கோபன்ஹேகனில் புவி வெப்பம் தணிப்பு உச்சி மாநாடு ஏமாற்றம் தருகின்ற வகையில் முடிந்து விட்டது என பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். மானுடத்திற்கு கிடைத்த இந்த பூமிப் பந்து இயற்கையின் அருட்கொடையாகும். நாகரீகங்கள் வளர்ந்து மானுட ஆற்றல் முன்னேற்றப் பாதையில் வழிநடந்திட இப்பூமண்டலம் அடிப்படை ஆதாரமாகும். ஆராய்ச்சிகள் மற்றும் தொழிற்புரட்சிக்குப் பின் வளர்ந்த இயந்திர வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக சுற்றுச்சுழல் சேதாரங்கள் நடைபெற ஆரம்பித்தது. வளி மண்டலமும் மாசுபட ஆரம்பித்தது. மின்சார சேவைக்கு நிலக்கரியை வெட்டியெடுக்கும்பொழுதும், அதிகமான போக்குவரத்து வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்ததாலும் பெட்ரோலிய பொருட்கள் அதிகம் தேவைப்பட ஆரம்பித்தது. நிலக்கரி மற்றும் பெட்ரோல் மூலம் ஏற்படும் இரசாயனக் கழிவுகளால் நாளுக்கு நாள் மாசுத் தன்மை அதிகரித்தது. காடுகள் அழிக்கப்பட்டன. காற்றும் நீரும் மாசாகியது. இதனால் சுனாமி போன்ற பெரும் இயற்கைச் சீற்றங்களும் நடந்தேறின. 

அதுமட்டுமா? 2009இல் வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலட்சகணக்கானோர் வீடுகளை இழந்தனர். காவிரி டெல்டா பகுதியிலும் சாகுபடி பயிர்கள் பருவ மாற்றத்தால் அழிகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை காத்ரீனா, ரீட்டா போன்ற சூறாவளிகள் கடுமையாகத் தாக்கின. தற்போது அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை யோசிக்காமல் கார்கள் வாங்க வேண்டும், ஏசிகள், பிரிட்ஜ்கள் வீடுகளுக்கு தேவையென்று போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறோம். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலக்கரியினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்த்ததுண்டா? பசுமையை அழித்து, உலகளவில் 80 இலட்சம் மரங்கள் நாளொன்றுக்கு வெட்டப்படுகின்றன. இயற்கை தந்த வளங்களை மீட்டெடுக்க முடியாமல் போய்விட்டது. 

கடலின் சீற்றம் எதிர்காலத்தில் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் உயர்வதாகும். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கார்பன் அளவு வளி மண்டலத்தில் 280 பி.பி.எம். (பங்குகள் இருந்தன) தொழிற்புரட்சிக்கு முன்பே 0.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருந்தது. அந்த அடிப்படையில் கார்பன் அளவு 450 பி.பி.எம்.குக்கு கூடுதலாகக் கூடாது என்ற ஒரு அளவுகோல் இருந்தது. சர்வதேச பருவநிலை மாறுபாடு கூட்டமைப்பு இந்த வெப்பநிலை மாறுதல்களை கண்காணித்து அவ்வப்போது அறிக்கைகளை வழங்கி வந்துள்ளது. அதன்படி 4ஆவது அறிக்கையில் 100 ஆண்டுகளில் புவியின் வெப்ப நிலை 0.74 டிகிரி செல்சியஸ் அதிகரித்து உள்ளது என்றும், அது மேலும் 50 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளது. இன்றைக்கு நிலைமை என்ன? வறட்சி என்பதையே சந்திக்காத ஆஸ்திரேலியாகூட வறட்சியை சந்தித்தது. மேலும் இது அதிகரித்தால் மாலத்தீவு போன்ற குட்டித் தீவுகள் கடலில் மூழ்கிவிடும். ஏன் பூமிக்கே ஆபத்தாகி விடும். அதே நிலைதான் இந்திவாவிற்கும் ஏற்படும். இதுதவிர பூமத்திய ரேகையில் அமைந்துள்ள நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.

