ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் கலைஞர்
கண்ணியத்தைப் பற்றி திரு. உ.ரா. வரதாரசன் தலைவர் கலைஞர் அவர்களுக்கு தீக்கதிரில் 12.9.2009 அன்று எழுதிய திறந்த மடலுக்கு பதில் மடல்.
சென்னை
13.9.2009
அன்புள்ள தோழர் அவர்களுக்கு,
வணக்கம்.
பொய்கள் ஈக்களைப்போல் இரைகின்றன;
ஆனால் சத்தியத்தில் சூரிய பிரகாசம் உண்டு
ஆப்பிரிக்க பழமொழி
தங்களுடைய தொழிற் சங்கப் பணிகள் மற்றும் உங்கள் இயக்க நாளேடான தீக்கதிர் நிர்வாகப் பணி ஆகிய பணிகளுக்கு இடையில் தாங்கள் தலைவர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய திறந்த மடலை பார்த்தேன்.
மறைந்த தலைவர்களான பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் இராஜாஜி, பசும்பொன் தேவர், ஜீவா, காயிதே மில்லத், பி.இராமமூர்த்தி போன்றவர்களோடு வெவ்வேறு கொள்கை நிலைகளிலே இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் பரஸ்பரம் நட்போடும் உண்மையான உறவோடும் பாசத்துடனும் பழகியவர் தலைவர் கலைஞர் என்பதுதான் கடந்தகால வரலாறு. அந்த நட்பு பாசத்தில் கண்ணியமும், அரசியல் நாகரிகமும், நல்லிணக்கமும் இருந்தன.
இந்திரா காந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், ஷேக் அப்துல்லா, வி.பி.சிங், என்.டி.ராமாராவ், பிஜி பட்நாயக், குருநாம் சிங், வாஜ்பாய் போன்ற பல்வேறு தேசிய தலைவர்களிடம் பழகியது மட்டுமல்லாமல், அவர்களுடைய அரசியல் பணிக்கும் கை கொடுத்த பெருமை கலைஞர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அவசர நிலை காலத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், பின்னர் ஒரு கட்டத்தில் மத்தியில் ஸ்திரமான அரசு அமையவும், அகில இந்திய அளவில் இடஒதுக்கீடு பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் கலைஞர் அவர்களின் பங்களிப்புதான் முக்கியமாகக் கருதப்பட்டது.
தந்தை பெரியார், இராஜாஜியோடு கொள்கை ரீதியாக வேறுபட்டாலும் அவரை தன்னுடைய உயிர் நண்பராக பாவித்து நட்பு கொண்டார். ஒரு காலகட்டத்தில் தமிழக நதி நீர் பிரச்சனை பற்றி கேரள அரசிடம் பேச, எதிர்கட்சியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.இராமமூர்த்தி தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்டார். பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் தோல்வி கண்டார். அச்செய்தியை கேட்ட அண்ணா அவர்கள் கவலைக்குள்ளானார்கள். அதேபோல பெருந்தலைவர் காமராஜர் அவர்களும், அண்ணா அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டபொழுது பெரிதும் வேதனை அடைந்தார். இப்படி தமிழக தலைவர்களிடையே நிலவிய நல்லிணக்கத்தைப் பற்றி நிறையச் சொல்லலாம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அடிச்சுவட்டில் இன்று பீடு நடை போடும் தலைவர் கலைஞர் அவர்கள் என்றைக்கும் நட்போடும், பாசத்தோடும், பரிவோடும் கட்சி மாச்சரியம் இல்லாமல் எல்லாரோடும் பழகுவார். தன்னுடைய அரசியல் எதிரிகள் கூட தன்னை சந்திக்க வரும் பொழுது அவர்களிடம் அவர் காட்டும் அன்பு அனைவரையும் மெச்ச செய்யும். கலைஞர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் இராஜாஜி, ஜீவா, பொதுவுடைமை கட்சி தலைவர் பி. இராமமூர்த்தி போன்றவர்களை மதித்து பழகியதை இன்றைக்கும் எவரும் மறுக்க முடியாது. இந்த நட்பில் கண்ணியமும் இருந்தது, அரசியல் நாகரீகமும் இருந்தது. பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபொழுது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய அண்ணன் மறைந்து விட்டதை போன்று கலங்கினார். காமராஜரை அடக்கம் செய்ய பொருத்தமான இடம் கிண்டிதான் என்று முடிவு செய்தார். மேலும், இராஜாஜி மறைந்தபொழுது அவருடைய நினைவிடம் அமைத்து இராமனின் கிரீடத்தையும், காமராஜர் நினைவிடத்தில் இராட்டையையும் வைத்தது கலைஞர்தான். காயிதே மில்லத் அவர்களுக்கு நினைவிடம் அமைத்தார். முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் அவர்களுக்கு நினைவிடம் அமைத்தது கலைஞர் அரசு. அதேபோன்று தியாகிகளுக்கும் அதே இடத்தில் மணிமண்டபம் ஒன்றை சமீபத்தில் எழுப்பியதும் தலைவர் கலைஞர் அவர்களே.
