என்று விடியும் கச்சா எண்ணெய் பிரச்சினை_
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கலைஞர் அவர்களும், மம்தா பானர்ஜியும் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் பிரச்சினையை எழுப்பியுள்ளன. நிதி மசோதா மீது வாதம் நடைபெறும் பொழுது வெட்டு தீர்மானத்தை பா.ஜ.க. கொண்டுவர இருக்கிறது. அதுபோலவே கம்யூனிஸ்டுகள், காங்கிரசை ஆதரிக்கும் முலாயம் சிங், லல்லுபிரசாத் யாதவ், மாயாவதி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் இந்த பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது ஆட்சிகள் மாறினாலும், பொறுப்பில் உள்ளவர்கள் உயர்த்தியே வருகின்றனர். ஏற்கனவே விலைவாசி உயர்ந்துள்ளதால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 10 சதவீதமாக உயர்த்தியதன் விளைவாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.67க்கும், டீசல் ரூ.2.58க்கும் உயர்ந்து விட்டது. இது மேலும் விலைவாசியை அதிகப்படுத்தி மக்களை வாட்டி வதைக்கும் என்பதால்தான் மத்திய அரசில் தோழமை கட்சித் தலைவர்கள் கலைஞர் போன்றோர் ஏற்றிய விலையை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
கச்சா எண்ணெயின் விலைகள் கூடுவதற்கு பல காரணங்கள் உண்டு. அக்காரணங்களில் முக்கியமானவை; உலக அளவில் எண்ணெயின் பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளின் எண்ணெய் உபயோகம் பெருகி வருகிறது. எண்ணெய் விலையை சரியாமல் வைத்திருப்பதற்காக திடீரென்று உற்பத்தியை நிறுத்தி விடுகின்றன. இதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை கொண்டு விலையை கூட்ட இம்மாதிரியான நடவடிக்கைகளில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் நடந்து கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல், அந்நாடுகளில் உள்நாட்டு போர்கள் அடிக்கடி நடைபெறுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டு கச்சா எண்ணெய் பிரச்சினையில் விலை கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாலர் மதிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு, பங்குச் சந்தை வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளாலும் எண்ணெய் விவகாரத்தில் பிரச்சினைகள் எழுகின்றன. இவ்வாறான சூழ்நிலைகளால்தான் உலக அளவில் இந்த பிரச்சினை தோன்றுகிறது.
கச்சா எண்ணெய் என்றால் ஹைட்ரோ கார்பன் கலந்த ஒரு திரவம் ஆகும். இந்த எண்ணெயில் பல வகை உண்டு. வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியேட் கச்சா எண்ணெய்தான் அனைவராலும் விரும்பப்படுகின்ற எண்ணெய் ஆகும். இது மற்ற கச்சா எண்ணெய்களைவிட இரண்டு முதல் நான்கு டாலர் வரை கூடுதலான விலையாகும். இதில் குறைந்த அளவே சல்பர் இருப்பதால் இதை இனிப்பான கச்சா எண்ணெய் என்பர். இந்தியாவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் சல்பர் கூடுதலான மத்திய கிழக்கு நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற எண்ணெயாகும். 42 அமெரிக்க காலன் (158.98 லிட்டர்) என்று ஒரு தீர்மானிக்கப்பட்ட கச்சா எண்ணெய் பற்றிய அடிப்படை விவரங்களாகும்.
உலக அளவில் எரிசக்தி தேவைக்கு 40 சதவீதம் கச்சா எண்ணெய் தான் சமாளிக்க முடிகிறது. பன்னாட்டு அளவில் ஒரு நாளைக்கு 78 மில்லியன் பேரல் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. அமெரிக்கா 20 மில்லியன் பேரல், சீனா 6 மில்லியன் பேரல்களும், ஜப்பான் 6 மில்லியன் பேரல்களும், இந்தியாவில் 3 மில்லியன் பேரல்களும் நாளொன்றுக்கு பயன்பாட்டில் உள்ளது என கணக்கீடு உள்ளது. உலக அளவில் அல்ஜீரியா, இந்தோனேஷியா, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவூதி அரேபியா, யூ.ஏ.இ. ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்புதான் எண்ணெய்கள் உற்பத்தில் செய்யும் கூட்டமைப்பாகும். உலகில் 60 சதவீதம் அளவில் இந்த நாடுகள்தான் ஏற்றுமதி செய்கின்றன. உலக பொருளாதாரம் எண்ணெய் உற்பத்தியை பொறுத்தே அமைகிறது. எனவே தான் அமெரிக்கா அரபு நாடுகளுடன் சண்டமாருதம் செய்கிறது.
