சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்ற பாரதியின் வாக்கு மெய்ப்படும் என்ற நிலையில், 150 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தமிழகத்தின் நீண்டகால கனவுத் திட்டமான சேதுக்கால்வாய் திட்டம்; கமாண்டர் டெய்லர், டவுன்ஸ்டன், சர். வில்லியம் டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்டசன், சர் ஜான் கோடே, சர் ராபர்ட் போன்றவர்களின் தலைமையிலும், விடுதலைக்குப் பின் சர்.ஏ.இராமசாமி முதலியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நாகேந்திரசிங், வெங்கடேசுவரன், கோவில் பிள்ளை, லட்சுமி நாராயணன் போன்றோர் தலைமையில் பல்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் பல்லவன் போக்குவரத்து ஆலோசனை குழு போன்ற பல்வேறு குழுக்கள் ஆய்வுகள் மேற்கொண்ட பின்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. 1963ஆம் ஆண்டே மத்திய அரசு இத்திட்டத்திற்கு அனுமதி அளித்த பின்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. 

பேரறிஞர் அண்ணா சேதுக் கால்வாய் திட்டம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், சேலம் இரும்பாலை போன்ற திட்டங்களை நிறைவேற்றும் வகையில் எழுச்சி நாள் அறிவித்தார். 1972இல் தூத்துக்குடியில் நடைபெற்ற வ.உ.சி. பிறந்த நாள் விழாவில் அன்றைய பிரமர் இந்திரா காந்தியிடம் முதல்வர் கலைஞர் அவர்கள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். 

மத்திய அமைச்சராக இருந்த டி.டி.கே., திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சேதுசமுத்திர திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவேன் என 50 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி கூறினார். 1960இல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி கோவையில் நடத்திய மாநாட்டில் சேதுக் கால்வாய் வேண்டுமென வலியுறுத்தியது. தூத்துக்குடி திரவியரத்தின நாடார், நெல்லை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தாணுப்பிள்ளை, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகானந்தம், எம்.கல்யாணசுந்தரம், மணலி கந்தசாமி, கே.டி.கே.தங்கமணி, நல்லகண்ணு வரை மற்றும் பழ.நெடுமாறன் போன்றோர் இத்திட்டத்தை வலியுறுத்தியுள்ளனர். இவையெல்லாம் கடந்த கால நினைவுகள்.

2004இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பிரதமர் மன்மோகன் தலைமையில் அமைந்தபின், முதல்வர் கலைஞரின் கோரிக்கையை ஏற்று, வைகோவின் வேண்டுகோளுக்கிணங்க அன்றைய பிரதமர் வாஜ்பாயால் அறிவிக்கப்பட்ட சேதுக் கால்வாய் திட்டம், கலைஞரின் விடாமுயற்சியால் நடைமுறைக்கு வந்தது. 1998இல், ம.தி.மு.க. மேடையில் வாஜ்பாய் அறிவித்த அறிவிப்பு காற்றில் போய்விடுமோ நின்ற நிலையில், 2.7.2005 அன்று மதுரை வண்டியூரில் பிரதமர் துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு கலைஞர், சோனியா காந்தி முன்னிலை வகித்தனர். அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டும் அவர் வர மறுத்து விட்டார். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. போன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால் இத்திட்டம் கூடாது என்பதற்காக சுப்பிரமணிய சாமி போன்றோர் திடீரென நீதிமன்ற படிகளை ஏறினர். இத்திட்டத்தை ஆதரித்த பல அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போது பின் வாங்குகின்றனர்.

இத்திட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 26.92005 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சேதுக் கால்வாய் திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. 2005இல் தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகமும், சூயஸ் கால்வாய் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. அன்றைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, 2006இல் இத்திட்டத்திற்கான அகழ்வுப் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிலையில், சுப்பிரமணியசாமி இத்திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திரும்பவும் 2007இல் மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் 2007இல் இராமர் சேதுப் பிரச்சினையில் இடைக்காலத் தடை விதித்தது. அந்த தடை உத்தரவில் ஆதாம் பாலம் பகுதியில் அகழ்வுப் பணியை நிறுத்த உத்தரவிட்டிருந்தது. இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை 11.9.2007 அன்று ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, பின்னர் 12.9.2007 அன்று மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டது. இத்திட்டத்தை எதிர்த்து 14.9.2007 அன்று ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அறிஞர் குழு அமைத்தது. சேது சமுத்திரத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என எல்.கே.அத்வானி, 26.9.2007 அன்று நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.  

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இங்கு ராமர் பாலம் இருந்ததா என இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை ஆராய வேண்டுமென்றும், இத்திட்டத்தை ஆறாவது வழித் தடத்தில் நிறைவேற்றக் கூடிய சாத்தியக் கூறுகளையும் ஆராய வலியுறுத்தியுள்ளனர். பாக் ஜலசந்தியில் ராமர் சேது பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லையென தொல்லியல் துறை அறிவித்தது. மத்திய அமைச்சர் அம்பிகாசோனி மாநிலங்களவையில் இதனை குறிப்பிட்டார். இருப்பினும் பச்சோரி கமிட்டி கொடுத்த இடைக்கால அறிக்கையை சற்றும் ஆய்வு செய்யாமல் சில சக்திகள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கின. 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பாலம் கட்டினார் என கூறுவதற்கு ஆதாரங்கள் எதுவும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து ஆராய சுமார் ஓராண்டு கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. இப்படியான பல பின்னடைவுகள்.

