங்கள் கவலை புதிய அணை கட்டுவதுதான் என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா’ என்றும், ‘கடந்த 2006 பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்போது கேரளத்தின் நிலை குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தீர்ப்பு அளித்த 15 நாட்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், புதிய அணை கட்டுவது தொடர்பான சட்டத் திருத்தத்துக்கு சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தை மீறி நீங்கள் செயல்படுகிறீர்கள். நாட்டின் உயரிய நீதித்துறையின் உத்தரவை மதிக்காவிடில் அதன் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடுகிறது’ என்று கேரள அரசின் வழக்கறிஞர் ராஜீவ் தவணைப் பார்த்துத் தெரிவித்தனர்.

கேரளா, தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கொடுப்பது என்றாலும் சட்டமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் தரமுடியும் என்ற ஒரு விநோத சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. உலக நலன் பேசும் கம்யூனிஸ்ட் அரசு அச்சுதானந்தன் தலைமையில் கேரளத்தில் இருக்கிறது. நியாயங்களையும், உண்மைகளையும் மறைத்து கேரள அரசு நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது. தமிழகத்திற்கு நீர் தரவே அங்கு இருக்கின்ற ஆட்சியாளர்களுக்கு மனம்  வரவில்லை. கேரள முதல்வராக இருக்கும் அச்சுதானந்தன், தலைவர் கலைஞர் அவர்களைப் போன்று பெருந்தன்மையான போக்கில் இல்லாததும் கவலையைத் தருகிறது. இதே அச்சுதானந்தன்தான், நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் உள்ள அடவிநயினார் திட்டத்தை எதிர்த்து கடப்பாறை, மம்பட்டியோடு வந்தார். அதிலிருந்து அவருடைய முரட்டுப் பிடிவாதம் நன்கு தெரிகிறது. 

கேரள முதல்வர் அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியுள்ள கருத்து கண்டிக்கத்தக்கதாகும். அவர் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அனை விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த முடிவு கேரள மக்களை வஞ்சிப்பதற்கு சமமாகும். கேரளாவில் உள்ள 7 மாவட்டங்களைச் சேர்ந்த 40 லட்சம் மக்களின் உயிரை பணயம் வைத்துத்தான் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுத்து வருகிறோம். இந்த 40 லட்சம் பேரையிம் அரபிக் கடலில் தள்ளிவிட்டு தண்ணீர் கொடுக்க வேண்டுமா? அல்லது புதிய அணை கட்ட வேண்டுமா? என்பதுதான் இப்போதைய முக்கிய கேள்வி என்று கூறியுள்ளார் (தினகரன், 20.10.2009). இவ்வாறு தமிழக மக்களை புண்படுத்துவதுடன் நெஞ்சில் ஈரம் இல்லாமல் பேசும் இவரிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? ஆனால் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளும் பண்பு கேரள ஆட்சியாளர்களுக்குப் புரியவில்லை. தலைவர் கலைஞர் அவர்களின் போர்குணம் தெரியாமல் கேரள அரசு நடந்து கொள்கிறது. 

காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினை, பாலாறு, பொன்னியாற்று பிரச்சினைகள் போன்றவற்றில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் தலைவர் கலைஞர் அவர்கள் உரிய முயற்சிகளோடு அணுகுவதால் தமிழகத்தின் நதி நீர் உரிமை நிச்சயம் பாதுகாக்க முடியும். கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களோடு நல்ல உறவு வைத்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் விரும்புவது ராஜதந்திரமே. இதற்காக கேரளாவுக்கே சென்று தலைவர் கலைஞர் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்தார். இன்றைக்கு, திருவள்ளுவர் சர்வக்ஞர் சிலைகள் திறக்கப்பட்டபின் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு காவிரி பிரச்சினைக்கு தீர்வு வரும். பாலாற்றில் அணை கட்ட அவசரம் காட்டிய ஆந்திர அரசின் செயல்பாட்டை, தலைவர் கலைஞர் அவர்களுடைய அணுகுமுறை அந்த அரசைக் கட்டிப் போட்டுள்ளது. தலைவர் கலைஞர் அவர்கள் நதி நீர் சிக்கலில் காட்டும் தொலைநோக்குப் பார்வையால் தமிழ நலன்களை காக்க முடியும் என்பது உண்மை! நம்பிக்கை!!