அண்ணாவின், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்ற நெறியில் தமிழ்நாட்டில் முக்கியமான பிரச்சனைகள் எழும்போது அன்றைக்கு உள்ள எதிர்கட்சி தலைவர்களிடம் ஆலோசனை பெறுவது கலைஞரின் வாடிக்கையாகும். தோழர் ஜீவாவின் அரசியல் அணுகுமுறையை தான் கலந்து கொள்கின்ற மேடைகளில் அடிக்கடி கலைஞர் பாராட்டுவார். அதேபோல பி.இராமமூர்த்தி மற்றும் தமிழரசுக் கட்சித் தலைவர் ம.பொ.சி. போன்றோர் மீதும் என்றைக்கும் மதிப்புக் கொண்டவர் கலைஞர். இப்படி தமிழ்நாட்டில் ஒரு அரசியல் நாகரிகம் இருந்தது. அதற்குக் காரணம் அரசியலில் நடுநாயகமாக கலைஞர் இருந்ததுதான்.
இன்றைக்குக் கூட உங்களின் மத்தியக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் உத்தபுரம் சென்ற பிரச்சனையில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராசன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இதுகுறித்து முறையாக விசாரிக்கப்படும் என்று கலைஞர் தெரிவித்துள்ளார். இதுவல்லவா கண்ணியம். அதற்குக் காரணம் அரசியலில் நடுநாயகமாக கலைஞர் இருந்ததுதான்.
அவசர நிலைக் காலத்தில் மத்திய அரசின் அழுத்தத்தை புறந்தள்ளி பெருந்தலைவர் காமராஜரையும், பெர்னான்டஸையும் கைது செய்யாமல் இருந்தார் கலைஞர். பின்னர் கழக ஆட்சி கவிழ்ப்புக்கு இதையும் ஒரு காரணமாக வைத்துக் கொண்டது மத்திய அரசு. 1996இல் ஆட்சிக்கு வந்தபோது ஒரு அதிகாலை வேளையில் புழலேரியில் விரிசல் என்ற செய்தி கேட்டு பதறி போய் அன்றைக்கு த.மா.கா.வின் தலைவராக இருந்த மூப்பனாரை துணைக்கு அழைத்துக் கொண்டு புழலேரிக்கு விரைந்தார் கலைஞர். அன்றைக்கு இருந்த தலைவர்கள் ஒப்பற்ற பண்பைக் கொண்டவர்கள். இப்படிப்பட்ட தலைவர்களிடம் அரசியல் நட்போடு பழகியவர் கலைஞர். ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன? எந்த தியாகமும் செய்யாமல் திடீரென்று அரசியலுக்கு வரும் நிலைமை; கடந்த 1983ல் இருந்து அரங்கேறிவிட்டது. இதையும் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொண்டு இப்படிப்பட்ட அரசியல் தலைவர்களையும் ஒதுக்காமல் அவர்கள் சொல்வதற்கும் பதில் சொல்லும் பெருந்தன்மையே கலைஞர் அவர்களின் கண்ணியத்திற்கு ஒரு சாட்சியாகும்.
ஜெயலலிதா அவர்கள் திடீரென்று அண்ணா தி.மு.க. உறுப்பினர் ஆனார். சத்துணவு திட்டத்தின் ஆலோசகராகவும், கொள்கை பரப்புச் செயலாளராகவும் எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார். அதற்கு முன் அரசியலில் அவர் செய்த தியாகம் என்ன? எந்த சிறைக்கு சென்றார்? அவரை கலைஞரின் தியாகத்தோடு ஒப்பிட முடியுமா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.
ஜெயலலிதா சோனியா காந்தி அவர்களைப் பார்த்து பதிபக்தி இல்லாதவர் என கூறியது அரசியல் நாகரிகமா? கண்ணியமா? அதே ஜெயலலிதா தான் முதலமைச்சராக இருந்தபொழுது தலைமைச் செயலகத்தில் எல்லாத் தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்களை அழைத்து அளித்த பேட்டியில் சோனியா அவர்களின் முழுப் பெயரை சொல்லி தேவை இல்லாத சர்ச்சையை உருவாக்கினாரே; சோனியா மீது கண்ணியமற்ற வார்த்தைகளை இந்த பேட்டியில் சொன்னாரே, அது என்ன அரசியல் நாகரிகமா? 1994 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திண்டிவனத்தில் சோனியா அவர்களை ஐந்து மணி நேரத்திற்கும் மேல் காக்க வைத்துவிட்டு, ஒப்புக் கொண்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு போகாமல் தவிர்த்ததெல்லாம் மறக்க முடியுமா? இதை சோனியா அவர்கள் பெரிதுபடுத்தாமல் எளிதாக எடுத்துக் கொண்டார்.
