சான்றோரை சிறப்பிக்க கலைஞர் அமைக்கும் மேலவை
தமிழகத்தில் சட்ட மேலவை அமையும் என்ற தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. தலைவர் கலைஞர் அவர்கள் மேலவையில் இருக்கிறார் என்பதற்காகவும், தான் விரும்பியபடி நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா மேலவைக்கு வரமுடியவில்லையே என்ற காரணத்திற்காகவும் எம்.ஜி.ஆர். மேலவையை ஒழித்தார் என்று அவர்மீது விமர்சனங்கள் இன்று வரை உண்டு. அதுமட்டுமல்லாமல், 1986 கால கட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. பெரும்பான்மை பெற்றிருந்தது. அதன்மூலம் தி.மு.க.வின் பலம் மேலவையில் கூடிவிடும் என்ற எண்ணமும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. மேலவையில் எம்.ஜி.ஆர். அரசை கண்டித்து விமர்சனங்கள் எழுந்ததால் மேலவையை முடக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். விரும்பினார். பல எதிர்ப்புகள், கண்டனங்கள் அப்போது இதுகுறித்து எழுந்தபோதும், அதையெல்லாம் காதில் வாங்காமல் அவசரகதியில் மேலவையை அ.தி.மு.க. அரசு முடக்கியது.
பிற்பகலில் கூடும் அந்த அரங்கத்தை இப்போது பார்க்கும்பொழுதும் வேதனை ஏற்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு முன், புகழ்பெற்ற ஆளுமைகள் அமர்ந்து, அங்கு பதிவு செய்த அற்புதமான வாதங்களும், செய்திகளும் இன்றைக்கும் ஏட்டில் உள்ளன. கோட்டையில் பழைய சட்டப்பேரவையின் வடபுறத்தில் உள்ள மேலவை அரங்கம் ஒரு அடையாளச் சின்னமாக ஆகிவிடுமோ என்ற ஏக்கம் அனைவருக்கும் இருந்தது. அதனை போக்குகின்ற வகையில் மேலவை அமைக்கப்படும் என்ற தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பு பெரு நிம்மதியை தருகிறது.
பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை என்ற வெஸ்ட்மினிஸ்டர் அமைப்பானாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியரசுத் தலைவர் ஆட்சி போன்ற அமைப்பிலும் ஈரங்க அவை (ஆடிஞிச்ட்ச்ணூச்டூ) இருப்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக நெறிமுறையாகும். இந்தியாவில் சென்னை, ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரம், குஜராத், ஜம்முகாஷ்மீர், மத்தியப் பிரதேசம், மைசூர், பஞ்சாப், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேலவையும், சட்டமன்றமும் இருந்தது. அரசியல் சட்டம் 169ஆவது பிரிவில் மேலவை ஆக்கமும் நீக்கமும் குறித்த அதிகாரங்கள் உள்ளன. மேலவை நிரந்தர அவையாகும். அதைக் கலைக்க முடியாது. ஆயினும் இரண்டாண்டுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் பதவி விலகுவர். மேலவை உறுப்பினரின் காலம் ஆறாண்டுகள் ஆகும்.
சென்னை அப்பர் ஹவுஸ் என்று சொல்லப்படுகின்ற மேலவையில் ஆரம்ப காலத்தில் மொத்தம் 56 உறுப்பினர்கள் இருந்தனர். இதில் பொது உறுப்பினர்கள் 35, முஸ்லிம் 7, ஐரோபியர் 1, இந்திய கிறித்துவர் 3, ஆளுநர் நியமனம் 9. 1947இல் விடுதலைக்குப் பின் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 78 ஆனது. 1953, 56 ஆகிய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மாற்றப்பட்டு 63 ஆக இருந்தது.
விடுதலைக்கு முன்பு 1956இல் இருந்து
உள்ளாட்சி மன்றத் தொகுதியிலிருந்து 24 21
பேரவைத் தொகுதியிலிருந்து 24 21
பட்டதாரிகள் தொகுதியிலிருந்து 9 6
ஆசிரியர்கள் தொகுதியிலிருந்து 9 6
ஆளுநரின் நியமன உறுப்பினர்கள் 12 9
மொத்தம் 78 63
மேலவை அமைந்தால், 63 முதல் 78 உறுப்பினர்கள் வரை அதில் இடம் பெறலாம்.
