இந்த வார துக்ளக்கில் ‘இந்த அரசு போக வேண்டும் என்ற எண்ணம் பரவி வருகிறது’ என்ற தலைப்பில் வைகோ கொடுத்துள்ள பேட்டியில் தேவையில்லாம் தலைவர் கலைஞர் அவர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.  ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போவாராம்’ என்பதை போல வைகோ கதை இருக்கும் பொழுது, இவர் ஊருக்கு உபதேசம் செய்கின்றார். வைகோவின் அரசியல் பாதையில் கடந்த காலத்தில் தெரிந்த, தெரியாத சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டினாலே அவருடைய துக்ளக் பேட்டிக்கு பதிலாகவும், எவ்வளவு அபத்தமாக இவர் பேசுகிறார் என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள். வைகோ இரண்டாவது முறையாக கழக வேட்பாளராக மாநிலங்களவைக்கு போட்டியிட்டபொழுது, நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை பெற உதவியாக இருந்ததும்; என்னோடு தங்கியிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வைகோவிற்கு அறிமுகப்படுத்தியது என பல முக்கியப் பணிளை அவருக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக செய்தவன் என்ற நிலையில், சில சம்பவங்களை நேரில் கண்டதையும், உணர்ந்ததையும் சொல்ல வேண்டியது வரலாற்று கடமை.

ம.தி.மு.க. துவங்கிய பின் 1996இல் கழக ஆட்சி வந்தது. 1998 செப்டம்பர் 15 அன்று, ம.தி.மு.க. நடத்திய அண்ணா பிறந்த நாள் கடற்கரை கூட்டத்திற்கு அன்றைய பிரதமர் வாஜ்பாய் வந்தபொழுது, சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க முதல்வர் கலைஞர் அவர்கள் வந்திருந்தார். அப்போது வைகோ, மு. கண்ணப்பன், எல்.கணேசன், செஞ்சி இராமச்சந்திரன், என்னை போன்ற முக்கிய நிர்வாகிகள் சென்றோம். ம.தி.மு.க. துவங்கிய பின் தன்னை பற்றி வைகோ செய்த கடுமையான விமர்சனங்களை மனதில் கொள்ளாமல், முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் என்னிடம், ‘யோவ் வைகோவை கூப்பிடய்யா. இங்கே வந்து உட்காரச் சொல்லுய்யா’ என்று பாசப் பிணைப்போடு அழைத்தார். அதை வைகோவிடம் சொன்னபொழுது, அவர் முகத்தை கடுமையாக காட்டினார். அதிலிருந்து தலைவர் கலைஞர் அவர்களுடைய பெருந்தன்மையை உணராமல் இப்படி இருக்கிறாரே என வருந்தினேன். அதன்பிறகு நாங்கள் எல்லோரும் வற்புறுத்திய பின்பே தலைவர் கலைஞர் அவர்களிடம் வந்து ஒப்புக்கு வணக்கம் சொன்னார் வைகோ.

2001 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியோடு ம.தி.மு.க. இருக்க வேண்டும் என்று ம.தி.மு.க.வில் இருந்த எங்களைப் போன்ற பெரும்பான்மையோர் விரும்பினாலும், வைகோதான் வெளியேறினார். அன்றைக்கு ஜே.கே.கே.சுந்தரம் அவர்கள் வைகோவை சந்திப்பதற்காக தாயகம் வந்தார். அப்போது கண்ணப்பனும் நானும் இருந்தோம். வைகோ இல்லை. ‘தயவு செய்து வைகோ அவசரப்பட வேண்டாம். தலைவர் கலைஞர் அவர்கள் வைகோ மீது பாசத்தை கொட்டுகின்றார். தி.மு.க. கூட்டணியில் அவர் இருப்பது அவருக்கு நல்லது’ என்று சொல்லிவிட்டு சென்றார். வைகோ வந்தபின் இதனை அவரிடம் நாங்கள் தெரிவித்தபொழுது, அவரது முகம் கடும் கோபத்திற்கு உள்ளானது. 2001இல் 21 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்ட பின்பும், ஒரு நாள் டில்லி சென்று விட்டு வந்த பின் திடீர் என்று மாற்றங்கள், எங்களை போன்றவர்கள் மீது கோபம் வைகோவிற்கு ஏற்பட்டது. அந்த ஒரு நாளில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என தலைவர் கலைஞர் அவர்கள் அழைப்பு விடுத்தும், திட்டமிட்டு தலைவர் கலைஞர் அவர்களின் கொடும்பாவியை எரிக்க செய்தும், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்ட சொல்லிவிட்டு உறவினர் இறந்துவிட்டார் என கூறி கிராமத்துக்குச் சென்று விட்டார். தலைவர் கலைஞர் அவர்களும் 21 தொகுதிகள்; சங்கரன்கோவில் பற்றி விரிவாக பேசியும், சேரன்மகாதேவி, சங்ககிரி தொகுதிகளுக்கு பதிலாக, வெற்றி வாய்ப்புள்ள வேறு தொகுதிகளை தர உறுதி கொடுத்த பின்பும் வைகோ காதில் வாங்கவில்லை. தி.மு.க. எப்படியும் தோற்க வேண்டும்; தளபதி அவர்கள் பொறுப்பில் வரக்கூடாது என்றும் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் அற்பத்தனமாக பேசினார்.

அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் பேச்சுவார்த்தையின்போது வைகோவிடம் எவ்வளவு பற்றும் பாசமும் கொண்டிருந்தார் என்பதை ம.தி.மு.க.வில் இருந்த நாங்கள் அறிவோம். அந்த அளவு பண்பு வைகோவிடம் இல்லை என்பது எங்களுக்குப் புலப்பட்டது. 2001 மார்ச் மாதம் திடீரென்று தி.மு.க. மீது அவதூறுகளை சொல்லிவிட்டு நாடக பாணியில் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டார். ஜெயலலிதா இவரை வேலூர் சிறையில் பொடாவில் சிறையில் அடைத்தபொழுது, தலைவர் கலைஞர் அவர்கள் சென்று பார்த்தார். தன்னுடைய உடன்பிறந்த தம்பி பாதிக்கப் பட்டுள்ளார் என்ற உணர்வோடு, நாங்கள் எல்லாம் தடுத்தபொழுதும் வேலூர் சிறைக்குச் சென்று ஆறுதல் கூறினார். நீதிமன்ற பிணையில் வெளியே வருவதற்கும், பொடா கொடுமையிலிருந்து வைகோவை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 200103 ஆண்டுகளில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகள் அனைவருக்கும் தெரியும்.

வேலூர் சிறையிலிருந்து வைகோ வெளியே வந்த அன்று (8.2.2004) முரசொலியில் ‘வைகோ வருக! வாழ்க!’ என்று தலைப்பில் கவிதை மூலம் இதய சுத்தியோடும், பாசப்பிணைப்போடும் வைகோவைப் பாராட்டினார். தலைவர் கலைஞர் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை அனைவரும் அறிவர்.

“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்து

சிறுத்தையே வெளியில் வா!” என்று

புரட்சிக் கவிஞர் இருந்தால் இந்நேரம் உன்னை

அழைத்திருப்பார்; அணைத்து மகிழ்ந்திருப்பார்.

அய்யாவும் அண்ணாவும் இருந்தால் ஆரத் தழுவியிருப்பர்

அவர்களையெல்லாம் அந்தோ; இழந்துவிட்டோம்!

நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதிப் புனலாக

நாசியில் இழைகின்ற சுவாசமாக

நான் வளர்த்த தங்கம் மாறன் இருந்திருந்தால்;

நாளும் ‘மாநிலங்களவை ஆசான்’ என்று தன்னை விளித்த

தோளுயர்த்தித் துணிவுமிகு நெஞ்சுயர்த்திப் பேசுகிற போர்

வாள் நிகர்த்த வைகோ வருக என வாழ்த்தியிருப்பார்.

ஒருநாளா இருநாளா ஒன்றரை ஆண்டு என்

உயிரனைய உன்னைச் சிறையில் அடைத்து வைத்தால்தான்

திருநாள் கொண்டாட முடியும் எனத் தீர்மானித்துத்

தீய சிந்தனைக்குச் சொந்தக்காரர் அதைச் செய்து காட்டினார்.


.. .. .. .. .. .. .. .. .. .. .. ..

.. .. .. .. .. .. .. .. .. .. .. ..

.. .. .. .. .. .. .. .. .. .. .. ..

உன்னையும் நம் உடன்பிறப்புகள் என்மரையும்

‘பொடா’ எனும் கொடிய சட்டத்தில் போட்டன்றோ வாட்டினர்!

