“நீரின்றி அமையாது உலகு”; “சிறுதுளி பெரு வெள்ளம்”; “பார்க்கும் இடமெல்லாம் நீர்நிலை பருகத்தான் நீர் துளி இல்லை” என்று வழக்கத்தில் உள்ள மொழிகள் சொல்கின்றன. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என கிராமப்புறத்தில் சொல்வார்கள். தம்மை நாடி வந்தவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லையென்றாலும், தண்ணீர் கொடுத்து உபசரிப்பது வாடிக்கையும், பெருந்தமையும் ஆகும். அது அன்பின் அடையாளம். இந்த வாடிக்கை எதிர்காலத்தில் இருக்குமா என்று தெரியாது. ஆனால், மனிதநேயம் இல்லாதவர்களை தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க மாட்டான் என்றும் பேசுவதுண்டு. ஆனால் தண்ணீருக்கே இப்போது பற்றாக்குறை. இன்றைக்கு தண்ணீரை விலைக்கு வாங்குகின்ற சூழல். 8090களில், இம்மாதிரி தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று யாரும் நினைத்திருக்க மாட்டோம். எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினையில் எப்படியெல்லாம் நிலைமைகள் மாறும் என்று சொல்ல முடியவில்லை. அந்த அளவு தண்ணீர் பிரச்சினை வருங்காலங்களில் இருக்கும் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீரை பாதுகாக்க வேண்டும், நதிகளில் ஓடும் தண்ணீரை வீணாக்காமல் பயன்பாட்டுக்கு செலவிட வேண்டும் என்ற சிந்தனை இன்றைக்கு வளர்ந்துள்ளது.

 தேசிய நதி நீர் இணைப்பில் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இப்போது அதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி இதுகுறித்து பேசியபொழுது, தமிழக முதல்வர் “இந்தத் திட்டம் ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி காலத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது இருந்த அமைச்சர் கே.எல்.ராவிடமும் இதுபற்றி நான் பேசியுள்ளேன்” என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு 12.3.2010 அன்று, நதி நீர் இணைப்புத் திட்டம் என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளார். கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம் திரும்பவும் உயிர் பெற வேண்டுமென தி.மு.க. சார்பில் கோரிக்கையும் வைத்துள்ளார். தி.மு.க. நதி நீர் இணைப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

தமிழக முதல்வர் சட்டப் பேரவை பணியில் பொன் விழா கண்டார். அந்த சிறப்பான பணியை பாராட்டி முதல்வருக்கு தீவுத்திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி போன்றோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், என்னுடைய சட்டமன்ற பணி பொன் விழாவையொட்டி நதி நீர் இணைப்பு வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு வைக்கின்றேன். அதனை பிரதமரும், சோனியாவும் நிறைவேற்றித் தரவேண்டும் என்று குறிப்பிட்டார். 

இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய வகையில், தமிழகத்தில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்ற வகையில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம், ரூ.369 கோடி செலவில் 73 கி.மீ. தூரம் கால்வாய் தோண்டும் பணிகள் விரைந்தும், தீவிரமாகவும் நடைபெறுகிறது. தாமிரபரணி, கன்னடியன் கால்வாயிலிருந்து, வெள்ளக் கால்வாய் மூலம் திசையன்விளை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் பயன்படும் வகையிலான இந்தத் திட்டத்தை, மார்ச் 2008இல் தமிழக முதல்வர் அறிவித்தார். இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாகும் இது. தாமிரபரணியில் வெள்ளக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை திருப்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 23,040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறவும், மக்களுக்கு குடிநீர் கிடைக்கவும் இத்திட்டம் தீட்டப்பட்டது. கடலுக்கு வீணாக செல்லும் 13,758 மி.க.மீட்டர் அடியிலிருந்து, 2,765 மி.க.அடி நீர் இத்திட்டத்தில் திருப்பப்படுகின்றது. இப்போது இப்பணிகள் 72 பகுதிகளாக பிரித்து, அதை 4 பிரிவுகளாக வகுத்து நடைபெறுகின்றன. இதில் ஒரு சில பகுதிகளுக்கு பணியின் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இத்திட்டத்தை இதயசுத்தியான அக்கறையோடு, தமிழக முதல்வர் தீவிர அறுவை சிகிச்சையின்போது மருத்துவமனை படுக்கையிலிருந்து துவக்கி வைத்தார் என்றால், அதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும்.