ஜார்ஜ் வாஷிங்டனுக்கும், தாமஸ் ஜெபர்சனுக்கும் இடையே நிகழ்ந்த கப் அண்டு சாசர் (சட்டப்பேரவை கப், சட்டமேலவை சாசர்) என்ற விவாதத்தை பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் பல சமயங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். சாசர் மேலவை என்றால், கப் சட்டப் பேரவையாகும். தேநீர் சூடாக இருக்கும்பொழுது, சாசரில் ஊற்றி குடிப்பது போல, பேரவையின் சூட்டைக் குறைக்க, சாசர் என்ற மேலவை தேவை என்று குறிப்பிடுவது உண்டு. கிருஷ்ணசாமி பாரதி மேலவை பற்றிக் குறிப்பிடும்பொழுது, ‘ஐ ச்டூண்ணி ச்ஞ்ணூஞுஞு தீடிtட tடச்t திடிஞுதீ tடச்t tடஞு டிஞீஞுச் ணிஞூ ண்ஞுஞிணிணஞீ ஞிடச்ட்ஞஞுணூ ணீணூஞுதிஞுணt ச்ணஞீ ஞிடஞுஞிடு டச்ண்tடூதூ டூஞுஞ்டிண்tச்டிணிண.’ மேலவை மக்களைப் பாதிக்கும் அவசர சட்டங்களை நடைமுறைக்கு வரவிடாமல் தடுக்கும் தடைக் கல்லாக இருக்கும் எனக் கூறுகிறார்.
அரசியல் நிர்ணய சபையில் மேலவை குறித்த விவாதங்கள் எழுந்தபோது, பி.ஜி.கர், பட்டாபி சீத்தாராமய்யா, டாக்டர் பி. சுப்பராயன், கே.என்.கட்ஜ் ஆகியோர் கொண்ட துணைக் குழு அமைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையில், லட்சுமி நாராயண சாகு, கிருஷ்ணசாமி பாரதி, என்.ஜி.ஐயங்கார் போன்றோர், சட்ட மேலவை மூலம் அனுபவமும், தீர்க்கமான சிந்தனையும் கொண்ட சான்றோர்கள் பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்க மேலவை அவசியம் என்ற கருத்தை வெளிப்படுத்தினர்.
இராமதாஸ் ஙண் அரசு (அஐகீ 1959 Mக 353) என்ற வழக்கில், சட்டப் பேரவையில் தீர்மானத்தின் மூலம், மேலவையை முடக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலவைக்கு இலக்கியம், அறிவியல், கலை, கூட்டுறவு மற்றும் சமூகப் பணியில் சிறந்த அறிஞர் பெருமக்களை நியமிக்கலாம் என்ற கருத்துக்கு ஆதரவாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
அறிவு, திறமை மிக்கோர் சட்டமன்றத்திற்கு தேர்தல் களத்தில் பல போராட்டங்களை கடந்து வரத் தயங்குகின்றனர். அப்படிப்பட்டோரின் அறிவுரைகள், ஆட்சியாளருக்குக் கிடைக்க சட்ட மேலவை அவசியம். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் குறை இருந்தால் மேலவையில் விவாதித்து அந்தக் குறைகளை அகற்றி, மக்களுக்கு நலம் தரும் சட்டங்களை நிறைவேற்றலாம். மத்தியில் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையை நாம் ஏற்றுக்கொள்ளும்பொழுது, மேலவையை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது?
மேலவையில் பல தரப்பு உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு கருத்துக்களை விவாதித்து, ஆராய்வதன் மூலம் ஆரோக்கியமான அரசியல் வளர வாய்ப்புள்ளது. மேலவையில் சிறுபான்மையோர், ஆசிரியப் பிரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், மகளிர் அமைப்பைச் சார்ந்தவர்கள் மேலவைக்கு உறுப்பினர்களாகி, சம்பந்தப்பட்டவர்களுடைய நலன்களுக்காகக் குரல் கொடுக்கலாம்.