‘எதையும் தாங்கும் இதயம் நமக்கு உண்டு

இதையும் தாங்கும் பக்குவம் மிகவும் உண்டு’ என

வையகத்தில் நிலைநாட்டிய வற்றாப் புகழ்

வைகோ; நீ வருக! வாழ்க!

தீரன் நீ வீரன் நீ”

தலைவர் கலைஞர், வைகோவின் மீது கொண்டுள்ள அளவற்ற அன்புக்கு இதைவிட வேறு என்ன சொல்ல இருக்கின்றது? எந்த கழக தோழனையும் இதுமாதிரி தலைவர் கலைஞர் அவர்கள் பாராட்டியது இல்லை. ஒவ்வொரு தமிழனும் தலைவர் கலைஞர் அவர்ளிடமிருந்து இம்மாதிரி சான்றிதழ் பெற வேண்டும் என ஏங்குகிறான்.

வைகோ, விடுதலை ஆனவுடன், ‘இனிமேல் தலைவர் கலைஞர் அவர்களை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன்; தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிதான்’ என்று பேசினார். அதன்பின் திண்டுக்கல் மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்கள், “இங்கே தம்பி வைகோ அவர்களின் பேச்சை நீண்ட காலத்திற்குப் பிறகு நான் இன்றைக்குக் கேட்டேன். இடையில் பல வருடங்கள் உருண்டு போனபிறகு அவருடைய பேச்சை நான் இங்கே கேட்டேன். திண்டுக்கல் புகைவண்டி நிலையத்திலே நடந்த சமாச்சாரத்திலிருந்து என் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் உளி வீசப்பட்ட அந்த நிகழ்விலிருந்து பல நிகழ்ச்சிகளை அவர் இங்கே நினைவுபடுத்தினார். இவ்வளவு நிகழ்ச்சிகளையும் அவர் நினைவுபடுத்திய நேரத்தில் என்னுடைய விழிகள் கலங்கியிருந்ததை, என் விழிகள் என்னை அறியாமல் கண்ணீர் வடித்ததை அவர் பேசிய இடத்திலிருந்து பார்த்திருக்க முடியாது. இவ்வளவு அன்பை வைத்துக்கொண்டு இறுதி வரையிலே என்னோடு இருந்து இந்த இயக்கத்திற்காக இன்னும் பல பணிகளைச் செய்யக் கூடிய வாய்ப்பை தம்பீ, நீ இழந்துவிட்டாயா அல்லது நான்தான் இழந்துவிட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை” (முரசொலி, 14.3.2005) என குறிப்பிட்டார். இப்படி பல கட்டங்களில் பாசத்தை வைகோமீது பொழிந்தவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள். தலைவர் அவர்களின் ‘வான்புகழ் வள்ளுவம் நூல்’ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைகோ தலைவர் அவர்களை மனதார பாராட்டியதை மறந்து விட முடியுமா?

 தலைவர் கலைஞர் அவர்களின் அந்த அன்பும், பாசமும் இன்றுவரை நிலையாக உள்ளது. 2006இல் வைகோ பிரிந்து சென்று செய்த கடுமையான விமர்சனங்களை மறந்து, கடந்த டிசம்பரில் நடைபெற்ற திருச்செந்தூர் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கவிஞர் கனிமொழியும், வைகோவும் சந்தித்தபொழுது பரஸ்பரம் வணக்கம் சொன்னதை பாராட்டியும், முல்லை பெரியாறு பிரச்சினையில் வைகோ போராட்டத்தை அமைதியாக நடத்தினார் என மனமாச்சரியங்களை கடந்து முரசொலி பாராட்டிய பண்பு எங்கே? வைகோவின் தாங்க முடியாத அக்னி வார்த்தைகள் எங்கே?

