இதுதான் தி.மு.க.!
தமிழக முதல்வரைப் பற்றிய பழ.கருப்பையாவின் நடுப்பக்க பத்தியை, தினமணியில் பார்க்க நேர்ந்தது. போலியான அவதூறுகளை அவிழ்த்து விட்டுள்ளார் பழ.கருப்பையா. இம்மாதிரியான ஒரு கட்டுரையை அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் தலைமையை எதிர்த்து எழுத முடியுமா? தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகம் உள்ளது என்ற அரிய உரிமையை பயன்படுத்திக் கொண்டு இல்லாததையும், பொல்லாததையும் எழுதியது அனைவருக்கும் வேதனையைத் தருகின்றது. இதே கிண்டலையும், நக்கலையும் அ.தி.மு.க. தலைமையை நோக்கி இவரால் அ.தி.மு.க. ஆட்சியில் செய்ய முடியுமா? ஒரு உண்மையை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும்; இன்றைய தமிழக முதல்வர், 2001இல் அ.தி.மு.க. ஆட்சியில் நள்ளிரவில் தமிழகம் துடிக்க கைது செய்யப்பட்ட கொடூர நிகழ்வுகளுக்கு, முரசொலியில் பழ.கருப்பையா எழுதிய கண்டன கட்டுரையே அவரின் வாதத்திற்கு பதிலாகும். இதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் தி.மு.க. தலைமை மீது தம்மையற்ற முறையில் அவர் சொல்லிய கருத்துகள் யாவும் நாகரிகமற்றது. இருப்பினும், அவர் வைத்துள்ள சொத்தை வாதங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆட்சி இல்லாத கட்சியினால் என்ன பயன் ஏற்படும் என்று சொல்கின்ற பழ.கருப்பையாவிற்கு, தி.மு.க. 1975இலிருந்து 1989 வரை ஆட்சியில் இல்லை. அன்றைய காலகட்டத்திலும் தி.மு.க. தலைமை தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனநாயக முறையில் போராட்டங்களை செய்யவில்லையா? ஜெயலலிதாவை போல் கொடநாடு சென்று தமிழக முதல்வர் ஓய்வு எடுக்கவில்லையே. எத்தனை போராட்டங்கள் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் நடந்தது; சென்னை சிறையில் பலமுறை இன்றைய தமிழக முதல்வர் அடைக்கப்பட்டார். இதெல்லாம் பழ.கருப்பையாவிற்கு தெரியாதா? தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை சந்திப்பது, மற்ற காலங்களில் ஓய்வு என்ற இரும்பு திரையை போட்டு கொண்டு தி.மு.க. இருப்பதில்லை.
இன்றைக்கு இந்தியாவில் மூத்த அரசியல் தலைவராக தமிழக முதல்வர் இருக்கின்றார். இந்த வயதிலும் அரசியல் பணி, பத்திரிகை பணி, இலக்கியப் பணி என்ற வகையில் தலைமைச் செயலகம், அறிவாலயம், முரசொலி அலுவலகம், சுற்றுப் பயணங்கள், பொதுக் கூட்டங்கள் என்று சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். இதில் எவ்வித அலுப்பும் அவருக்கு ஏற்பட்டதே இல்லை. அவர் வயதில் இந்தியாவில் எந்த முதல்வர் இன்றைக்கு பணியாற்றுகிறார் என்று பழ.கருப்பையாவால் சொல்ல முடியுமா? பால்கனி பாவையாக இருந்து கொண்டும், கை அசைத்தும் அரசியல் நடத்துவது தி.மு.க.வில் கிடையாது. 14 ஆண்டுகாலம் வனவாசம் என்று கருப்பையா வருத்தப்பட்டாலும் அன்றைக்கு இதே கருப்பையா, இன்றைய தமிழக முதல்வரின் போராட்டங்களை பாராட்டி பேசியதும் உண்டு. மேலவை யாரால் எதற்காக கலைக்கப்பட்டது என்பதை சிந்தித்துப் பார்த்தால் உண்மை தெரியும். அதை செய்யாமல் மாலைக்கண் வந்ததுபோல மேலவையை பற்றிய அவருடைய கூற்றுக்கு அர்த்தமே கிடையாது. மேலவைக்கு இன்றைய தமிழக முதல்வர் வந்து விட்டார். ஆனால் தான் விரும்பியபடி ஒரு நடிகையை மேலவைக்கு அனுப்ப முடியவில்லையே என்ற ஆதங்கத்தின் விளைவாக எம்.ஜி.ஆர். மேலவையை முடக்கினார். அந்த உண்மைகூட தெரியாமல் விதண்டாவாதம் செய்யும் கருப்பையாவிற்கு என்ன சொல்ல முடியும்.
