வடபுலத்திலுள்ள இமயமலை பகுதிகளில் எப்பொழுதும் பதட்டம்! 

அமைதியின் உறைவிடத்தில் துப்பாக்கி சத்தம்!!

சாந்தி நாடி செல்லும் அப்பனி படர்ந்த பர்வதங்களின் பக்கத்தில் பிரச்சினைகள்!!!

ஆசியாவின் பெரியண்ணன் பானியில் சீனாவின் தொடர் போக்குக்குக் இயற்கையின் எழில் இமயமே பாடம் கற்றுத் தரும்....

நட்பு என்ற முறையில் இந்திய சீன உறவுகள் என்றைக்கும் சுமூகமாக இருந்ததில்லை. சீனாவில் அவ்வப்போது மோதல்கள் நீடிக்கின்றது. 1954இல் பாண்டூங்கில் நாடுகளுக்கிடையே அமைதியையும், உறவையும் வளர்க்க பஞ்சசீலத்தை வடிவமைத்த நேருவுக்கு சீனா கைகொடுத்தது. ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு முற்றிலும் மாறாக சீனா தொடர்ந்து நடக்கிறது. இந்திய சீன எல்லைகளை அன்றைய ஆங்கில அரசால் வரையறுத்து மக்மோகன் எல்லைக்கோடு தீர்மானிக்கும்பொழுது, சீனப் பிரதமர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். எல்லை விவகாரத்தில் சீனா தொடர்ந்து வாலாட்டியது. சீனாவின் நெருக்கடியால் தலாய்லாமா தனக்கு அடைக்கலம் வேண்டும் என இந்தியாவை அணுகினார். அவருக்கு இந்தியா தார்மீக அளவில் அடைக்கலம் தந்து பாதுகாக்கிறது. வந்தவர்களை பாதுகாப்பது நமது கடமை. அவர் விஷயத்தில் சீனா இந்தியா மீது தேவையற்ற பகையை மனதில் கொண்டுள்ளது.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி சீனப் பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் பேசி தீர்க்கலாம் என தெரிவித்துள்ளார். மாசேதுங்கிற்குப் பிறகு சீனாவில் பொறுப்பேற்ற டெங்சியாங்பெங்கும் இராஜீவ் காந்தியும் 1980இல் பல முக்கிய உடன்பாடுகளை எட்டினர். வணிகம், விஞ்ஞானம் என்று நட்பு ரீதியான இந்த உடன்பாடுகள் இன்றைக்கும் நடைமுறையில் இருந்தாலும், சிக்கல்கள் தீரவில்லை. பிரம்மபுத்திரா நதி நீர் பிரச்சினையில் இன்னும் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் பல உள்ளன.

இன்றைக்கு சீனா தனது கடந்த காலப் பாதையிலிருந்து விலகி புதிய பொருளாதார யுக்திகளை வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளது. அதுபோல இந்தியாவும் கிழக்காசிய பிராந்தியத்தில் உலகமயமாக்கல் என்ற நிலையில் தனது பொருளாதார பயணத்தை நடத்த ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு பொருளாதார மார்க்கத்தில் ஒரே மாதிரியாக பயணிப்பதால் பல போட்டிகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் 1962இல் 47 ஆண்டுகளுக்கு முன்னால் 32 நாட்கள் நடைபெற்ற இந்திய சீனா போர் இன்றைக்கும் பகைமை உணர்வைக் காட்டுகிறதே தவிர, நேசத்தன்மையைக் காட்டவில்லை. எத்தனையோ சந்திப்புகள், பரஸ்பரங்கள் இரு நாடுகளுக்கிடையே இருந்தாலும் உறவு கேள்விக்குறியாக உள்ளது.

28 ஆண்டுகளாக 4,057 கிலோ மீட்டர் இமயமலை அருகே உள்ள எல்லைப் பிரச்சினை தீர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்தியா பெருந்தன்மையான போக்கில் சென்றாலும் சீனாவின் வஞ்சகமும், ஆத்துமீறலும் மறைமுகமாக காட்டிக் கொண்டு வருகிறது. தேவையில்லாமல் தற்போது இலங்கையில் கம்பந்தொட்டாவில் புதிய துறைமுகத்தை சீனா கட்டித் தருகிறது. இது எதற்கு? இந்தியாவை அச்சுறுத்தவே இந்த பணி. இதில் இந்திய ரூபாய் மதிப்பு 1,750 கோடி இலங்கைக்கு சீனா தாரை வார்த்து கொடுத்துள்ளது. இவ்வளவு அக்கறை சீனாவிற்கு எதற்கு? அதற்கு கைமாறாக 1,600 எக்டேர் நிலம் சீனாவிடம் அங்கு ஒப்படைக்கப்ட்டுள்ளதாக மகேந்திர ராஜபக்சே கூறியுள்ளார். தமிழர்களின் விரோதியான இந்த ராஜபக்சே கம்பந்தொட்டா துறைமுக பணியில் கைகோர்த்தாலும் அதற்குள் மறைமுகமான பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவையாவும் இந்தியாவை நோக்கித்தான் நிச்சயமாக இருக்கும்.

இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் கார்கில் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை செய்தது மட்டுமல்லாமல், அப்போரை சீனாவே பாகிஸ்தானின் பின்னிருந்து இயக்கியது. 1998இல் அணுகுண்டு பரிசோதனையின்போது இந்தியாவை சீனா கண்டித்தது. இதுமட்டுமல்லாமல் இன்றைக்கு இலங்கையில் தென் பகுதியில் ஹம்பன்தொட்டாவில் துறைமுகம் கட்டுவதற்கான பணிகளை சீனா மேற்கொண்டுள்ளது. அங்கே சீன கப்பற்படை தளம் அமைக்கும் திட்டமும் உள்ளதாக தெரிகிறது. சீனாவுக்கு இது அவசியமில்லாத வேலையாகும். இந்தியா மீது உள்ள பகை உணர்வோடுதான் இலங்கையில் சீனா இம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என பன்னாட்டு அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனநாயகம் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ள மியான்மரில் அந்த அரசுக்கு ஆதரவாக சீனா இருப்பது இந்தியாவுக்கு கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. சீனா தன்னுடைய ஐ.நா. வீட்டோ அதிகாரத்தை, கொடிய மியான்மர் அரசுக்கு உலக அளவில் ஆதரவாக பயன்படுத்தி வருகிறது. மியான்மரில் எண்ணை குழாய்கள் அமைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனக் கப்பல்கள் மலேசியா அருகே உள்ள கடல் வழியாக சென்று கொண்டிருந்தன. இனிமேல் வங்கக் கடலில் உள்ள மியான்மர், யாக்யு வழியாக செல்ல உள்ளது. இதனால் தேவையற்ற மோதல்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி அதன் மூலம் இந்தியாவுக்கு பல வகையிலும் தொல்லைகளை கொடுத்து வருகிறது சீனா.

காஷ்மீரத்தின் வடபகுதியில் உள்ள அக்சாய்சின் என்ற இடத்தில் 38,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தை இந்தியாவிடமிருந்து ஆக்ரமித்த சீனா, அங்கே தனது இராணுவ வாகனங்கள் மற்றும் ஏவுகணைகள் வந்து செல்லக்கூடிய வகையில் வசதிகளை செய்துள்ளது. வேண்டுமென்று விவகாரத்தைக் கிளப்பவே இந்த நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்து. இந்தியாவை பயமுறுத்தும் முகமாகவே இலங்கை, மியான்மர், அக்சாய்சின் ஆகிய பகுதிகளில் சீனா எடுத்த நடவடிக்கைகள் உள்ளன. இந்தியாவை நான்கு புறங்களிலுமிருந்து தாக்கவே இந்த நடவடிக்கைகள் பயன்படும். 

1914ஆம் ஆண்டில் எல்லைகளை, காஷ்மீரிலிருந்து அன்றைய பர்மா வரை மக்மோகன் என்ற எல்லைக்கோடு வரையறை செய்யப்பட்டது. இந்த மக்மோகன் எல்லைக்கோட்டை கொண்டுதான் இன்றைக்கு பிரச்சினைகள் உருவாகி உள்ளது. இந்த எல்லைக்கோட்டை சீனா ஏற்க மறுத்து, இந்தியாவின் 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்ரமிக்க சீனா கேட்கின்றது. 1962 போருக்குப் பின்னும் இந்த எல்லைக்கோடு பிரச்சினை சலசலப்பு இன்னும் தீரவில்லை. அன்றைக்கு இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்தது. அப்போது அமெரிக்க அதிபராக கென்னடி இருந்தார். அந்த அச்சமும் சீனாவுக்கு அப்போது ஏற்பட்டு தானாகவே போர் நிறுத்த அறிவிப்பைச் செய்தது.