தலைவர் கலைஞர் அவர்களை நினைத்தவுடன், வைகோ அவர்கள் நேரம் காலம் பார்க்காமல், படுக்கை அறை வரை கூட சென்று சந்திக்கலாம். ஆனால் அம்மையார் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டுமென்றால் அவர் கடிதம் கொடுக்க வேண்டும்; இல்லையென்றால் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் என்பவரிடம் தொலைபேசியில் பேசி பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமைதான். 8.4.2006 அன்று மதுரை சங்கம் ஓட்டலில் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் நடந்த சோக நிகழ்ச்சியை ஒட்டி மனம் நொந்து அவர் பேசியது தெரியதா? ஆனால் இதே வைகோ, தலைவர் கலைஞர் அவர்கள் திண்டுக்கல்லில் பேசியது கேட்டு தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுதபொழுது, பக்கத்தில் அமர்ந்திருந்த அண்ணன் துரைமுருகன் ஆசுவாசப்படுத்தியதை அனைவரும் பார்த்தனர். ‘என்னுடைய அரசியல் ஆசான் முரசொலி மாறன்’ என குறிப்பிடும் வைகோ, நினைவில் வாழும் முரசொலி மாறன் இறந்தபொழுது மூக்கு சளி வழிய அழுததை கண்ட தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய சோகத்தையும் கடந்து வைகோவை தேற்றியதை தொலைக்காட்சியில் மக்கள் எல்லாரும் கண்டனர். அது வேடமா, நாடகமா என்பது தெரியவில்லை.

2003இல் சன் தொலைக்காட்சியில் தன்னைப் பற்றி செய்திகள் வருவது இல்லை என்று வருத்தத்துடன் கூறி வந்தார் வைகோ. இதனை கேள்விப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனை தன்னுடைய அறைக்கு அழைக்காமல், அறிவாலய வளாகத்தில் உள்ள சன் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு சென்று அவரிடம், ‘வைகோ கூட்டணிக் கட்சித் தலைவர்; அவரை சன் தொலைக்காட்சியில் காட்ட வேண்டாமா?’ என்று கேட்டார். இதனை அருகிலிருந்து பார்த்தவன் நான். அச்சமயத்தில் வைகோ தலைவர் கலைஞர்தான் திட்டமிட்டு தொலைக்காட்சியில் காட்டாமல் செய்கிறார் என உண்மைக்கு புறம்பாக கூறிவந்தார். இதுகுறித்து தலைவர் கலைஞர் அவர்கள் கலாநிதி மாறனிடம் பேசியதை எல்லாம், பிற்காலத்தில் வைகோவிடம் நான் கூறியபோது, அதெல்லாம் இருக்காதுங்க என்றார். நான் நேரில் பார்த்தவன் என்று குறிப்பிட்டும் அவர் அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததை பார்க்கும்போது தலைவர் கலைஞர் அவர்களின் பண்பு என்ன; வைகோவினுடைய மனநிலை எப்படிப்பட்டது என்பதை எடை போட முடிந்தது. இப்படி பல நிகழ்வுகளை சொல்லலாம்.

ஒருசமயம் குமுதம் பேட்டியில் வைகோ; “திராவிட இயக்கத்தை வலுப்படுத்த டாக்டர் கலைஞரின் கரத்தைப் பற்றியுள்ளோம். சிறைச்சாலையில் உள்ளபோது பலமுறை தீவிரமாக யோசித்து எடுத்த முடிவுதான் தி.மு.க.வுடன் இணைந்திருப்பது. திண்டுக்கல், தஞ்சாவூர் மாநாட்டில் அவசரப்பட்டுப் பேசவில்லை. உணர்வுப்பூர்வமாக கலைஞரை நேசிக்கிறேன். கலைஞரும் அன்போடும், வாஞ்சையோடும் இருக்கிறார். தமிழகத்தின் பொது நன்மை கருதி கலைஞர் முதல்வராக வேண்டும். அதற்கு ம.தி.மு.க. தொடர்ந்து பாடுபடும்” (குமுதம், 22.6.2005) என குறிப்பிட்டதை எல்லாம் மறந்து விட்டாரா? மக்களின் நினைவாற்றல் குறைவு என வைகோ நினைத்து விட்டாரா? கலைஞர் தான் தமிழக முதல்வர் என 2001 மார்ச் வரை 100 கூட்டங்கள் வரை பேசினார். அவ்வாறே 2005, 2006இலும் பேசினார். 16.2.2001 சங்கொலி இதழில் தலையங்கத்தில் ‘ஜனநாயக மரபுகளைப் பேணிக் காத்த பேரவைத் தலைவர் முதல்வர் அமைச்சரவைக்கு நமது பாராட்டுகள்!’ என்ற தலைப்பில் எழுதியதை நான் குறிப்பிட்டபொழுது, சபாஷ் என வைகோ குறிப்பிட்டது உதட்டளவில் தானா? அதன் நம்பகத்தன்மை என்ன? இப்படி பல செய்திகள். அவற்றையெல்லாம் குறிப்பிட்டால் நூலாகத்தான் எழுத முடியும். சிறையில் பொடாவில் இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களிடம் நானும் (வைகோ), எல்.கணேசனும் உங்களை தி.மு.க.வில் நீடிக்க முடியாமல் செய்தோம்! என என்னிடமே கருணை இல்லாமல் சொன்னவர்தான் வைகோ! நான் சாமானியன் அவருக்கு. என்மீது அவருக்கு ஏன் அப்படி ஒரு வஞ்சம் என தெரியவில்லை.

