தலைவர் கலைஞர் அவர்கள் பாடுபடும் விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என வாடும் விவசாயிகளுக்கு, தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ள இத்திட்டம் விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும். ஏற்கனவே 19.11 லட்சம் விவசாய பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன் தமிழக விவசாயிகள் அனைவருக்கும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பம்பு செட்டுகளுக்கு 1.9.1990 என முன் தேதியிட்டு இலவச மின்சாரம் வழங்க தலைவர் கலைஞர் அவர்கள் 17.11.1990 அன்று ஆணையிட்டார். இதனால் 16 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்தனர். 1989இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டத்தை நிறைவேற்ற மும்முரமாக இருந்தபொழுது, மின்வாரிய அதிகாரிகள்; இதற்கு அதிக செலவாகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்திட்டம் இல்லை என சொல்லிய பொழுது, அதனை மறுத்து தலைவர் கலைஞர் அவர்கள்; விவசாயிகள் அல்லல்படுகின்றனர். அவர்களுக்கு என்றும் நிலையாக பயன்படும்படி ஏதாவது நல்ல திட்டத்தை யோசித்தபொழுது எனக்கு இந்த இலவச மின்சார திட்டம்தான் மனதில் பட்டது. கடந்த காலங்களில் விவசாயிகள் மின் கட்டணத்திற்காக போராட்டங்கள் நடத்தி தியாகங்கள் செய்து தங்கள் இன்னுயிரை மாய்த்துள்ளனர். எனவே நாட்டுக்கு உணவு வழங்கி நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு இந்த இலவச மின்சாரத்தை அறிவிக்கப் போகிறேன் என்று தீர்மானமாக இலவச மின்சார திட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் புரட்சிகரமாக அறிவித்தார். அதுவே இன்று பல மாநிலங்களுக்கு வழிகாட்டியுள்ளது.

1991இல் சட்டத்திற்கு புறம்பாக சந்திரசேகர் ஆட்சிக் காலத்தில், கழக ஆட்சி கலைக்கப்பட்டு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற அற்புதத் திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்தார். இதை கண்டித்து தமிழகமெங்கும் தி.மு.க. கண்டன பேரணிகள் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒவ்வொரு நகரிலும் பங்கேற்றனர். இந்த எழுச்சியைக் கண்டு ஜெயலலிதா பின்வாங்கினார். தலைவர் கலைஞர் அவர்களின் திட்டங்கள் என்பதாலேயே நல்ல திட்டங்களைக் கூட ஒழித்துக் கட்டுவது ஜெயலலிதாவின் வாடிக்கை. ஆனால் தலைவர் கலைஞர் ஆட்சியில், மாற்றார் கொண்டு வந்த நல்ல திட்டங்களை மறுக்காமல் ஏற்று அதை விரிவாக்கம் செய்வது தலைவர் கலைஞர் அவர்களின் பெருந்தன்மையாகும். எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தி பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கியது கழக ஆட்சி. 

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த இலவச மின்சாரம் திரும்பவும் 1996இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 25 விழுக்காட்டிலிருந்து 27 விழுக்காடாக அதிகப்படுத்தினார். இதனால் மின் வாரியத்திற்கு 2,000 கோடிக்கு மேலாக செலவானது. கரும்பு விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் கரும்பை வெட்டி அரவை செய்ய இலவச மின்சாரம் வழங்கியதும் கழக ஆட்சிதான்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் 1960, 70களில் 3,4 பம்பு செட்டுகள் வைத்திருந்தால் மின் கட்டணம் கட்ட வேண்டிய தவணை நாள் வந்தால் மிகவும் சிரமப்பட்டு, அருகே உள்ள நகரங்களுக்கு பஸ் வசதியில்லாத கிராமங்களில் வசிப்பவர்கள் சைக்கிளிலோ அல்லது நடந்து சென்றோதான் கட்ட வேண்டிய நிலைமை இருந்தது. ஒரு விவசாயக் குடும்பத்தில் இரண்டு பேர் கல்லூரி விடுதிகளில் தங்கி படித்துக் கொண்டிருந்தால், அக்குடும்பம் மாதா மாதம் மின் கட்டணம் கட்டுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். இதனை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அனைவரும் அறிவர். இதையெல்லாம் மனதில் கொண்டுதான் விவசாயிகளுக்கு தலைவர் கலைஞர் அவர்கள், வேறு எவரும் செய்யாத இந்த இலவச மின்சார திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தை பற்றி ‘அன்றைய’ வை.கோபால்சாமி அன்றைக்கு கழக கூட்டங்களில் பேசும் பொழுது; பாடுபடுபவர்களின் நலன்களை அறிந்தவர் தான் கலைஞர். உலகிலேயே யாருக்கும் மனதில் படாத இத்திட்டம் தலைவர் கலைஞர் அவர்கள் மனதில் பட்டது. இது எப்படி பட்டது என நானே ஆச்சரியப்பட்டேன். இதுகுறித்து அண்ணன் கண்ணப்பனிடமும், பொன். முத்துவிடமும், வீரபாண்டியாரிடமும், பல நேரங்களில் விவாதித்தது உண்டு என கிராமங்களில் கழகக் கொடியேற்றி பேசும் பொழுது இத்திட்டத்தை பற்றி பெருமையாக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