தாமிரபரணி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 126 கி.மீ. தூரம் பயணித்து கடலில் கலக்கின்றது. பாபநாசம் அணையில் துவங்கி பொருநை ஆறு, வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி, கோடகன், திருநெல்வேலி, பாளையங்கால், மருதூர் கீழ், மேல், ஸ்ரீவைகுண்டம் தெற்கு, வடக்கு போன்ற கால்வாய்கள் மூலம் நீர் பாசனம் வழங்குகிறது. இந்த நேரடி பாசனம் போக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு, கருப்பா நதி, பச்சையாறு, நம்பியாறு என அணைகளை கொண்டு நெல்லை மாவட்டத்தை வளப்படுத்துகின்றது. இதை விரிவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டதுதான் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு திட்டம். இத்திட்டத்தால் தெற்கே திசையன்விளை, உவரி, கூடங்குளம், சாத்தான்குளம், திருசெந்தூர் வரை உள்ள பகுதிகள் பயன்படும். இந்த பகுதிகளில் திருச்செந்தூர் வட்டாரத்தைத் தவிர, மற்ற இடங்களில் நீர்வளம் குறைவு. தேரிக்காடான செம்மண் இருக்கின்ற பகுதிகள், இருபோகம், முப்போகம் சாகுபடி என்று மாறக்கூடிய அளவிற்கு இந்த இணைப்புத் திட்டம் பயன்படும். 

இப்பகுதியில் அவ்வப்போது வறட்சி; விவசாயமும் அங்குள்ள மக்களுக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. அங்குள்ள சாலைகளில் பயணித்தால் பச்சை நிறமானது ஒரு சில கிணற்றுப் பகுதிகளில் மட்டுமே தெரியும். மீதி இடங்கள் கட்டாந்தரையாக இருக்கும். பனை மரங்கள், முட்புதர்கள் மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். அதுபோலவே, ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகள் வானம் பார்த்த பூமியாக கந்தக பூமியாக இன்றைக்கு இருக்கின்றது. அந்த பூமியில் கருவேல மரங்கள்தான் அதிகம் உள்ளன. மானாவாரி பயிர்கள் அடிக்கடி பொய்த்து வருகிறது. அப்பகுதிக்கும் தாமிரபரணியிலிருந்து விவசாயத்திற்கு உபரி நீரை வழங்கக் கூடிய அளவில் திட்டங்கள் வேண்டும். ஏற்கனவே அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்பு இப்பகுதிக்கு பயன்படும் என்று திட்டமிடப் பட்டிருந்தாலும், அது கேரளாவின் பிடிவாதத்தால் கானல் நீராகவே இதுவரை இருக்கின்றது. இதன் வட பகுதிகள் இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகள் பயன்படும் அழகர் அணை திட்டமும் நடைமுறைக்கு வரவேண்டும். இவ்வாறு தமிழக அரசு நதி நீர் இணைப்பில் தன் பங்கை செய்து வருகிறது.

நதிகள் இணைப்புப் பிரச்சினையில் சுற்றுச்சுழல் பிரச்சினை, நில ஆர்ஜிதம் போன்ற காரணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் முடிந்த அளவு தென்னிந்திய நதிகள் மற்றும் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைத்து, இறுதியில் வட இந்திய நதியான கங்கையோடு இணைக்கத் திட்டமிடலாம். இத்திட்டத்தை செயல்படுத்த நீண்டகாலம் ஆனாலும், அதற்கான தொடக்கத்தில் மும்முரம் காட்டுவது அவசியமாகும். நதிநீர் இணைப்பு திட்டத்திற்கான முயற்சிகள் 1998இலிருந்து எடுக்கப்பட்டாலும், 30 நதிகளை இணைப்பதும், அதில் 15 நதிகள் தென்னிந்திய தீபகற்ப தக்கணபீட பூமியில் உள்ள தீபகற்ப நதிகளாகும். அதுபோல வடபுலத்தில் இமாலய நதிகள் கிட்டத்தட்ட 15 வரை ஆகும். பேட்வா பன்சால் நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அப்பணியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 14 நதிகளை தேசிய சொத்து என்ற அறிவிப்பையும் இன்றைய மத்திய அரசு செய்துள்ளது.