தன் பின்னால் அணிவகுத்து நின்றவர்களை வைகோ எப்போதும் புறக்கணித்தார். சந்தேகம், அவநம்பிக்கை. தன்னை மீறி விடுவார்களோ என்ற அச்சம். இதனால் இன்று ம.தி.மு.க.வின் வேராகவும், விழுதாகவும் இருந்த பெரும்பாலானோர் வெளியேறிச் சென்றுவிட்டனர். அதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத வைகோ தொடர்ந்து தனது தன்முனைப்பு அரசியலையே தொடர்ந்து வருகிறார். ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் வைகோவை தனது வலதுகரமாக கருதியதால்தான் மூன்று முறை அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார். தலைவர் கலைஞர் அவர்களின் இப்படிப்பட்ட பண்பு எங்கே? வைகோவின் பண்பு எங்கே?

தி.மு.க. மற்றும் கலைஞரிடமிருந்து என்னை பிரிக்க முடியாது என பேசி விட்டு திருச்சி மாநாட்டுக்கு வருவேன் என்றும் கூறிவிட்டு, திருச்சிக்கு செல்ல வேண்டிய வைகோவின் கார் போயஸ் கார்டன் போனது ஏன்? 2006இல் போயஸ் கார்டன் நோக்கிய பயணத்தின் மர்மம் என்ன? இப்படி எல்லாம் இருந்து விட்டு இன்று துக்ளக்கில் அளித்துள்ள பேட்டியை கண்டால் வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கின்றது. 

சட்ட மேலவை வேண்டும் என்று 2004இல் ஆகஸ்டு 5ஆம் தேதி, ம.தி.மு.க.வின் 15ஆவது பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முன்பும் இதுகுறித்து பல தீர்மானங்கள் நிறைவேறியுள்ளன. ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மேலவை கூடாது என்று ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கின்றனர். இதுதான் இலட்சியத்தில் உறுதியா? சேதுக் கால்வாய் திட்டத்தை நான்தான் கொண்டு வந்தேன் என உரக்க பேசிய வைகோ இன்று அதைப்பற்றி பேச அஞ்சுவது ஏன்? தெற்கு சீமையின் சுற்றுச்சூழலை கெடுக்கும் ஸ்டர்லைட் ஆலையை ஒழித்தேத் தீருவேன் என 1996இல் முண்டாசு கட்டி போராடியவர் இப்பொழுது அமைதியாக இருப்பது ஏன்? அன்பு உள்ளம் காட்டும் தலைவர் கலைஞர் அவர்கள் மீது வைகோ கடும் சொற்களை வீசுகிறார். சிறையில் அடைத்த ஜெயலலிதாவிடம் அச்சமும், கோழைத்தனமும் ஏன் என்பது நான் வைகோவிடம் கேட்கும் வினா.

இவரது குரலை தமிழக மக்கள் யாரும் காதில் வாங்க போவது இல்லை. இது அவருக்கு ஒரு பத்திரிகை விளம்பரம். அவ்வளவுதான். மாற்றங்கள் காலத்தால் ஏற்படுபவை என சில விளக்கங்கள் சொன்னாலும், இவர் செய்கின்ற மாற்றங்கள், பல்டிகளை எதிர்கால வரலாறு மன்னிக்காது. விதண்டாவாதம் செய்யும் வைகோவை என்ன சொல்ல! தலைவர் கலைஞர் அவர்களின் இந்த பாசத்தையும், அன்பையும் பெற வேண்டும் என அனைவரும் ஏங்குவர். தலைவர் கலைஞர் அவர்கள், கடந்த காலத்தில் கழகத்தில் வைகோ பணியாற்றியதால் தம்பி என்று பாசத்தோடு அழைத்தாலும், அந்த உணர்வை மதிக்கத் தெரியாத இந்த ஜீவனிடம் எது சொன்னாலும் எடுபடாது.