உலக பூகோள பக்கங்களில் சேதுக்கால்வாய்; சூயஸ், பனாமா, ஜிப்ரால்டர் போன்று இத்திட்டம் முக்கியத்துவம் பெறும். 2,200 கோடி முதல் 4,000 கோடி வரை செலவு செய்தாலும், அந்தப் பணத்தை கப்பல் போக்குவரத்து மூலம் திரும்பப் பெறலாம். 167.22 கி.மீ. நீளமுள்ள இக்கால்வாய் கப்பல்களின் பயண போக்குவரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், கப்பல்களுக்குத் தேவைப்படும் எரிப் பொருளையும் மிச்சப்படுத்துகின்றது. கிழக்குக் கடற்கரை துறைமுகங்களின் மேம்பாடு, கடலோர பாதுகாப்பு, தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் வரும் தொந்தரவுகளிலிருந்து பாதுகாப்பு, இந்தியாவிற்கு அந்நிய செலவாணி போன்ற எண்ணற்ற நன்மைகள் இத்திட்டத்தினால் கிடைக்கும். 

சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்ற தேவையற்ற சர்ச்சைகள் கூறப்படுகின்றன. மன்னார் வளைகுடாவில் ஆதாம் பாலத்தில் ஒரு சிறிய பகுதிதான் ஆழப்படுத்தப் படுகிறது. இதனால் அங்குள்ள பவளப் பாறைகளுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. கால்வாயில் கழிவுகள் சேராது என்ற உத்தரவாதமும் தரப்பட்டுள்ளது. 10.7 மீட்டர் ஆழமுள்ள இக்கால்வாயில், ஆண்டொன்றிற்கு 2,000 முதல் 3,000 வரை, 50 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல்கள் செல்லலாம். அவ்வாறு கப்பல் போக்குவரத்தினால் எண்ணெய் கழிவுகள் எதுவும் சேராமல் பாதுகாக்கப்படும் என்று உறுதி சொல்லப்பட்டது. மீன்பிடித் தொழிலுக்கும் சேதுக் கால்வாய் பாதுகாப்பாக அமையுமே தவிர, மீனவர்களின் தொழிலுக்கு சேதாரம் ஏற்படும் நிலை வராது. இந்தக் கால்வாய் மூலம் மீனவர்கள் பாதுகாப்பாக, இலங்ககை இராணுவத்தினரின் தாக்குதல் இல்லாமல் கடலுக்குள் சென்று வரமுடியும். புதிய துறைமுகங்கள், சேமிப்புக் கிடங்குகள், மீனவ சமுதாயத்தினருக்கு வேலை வாய்ப்புகள் போன்ற பல பயன்கள் இக்கால்வாய் மூலம் உருவாகும். 

பா.ஜ.க. ஆட்சியில் வாஜ்பாய் முதல் மத்திய அமைச்சர்களாக இருந்த முரளி மனோகர் ஜோஷி, துணை அமைச்சர் அருண் ஜெட்லி, வேத் பிரகாஷ் கோயல், திருநாவுக்கரசர் என அனைவரும் இத்திட்டத்தை கொண்டுவர மும்முரம் காட்டினர். பா.ஜ.க. நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா தன்னுடைய நிதி நிலை அறிக்கையில் சேதுக்கால்வாயை ஆய்வு செய்ய நிதி ஒதுக்கினார். அதுமட்டுமல்லாமல் அன்று ஆட்சியில் முக்கியப் பொறுப்பிலிருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் சேதுக் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, இராமேஸ்வரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலின் அருகே ஆய்வும் செய்தார். அவ்வாறு ஆர்வம் காட்டியவர்கள் திடீரென்று இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். ஏன் இந்த மனமாற்றம்? என தெரியவில்லை.

20012004, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என குறிப்பிட்ட ஜெயலலிதா, இப்போது இத்திட்டம் கூடவே கூடாது என்று சொல்வது வினோதமாக இருக்கின்றது. அரசியல் கட்சிகள் ஒரு காலத்தில் சேதுக் கால்வாய் திட்டத்தைக் குறிப்பிடாமல் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டது கிடையாது. ஆனால், இப்போது அதிலிருந்து அவர்கள் சம்மர்சால்ட் அடித்து விட்டனர். நான் தான் கொண்டு வந்தேன் என கூறியவர்கள் கூட தற்போது இப்பிரச்சினையில் பேச அச்சப்படுகின்றனர். இதில் சிலரின் தேவையற்ற விதண்டாவாதங்கள், முன்னுக்குப் பின் முரணான திடீர் மாற்றங்கள், கொள்கையற்ற சுயநலமான எதிர்மறைகள் என்பதையெல்லாம் எதிர்கால வரலாறு மன்னிக்காது.

ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு 80 சதவீதம் பணிகள் நடைபெற்று, நாட்டின் பெரிய திட்டம் முடக்கப்படுவதில் எந்தவித நியாயமுமில்லை. இத்திட்டம் வரும்! ஆனால் வராது!! என்ற நிலையில், கலைஞரின் முயற்சியால் நடைமுறைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நிலுவை, இராமர்சேது, சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற பிரச்சினைகளால் தற்போது சற்று தடங்கல்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து இத்திட்டம் எதிர்காலத்தில் மெய்ப்படும் என்பது உறுதி.