இதே கருப்பையா, 1996இல் ஜெயலலிதா ஆட்சியில் நாட்டை கொள்ளை அடித்து சூரையாடி விட்டார் என்று கூறிய வாதம் எங்கே போய்விட்டது. ஜெயலலிதாவும் அவரது தோழியும் சேர்த்த சொத்துக்களை முடக்க வேண்டும் என மதுரையில், பொன்.முத்துராமலிங்கம் நடத்திய கூட்டத்தில் இதே கருப்பையாதான் சொன்னார். இம்மாதிரி பல கூட்டங்களில் பழ.கருப்பையாவின் குரல் கேட்டது. அ.தி.மு.க.வில் பதவிகளை அவ்வப்போது தலைமையின் விருப்பம்போல், அ.தி.மு.க. அத்தானி மண்டபத்தில் கொடுப்பது போன்று தி.மு.க.வில் கிடையாது. சுதாகரன், தினகரன், மகாதேவன், திவாகரன், இன்றைக்கு வெங்கடேஷ் என்ற அதிகார மய்யங்களை சுற்றியே மூத்த அ.தி.மு.க. தலைவர்கள் இருக்க வேண்டிய நிலை. மேலே சொன்ன தோழியின் குடும்பத்தாருக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன தொடர்பு? இவர்கள் அ.தி.மு.க.வுக்கு என்ன செய்தார்கள்? அவர்களுக்கு கும்பிடு போட வேண்டிய நிலைமை எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு இன்றைக்கு உள்ளது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். கால விசுவாசிகளான கருப்பசாமி பாண்டியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்ற பெரும் படையே இனிமேல் அ.தி.மு.க. தலைமையின் கீழ் இருக்க முடியாது என்று தி.மு.க.விற்கு வந்துள்ளார்கள். அவர்கள் பின்னால் சாரை சாரையாக வரிசையாக அ.தி.மு.க.விலிருந்து வந்து கொண்டுள்ளார்கள். இன்றைக்கு குறிப்பிடும் வகையில் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் சிலரே அங்கு இருக்கிறார்கள். அவர்கள்கூட தற்போது திடீரென்று தோழி வீட்டிலிருந்து முளைத்துவிட்ட தலைவர்களுக்கு முறைவாசல் செய்ய வேண்டிய பரிதாப நிலையே உள்ளது. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பழ.கருப்பையா. இவரின் வாதம் உத்தர அளவு அழுக்கை தன்னகத்தே வைத்துக் கொண்டு, உன் கண்ணில் தூசி உள்ளது என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது. சோதனை காலத்தில் ஜெயலலிதாவிற்கு துணை நின்ற திருநாவுக்கரசர், கருப்பசாமி பாண்டியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். போன்றோருக்கு அங்கு ஏற்பட்ட நிலைமைக்கு, பழ.கருப்பையாவால் பதில் சொல்ல முடியுமா?