தமிழகத்தில் மேலவையைத் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கலைத்தது முறையற்ற செயலாகும். மேலவை இருப்பது அப்போதைய அரசுக்கு தேவையற்ற செலவு என்ற வாதத்தையும் வைத்தனர். ஆனால் அன்றைய அ.தி.மு.க. அரசு தேவையற்ற பல செலவீனங்களை செய்தது. மேலவைக்கு அரசு செலவு செய்வது எந்தவிதத்திலும் நட்டமோ, பாதகமோ கிடையாது.
தமிழக மேலவையை முடக்கும் பிரச்சினையில், அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 163க்கு மாறாக, எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சரவையில் விவாதிக்கப்படாமல், நேரடியாக சட்டமன்றத்தில் விவாதித்து, சட்டங்களும், மரபுகளும் மீறப்பட்டன. மேலவை ஒழிப்பு தீர்மானம் 14.5.1986 அன்று நிறைவேற்றப்பட்டு, மே 1986இல் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்திக்கு மேலவையை கலைக்க ஒரு கடிதத்தை மட்டுமே எம்.ஜி.ஆர். எழுதினார். அந்த கடிதமே அடிப்படை ஆவணமாக இந்த நடவடிக்கைக்கு இருந்துள்ளது. பேரவை தீர்மான நகல்கூட மாநில ஆளுநருக்கு அனுப்பவில்லை. அந்த வகையில் அவசர அவசரமாக மேலவை ஒழிப்பு நடவடிக்கைகள் அன்றைக்கு அரங்கேறின. இந்த உண்மைகளை தலைவர் கலைஞர் அவர்கள் தெள்ளத் தெளிவாக சட்டமன்றத்தில் எடுத்து வைத்தார். இறுதியாக 1.11.1986இல் மேலவை நிரந்தரமாக முடக்கப்பட்டது.
நீக்கப்பட்ட மேலவையை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர 20.2.1989 அன்று கழக அரசால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மாநிலங்களவையில் 1990இல் மாநிலங்களவை இதை ஏற்றுக் கொண்டது. மக்களவையில் இத்தீர்மானம் வரவில்லை. கழக ஆட்சியை, மத்தியில் இருந்த சந்திரசேகர் ஆட்சி கலைத்தது. அதன்பிறகு மேல் நடவடிக்கை இல்லாமல் போனது. பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 4.10.91 அன்று இத்தீர்மானத்தை திரும்பப் பெற தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து கழக அரசின் மேலவை குறித்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றார்.
கழக ஆட்சி 1996இல் திரும்பவும் வந்தபொழுது, மீண்டும் மேலவை கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானம், 26.7.1996 அன்று தலைவர் கலைஞர் அவர்களின் முயற்சியால் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அன்றைய தேவகவுடா தலைமையிலிருந்து மத்திய அரசு இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் வைக்க முடிவு செய்தது. ஆனால் அந்த அரசு நீடிக்க முடியவில்லை. பின் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டது. அப்போதும் கழக அரசு அனுப்பிய தீர்மானத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. அத்தீர்மானத்தை ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு 12.9.2001இல் திரும்பப் பெற்றது. காழ்ப்புணர்ச்சியில், ஜெயலலிதா தலைமையில் இருந்த அ.தி.மு.க. அரசுகள் கடந்த காலங்களில் இந்தப் பிரச்சினையில் செயல்பட்டது. தலைவர் கலைஞர் விரும்பிய நடவடிக்கை என்ற பாதக உணர்வோடு, தீர்மானத்தை வேண்டா வெறுப்பாக, அவசரமாக திரும்பப் பெறுவதில் ஜெயலலிதா கவனமாக இருந்தார். மேலவையின் பெருமையைக் கெடுத்து, தனது சிறுமைத்தனத்தைக் காட்டியவர்தான் ஜெயலலிதா. மேலவையை தலைவர் கலைஞர் அவர்கள் திரும்பக் கொண்டு வருவதை ஒருபொழுதும் விரும்பாத மனுஷியாக அவர் இருந்ததை தமிழகம் மறக்காது. உலகமே பாராட்டுகின்ற வகையில் புதிய சட்டமன்ற பசுமை வளாகத்தை தலைவர் கலைஞர் அவர்கள் கட்டியதை பொறுக்காமல் காந்தாரி போல ஜெயலலிதா நடந்து கொள்கிறார். அதுபோன்றே மேலவைப் பிரச்சினையிலும் அவரது நடவடிக்கை இருக்கின்றது.