இந்தியாவை பொறுத்தரை ஒரு நாளைக்கு 0.8 மில்லியன் பேரல் உற்பத்தி செய்யப்படுகிறது.70 சதவீதம் வரை வெளிநாடுகளையே நம்பி உள்ளோம். இராஜஸ்தான், பாம்பே ஹை, திக்பாய் போன்ற இடங்களில் எண்ணெய் வயல்கள் உள்ளன. வங்க கரையோரத்தில் இதற்காக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரிப்பு செய்கிறது.
கச்சா எண்ணெய்க்கு மாற்று பொருள் உள்ளதா என ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால்தான் கச்சா எண்ணெயினுடைய மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதில் ஒரு நாட்டின் பொருளாதாரமே அடங்கி உள்ளது.
பெட்ரோல் விலையில் 50 சதவீதம், டீசல் விலையில் 30 சதவீதம் அரசு வரி விதிக்கின்றது. இவ்வாறான வரிகளால் அரசு கஜானா நிரம்புகின்றது. 2008ஆம் ஆண்டு அரசிற்கு வந்த மொத்த வரி வசூல் 1,17,266 கோடி. இதில் 57,460 கோடி பெட்ரோலிய பொட்களிலிருந்து கிடைத்தது. மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது சுமார் 15 சதவீத விற்பனை வரி விதிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, நமது அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது. ஆனால் மக்களுக்கு பெருத்த பாரத்தையே சுமத்துகிறது. எண்ணெய் மீது அரசு இறக்குமதி வரி, கலால் வரி மற்றும் விற்பனை வரி போன்றவற்றை விதிக்கின்றன. இதனால் விலைவாசி உயர்ந்து மக்களை பாதிக்கின்றது.
ரூ.2,45,000 கோடி அளவில் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளன. எனவேதான் இந்த விலையேற்றம் என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இதே நாளில் எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனங்களின் நிதி நிலைமையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று கூறப்படுவதற்கு காரணம் எண்ணெய் அளவு பீப்பாயில் கணக்கிடப்படுவதால் ஏற்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தனி மனிதனும் லிட்டர் அளவிலேயே பணம் கொடுக்க வேண்டி உள்ளது.
இந்தியாவில் எண்ணெய் எடுப்பதற்கு தனியாருக்கு நிலம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. ஆனால் பொதுத் துறை நிறுவனங்களை இதில் ஈடுபடுத்தவில்லை. அந்த நேரத்தில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 30 டாலராக இருந்தது. ஆனால் தற்போது 100 டாலருக்கும் மேல் அதிகரித்துவிட்டது. இதற்காக அந்த தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் உழைப்பை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர்களின் உரிமையை ரத்து செய்வது அல்லது அவர்களுக்கு அதிக வரியை விதிக்கலாம்.
சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றப்படுகிறது. இதற்கான செலவு எண்ணெயின் தரத்தைப் பொறுத்து அமையும். சாதாரணமாக சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.1 என்று அளவில் உள்ளது. இந்த நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.31க்கு மேல் செல்ல வாய்ப்பு கிடையாது. ஆனால், அந்த பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளினால் இந்த மாபெரும் விலையேற்றம் ஏற்படுகிறது.
இவ்வாறான எண்ணெய் அரசியல் ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் சகலவித குழப்பங்கள், பிரச்சினைகள், துயரங்களை தோற்றுவிக்கின்றது. இதனால் அமெரிக்காவின் ஒபாமா முதல் அம்பாசமுத்திரம் அய்யப்பன் வரை பாதிப்படுகின்றனர். இதற்கு எப்போது விடிவுகாலம் வரப்போகின்றதோ.