ஏதோ தி.மு.க. மோசமான அரசியல் செல்நெறி என்று குறிப்பிடும் கருப்பையாவிற்கு; கும்பகோணம் மகாமகம் சாவுகள் யாரால் ஏற்பட்டது? அதிகாரி சந்திரலேகா மேல் ஆசிட் ஊற்றிய நடவடிக்கை எப்படி நடந்தது? ஆளுநர் சென்னா ரெட்டி தன் கையை பிடித்து விட்டார் என்று சொன்னது யார்? வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்டது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டிலேயே கஞ்சா வைத்தது, தனது ஆடிட்டர் ராஜசேகரனை செருப்பால் அடித்தது, கோவில் கோபுர அளவு கட்அவுட் கலாசாரம் போன்றவையெல்லாம் யார் ஆட்சி காலத்தில் நடைபெற்றது. சென்னை நகரவாசிகள் அருவருக்கும் வகையில் தனது வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்துவிட்டு, அந்த வளர்ப்பு மகனையே கஞ்சா வழக்கில் கைது செய்தது யார்? பள்ளிக் குழந்தைகளை பல மணி நேரம் வேகாத வெயிலில் காக்க வைத்து, மலர் படுக்கையில் முதல்வரின் வாகனம் யார் காலத்தில் சென்றது? சென்னை நகரத்தில் 1991இல், முதல்வர் வருகிறார் என்றால் வெகு நேரம் வாகனங்களை நிறுத்தி வைத்தது யார்? பத்திரிகையாளர்கள் கே.பி.சுனில் (இன்று ஜெயா டி.வி.), முரசொலி செல்வம், இந்து. ஜெயந்த் போன்றவர்களுக்கு யார் ஆட்சியில் நெருக்கடி ஏற்பட்டது? ஆனந்தவிகடன் ஆசிரியரும், பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவருமான பாலசுப்பிரமணியத்துக்கு கைது உடைக் கொடுத்து சிறையில் அடைத்தது யார் ஆட்சியில்? அதுபோல நக்கீரன், தராசு போன்ற பத்திரிகைகள் மீது வழக்குகள், நெருக்கடிகள் என யாரால் நடத்தப்பட்டது.
பத்திரிகையாளர்களை சந்திக்காமலேயே இருந்த முதல்வர் யார்? தலைமை தேர்தல் அதிகாரி சேஷன், சுப்பிரமணிய சுவாமி போன்றோர் மீதெல்லாம் தாக்குதலும், சொல்லக் கூசக்கூடிய வகையில் நடந்து கொண்ட நடவடிக்கைகளும் யார் காலத்தில் நடைபெற்றது? தோழிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று அறிக்கை விட்டு விட்டு; இருட்டில் வைக்கப்பட்டேன். இன்றுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளேன் என்று அன்றைக்கு சொன்னவை ஏடுகளில் உள்ளது. ஆனால் அதே தோழியோடு இன்று வலம் வர வேண்டிய காரணம் என்ன? இப்படியா முன்னுக்குப் பின்னாக இன்றைய தமிழக முதல்வர் நடந்து கொள்கிறார். 1998இல் வாஜ்பாய் ஆட்சிக்கு மத்தியில் வந்தவுடன், தன்னுடைய தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறவில்லையே என்பதற்காக ஆதரவை வாபஸ் வாங்கியதை, இன்றைக்கு அ.தி.மு.க.வுடன் தோழமை கொண்டுள்ள வைகோ அன்றைக்கு கண்டிக்கவில்லையா, எதிர்க்கவில்லையா? அன்றைக்கு வாஜ்பாய் பதவி ஏற்பின் போது, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் எவ்வளவு நெருக்கடிகளை சந்தித்தார் என்பது அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு தெரியும். சோஷலிஸ்ட்வாதி ஜார்ஜ் பெர்னாண்டஸ், பா.ஜ.க. தலைவர் ஜஸ்வந் சிங் ஆகியோர் எத்தனை முறை போயஸ் கார்டனுக்கு தேடி வந்து மன்றாடிய போதும் எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டனர். இம்மாதிரியான அணுகுமுறை இன்றைய முதல்வரிடம் உண்டா? இதுதான் அரசியல் நாகரிகமா?