தி.மு.க. அரசு 1996இல் பேரவையில் இப்பிரச்சினைக்கு தீர்மானம் கொண்டு வந்தபொழுது, கழக உறுப்பினர் மறைந்த சி.டி.தண்டபாணி எம்.ஜி.ஆரின் நடவடிக்கையை கடுமையாக சட்டப் பேரவையில் விமர்சித்தார். அப்பொழுது முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆரை மரபு மீறி விமர்சிக்க வேண்டாம் என்று கூறினார். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். மேலவையை கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டார். அன்றைக்கு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திருநாவுக்கரசர் இதனை பாராட்டினார்.
தமிழக மேலவையில் முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், ஓ.பி. இராமசாமி ரெட்டியார், மூதறிஞர் இராஜாஜி, எம்.ஜி.ஆர்., டி.பிரகாசம், பக்தவத்சலம், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, சர்.பி.டி. தியாகராயர், அறிஞர் பெருமக்கள் சர்.ஏ.இராமசாமி முதலியார், இலட்சுமணசாமி முதலியார், ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர்.சி.பி.இராமசாமி அய்யர், தீரர் சத்யமூர்த்தி, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன், நீதிபதிகள் டாக்டர் பி.வி.ராஜமன்னார், மற்றும் பி.டி.ராஜன், குன்றக்குடி அடிகளார், ம.பொ.சி., ஆ.சிதம்பரநாத செட்டியார், டாக்டர் லட்சுமிசாமி முதலியார், டாக்டர் ஏ.சி.செட்டியார், அண்ணாமலை அரசர், நீதிபதி நாராயணசாமி முதலியார், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, டி.கே. சண்முகம், அவ்வை சண்முகம், ஏ.ஆர்.தாமோதரன், கே.பி.சுந்தராம்பாள், போன்ற ஆன்றோரும் சான்றோரும் அலங்கரித்த ஜனநாயக மாமன்றம் ஒழிக்கப்பட்டது தமிழக வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளியாகும்.
ராமாராவ், ராமகிருஷ்ணராஜூ, பி.வி.செரியன், மாணிக்கவேலர், சி.பி.சிற்றரசு, ம.பொ.சி. போன்றோர் மேலவைத் தலைவர் பதவியில் இருந்துள்ளனர். மேலவைக்கு சாதாரணமான சாமானிய மக்களும் உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர். சலவைத் தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்த கோலப்பன் என்பவரும், ஆதி ஆந்திர சமுதாயத்தைச் சேர்ந்த எலமந்தாவும் இடம் பெற்றிருந்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக இருந்த ப.மாணிக்கம் மேலவை உறுப்பினராக இருந்தார். அவரது இயக்கம் மேலவையை கொள்கை ரீதியாக எதிர்த்தபொழுதும், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மேலவையை ஒழித்தபொழுது, அதனை எதிர்த்து ப.மாணிக்கம் குரல் கொடுத்தார். படித்த பட்டதாரிகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் போன்ற பல தரப்பினரின் அறிவு இந்த மேலவைக்குத் தேவை. அப்படிப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய மேலவை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்ற வகையில் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.
வணிகம் செய்வதற்காக 1640இல் சென்னை வந்த ஆங்கிலேயர்கள், புனித ஜார்ஜ் கோட்டையில் பண்டக சாலை கட்டடத்தைக் கட்டினர். 1910இல் லாலி ஆளுநராக இருந்தபொழுது, அக்கட்டடத்தில் புதிய மேலவைக் கூட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள மேலவைகளில் முன்னோடியான பழமை வாய்ந்த தமிழக மேலவை 1861இல் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆளுநர் கவுன்சில் என அழைக்கப்பட்டது. 1921ஆம் ஆண்டு சென்னை சட்டமன்ற மேலவை என்றும், 1969இல் கழக அரசு ஏற்பட்ட பின்பு தமிழக சட்டமன்ற மேலவை என்றும் பெயர் மாற்றப்பட்டது. மேலவையின் வளர்ச்சிக்கும், அதனுடைய பணிகளுக்கும் பென்டிங், மெக்காலே, டல்ஹவுசி பெரிதும் ஆர்வம் காட்டினர். அன்றைய சென்னை மாகாண ஆளுநரான சர். சார்லஸ் டிரேவேலியன் மேலவையின் வளர்ச்சிக்குப் பல்வேறு பணிகளை ஆற்றினார். சென்னை மேலவைக்கு முதன் முதலாக நியமிக்கப்பட்ட இந்திய உறுப்பினர் சடகோப ஆச்சாரியார். தமிழ் மொழியில் முதன் முதலில் பேசியவர் பி.வி.நரசிம்மய்யர்.