மீண்டும் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 28.10.2009 அன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் கே.பராசரண், ‘அணையில் தண்ணீர் தேக்கும் அளவை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானத்திற்கு தடை விதிக்க வேண்டும், உச்சநீதிமன்றத்தின் ஆணையை கேரள அரசு மதிக்க வேண்டும், புதிய சர்வே எதையும் எடுக்கக் கூடாது, அணையில் இதுநாள் வரை உள்ள நீரை தேக்கி வைக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை கூறி வாதிட்டார். அப்போது நிபுணர் குழுவின் அறிக்கையைப் பெற்று தமிழகத்தின் யோசனை பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி ஜெயின் குறிப்பிட்டார்.

தமிழகம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களும் தலா இரண்டு நிபுணர்களை நியமித்தும், மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் மூன்று நிபுணர்கள் நியமிக்கப் பெற்றும் ஒரு குழு அமைக்கலாம் என்றும், அக்குழுவின் அறிக்கையின் பேரில் ஆய்வு செய்யலாம் என ஜெயின் குறிப்பிட்டார். ஆனால், கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவாண் இதனை ஏற்க மறுத்துவிட்டார். இருப்பினும் நீதிமன்றம், நீரியல் வல்லுநர் மட்டுமல்லாமல் நிலநடுக்க நிபுணரையும் இக்குழுவில் சேர்க்கலாம் என்று கூறியது. இதனையும் கேரளா மறுத்துவிட்டது. கேரளம் நீதிபதிகளின் யோசனைகளை ஏற்க தயாராக இல்லை என்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 மீண்டும் 4.11.2009 அன்று உச்சநிதிமன்றத்தில் வழக்கு வந்தது. அன்றைக்கு அணையின் பாதுகாப்புத் தொடர்பாக ரூர்கி ஐ.ஐ.டி. பேராசிரியர் டி.கே.பால் அளித்த அறிக்கையும் நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்தது. அந்த அறிக்கையை கொண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை கேரள அரசு தாக்கல் செய்தது. மீண்டும் மீண்டும் அணை நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளது என்ற வாதத்தையே கேரளம் வைத்தபோது, தமிழகம் அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இதனால் நீதிபதிகள் கேரள அரசின் மனுவை நிராகரித்தனர்.

‘தமிழகம் தாக்கல் செய்த வழக்கு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் வழக்குத் தொடர்பாக ஆதாரங்களை அளித்ததை ஏற்க முடியாது. ரூர்கி பேராசிரியர் வெளியிட்ட அறிக்கையின் முதல் பாகத்தில் தொடர்ச்சியாக ஆதாரமாக எதையும் ஏற்க முடியாது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நீதிபதி டி.கே.ஜெயின், ‘அணை மிகவும் பழைமையாகிவிட்டதாக நீங்கள் உணர்கிறீர்கள். அதனால் புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 142 அடி வரை தண்ணீரை சேமிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகு, 15 தினங்களுக்குள் கேரள சட்டப் பேரவையில் அவசர அவசரமாக அணை தொடர்பாக சட்டம் இயற்றியதன் அவசியம் என்ன? அணையின் ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் சட்டம் இயற்றியதாகக் கூறி எங்களை சமாதானம் செய்கிறீர்கள். எந்த அடிப்படையில் நீங்கள் சட்டம் பிறப்பித்தீர்கள். அதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?’ என்று கேட்டார்.