சோனியா காந்தி அவர்களுக்கு பதிபக்தி இல்லை என்றும், அவருடைய முழுப் பெயரை கிண்டலாக விளித்து கோட்டையில் ஒரு மணி நேரம் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது யார்? அதையும் ஜெயா டி.வி. நேரடியாக காட்டியது. 1999இல் திண்டிவனத்தில், நாடாளுமன்ற தேர்தலின்போது, ராகுல் காந்தியையும், சோனியாவையும் காக்க வைத்துவிட்டு இறுதியில் கூட்டத்திற்கு செல்லாமல் அலட்சியப்படுத்தியது அரசியலில் நாகரிகமான செயலா? ஆனால் இன்றைக்கு காங்கிரசோடு கூட்டு வைக்க அ.தி.மு.க.விற்கு எப்படி மனது வந்தது? இதற்காகவே டில்லியில் நடந்த தேர்தல் கமிஷன் கூட்டத்திற்கு பல எதிர்பார்ப்புகளோடு சென்று மூக்கறுபட்டு திரும்பியது யார்? 1800 கி.மீ. கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடந்து ஜெயலலிதா ஆட்சியின் ஊழலை பிரச்சாரம் செய்தார் வைகோ. பொடா கைதியாக வேலூர் சிறையில் வைகோ அடைக்கப்பட்டது யாரால்? அன்று அந்த கொடிய சிறைவாசத்தை கண்டித்தது தி.மு.க. தானே. இன்றைக்கு இதையெல்லாம் எளிதில் மறக்க முடியுமா? மக்களின் நினைவாற்றல் குறைவுதான் என்று கருப்பையா போன்றவர்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். தமிழ்நாடு இடதுசாரி கட்சிகளும் 1996, 2006 நடைபெற்ற மக்கள் விரோத ஜெயலலிதா ஆட்சியோடு இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, இன்றைக்கு பொது வேலை நிறுத்தத்தில் அ.தி.மு.க.வோடு கைகோத்தது ஏன் ஏன்று தெரியவில்லை. தான் செய்த ஊழலுக்காக ஜெயலலிதா கைது செய்யப்பட்டபொழுது, நாகரிகமாக பகல் நேரத்தில் தி.மு.க. அரசு நடத்தியது. அவருக்கு வேண்டிய அடிப்படை வசதிகளையும் சிறையில் செய்து கொடுத்தது. ஆனால் ஆ.தி.மு.க. ஆட்சியில் இன்றைய தமிழக முதல்வரை மனித உரிமைகளை மீறி கொடூரமாக கைது செய்தது கண்டு தமிழகமே அதிர்ந்தது. அத்தகைய நடவடிக்கைக்கு அவசியம் என்ன? அதில் ஒரு வஞ்சகமும், பகைமையும் இருந்தது. பேய் ஆண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் வாக்கு நினைவுக்கு வருகின்றது.