1888ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் அறிக்கையின்படியும், மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் அடிப்படையிலும் 1909ஆம் ஆண்டு சட்ட மேலவை அமைப்பை மாற்றி, விரிவுபடுத்தப்பட்டது. இதனால் உறுப்பினர்களுடைய எண்ணிக்கை உயர்ந்தது. விவாத உரிமைகள், வினாக்கள் தொடுப்பது போன்ற முக்கியப் பணிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. ஆளுநர் நிர்வாக சபைக்கு முதன்முதலாக பொப்பிலி மகாராஜா என்ற இந்தியர்தான் நியமிக்கப்பட்டார். 1919ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் நாள் மாண்டேகு செம்ஸ்போர்ட் சட்டத்தின் அடிப்படையில் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 98ஆக உயர்ந்தது. அப்போது கீழ்ச்சபை, மேல்சபை என்று உருவாக்கப்படவில்லை. 1935ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டமும் இதை ஏற்றுக் கொண்டது. இதன் நிர்வாகத்தில் இந்திய பிரதிநிதிகளும் பங்குகொள்ள வேண்டும் என்ற நிலையை இச்சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்தது.
1920ஆம் ஆண்டு நீதிக்கட்சி வெற்றி பெற்றதால், கட்சித் தலைவர் சர்.பி.டி.தியாகராசரை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் வெல்லிங்டன் கேட்டுக் கொண்டார். அன்றைக்குள்ளச் சட்டச் சிக்கலினால் தியாகராயர் பொறுப்பேற்காமல், ஓ.சுப்பராயலு, பனகல் ராஜா, ஏ.பி.பாட்ரோ ஆகியோரை நியமிக்கும்படி தியாகராயர் கேட்டுக் கொண்டார். இரண்டாவது பொதுத் தேர்தல் 1923இல் நடந்தபோது மீண்டும் நீதிக்கட்சி வெற்றி பெற்று பனகல் ராஜா முதலமைச்சர் ஆனார். இவ்வாறு தமிழக மேலவைக்கு ஒரு நெடிய வரலாறு உண்டு.
உலகளவில் இன்றைக்கு அனைத்து நாடுகளிலும் மேலவையும், கீழவையும் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில், கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் மேலவை வேண்டாம் என்று சொல்கின்றனர். ஆனால் ரஷ்யாவில் சட்டங்களையும் மக்களையும் ஆள இரு அவைகள் உள்ளன. அதைப்போன்று மேலவை இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் சிறப்பான பணியை மேற்கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி மேலவை வேண்டுமென்ற கொள்கை கொண்டுள்ளது. இந்தியாவில் இன்றைக்கு மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகம், பீகார் போன்ற மாநிலங்களில் மேலவை செயல்பட்டு வருகின்றது. மேற்கு வங்கத்தில் 1969இலும், ஆந்திரத்தில் 1985இலும் மேலவை கலைக்கப்பட்டது. ஒரு சமயத்தில் பீகாரில் மேலவை வேண்டாம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அத்தீர்மானத்தை உடனே பீகார் அரசு திரும்பப் பெற்றது.
என்.டி.ராமாராவ் முதல்வராக இருந்தபொழுது அம்மாநிலத்தில் ஒழிக்கப்பட்ட மேலவை, ராஜசேகர ரெட்டி தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசு, 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரும்பவும் மேலவையை அமைத்தது. அரசியல் உள்நோக்கத்தோடு தமிழகம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் மேலவை கலைக்கப்பட்டது.