எம்.ஜி.ஆர் இறந்தபொழுது ஜானகி அம்மையார் மீது கடுமையான வார்த்தைகளில் அர்ச்சித்ததும் எம்.ஜி.ஆர் மறைவில் சந்தேகங்கள் உள்ளது என்று வாய் கூசாமல் பேசியதும் யார்? வரம் கொடுத்த பரமன் மீதே கை வைத்த கதை போன்று எம்.ஜி.ஆர். மீதே அபாண்டமான சொற்களில் எழுதிய கடிதத்தை அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியிடம் கொடுத்தது ஜெயலலிதா தானே. இவற்றையெல்லாம் எந்த அரசியல் நாகரிகத்தில், கண்ணியத்தில் சேர்க்க முடியும்?
மத்திய அமைச்சராக இருந்த அருணாச்சலத்தை மதுரை விமான நிலையத்தில் அநாகரிகமாக விமானத்திலிருந்து இறக்கச் சொன்னது யார்? ஆளுநராக இருந்த சென்னாரெட்டி தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதாக சொன்னது எந்த வகையைச் சாரும்? தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சேஷன் மீது தாக்குதல், சுப்பிரமணியசுவாமிக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் மிகக் கேவலமான முறையில் நடந்தேறிய காட்சிகளுக்கு யார் காரணம்? சந்திரலேகா மீது திராவகம் வீசியது, இவையெல்லாம் எந்த பண்பாட்டில் சாரும்?
ஒருமுறை ஜெயலலிதா அவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர் இராம மூர்த்தி அவர்களை பற்றி குறிப்பிடும் பொழுது, தான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபொழுது டில்லிக்கு செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நேரத்தில், தன்னுடைய மகளுக்காக எம்.ஜி.ஆரிடம் சிபாரிசு செய்யும்படி சொல்வதற்காக விமான நிலையத்தில் இராமமூர்த்தி காத்து இருந்தார் என்றும், அந்த தள்ளாத வயதிலும் வந்து இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். இதில் என்ன கண்ணியமும், நாகரிகமும் இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலுக்காக பழைய நிகழ்வுகளை வசதியாக மறந்து விட்டீர்கள்.
எந்தவிதமான அனுபவமும் இல்லாமல் எம்.ஜி.ஆரால் அரசியல் ஏணியில் ஏற்றி விடப்பட்டவர் ஜெயலலிதா. எனவேதான் பல சமயங்களில் அரைவேக்காட்டுத் தனமாக கண்ணியமற்று பேசுகிறார். “இவர் இப்படி இருக்கிறாரே?” என்று வருத்தப்பட்டுத்தான் முதுபெரும் தோழரான என்.வரதராசன், பேரவைத் தலைவரான ஆவுடையப்பன் இல்லத் திருமணத்தில் பேசியிருப்பாரோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.
2001ல் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்கும் விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றபோது, அந்நிகழ்ச்சிக்கு அழைப்பின் பேரில் சென்ற கழகத்தின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம், தமிழகத்தின் விடிவெள்ளியாக திகழ்கின்ற துணை முதல்வர் தளபதி அவர்களை 18ஆவது வரிசையில் அமர வைத்தது நாகரிகமா? அண்ணாவின் நெருங்கிய சகா, கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியரையும் அந்நிகழ்ச்சிக்கு அழைத்து அம்மையாரின் பரிவாரங்கள் கண்ணியமில்லாமல் நடந்து கொண்டதுதான் அரசியல் கண்ணியமா?
2001 சட்டமன்றத் தேர்தலின்போது திடீரென்று வைகோ தி.மு.க. கூட்டணியிலிருந்து திட்டமிட்டு வெளியேறினார். ஆனால் அதை எல்லாம் மனதில் கொள்ளாமல், 2002இல் வைகோவை ஜெயலலிதா பொடா சட்டத்தில் வேலூர் சிறையில் அடைத்தபொழுது, மத்திய அரசிடம் அவருக்கு சட்டப் பாதுகாப்பும் மற்றும் இந்தியா அளவில் அனுதாபமும் ஏற்பட காரணமாக இருந்தவர் கலைஞர் தான். ஒரு காலத்தில் தன்னுடைய தம்பியாக இருந்த வைகோவுக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று கலங்கி எதையும் எதிர்பாராமல் இயற்கையாகவே கலைஞர் மனித நேயத்தைக் காட்டினார். பலமுறை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்தார். ஆனால் அதே வைகோ 2006 சட்டமன்ற தேர்தலின்போது மீண்டும் திட்டமிட்டு வெளியேறி, தன்னை ஒன்றரை ஆண்டுகாலம் சிறையில் வைத்திருந்த ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்தார். இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஜனநாயகத்தில் தான் ஆற்ற வேண்டிய பணிகளை மட்டும் கவனத்தில் கொள்வதுதான் கலைஞர் அவர்களின் சிறப்பான பண்பாகும். ஒரு கொள்கையை எதிர்ப்பது என்றால் இறுதி வரை ஆக்கப்பூர்வமாகவும், நாகரிகமாகவும் கலைஞர் எதிர்ப்பார். நட்பு என்று வந்தவுடன் எந்த விளைவுகள், எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் கை கொடுப்பார். இதுவே கலைஞர் அவர்களின் அருங்குணமாகும்.