பருவ நிலைகள் மாறும் சூழல் உள்ளது. இந்நிலையில் ஐ.நா. 1971இல் ஸ்டாக்ஹோமில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க மாநாடு நடத்தியது. அதன்பின் 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் சுற்றுச்சுழல் குறித்து பல்வேறு தீர்மானங்களை கொண்டுவந்து உலக நாடுகளுக்கு வழிகாட்டிய போதிலும் முன்னேற்றங்கள் பெரிய அளவில் ஏற்படவில்லை. அடிப்படையில் ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டுமென 1985 வியன்னாவிலும், 1987 மாண்ட்ரியலிலும் பன்னாட்டு அளவில் விவாதங்கள் நடத்தப்பட்டு சில கொள்கை முடிவுகள் வகுக்கப்பட்டன. 1990இல் நடைபெற்ற மாநாட்டில் சில வரையறை திட்டங்களைக் கொண்டு வந்து, அது 1992 மே 9ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த கொள்கை கோட்பாட்டின்படி வளர்ச்சி அடைந்த நாடுகள்தான் புவி வெப்பத்தில் அக்கறை செலுத்தி அதனை கட்டுப்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டது. கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றாமல் பார்த்துக் கொள்வது அந்நாடுகளின் பொறுப்பு என ஐ.நா. அறிவித்தது. 36 நாடுகள் இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டிருந்தது. இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்த பின்பும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வெப்பத்தை தணிக்கவும் கூடிய நடைமுறைகள் திருப்திகரமாக இல்லாமல் போய்விட்டது.

1997இல் ஜப்பானின் கியூட்டோ நகரில் ஐரோப்பிய யூனியனுடன் 37 வளர்ச்சி அடைந்த நாடுகள் இணைந்து ஒரு உடன்பாட்டை வெளியிட்டன. அதன்படி 2008 முதல் 2012 வரை வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றுவதை குறைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. தொழிற்புரட்சிக்குப் பின் பயன் அடைந்த நாடுகளால்தான் இந்த கேடு நிகழ்ந்தது. அதனால் அந்நாடுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என கியூட்டோ மாநாடு குறிப்பிட்டாலும், அதனை பல வளர்ச்சி அடைந்த நாடுகள் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது. அப்போதே அமெரிக்க பிடிவாதம் பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைக்கு என்ன நிலைமை? அதிகம் மழை பெய்த சிரபுஞ்சியிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. பனி பூமியாக இருக்கும் அண்டார்டிகா கறைகிறது. இதனால் பென்குயின் இனமே அழிந்து விடுமோ என்ற அபாயம் உள்ளது. இமயப்பர்வதம் உருகி விடுமோ என்ற அய்யம் ஏற்பட்டுள்ளது. மழை நீர் ஆதாரங்கள் இல்லாமல் போய், கடல் மட்டம் உயரும் என்ற சூழல்நிலை உள்ளது. போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்து அவை வெளிப்படுத்துகின்ற புகை மண்டலம் வானத்தில் உள்ள ஓசோன் படலத்தை கிழிக்கக் கூடிய அளவில் உள்ளது. கார்பன் கழிவால் இO2, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரோ கார்பன், பெர் புளோரோ கார்பன், சர்ஃபர் ஹெக்சோ புளூரைடு போன்ற ஆறு வகையான நச்சு வாயுக்களால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கின்றது. இயற்கையின் கொடையையே விஞ்ஞானத்தால் ஏற்படும் வசதிகளால் அழிக்கின்றோம். குளிர்சாதனப் பெட்டிகள், மென்பொருள் இரசாயன கழிவுகள், ஆலைக் கழிவுகள் போன்றவற்றால் ஏற்படும் கொடிய மாற்றங்கள் ஆகியனவே இன்றைக்கு பூமி மண்டலத்துக்கு பெரும் சவாலாக உலக அளவில் உள்ளது. இO2, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரோ கார்பன், பெர் புளோரோ கார்பன், சர்ஃபர் ஹெக்சோ புளூரைடு போன்ற ஆறு வகையான நச்சு வாயுக்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது. 

பூமியின் வெப்ப நிலையானது சுமார் 1 டிகிரி செல்சியஸ் உயருமானாலே டன் கணக்கில் கோதுமை உற்பத்தி பாதிக்கும் என்று தெரியவருகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2லீ  முதல் 5 டன்கள் வரை நெல் உற்பத்தியாகிறது. ஆனால், 2020 ஆண்டுவாக்கில் பருவநிலையின் மாற்றத்தால் இவ்விளைச்சல் வீழ்ச்சியடையும் என கோவை வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கணக்கிட்டு கூறியுள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும். பல இடங்களில் பசி, பட்டினி என்ற நிலை உருவாகும். இதனால் உலகளவில் 200 கோடி மக்கள் பாதிக்கப்படுவர். இந்த புவி வெப்பத் தடுப்பு உச்சி மாநாட்டை ஒட்டி 45 நாடுகளின் செய்தித்தாள்களில் எழுதப்பட்ட தலையங்கங்களில் பூமியின் வெப்பம் 4 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் பூச்சியினங்களில் பெரும்பாலானவை அழிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