அருணாசலப் பிரதேசத்தின் தவாங் பகுதியும், காஷ்மீரத்தின் அக்சாய்சின் பகுதியும் தனக்கு சொந்தம் என ஒரு பொய்யான தகவல்களை சீனா சர்வதேச அளவில் சொல்லிக் கொண்டு இருக்கின்றது. சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்திய வரைபடத்தில் அருணாசலப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் இல்லாமல் அச்சடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு உலக மோசடி; இதையும் ஐ.நா. பார்த்துக் கொண்டுள்ளது. சீனா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் என்ற அந்தஸ்து அதற்கு கைகொடுக்கிறது. காஷ்மீரின் வடமேற்கு பகுதியை அபகரித்துக் கொண்ட பாகிஸ்தான், காரகோரம் கணவாயில் சில பகுதிகளில் உள்ள சாக்ஸ்காம் பள்ளத்தாக்கில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தை சீனாவுக்கு கொடுத்துவிட்டது. அதுபோல அருணாசலப் பிரதேசத்தின் தவாங் பகுதி அன்று திபெத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதனை ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வழங்கினர். ஆனால் சீனா அதனை மறுத்து வருகிறது. தலாய்லாமாவும் இந்தப் பிரச்சினையில் இந்தியாவோடு உள்ளார்.

அருணாசலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்றும், அப்பகுதியில் இந்தியர்கள் சீனா செல்ல விசா தேவை இல்லை என்றும் சீன அரசு சொல்லிவிட்டது. இதற்கென்று சீனா பல கோடிகணக்கில் பணத்தை வாரி இறைக்கிறது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அருணாசலப் பிரதேசத்திற்கு செய்ய மத்திய அரசு முயன்றபோது, ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் கிடைக்க வேண்டிய 3,700 கோடி ரூபாயை இந்தியாவுக்குக் கிடைக்காமல் சீனா தடுத்து விட்டது. இந்திய பிரதமர் இந்திய மண்ணான அருணாசலப் பிரதேசத்துச் செல்வதையே சீனா கண்டித்தது. ஏற்கனவே இரு நாடுகளும் எல்லைப்புறப் பகுதிகளில் போர் பதட்டம் இல்லாமல் அமைதி காக்க சுமார் 4,665 கி.மீ. எல்லைப் பகுதியை வரையறுத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் இப்பகுதியை கண்காணிக்க சிறப்புப் பார்வையாளரும் நியமிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் 16ஆவது சுற்றுப் பேச்சு வார்த்தையும் நடந்து முடிந்தது. இவ்வாறு இந்தியா இந்தப் பிரச்சினையை சுமுகமாகவும், அமைதியாகவும் கையாள நினைத்தாலும் சீனா அதற்கான ஒத்துழைப்பைத் தராமல் தொடர்ந்து வம்பு செய்கிறது.

சீனா இந்தியாவைவிட சற்று அதிக இராணுவ பலம் கொண்டுள்ளது. இதைக் கொண்டு அவ்வப்போது நம்மை சீண்டிப் பார்க்கின்றது. நம் எல்லைப் புறத்தில் உள்ள இந்திய ஜவான்கள் மீது சீன இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்துவதை சீனாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றாலும் அதனை திட்டமிட்டு சீனா மறுத்து வருகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில் தேவையில்லாமல் சீன இராணுவம் அவ்வப்போது அத்துமீறி நடந்து வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் கெராங் பகுதியில் சீன இராணுவ வாகனம் தேவையில்லாமல் புகுந்தது. இந்திய எல்லைப் பகுதியில் உள்ள கியா மலையில் ‘சீனா’ என்று இராணுவத்தினர் எழுதிச் சென்றுள்ளனர். நமது கட்டுப்பாட்டில் உள்ள லடாக்கில் இராணுவக் கட்டுமானப் பணிகளை சீன இராணுவம் மேற்கொண்டுள்ளது. அப்பகுதிகளில் பாதுகாப்பில் இருந்த இந்தோ திபெத் இராணுவத்தினர் மீது சீன இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 ஜவான்கள் படுகாயமடைந்தனர்.

காஷ்மீரில் கிட்டத்தட்ட 44,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஊடுருவி தன்வசம் ஆக்கிக் கொண்டது. அதோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தான் கொடுத்த பகுதிகளும் இந்த கணக்கில் சேரும். இதை இந்திய அரசு சொன்னால், சீனா ‘எங்களுக்கு சொந்தமான 90,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை இந்தியாதான் ஆக்கிரமித்துள்ளது’ என்று சண்டைக்கு வருகிறது. அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக சீனா தூண்டிவிடுவதுடன், அவர்களுக்கு சீன ஆயுதங்களும் விநியோகிக்கப்படுகின்றன. பண்டமாற்று முறையில் கடத்தலும் எல்லைப் பகுதிகளில் நடந்து வருகிளது. லடாக் பகுதியில் உள்ள சாங்தாங் பகுதிதான் கடத்தல் வியாபாரத்தின் கேந்திர பகுதியாகும்.