தமிழகத்திலிருந்து பல உதவிகளைப் பெறுகின்ற கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் நதி நீர் இணைப்பை எதிர்க்கின்றன. மகாராஷ்டிரமும் குஜராத்தும் இதே போக்கை கையாளுகின்றன. கர்நாடக அரசின் தவறான போக்கால் காவிரியில் நமது உரிமை பறிபோனது. இதனால் தஞ்சை டெல்டா குடவாசல் பகுதியில் பூமி பிளவுபட்டு, விவசாயிகள் எலிக்கறி உண்டதாக 2004இல் செய்திகள் வந்தன. முல்லைப் பெரியாறு, அச்சன்கோவில், பம்பை வைப்பாற்றோடு இணைப்புப் பிரச்சினையிலும் கேரளாவின் மூர்க்கத்தனமான அணுகுமுறை தமிழகத்தின் நலனைப் பாதிக்கின்றது. நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள அடவிநயினார் அணைக்கு கடப்பாரை, மண்வெட்டியுடன் தமிழக எல்லைக்கே முரட்டுத்தனமாக வந்தவர்தான் இன்றைய கேரள முதல்வர் அச்சுதானந்தன். வட தமிழகப் பகுதியில் பாய்ந்த பாலாறு, பொன்னை ஆறுகளை ஆந்திர அரசு தடுக்கப் பார்க்கிறது.

தமிழகம் மட்டுமல்லாமல், தென் மாநிலங்கள் வளம் பெற கங்கை காவிரி நீரைத் திருப்பி வைகை பொருநை, குமரி வரை இணைக்க வேண்டும். இந்தப் பிரச்சினை அனைவராலும் இன்றைக்குப் பேசப்பட்டு வருகிறது. துவக்கத்தில் இதுகுறித்து சர். ஆர்தர் காட்டன், சி.பி.இராமசாமி அய்யர், டாக்டர் கே.எல்.ராவ் போன்றோர் திட்டங்களை வகுத்தனர்.

 இந்த பத்தியாளர் 1983இல் நதிகள் தேசியமயம், நதிநீர் இணைப்பு, கேரள நதிகளைத் தமிழகத்தோடு இணைப்பு குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் நீதிபதிகள் எம்.சீனிவாசன், ஏ.ஆர்.இலட்சுமணன் ஆகியோரின் தீர்ப்பில் நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர். அதன் மேல்முறையீடு மனு இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு, நதி நீர் இணைப்பை கைவிடவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. மத்திய அரசு 1999ஆம் ஆண்டில் இதுகுறித்து ஆராய, சுரேஷ் பிரபு தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. சுரேஷ் பிரபு குழு, இந்திய நதி நீர்களை இணைக்க ரூ.1,200/ கோடியிலிருந்து ரூ.1,500/ கோடி வரை செலவாகும் என்று மதிப்பிட்டது. 

கங்கை காவிரி இணைப்பு சாத்தியம் தானா? சாதிக்க முடியுமா? கனவுத் திட்டம்தானா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் இதய சுத்தியோடு அணுகினால் எதையும் சாதிக்கலாம். சந்திர மண்டலத்துக்கே மனிதன் சென்று வந்தபின்பு அறிவியல் மூலம் எதையும் சாதிக்க முடியும். இதில் உலக அளவில் பல உதாரணங்கள் உள்ளன. 

சீனாவில் மக்களிடம் கடன் பத்திரங்கள் வழங்கி கிராண்ட் கால்வாயை அமைத்தனர். ரைன் நதியில் வெள்ளத்தைத் தடுக்க ரோமானிய தளபதி மார்க்கஸ் ட்ரூஸஸ் கால்வாய் வெட்டி நதிநீரைத் திருப்பினார். இதுபோன்று டைகிரிஸ், குவாங்சி, நைல் சூயஸ் திட்டம் போன்றவை சாதிக்கப்பட்ட சாதனைகளாகும். அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ் மாநிலங்களுக்கிடையேயான நதிகள் இணைக்கப்பட்டன. ஆப்பிரிக்காவில் பல நதிகள், தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதியைத் தெற்கு முகமாகத் திருப்ப வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இரஷ்யாவில் நிறைவேற்றப்பட்டதான் “வோல்கா கீப்பர்” என்ற பிரம்மாண்ட கால்வாய் இணைப்பு. 18ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை ஆண்ட முதலாம் பெடரிக் அவர்கள் சாத்தியமில்லை என்று சொல்லப்பட்ட எல்பெ, ஆடர், வெசர் மூன்று நதிகளை இணைத்தார். எனவே, இந்திய தேசிய நதிகளை உறுதியாக இணைக்கலாம்.