2020 2030 ஆண்டுகளில் உலகத்தின் வெப்பநிலை பெரிய அளவில் உயரும் என்பதையே தற்போதைய பேச்சுவார்த்தை தெரிவிக்கிறது என உலக கார்பன் குறித்து ஆராய்ந்த நிபுணரான கெயின் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இதை எப்படித் தீர்க்கப் போகின்றோம் என்ற நிலையில்தான் கோபன்ஹேகன் மாநாடு நடந்தேறியுள்ளது. இந்த மாநாட்டில் தீர்மானங்களும், முடிவுகளும் உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

இப்பிரச்சினைக்காக உலக அளவில் விவாதங்களும், பல்வேறு போராட்டங்களும் நிகழ்ந்தன. இம்மாநாட்டில் குறிப்பாக, அமெரிக்காவில் வெளியிடப்படும் கரியமில வாயுவை தடுக்கக்கூடிய வகையில் ஒரு ஒப்பந்தத்தை கொண்டு வந்து ஐரோப்பா மற்றும் பிற நாடுகள் அமெரிக்காவை நிர்ப்பந்திக்க முனைந்தபொழுது அமெரிக்க அதிபர் ஒபாமா சட்ட வடிவில் கட்டுப்பாட்டை கொண்ட ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்காது என அறிவித்தார். இந்தியா, சீனா போன்ற நாடுகள் கரியமில வாயுவை குறைக்க வேண்டும் என வலியுறுத்தும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், தங்கள் வசதிக்கேற்ப இந்த பிரச்சினையில் கரியமில வாயுவை குறைக்க முன்வரவில்லை என்பதுதான் வேதனையான செய்தி. அந்த நாடுகளையும் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபொழுது அமெரிக்கா கண்டும் காணாமல் இருந்தது அதிர்ச்சியைத் தருகிறது. உலகின் மக்கள் தொகையில் 3 சதவீத மக்கள் கொண்ட அமெரிக்கா 20 சதவீத கார்பனை வெளியேற்றுகின்றது. 15 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடுகின்றது.

கோபன்ஹேகனில் நடைபெற்ற இந்த உச்சிமாநாடு, ஆபத்து என்ன நடக்கப் போகின்றதோ என்கிற வகையில் திடுக்கிடும் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது. கேள்விக்குறிகளாகவே நடைபெற்ற காட்சிகளுக்கு விடைகள் எப்படி வரப்போகிறதோ என உலகமே எதிர்பார்த்தது. ஜப்பானின் கியூட்டோவில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தம் முற்றிலும் மாற்றப்பட்டதற்கு அமெரிக்காவே காரணம். சீனாவின் பிடிவாதமும் இதில் நீடித்தது. கியூட்டோ ஒப்பந்தம் மதிப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதற்கு மத்தியில் ஜி77 நாடுகள் இதுகுறித்து தனியாக நடவடிக்கைகளை மேற்கொண்டபொழுது இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தனித்தனியாக அமெரிக்காவுடன் பேசியபொழுதும் எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை. வளர்ந்த நாடுகளின் திட்டத்தை இந்தியா, சீனா எதிர்த்தன. மொத்தத்தில் புவி வெப்பத்தை தடுக்க 1972ஆம் ஆண்டு ஐ.நா. மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமெரிக்கா கட்டுப்படாதது மட்டுமல்லாமல், கியூட்டோ உடன்பாட்டுக்கு முற்றிலும் மாறாக பெரியண்ணன் பாணியில் நடந்து கொள்வது கவலையை தருகிறது. இருந்தாலும் 2010இல் இதுகுறித்து உடன்பாட்டை எட்டுவதற்கான நடவடிக்கைகளில் சில நாடுகள் இறங்கியுள்ளன என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாகும். 26 நாடுகள் இம்முயற்சியை முன்னெடுத்துச் செல்ல உள்ளது.

கியூட்டோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோபன்ஹேகன் மாநாட்டில் முடிவுகள் எடுக்கப்பட்டு, சட்டங்கள் இயற்றப்பட்டால் ஓரளவு புவிவெப்பம் தடுக்கப்படும். கியூட்டோ மாநாட்டின்படி 1990ஐ ஒப்பிட்டு பார்க்கும்பொழுது 2020இல் 40 சதவீதம் கார்பன் குறைக்க வேண்டும். 2050இல் 90 சதவீதம் வரை குறைக்கப்பட வேண்டும். இந்த காலத்திட்டத்தின்படி நாம் செயல்படவில்லையென்றால் மானிடத்திற்கே சவாலாக அமைந்துவிடும். ஆனால், 2020இல் 17 சதவீதம் தான் குறைக்க முடியும் என்று வளர்ந்த நாடுகள் கறாராக சொல்லிவிட்டன. ஐரோப்பிய ஒன்றியம் 30 சதவீதம் குறைத்துக் கொள்கிறோம் என்று சொன்னதை, தற்போது தளர்த்தி 20 சதவீதம்தான் குறைக்க முடியும் என்று சொல்கிறது. அதுமட்டுமல்லாமல், 2030இல் நிலக்கடி பயன்பாடே கூடாது என்ற முடிவுக்கு வந்தால்தான் விமோசனம் கிடைக்கும். ஆனால், இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிலக்கரியை நம்பியே உள்ளன.