கடந்த நவம்பர், 2009 அன்று இந்த வழக்கு நீதிபதிகள் டி.கே.ஜெயின், முகுந்தகம், சர்மா, ஆர்.எம்.லோதா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, கேரள அரசு வழக்கறிஞர் ராஜீவ் தவான் ‘இரு மாநிலங்களுக்கு இடையிலான ஒரு பிரச்சினையில் அரசமைப்புச் சட்டங்கள் தொடர்புடைய கேள்வி எழும்போது அதை அரசமைப்புச் சட்டத்தில் 131ஆவது பிரிவின் கீழ்தான் உச்சநீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். ஆனால் 2006இல் இந்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பானது அரசமைப்புச் சட்த்தின் 32ஆவது பிரிவின் கீழ் வருகிறது. எனவே இந்த தீர்ப்பு சட்டப்படியானது அல்ல’ என்று குறிப்பிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரணிடம் இந்த வழக்கை அரசமைப்புச் சட்ட பெஞ்ச் விசாரிக்க தங்களுக்கு ஆட்சேபணை இல்லையே என்று நீதிபதிகள் கேட்டனர். அதனை வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டார். பின்னர் எந்தெந்த விஷயங்களை அரசமைப்புச் சட்ட பெஞ்சின் ஆய்வுக்கு அனுப்பலாம் என்ற பட்டியலை இரு மாநிலங்களும் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து முதல்வர் கலைஞர் அவர்கள் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்று குறிப்பிட்டார். கேரள அரசு திட்டமிட்டு முல்லைப் பெரியாறு வழக்கை இழுக்கடிக்கிறது என்றும், 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு தமிழகத்துக்கு நீதி கிடைக்கும் என்று நாமெல்லாம் எதிர்பார்த்திருந்த வேளையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இவ்வழக்கை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, நீதி கிடைக்க இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப்படாமல் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.கேள்விக்குறியாகிவிட்ட இந்தப் பிரச்சினையில் 136 அடிக்கு நீர் தேக்கலாம். இதன் மொத்தக் கொள்ளளவு 15.662 டி.எம்.சி. ஆகும். தமிழகத்திற்கு சராசரியாக இரண்டு லட்சம் ஏக்கர்களுக்கு மேல் இந்த நீர் பயன்படுகிறது.


இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் நீதிபதிகள் முகுந்தகம் சர்மா, ஆர்.எம்.லோதா, பி.சுதர்சன ரெட்டி, தீபக் வர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெயின் கூறுகையில், இரு மாநிலங்களுக்கும் வாதிட 2 நாட்கள் போதுமா? என கேட்டார். உடனே, இந்த வழக்கு இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாக இருப்பதால் விவாதத்திற்கு கூடுதல் நாட்கள் வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரண் வாதிட்டார்.

தொடர்ந்து கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறுகையில், 2 மாநிலங்கள் விவாதத்திற்கு 9 நாட்கள் தேவைப்படும் என கூறினார். மேலும் தங்கள் மாநிலம் சார்பில் புதிய ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி வேண்டும் என்றார். ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜெயின், வழக்கு விசாரணை ஜனவரி 19ஆம் தேதி தொடங்கும் என்றும், புதிய ஆவணங்கள் தாக்கல் செய்வது குறித்து அப்போது முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.

மாநிலங்களவையில் 23.11.2009 கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

பெரியார் புலிகள் சரணாலயத்தில் 92,500 ஹெக்டேர் பரப்பில் 2.5 ஹெக்டேர் பரப்பில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. 16.09.2009 தேதியன்று நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய நிலைக் குழுவின் 16ஆவது கூட்டத்தின் பரிந்துரைக்கு ஏற்பவே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியானது சில நிபந்தனைகளை பின்பற்றுவதற்கு உள்பட்டதாகும். இருப்பினும் முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான வன ஆய்வு மேற்கொள்ள கேரள அரசிடமிருந்து எந்தத் திட்டமும், 1980ஆம் ஆண்டு வனங்கள் (பாதுகாப்பு) சட்டப்படி பெறப்படவில்லை என்று தெரிவித்தார் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

தமிழக நீர்ப்பாசன கண்காணிப்பு பொறியாளர் ரங்கசாமி இந்த அணையை ஆய்வு செய்து, எந்த நீர்க்கசிவும் அணைக்கு எந்த சேதாரமும் பாதிப்பும் இல்லை என்று 23.11.2009 அன்று தெரிவித்துள்ளார். இவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டு தமிழகத்தின் சார்பில் உண்மையான நிலைமையை எடுத்துச் சொன்னாலும் கேரளம் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டு வருகிறது.