நள்ளிரவில் நாகரிகமற்ற, கண்ணியமற்ற முறையில் மனித உரிமைகளை மீறுகிற வகையில் கலைஞரை ஜெயலலிதா அரசு கைது செய்தது கண்டு உலகமே கண்ணீர் சிந்தியது. அன்றைக்கு ஜெயலலிதா கண்ணியம் காத்தாரா? அவரிடம் அரசியல் நாகரிகம் இருந்ததா? அச்சமயத்தில் கலைஞரால் உருவாக்கப்பட்ட வைகோகூட கடுமையாக கண்டிக்காமலும் அமெரிக்கா போய்விட்டார். இதுதான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகின்ற அரசியல் நாகரிகமும் கண்ணியமும் ஆகும். ஆனால் இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழக நலனுக்காக ஓய்வறியாமல் உழைக்கும் தலைவர் கலைஞர் அவர்களை பார்த்து கண்ணியத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆதவனை எவராலும் மறைக்க முடியாது. அதைப்போல அரசியலில் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் ஏற்றுக் கொண்டுள்ள கலைஞர் அவர்களின் ஆளுமையையும், கீர்த்தியையும் எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது.
கண்ணியம் என்ற வார்த்தைக் குறித்து பல்வேறு ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதிகளைப் புரட்டும் போது கிடைத்த தகவல்கள் :
கண்ணியத்திற்கு ஆங்கிலத்தில் ஈடிஞ்ணடிtதூ என்பார்கள். இந்த வார்த்தைக்கு 1844ஆம் ஆண்டில் பதிக்கப்பட்ட வின்ஸ்லோ அகராதியில் கண்ணியம், மேண்மை, மகத்துவம், மாட்சிமை, கனம், மகிமை, பெருந்தன்மை என்று பொருள் கூறப்பட்டுள்ளது.
1925இல் பதிப்பிக்கப்பட்ட பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதியில் கண்ணியத்திற்கு கனம் என்று சொல்லப்பட்டுள்ளது.
1937ஆம் ஆண்டு தமிழறிஞர் மதுரை இ.மா.கோபாலகிருஷ்ணகோன் பதிப்பித்த மதுரை தமிழ் பேரகராதியில் கண்ணியம் என்பதற்கு கௌரவம் என்று பொருள் குறிப்பிட்டுள்ளார்.
1992ம் ஆண்டு வெளிவந்த க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியில் கண்ணியம் என்ற சொல்லுக்கு தன் மதிப்பை இழக்காமல் இருப்பதும், பிறருக்கு உரிய மரியாதையை அளிப்பதும் நாகரிகம் என்று கொள்ளும் போக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிஞ்ணடிtதூ – ஞிச்டூட், ஞிணிதணூtடூடிணஞுண்ண், ஞீஞுஞிணிணூதட், ஞீடிண்tடிணஞிtடிணிண, ஞூணிணூட்ச்டூடிtதூ, ஞ்ணூச்ணஞீஞுதணூ, ஞ்ணூச்திடிtதூ, ணூஞுண்ணீஞுஞிtச்ஞடிடூடிtதூ, ஞ்ணூஞுச்tணஞுண்ண் என பல பொருள்களை இச்ண்ண்ஞுடூடூ’ண் – கூடஞுண்ச்தணூதண் (1998 உஞீ., உணஞ்டூச்ணஞீ) சொல்கின்றது.
ஈடிஞ்ணடிtதூ – கருத்தார்ந்து முறை ஒழுங்குடன் ஒன்று செய்யப்படுதல். சீரிய முறையில் வினைமுறை சார்ந்து அமைந்துள்ளமை என்று சமீபத்தில் வெளியான ஆக்ஸ்போர்டு ஆங்கிலம் தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ளது.
இப்படி கண்ணியத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருள்களுக்கும் இலக்கணமாக இன்று திகழ்பவர் கலைஞர் மட்டுமே! துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஆப்பிரிக்க பழமொழியை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
மிக்க அன்புடன்,
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்