இலவச மின்சாரத்தைப் போன்று தலைவர் கலைஞர் அவர்களின் உழவர் சந்தை திட்டமும் விவசாயிகளுக்கு பயன்படும் திட்டமாகும். வெளியே மொத்த வியாபாரியிடம் விற்பதை காட்டிலும் 20 முதல் 25 சதவீதம் கூடுதலாக விவசாயிகளுக்கு உழவர் சந்தைகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். இதனால் விவசாயிகளும் நுகர்வோரும் பயனடைவர். ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வளவு அருமையான உழவர் சந்தை திட்டத்தை ரத்து செய்து, உழவர் சந்தைகளுக்கு பூட்டை போட்டார். அப்படிப்பட்ட அற்ப குணம் படைத்த ஜெயலலிதாவின் ஆட்சிக்குப் பின், திரும்பவும் ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்கள் உழவர் சந்தைக்கு உயிர் கொடுத்தார். விவசாயிகளுக்கு 8 லட்சத்திற்கு மேலான உர அடையாள அட்டைகள் கழக ஆட்சியில் வழங்கப்பட்டது. நெல்லுக்கும், கரும்புக்கும் கட்டுப்படியான விலை தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கினார். பருத்திக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தலைவர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதினார். பயிர்க் கடன்கள் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைத்தது. 

இயற்கை சீற்றத்தால் ஆடுகள் இறந்தால் ரூ.1,000, மாடுகளுக்கு ரூ.5,000, கன்றுகளுக்கு ரூ.3,000 என நிவாரணத் தொகை கிடைத்தது. இதற்கெல்லாம் மேலாக வங்கிகளில் கடன் வாங்கி கட்ட முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி என வாடிய விவசாயிகளின் முழு கடன்களை ரத்து செய்து ஆணையிட்டார் தலைவர் கலைஞர் அவர்கள். இதில் அதிகம் பயன் அடைந்தவர்கள் அ.தி.மு.க. போன்ற மாற்றுக் கட்சியினர்தான். இதுகுறித்து தலைவர் கலைஞர் அவர்களிடம் கேட்டபொழுது, நான் கட்சி மாச்சரியங்களை பார்க்கவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் பயன்பட வேண்டும் என்பதற்காக செய்தேன் என அவருக்கே உள்ள பெருந்தன்மையோடு கூறினார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னால் விவசாயிகள் ஜப்தி, கடன் நிவாரணம் என நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கிய காட்சிகள் எல்லாம் தற்போது கழக ஆட்சியில் இல்லை. விவசாயிகளின் வீட்டுக் கதவுகள், பண்ட பாத்திரங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் ஜப்தி செய்ததை அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் கண்டு கொள்ளவில்லை. அப்போது எதிர்கட்சியாக இருந்த தி.மு.க. இதனை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டக் குரல் எழுப்பியது. கரிசல் இலக்கியகர்த்தா கி.ராஜநாராயணன் தன்னுடைய படைப்பில், “விவசாயி கிணறு வெட்ட அரசிடம் கடன் வாங்கி கிணறும் வெட்டி, கிணற்றில் தண்ணீர் வராமல் வாங்கிய கடனையும், வட்டியையும் கட்ட சொந்த நிலத்தையும், கடனில் வெட்டிய கிணற்றையும் விற்று கூலி விவசாயியாக இழிந்து போவதிலிருந்து என்றைக்கு மாற்றம் ஏற்படுமோ” என்று அப்போது வினவியிருந்தார். அப்படிப்பட்ட துயரங்களும் கெடுபிடிகளும், தலைவர் கலைஞர் ஆட்சி மலர்ந்தபின் விவசாயிகளுக்கு இல்லை. 

நதி நீர் பிரச்சினையையும் விவசாயிகளின் நலனை கருதியே தி.மு.க. அணுகுகிறது. ரூ.392 கோடி செலவில், சுமார் 73 கி.மீ. தொலைவுக்கு, தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைத்து வானம் பார்த்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், உடன்குடி பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க திட்டங்களை தீட்டியுள்ளார் தலைவர் கலைஞர். இந்தியாவில் நதிகளை இணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு முதன் முதலாக கட்டியம் கூறியது, நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் தலைவர் கலைஞர் ஆட்சியில்தான். இவை யாவும் விவசாயிகளின் நலனை மனதில் கொண்டு செய்த சாதனைகளாகும்.

விவசாயிகளின் பிரச்சினை குறித்து ஆராய, அதற்கென தனி நல வாரியம் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. வரலாற்றிலேயே முதன் முதலாக நிதி நிலை அறிக்கை தயாரிப்பதற்கு முன், விவசாயப் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்த பின்பு நிதி நிலை அறிக்கை கழக ஆட்சியில் தயாரிக்கப்பட்டது. இப்படி பல திட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்காக அறிவிக்கப்பட்டது. எழுதினால் நீண்ட பட்டியலாகிவிடும். இந்தியத் திருநாடு விவசாயத் தொழிலுக்கு வந்தனம் சொல்கின்றது என்று சொல்வார்கள். ஆனால் அந்த விவசாயிகளின் துயர் துடைக்க தி.மு.க. தோழனாக இருப்பதுடன், அவர்களின் இன்னல்களை போக்குகின்ற அரணாகவும் நிற்கின்றது.