இதுமாதிரி சீனாவின் தாக்குதலும், அத்துமீறலும், ஆக்கிரமிப்பும் தொடர்கதையாக இருக்கின்றது. மாவோயிசம் பேசும் பொதுவுடைமை சித்தாந்தத்தைத் தன்னகத்தே ஓதிக்கொண்டு நாகரிகமற்ற வகையில், சீனா இந்தியாவை சீண்டிப் பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த ஆண்டில் மட்டும் சீனாவினுடைய அத்துமீறல் நடவடிக்கை கிட்டத்தட்ட 280 தடவை நடந்தேறி உள்ளது. தொடர்ந்து அச்சத்தையும், பதட்டத்தையும் உருவாக்கும் சீனா, ஆசியாவின் பெரியண்ணன் மாதிரி தன்னை நினைத்துக் கொண்டுள்ள அகந்தை அதற்கு சறுக்கலை ஏற்படுத்தும். எப்படி சோவியத் யூனியன் சிதறுண்டதோ அம்மாதிரியான நிலை சீனாவுக்கும் ஏற்படும்.

அமெரிக்கா முட்டுக் கொடுத்ததனால் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள், மாற்றங்கள் என்ற வகையில் கம்யூனிசத்தை விட்டு விட்டு, மேற்கத்திய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் கலாசாரத்திற்கும் மாறிக் கொண்டு வருகிறது சீனா. இந்தியாவும் சீனாவும் ஆசிய மண்டலத்தில் வளர்ந்து வரும் வல்லரசுகளாகும். இந்த இரு நாடுகளுக்கு இடையே போட்டியும், பகையும் இருப்பது உலக அமைதிக்கே நல்லதல்ல.

இந்தியாவினுடைய அண்டை நாடுகளான மியான்மர், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளோடு இந்தியாவிற்கு சுமுகமான உறவுகள் இல்லை. அந்த நாடுகளுக்கெல்லாம் உதவிகள் செய்து அவற்றை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடுவது சீனாதான். இதற்கு நன்றி கடனாக மியான்மருக்கு பொருளாதார உதவிகள்; பாகிஸ்தானுக்கு நீர் மின் திட்டங்கள், நீர் பாசனக் கால்வாய் அமைப்பது; இலங்கைக்கு இராணுவம் மற்றும் துறைமுக கட்டுமானப் பணிகளில் உதவி; வங்கதேசத்திற்கும் உதவி இப்படி சில்லறைத்தனமான நடவடிக்கைகளில் தொடர்ந்து சீனா ஈடுபட்டு வருகிறது.

மறுபடியும் 1962 என்ற நிலைக்கு சீனா இந்தியாவை அழைத்தால் அதையும் இந்தியா சந்திக்கும். இந்தியாவின் அமைதியையும், நல்லுறவை பேணும் பாங்கையும் அறியாமல் வேண்டுமென்றே பகையாளியாக நினைத்து சீனா செயல்படுவது அயோக்கியத்தனமான நடவடிக்கை ஆகும். இதன் உச்சகட்டமாக அருணாசலப் பிரதேசம், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியர்கள் வெளிநாடுகள் செல்ல பாஸ்போர்ட்டுகளை சீனா அளிக்க உள்ளதாக அமெரிக்க செய்தி ஏடுகள் தெரிவித்துள்ளன. எந்த நியாயத்திற்கும் கட்டுப்படாமலும், மனசாட்சி இல்லாமலும், சர்வதேச சட்டங்களை மீறி இந்தியாவின் நட்பை மதிக்காமல் சீனா நடந்து கொள்வதற்கு உரிய பாடத்தை இந்தியா கற்பிக்கும். சீனாவின் டிராகனை ஓடவைக்கும் திறன் இந்தியா என்ற புலிக்கு உள்ளது என்பதையும், அதற்கான தைரியமும் ஆளுமையும் உண்டு என்பதையும் சீனா உணர வேண்டும்.

புத்தரை நேசிக்கும் சீன மண், புத்தர் தோன்றிய இந்திய மண் மீது எப்போதும் வஞ்சக பார்வையை கொண்டுள்ளது. வரலாற்றில், யுவான் சுவாங், பாகியான் போன்ற பலர் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து கல்வி பயின்றனர்; நாளந்தா, தட்சசீலம், காஞ்சி போன்ற கலாசாலைகளில் சீனர்கள் கல்வி பயின்றதாக செய்திகள் உள்ளன. ஆனால், இன்றைக்கு இந்தியா என்ற கலாச்சாரம் மிக்க பூமியை சீனா கவர நினைப்பது பேடித்தனமாகும்.

1962 போரின்போது இந்தியா சீனா பாய்! பாய்!! இந்தியர்கள் சீனர்கள் சகோதரர்கள் என்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கேட்டது! ஆனால், சீனர்கள் நமக்கு சகோதரர்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.