1834இல் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கங்கை காவிரி இணைப்பைப் பற்றி ஆராய்ந்தார். கோதாவரி கிருஷ்ணா அணைக்கட்டுகளைக் கட்டிய கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பொறியாளரான காட்டன் இத்திட்டத்தை ‘நீரை எதிர்த்து இரும்பு’ என்று குறிப்பிட்டார். ஏனெனில் அப்போது இந்தியாவில் இரயில்வே இணைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இரயில்வே இணைப்பை விட கங்கை காவிரி இணைப்பு மிகவும் முக்கியமானது என்று அறிவுறுத்தினார். எனவே, இத்திட்டத்தை அக்காலத்தில் இரயில்வே இருப்புப் பாதை இரும்பால் இருக்கின்ற காரணத்தால் ‘நீரை எதிர்த்து இரும்பு’ என்று வேடிக்கையாகப் பேசப்பட்டது.

197172இல் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டாக்டர் கே.எல். ராவ் அவர்கள் கங்கை காவிரி இணைப்புத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இவருடன் டாக்டர் சதுர்வேதி, ராஜா ரெட்டி ஆகியோர் இணைந்து ஆய்வு நடத்தினர். இத்திட்டத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நடைமுறைப்படுத்த விரும்பினார். இத்திட்டத்தில் கங்கை பிரம்மபுத்திராவைக் கால்வாய் மூலம் இணைக்க வேண்டும். குஜராத் மகாராஷ்டிரா மேற்கு இராஜஸ்தான் மாநிலங்களில் கால்வாய்களை வெட்டி இந்த இரண்டு கால்வாய்களையும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலப் பகுதிகளில் இணைக்க வேண்டும். அதன் பின்பு வடபுலத்தில் வெட்டப்பட்ட கால்வாய் மூலம் கங்கை பிரம்மபுத்திரா நீரைத் தெற்கு முகமாகத் திருப்பி தக்காண பீடபூமியில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைக் கிழக்கேத் திருப்பலாம் என்ற வகையில் கே.எல்.ராவின் திட்டம் அமைந்து இருந்தது. கே.எல்.ராவ் திட்டத்தில் விந்திய மலைகளைக் கடந்து நதி நீரைத் தெற்கு நோக்கித் திருப்ப வேண்டிய கடினமான பணி உள்ளது. 1800 அடி உயரத்திற்குச் சக்தி வாய்ந்த பம்புகளால் கங்கை பிரம்மபுத்திரா மற்றும் ஏனைய நதிகளின் நீரை ஏற்றி தக்காண பீடபூமியில் உள்ள ஆறுகளில் இணைக்க வேண்டும். இதற்கு 7,500 மெகாவாட் மின்சக்தி தேவைப்படும். இந்திய நாட்டின் மொத்த மின் உற்பத்தியே 10,700 மெகா வாட்தான். இதனால் 650 டி.எம்.சி. நீர் தென்னக நதிகளுக்கு ஆண்டுதோறும் கிடைக்கும். இத்திட்டத்தை நிறைவேற்ற சுமார் ரூ.12,500 கோடி செலவாகும். இத்திட்டம் 20 ஆண்டுகளில் முடிக்கலாம் என திட்டமிட்டார். ஆனால், இயலவில்லை. இந்தத் திட்டத்தைப் பரிசீலித்த ஐ.நா. வளர்ச்சிக் கழகம் பாராட்டியது. 