2000ஆம் ஆண்டு 27.6.97 அன்று தமிழக சட்டமன்றத்தில் மேலவை அமைக்கக் கோரிய தீர்மானத்தின் மீது, மேலவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இக்கட்டுரையாளர் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் (ஙி.க.Nணி.4399/2000) மேலவை வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிட, நாடாளுமன்ற அவையில் ஏற்றுக் கொள்ளும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசுக்கு இதுகுறித்து தாக்கீது அனுப்பப்பட்டும், அன்றைய சட்ட அமைச்சர் ஜெட்லேயிடம் நேரில் முறையிட்டும், தமிழக சட்டப் பேரவை தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் வைக்கவும், அன்றைய மத்திய அரசின் சட்ட அமைச்சக செயலாளர் டாக்டர் ரகுபீர் சிங் இதுகுறித்து எழுத்து வடிவில் உறுதி மொழி கொடுத்த பின்பும் மேல் நடவடிக்கை இல்லாமல் போய்விட்டது.
சான்றோரை கௌரவிக்க மேலவை தேவை. தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக மேலவை இல்லை. அந்த கீர்த்தி பெற்ற மேலவை எதிர்காலத்தில் செயல்பட, தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களின் உறுதியான அறிவிப்பை சகலரும் வரவேற்றுள்ளனர். தொடர்ந்து மேலவை வரவேண்டும் என்ற தி.மு.க. அரசின் விருப்பம் சிலரால் தடுக்கப்பட்டாலும், மேலவை நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை ஒளி இன்று ஏற்பட்டுள்ளது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று பேரறிஞர் அண்ணா அவர்களின் வாக்கை நிறைவேற்றும் வகையில், மாற்றுக் கருத்துகொண்ட சிந்தனையாளர்களின் ஆலோசனைகள் ஜனநாயகத்தில் இடம்பெற மேலவை அவசியமாகும். திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் இடம் பெற்ற, கீழ்த்தட்டு மக்களை உயர்த்த சமூக நீதி கொள்கையை பறைசாற்றிய பிட்டி தியாகராயர், முத்தையா முதலியார் போன்ற நீதிகட்சி தலைவர்கள் பலர் உறுப்பினர்களாக இருந்த மேலவையை எப்படி முடக்க மனது வந்தது என்று தெரியவில்லை. தலைவர் கலைஞர் அவர்களுக்குத்தானே இதில் அக்கறை இருக்கும். அண்ணா வழியில் ஆட்சி நடத்தும் தலைவர் கலைஞர் அவர்கள் தக்க சமயத்தில் மேலவையை மீண்டும் அமைக்கப்படும் என்ற அரும்பெரும் அறிவிப்பை செய்தது தமிழ்நாட்டில் முக்கிய வரலாற்று நிகழ்வு மட்டுமல்லாமல், ஜனநாயகத்திற்கு வலுவூட்ட எடுக்கப்பட்ட அரிய நடவடிக்கையாகும்.
சட்டக் கல்லூரியில் 1970களில் படிக்கும்பொழுது அரசியல் பணியின் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் விடுதி, சட்டப் பேரவை வளாகம் என்று சுற்றிக் கொண்டு இருப்பது வாடிக்கை. சட்டப்பேரவை அருகே உள்ள சட்ட மேலவையில் சி.பி.சிற்றரசு, ம.பொ.சி. போன்றோர் தலைவர்களாக இருந்து நடத்தியது இன்றும் கண்களில் உள்ளது. அந்த மேலவையில் உறுப்பினர்களாக இருந்த வழக்கறிஞர்கள் தர்மராஜ் சந்தோஷம், வசந்தபாய், தம்பித்தோட்டம் சுந்தரேச தேவர் போன்ற மேலவை உறுப்பினர்களுடன் மாலை வேளைகளில் அங்கு கிடைக்கும் ருசியான வடையை சுவைத்துக் கொண்டே அவர்கள் கூறும் செய்திகளை கேட்டது மலரும் நினைவுகளாக இன்றும் மனதில் உள்ளது.
*****
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, வசந்தபாய், தர்மராஜ் சந்தோஷ், ஏ.ஆர். தாமோதரன், மறைந்த சட்டப் பேரவை துணைத் தலைவர் பெ. சீனிவாசன், சொ. அழகிரிசாமி, திருமதி. மேரி கிளப்வாலா ஜாதவ், சிறுகதை மன்னர் எஸ்.எஸ்.தென்னரசு, நீலநாராயணன், அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார், சி.பி.சிற்றரசு, என்.வி.என்., மாணிக்கவேலர்,
*****
23.04.1984 அன்று தலைவர் கலைஞர் மேலவையில் பதவி ஏற்றார். அப்போது அவர் பேசுகின்றபொது, தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜனின் சிலை கோவிலுக்கு வெளியில்தான் உள்ளது. எனவே, நாம் எங்கிருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எங்கே இருந்தாலும் உரிமை குரலை எழுப்புவேன் என்று பேசினார்.