சட்டப் பேரவைத் தலைவர், பேரவையிலேயே தன் காலில் விழ வேண்டும் என்று விரும்பியவர் யார்? சட்டப்பேரவை துணைத் தலைவர் இருக்கையில் தன் தோழியை அமர வைத்து சட்டமன்ற மரபை நாசம் செய்தது யார்? ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த மறைந்த மத்திய அமைச்சர் அருணாசலத்தை, மதுரை விமான நிலைத்தில், தான் பயணிக்க இருந்த விமானத்தில் இருந்து இறக்கிய நாகரிகமற்ற செயலை செய்தது யார்? பதவியேற்பு விழாவுக்கு சென்ற நிதியமைச்சர் பேராசியர், துணை முதல்வர் ஆகியோரை பத்தாவது வரிசைக்கருகில் வேண்டுமென்றே அமர வைத்த பண்பாடு அற்றவர்கள் யார்? தன்னுடைய தோழமை கட்சியான பா.ம.க.வின் நிறுவனர் இராமதாசை ராஜ்பவனில் கண்டும் காணாமலும் அலட்சியப்படுத்தியவர் யார்? இப்படிப்பட்ட அரசியல் அநாகரிகங்களை தமிழக அரசியலில் ஈடேற்றியது யார்? பெருந்தலைவர் காமராஜர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், இன்றைய முதல்வர் அவரை மேடையில் அமர வைத்து சிறப்பித்தது எல்லாம் கடந்த கால அரசியல். இதைவிட வேதனைப்படுகின்ற செய்தி என்னவென்றால் எம்.ஜி.ஆர். மறைவின்போது, ஜானகி அம்மையார் மோரில் விஷம் கலந்து எம்.ஜி.ஆருக்குக் கொடுத்து விட்டடார் என்ற குற்றச்சாட்டை சொன்னது யார்? தன்னை வளர்த்துவிட்ட எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்க இலாயக்கற்றவர். அவரை பொறுப்பில் இருந்து இறக்கிவிட்டு, அப்பதவியை தனக்கு தரவேண்டும் என்று அன்றைய பிரதமர் ராஜிவுக்கு கடிதம் எழுதியவர் யார்? நாவலர் என்று அழைக்கப்பட்டவரை உதிர்ந்த ரோமம் என்று திருவாய் மலர்ந்தவர் யார்? இதையெல்லாம் கருப்பையாவுக்கு தெரியாதா?
இப்படி கேள்விக் கணைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். பக்கங்கள் காணாது. இன்றைய முதல்வர் எவ்வளவோ நலத் திட்டங்களை தீட்டியுள்ளார். அவற்றையெல்லாம் தாள்களில் சொல்லி அடக்க முடியாது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயிகளின் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி, பெண்களுக்கு திருமணம் மற்றும் பல்வேறு திட்ட உதவிகள், சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட உறுப்பிழந்தோர்களுக்கு மாற்று திறனாளர்களுக்கு என ஒரு துறை உருவாக்கியது, இன்றைக்கு அமெரிக்க ஒபாமாவே ஏற்றுக் கொள்ளக் கூடிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம், 108 வாகனம் எப்பொழுது அழைத்தாலும் மருத்துவ வசதிக்காக பறந்து வருகின்ற நடவடிக்கை என்று தன்னுடைய ஆட்சி காலத்தில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இத்தகைய சாதனைகளால் நீண்டகாலம் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற தி.மு.க. தலைவர், தனது ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் மக்கள் இதயங்களில் இடம் பெற்றுள்ளார். மக்கள் மனங்களில் இடம் பெற்றுள்ள 150 ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்ட சேதுக் கால்வாய் திட்டம், செம்மொழி அறிவிப்பு, புதிய பசுமை தலைமைச் செயலகம், மேலவையை திரும்பவும் உயிர்ப்பித்தல். இப்படி நித்தமும் சாதனைகள் படைக்கின்றது தி.மு.க. அரசு. அதுமட்டுமல்லாமல், குடிநீர், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் பட்டிதொட்டி முதல் பட்டணம் கரை வரை இன்று எட்டி வருகின்றது.
கருப்பையாவின் வாதத்தின்படி பார்த்தாலும், தி.மு.க.வில் உழைத்துதான் மாவட்டச் செயலாளர் ஆகமுடியும். அ.தி.மு.க.வில் உறுப்பினர் அட்டை வாங்கிய உடனேயேகூட மாவட்டச் செயலாளர் ஆக முடியும். இன்னொரு வேடிக்கை. கட்சியை விட்டு விலகியவருக்கு பதவி கொடுக்கின்ற ஒரே கட்சி அ.தி.மு.க.தான். செல்வகணபதியோடு தி.மு.க.வில் இணைந்தவருக்கு சேலத்தில் பொறுப்பு; லேகத் அலிகான் என்ற அ.தி.மு.க. நிர்வாகி அ.தி.மு.க.விலிருந்து விலகிய பின்பும், தலைமை வெளியிடுகின்ற கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெறுகிறது. இதைவிட அ.தி.மு.க. கட்சியின் நிர்வாகத்தை, செயல்பாட்டை எப்படி சொல்லமுடியும்? இதெல்லாம் கருப்பையாவிற்கு தெரியாதா. கட்சி அலுவலகத்துக்கு தலைவி வருவதையே விழாவாக கொண்டாடுவது உலகிலேயே வேறு எந்த கட்சியிலும் கிடையாது. தொண்டனுக்கும் தலைமைக்கும் இடைவெளி உள்ள இயக்கம் எப்படி உயிரோட்டமான இயக்கம் என்று சொல்ல முடியும். அம்பாசமுத்திரத்தில் உள்ள தி.மு.க. தொண்டன் அடுத்த நொடியில் அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. தலைவருடன் பேச முடியும். இதுதான் தி.மு.க.!