கேப்டன் ஜே. தஸ்தூர் பூமாலை திட்டம் இத்திட்டத்தின் மூலம் வெள்ளம், வறட்சி என்ற நிலையை மாற்றி மக்களுக்கு வேலைவாய்ப்பு தந்து உணவு உற்பத்தியைப் பெருக்குதல், மின் உற்பத்தி என்ற பல நோக்கங்கள் கொண்டு அமைக்கப்பட்ட திட்டமாகும். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது இதுகுறித்து ஆராய்ந்தார். இந்தப் பூமாலைத் திட்டம்:

அ. சிந்து நதியின் துணை நதியான ரவி நதியிலிருந்து கிழக்கே உள்ள பிரம்மபுத்திரா நதி வரை 1,000 அடி அகலத்திற்கு 2,400 கிலோ மீட்டர் நீளத்திற்கு 50 அடி ஆழத்திற்குக் கால்வாய் அமைத்து, அந்தக் கால்வாயை 1,770 கிலோ மீட்டர் நீளத்திற்குத் தெற்குமுகமாக அமைப்பது. இமயமலை கால்வாய் என்று அழைக்கப்பட்ட அந்தக் கால்வாயில் 30 பெரிய நீர்த் தேக்கங்கள் அமைத்துத் தேக்கிய நீரை 3 கிலோ மீட்டர் இடைவெளியில் தெற்கு நோக்கி வெட்டப்பட்ட கால்வாயின் மூலம் நீர்ப்பாசனத்திற்கு வழங்கலாம்.

ஆ. அதன்பின்பு மத்தியப் பிரதேசம், தக்காண பீடபூமி, தமிழகம் இணைத்து 9,659 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு பூமாலை போன்று கால்வாய் அமைத்து அதில் 20 பெரிய நீர்த் தேக்கங்களை அமைத்து இந்தக் கால்வாயை மேலே குறிப்பிடப்பட்ட இமாலயக் கால்வாயுடன் இணைக்கலாம். இத்திட்டம் சாத்தியம் இல்லாத திட்டம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இதற்கான அப்போதைய மதிப்பீடு சுமார் 25 ஆயிரம் கோடியாகும். 1973இல் மத்திய நீர் ஆதாரம் மற்றும் மின்சார உற்பத்தி கமிஷன் இத்திட்டத்தைப் பற்றியும் ஆராய்ந்தது.

மத்திய அரசு கங்கை காவிரி இணைப்பு திட்டம் இந்திய தேசிய நீர்வள மேம்பாடு திட்டம் 1980இல் அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் சிந்து கங்கை பிரம்மபுத்திரா ஆகிய வடபுலத்து நீர்வள மேம்பாடு இந்நதிகள் யாவும் சீனா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இது நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்களுக்கு அண்டை நாடுகளின் ஒப்புதலும் பெற வேண்டும். அதிகம் நீர் வரத்துள்ள பிரம்மபுத்திரா நதியைக் கங்கையுடன் இணைத்தால் பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் சுமார் 5,000 டி.எம்.சி. நீரைக் கொண்டு 550 இலட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறலாம்.

நர்மதை, தபதி ஆறுகளைத் தக்காண பீடபூமி ஆறுகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, தாமிரபரணி வரை இணைக்கலாம். மேலும் மேற்கு நோக்கிப் பாயும் கேரள, கர்நாடக மாநிலங்களில் வீணாகும் நீரைக் கிழக்கு நோக்கித் திருப்பி ஆங்காங்கு உள்ள கங்கை பிரம்மபுத்திரா பிரதானக் கால்வாய்களில் இணைக்கலாம். இத்திட்டம் தொழில்நுட்ப அடிப்படையில் எளிதாகச் செயல்படுத்த முடியும். இத்திட்டங்களை ஆராய மத்திய அரசு, 1982இல் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை (Nச்tடிணிணச்டூ ஙிச்tஞுணூ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt அஞ்ஞுணஞிதூ) உருவாக்கியது. 

மகாநதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், அவ்வாற்றின் படுகையில் உள்ள மக்களின் தேவைகள் போக சுமார் 300 டி.எம்.சி. நீர் உபரியாக உள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளத் தடுப்புக்காக 300 அடி உயரமுள்ள ஓர் அணையைக் கட்டுவதற்கு ஒரிசா அரசு திட்டமிட்டுள்ளது. அந்த அணையிலிருந்து தெற்கே 930 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு பெரிய கால்வாயை வெட்டி உபரி நீரைக் கோதாவரியில் உள்ள தவளேஸ்வரம் அணைக்குக் கொண்டு செல்லலாம். இந்த இணைப்பிற்கு ஆகும் செலவு ரூ.3,616 கோடியாகும். மகாநதியிலிருந்து வரும் நீரை கோதாவரி டெல்டா பாசனத்தின் பயன் போக கோதாவரி ஆற்றின் உபரி நீரையும் சேர்த்து தெற்கே கிருஷ்ணா, வடபெண்ணை நதிகளைக் கடந்து காவிரி வரை கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. மகாநதி நீரைத் திருப்புவது குறித்து ஒரிசா மக்களிடம் போராட்டம் நிலவுகிறது.

கோதாவரி கிருஷ்ணா இணைப்புக்கு வேண்டிய ஆய்வில் 2,500 டி.எம்.சி. கோதாவரி நதி நீர் கடலில் கலந்து வீணாகிறது. கோதாவரி நதி மேல் போலாவரம் என்ற இடத்தில் ஒரு பெரிய நீர்தேக்கம் உருவாக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. தவளேஸ்வரம் அணைக்கு மேற்கே சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலாவரம் நீர்த் தேக்கத்தையும், கிருஷ்ணா நதியில் உள்ள விஜயவாடா அணையையும் 174 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய கால்வாயை வெட்டி இணைக்கலாம். கோதாவரி நதிப் படுகையிலிருந்து உபரி நீர் கிருஷ்ணா நதிக்குக் கொண்டு செல்லப்பட்டு கிருஷ்ணா சமவெளிப் பகுதி பாசனத்திற்குப் போக தெற்கே வடபெண்ணை ஆற்றுக்குத் திருப்பலாம்.

கிருஷ்ணா நதியின் மேல் அமைந்திருக்கும் ஸ்ரீசைலம் நீர்த் தேக்கத்திலிருந்து சென்னைக்குக் குடிநீருக்காக 414 கிலோ மீட்டர் நீளத்திற்குத் தெலுங்கு கங்கை திட்டத்திற்காக வெட்டப்பட்ட கால்வாயைப் பெரிதாக்கித் தெற்கே திருப்பி காவிரிப் படுகையில் உள்ள கொள்ளிடம் நதியில் உள்ள கீழ் அணைக்குக் கொண்டு செல்லலாம். அல்லது மாற்றுத் திசையில் மேற்கே திருப்பி முக்கொம்பிலுள்ள அகண்ட காவிரியில் உள்ள மேல் அணையில் சேர்க்கலாம் அல்லது இரண்டிற்கும் மையப் பகுதியான கல்லணையிலேயே சேர்க்கலாமா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியிலிருந்து வைகை, வைப்பாறு, தாமிரபரணி இணைப்பைக் குமரி வரை கங்கை நீரை எடுத்துச் செல்லலாம்.

அமெரிக்க நீர்வளத் துறை ஆலோசகராக இருக்கும் டி.அனுமந்தராவ் இத்திட்டத்தை 30 ஆண்டுகளில் 30 இலட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றி முடிக்கலாம் என்று அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் பீகார் மாநிலம் பாட்னா அருகே கங்கை நதியிலிருந்து வெள்ளப் பெருக்கில் 60 ஆயிரம் கன அடி நீரைப் பயன்பாட்டிற்குத் திருப்பலாம். 10 ஆயிரம் டி.எம்.சி. நீரை உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்கள் பயன்படுத்தலாம். மீதமுள்ள 50 ஆயிரம் டி.எம்.சி நீர் கோதாவரி ஆறு வழியாகக் கிருஷ்ணாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணைக்கு வந்தடையும். பின்பு அங்கிருந்து ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் காவிரி மூலம் அனுப்பப்படும்.

நதி நீர் பிரச்சினை குறித்து தேசிய நீர்வள அமைப்பு 1998இல் விரிவான ஆய்வை நடத்தியது. இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 246இன்படி நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த இணைப்புக்கான பணிகளை விரைவுபடுத்தலாம். கங்கை காவிரி இணைப்பினால் ஏற்படும் பல்வேறு பயன்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை:

1. இந்த இணைப்புத் திட்டத்தினால் பீகார், உத்திரப்பிரதேசம், அசாம், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் ஏற்படும் வெள்ளக் கொடுமைகளைத் தடுக்கலாம்.