கோபன்ஹேகனில் 133 நாடுகள் கலந்துகொண்ட மாநாட்டை நடத்திய டென்மார்க்கும், அமெரிக்காவிற்கு ஒத்துப்போய்விட்டது. கியூட்டோ ஒப்பந்தத்தின் கர்த்தாவாக இருந்த ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியங்கள் ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் அணுகுமுறைக்கு ஏற்றவாறு தலையாட்டின. ஒரு கட்டத்தில் இந்தியாவும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில், சர்வதேச கண்காணிப்பிற்கு இந்தியாவும், சீனாவும் கட்டுப்படத் தேவையில்லை என்ற நிலையை அமெரிக்கா வகுத்துக் கொடுத்தது. இந்நிலையில், ஜி.77 நாடுகள் இந்தப் போக்கைக் கண்டித்தன.

அமெரிக்கா தன்னுடைய பொறுப்புக்கு கழிவு வாயுவை குறைக்கும் அளவு மற்ற நாடுகளை விட குறைவானது. ஜப்பான், சீனா, ஐரோப்பிய யூனியன், இந்தியா போன்ற நாடுகளைவிட கரியமில வாயுவை அதிகமாக வெளியிடுவது அமெரிக்கா தான். ஆனால் மேற்கூறிய நாடுகளை கண்காணிக்க வேண்டும் என்பதும், அமெரிக்காவை கண்காணிக்கக் கூடாது, அது தன் விருப்பத்தின் பேரில்தான் செய்யமுடியும் என்று சொன்னது கேள்விக்குறியாகிவிட்டது. இந்தப் பிரச்சினையில் 20102012 ஆண்டுகளில் 3,000 கோடி டாலரும், 2020க்குள் 10,000 கோடி டாலரும் நிதியை திரட்டி வளரும் நாடுகளுக்குத் தருவதாக வளர்ந்த நாடுகள் ஒப்புகொண்டுள்ளன.

இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அனைவரும் ஏற்கக் கூடிய தீர்மானம் உருவாகாமல் போவதற்கு வளர்ந்து வரும் நாடுகள் காரணமல்ல என இந்தியா வலியுறுத்தியது எனவும், உச்சி மாநாட்டில் நடைபெற்ற வாதங்களும் மிக மோசமான முறையிலேயே கையாளப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மிகவும் குழப்பமான நிலையே மாநாட்டில் நிலவியது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது: “இந்திய பிரதமர் வெளிநடப்பு செய்துவிட்டார், சீன பிரதிநிதிகளும் விலகி விட்டனர். இந்நிலையில் மாநாடு தோல்வியடையக் கூடாது என்பதற்காக எனது முயற்சியில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விளைவாக பின்வரும் 40 ஆண்டுகளில் கரியமில வாயுவை மிகக் குறைந்த அளவில் வெளியேற்ற வேண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன்படியே தற்போதைய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா, சீனா போன்ற நாடுகளும் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளன” என்று கூறியுள்ளார். ஆனால், இந்த ஒப்பந்தம் ஒப்பேறுமா என்பது கேள்விக்குறி. இதை ஒபாமாவே ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால், கோபன்ஹேகன் மாநாடு நடந்து முடிந்ததேயொழிய எவ்வித அர்த்தங்களையும், நியாயங்களையும் இம்மாநாட்டின் மூலம் நமக்கு ஏற்படுத்தவில்லை. இந்தியா எவ்வளவோ மன்றாடியும் உலக நாடுகளின் பாதையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. வளர்ச்சி அடைந்த நாடுகள் சட்டபூர்வமில்லாத மோசமான போக்குகளை வகுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது வேதனையைத் தருகிறது. இதனால் வளர்ச்சி அடைந்த நாடுகள் வெளிப்படுத்தும் கார்பன் டை ஆக்சைடை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சுற்றுச்சூழல் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு கூடிக் கலைந்தது.

 மொத்தத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டட கோபன்ஹேகன் மாநாடு கலைந்துள்ளது என்பது சங்கடப்படுத்துகின்ற சங்கதியாகும்.