இவ்வாறு நிலைமைகள் இருக்க தி.மு.க. தலைமை மீது பழ.கருப்பையா வாய் கூசாமல் சொல்லும் கருத்துகளை எவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. பொது வாழ்வில் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு காலம் அயராது, ஓய்வறியாது பணியாற்றும் தமிழக முதல்வர், உண்மையில் மனித வடிவில் கடவுள்தான். அவர் நிகழ்த்திய, ஆற்றிய பணிகளுக்கு பழ.கருப்பையா போன்றவர்கள் சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை. இந்திய அரசியல் சதுரங்கத்தில் இந்திரா காந்தி, மொரார்ஜி, ராஜிவ், வி.பி.சிங், நரசிம்மராவ், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்களுடன் பழகி பணியாற்றி அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகளவில் கீர்த்தி பெற்றுள்ள தமிழக முதல்வரின் புகழும், ஆளுமையும் என்றும் வரலாற்றில் நிற்கும்.
இன்றைக்குள்ள அரசியல் நிலைகளில் இதைவிட ஜனநாயக முறையில் ஆட்சியையும், தான் விரும்பும் இலக்கிய பணியையும், தன்னுடைய உடன்பிறப்புகளின் அன்பையும், திரைத் துறையில் தொடர்ந்து தன்னுடைய அரிய பணிகளையும் செய்யும் ஒரே தலைவர் இன்றைய முதல்வர். இதையெல்லாம் சிந்திக்காமல் பொத்தாம் பொதுவாக, வாய்ப் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பழ.கருப்பையா சொல்வது அழகல்ல.
பொய்கள் ஈக்களைப் போல இரைகின்றன
ஆனால், சத்தியத்தில் சூரியப் பிரகாசம் உண்டு
என்ற ஆப்ரிக்க பழமொழிக்கு ஒப்ப தி.மு.க.வின் ஆளுமையை எவராலும் அகற்றவோ மறைக்கவோ முடியாது.
பழ. கருப்பையா தன்னுடைய எல்லைகள் நீத்த இராம காதையில்,
கோது இல் நல்வினை செய்தவர்
உயர்குவர்; குறித்துத்
தீது செய்தவர் தாழ்குவர்;
இது மெய்ம்மை தெரியின் (கம்பன் 6368)
குற்றம் இல்லாத நல்வினை செய்தவர்கள் உயர்வார்கள். தீவனை செய்தவர்கள் தாழ்வார்கள். ஆராய்ந்து பார்த்தால் இதுவே மெய்ம்மையாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவே அவருக்கு நம்முடைய பதிலாகும்.
எல்லா ஜனநாயக நெறிமுறைகளையும், மாண்புகளையும் குழிதோண்டி புதைத்து கல்லறையாக்கிய கார்டன் தலைவிக்கு, கார்டியனாக இருந்து வெண்சாமரம் வீசும் பரிதாப நிலைக்கு இன்று பழ. கருப்பையா தள்ளப்பட்டு விட்டார். அன்றைக்கு கதராடை அணிந்து காமராஜரின் தொண்டராக பணியாற்றிய பழ.கருப்பையாவிற்கு, இன்றைக்கு இந்த நிலைமை தேவைதானா?