2. தக்காணப் பீடபூமி அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

3. நிலத்தடி நீர்வளம் அதிகரிக்கும்

4. தற்போதுள்ள நீர்வளத்தில் 20 சதவீதம்தான் பயன்படுத்தப்படுகிறது. மீதி 80 சதவீதம் வீணாக்கப்படுகிறது. இந்த வீணாகும் நீரை இந்த இணைப்புத் திட்டத்தினால் விவசாயம், குடிநீர் போன்ற பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.

5. இந்தியாவில் நான்கில் ஒரு பகுதிதான் நீர்வளத்தோடு சாகுபடி செய்ய முடிகிறது. எஞ்சிய பகுதிகள் சாகுபடி செய்ய முடியாத நிலங்களாகவும், பாலை நிலங்களாகவும், மானாவாரி நிலங்களாகவும் இருக்கின்றன. அம்மாதிரி நிலங்களும் கங்கை காவிரி இணைப்பால் பயனடையும். இதனால் 5 ஹெக்டேர் நிலப்பரப்பு விவசாயம் செய்ய முடியும்.

6. இத்திட்டத்தின் மூலம் 2,270 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

7. கங்கா காவிரி திட்டத்தினால் மீன்பிடித் தொழில் வளர்ச்சி அடையும்.

8. உள்நாட்டில் நீர்வழிப் போக்குவரத்து வளர்ச்சி அடையும்.

9. இந்த மாபெரும் இணைப்புத் திட்டத்தால் வேலைவாய்ப்பு பெருகும்.

10. இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள நதிநீர் சிக்கல்களுக்குத் தீர்வு ஏற்படும்.

ஒரு கட்டத்தில் இந்தியா பாலைவனம் ஆகிவிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் உலகளவில் இந்தியாவில் 60 சதவீத நிலத்தடி நீர் வற்றிவிடும் என மறுபுறம், உலக வங்கி கடந்த 12.3.2010 அன்று தெரிவித்துள்ளது. 2025இல் நாடு முழுவதும் உள்ள 5,173 நிலத்தடி நீர் பாதைகளில், 615 பாதைகள் நீரோட்டம் குறைந்தும், 108 பாதைகள் வற்றி விடும் என்றும் அந்த அறிக்கையில் உலக வங்கி கூறியுள்ளது. இது அபாயகரமான நிலையாகும். கடந்த 2001 கால கட்டத்திலிருந்து நிலத்தடி நீரை தோண்டி தோண்டி பகாசுர நிறுவனங்கள் குளிர்பானங்களையும், மினரல் வாட்டரையும் பாட்டில்களில் அடைத்து வியாபாரம் செய்வதால் நிலத்தடி நீருக்கு ஆபத்து வந்துவிட்டது. நிலத்தடி நீரை பாதுகாக்கவும், அதை நல்ல முறையில் மேலாண்மை செய்ய வேண்டுவது அனைவரின் கடமையாகும். இச்சூழ்நிலையில் நதி நீர் இணைப்பு அவசியம்.

தமிழகத்தில் மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீரில் 50 சதவீதம் வீணாகின்றது. இதில் 30 சதவீதம் கடலுக்கு செல்கின்றது. ஆறுகள் மூலம் 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கின்றது. இந்த தண்ணீரை எல்லாம் பயன்படுத்த வேண்டும்; வீணாக்கக் கூடாது என்ற சிந்தனையில்தான் நதி நீர் இணைப்பு, தண்ணீர் பாதுகாப்பு என்ற நிலைப்பாடுகளை எடுக்க வேண்டி உள்ளது. தமிழகம் எதிர்பார்க்கின்ற நதி நீர் இணைப்பு, சேதுக் கால்வாய் திட்டம் போன்றவை தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நதி நீருக்கு அண்டை மாநிலங்களை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது. அந்த வகையில் வீணாக கடலில் கலக்கும் நதிகளை இணைத்து, கங்கை காவிரி தென் குமரியைத் தொட்டால் தமிழகம் வளம் பெறும்.

‘வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகையால்

 மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்’

என்ற பாரதியின் கனவு நனவாகும் நாள் எப்போதோ?