*****
அ.தி.மு.க. அமைச்சரவையின் பரிந்துரைப்படி, 21.4.1986 ஆளுநரால் வழக்கறிஞர் என்.சி.இராகவாச்சாரி, ஜி.சுவாமிநாதன், நடிகை வெண்ணிறஆடை நிர்மலா ஆகியோர் மேலவை உறுப்பினர் ஆனார்கள். ஆனால், அப்போதைய சூழ்நிலையில் வெண்ணிறஆடை நிர்மலா கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த இயலாத நிலையில் இருந்தார். மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி இத்தகைய ஒருவர் மேலவை உறுப்பினர் பதவி வகிக்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட சிக்கலால் மறுநாளே வெண்ணிறஆடை நிர்மலா தனது பதவியை விட்டு விலகினார். நான்கு இடங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டி இருந்த சூழ்நிலையில், அந்த காலகட்டத்தில் கழகம் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகம் இடம் பெற்றிருந்த காரணத்தினால் மேலும் உறுப்பினர்கள் இடம் பெறுவர் என்ற நிலையில்தான் அன்று மேலவை முடக்கப்பட்டது.
*****
தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக் கலைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்ற தீர்மானத்தில்ற்கு, அப்போதைய தலைவர் 13.05.1986 ஒப்புதல் அளித்தார்.
*****
மேலவை கலைப்பு தீர்மானத்தைக் கைவிடக் கோரி, அன்று மேலவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவர் கலைஞர் உரையாற்றியபோது, மேலவையின் மாண்புகளும், மரபுகளும் காப்பாற்றப்பட வேண்டும். அண்ணா, இராஜாஜி போன்றவர்கள் இங்கு பங்காற்றியுள்ளனர். நான் இங்கு எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதன் காரணமாகத்தான் இந்த அவையை கலைக்கப் போகின்றீர்கள் என்றால், நான் உறுப்பினர் பதவியை விட்டே விலகி விடுகிறேன் என்று கூறினார்.
*****
மேலவைத் தலைவர் ம.பொ.சி. தனது உரையில், நம்முடைய பெரியவர்களுடைய ஆன்மாக்கள் இந்த அவையிலே இருக்கின்றது. அவர்கள் படைத்துவிட்டுப் போன மரபுகளுக்கு இந்த அவைதான் அடையாளச் சின்னம். இந்த அவையை கலைப்பது பற்றிய பிரச்சினையில் எனது கருத்தை நான் கூறத் தவறியிருந்தால் அது எனது மனசாட்சிக்கு நான் செய்த துரோகமாகிவிடும். எனவே, இந்த அவையை கலைக்காதிர்கள் என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.
*****
மேலவை கலைப்பிற்கு ஆதரவாக 136 பேரும், 29 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
*****
சட்டப்பேரவையில் கொண்டுவரும் சட்ட முடிவுகள் மேலவையில் விவாதிக்கப்படும். அங்கு அதற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் அக்காலத்தில் பேரவைக்கும், மேலவைக்கும் நல்லுறவு இருந்து வந்தது. விலங்குகள் பலியிடுதலை தடை செய்யும் சட்டம் 1947, டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் கொண்டு வந்த சட்டமுன் வடிவான, பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் திறந்தவெளி பாதுகாப்புச் சட்ட முன்வடிவு 1958, இராஜமன்னார் குழு, இடஒதுக்கீடு, மகளிர் பொட்டுக் கட்டுதலை ஒழித்தல் ஆகியவை மேலவையில் விவாதிக்கப்பட்டு பின் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*****
முதல் மேலவை 1923 ஜனவரி 1923 செப்டம்பர்
இரன்டாம் மேலவை 1923 நவம்பர் 1926 நவம்பர்
மூன்றாம் மேலவை 1926 நவம்பர் 1930 அக்டோபர்
நான்காம் மேலவை 1930 அக்டோபர் 1934 நவம்பர்
ஐந்தாம் மேலவை 1934 நவம்பர் 1937 ஜனவரி
*****