போபாசீமா!
போபாலில், 1984 டிசம்பரில் ஒரு அதிகாலைப் பொழுதில் ஏற்பட்ட கோர விபத்து 26 வருடங்களாக பாதிக்கப்பட்டவர்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த அப்பாவி மக்கள் நீதிமன்ற படிகளில் ஏறி அலுக்கவும் வைத்துவிட்டது. கொடுமையான கார்பைட் விஷ வாயு வழக்கில் தற்போது போபால் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அளித்திருக்கிறது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் கேஷுப் மகேந்திரா, துணைத் தலைவர்கள் விஜய் கோகலே, கிஷோர் காம்தார், பணி மேலாளர் ஜெ.முகுந்த், கண்காணிப்பாளர் ராய் சவுத்ரி, மேற்பார்வையாளர்கள் கே.வி.ஷெட்டி, எஸ்.ஐ.குரோஷி, மற்றொருவர் பி.சி.ராய் (இவர் மரணமடைந்துவிட்டார்) ஆகியோருக்கு தண்டனை வழங்கப்பட்டு காவல் துறையினர் அவர்களை பாதுகாப்பாக கௌரவமாக அழைத்துச் சென்றது பல விமர்சனங்களுக்குள்ளானது. 1984 டிசம்பர் 3ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதிலிருந்து மந்தநிலையிலேயே இந்த வழக்கு நடைப்பெற்றது. 1987இல் தான் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பின் தலைமை குற்றவியல் நடுவர் மோகன் பி.திவாரி இரண்டு ஆண்டுகள் விசாரித்து எட்டு பேருக்கு தண்டனை வழங்கினார். இத்தீர்ப்பு குறித்து அமெரிக்க துணை அமைச்சர் ராபர்ட் பிளேக், அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கிரவுல் ஆகியோர் கூறுகையில், உலகில் நடைபெற்ற மிக மோசமான விபத்திற்கு இத்தீர்ப்பின் மூலம் முடிவு காணப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் புதிதாக விசாரிக்க எதுவும் இல்லை என்பதாக தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
ஜப்பானில் நடைபெற்ற ஹிரோஷிமா நாகசாகி சம்பவம் போன்றே போபால் நிகழ்வும் இருந்ததை கண்ட, நீதிபதி கிருஷ்ணய்யர் இதை ‘போபாசீமா’ என்று கூறுவார். கார்பைட் நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை ‘போபாலின் கசாப்பு கடைகாரர்’ என்று குறிப்பிடுவர். மத்திய அரசுக்கும், ஆண்டர்சனுக்கும் இடையே நடைபெற்ற இந்த வழக்கில், முதல் குற்றவாளியான ஆண்டர்சன் தற்போது அந்த கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கார்பைட் நிறுவனம், 1999ஆம் ஆண்டு டோ கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது.
இந்த விபத்தில் சுமார் 15,134 பேர் மாண்டு போயினர். இதில் 4,000 பேர் அன்றே இறந்து போனார்கள். ஒரு சில பார்வையாளர்கள் 20,706 பேர் வரை இறந்துவிட்டனர் என்று ஒரு கணக்கையும் சொல்கின்றனர். ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் கண்கள், காதுகள், தோல், காது என உடலின் பல பாகங்களில் குறைபாடு அடைந்தனர். மேலும் பலர் மனநோயாளிகளாகவும் மாறிவிட்டனர். இன்னும்கூட மக்களில் பலர் நுரையீரலில் கார்பைட் வாயு சென்று தாக்கி, மருத்துவ சிகிச்சை இன்றி பல உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளும் குறைபாடு கொண்டவையாகவே பிறக்கின்றன. மேலும் இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னும் முறையான மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது பெரும் துயர செய்தி. இந்த கோர விபத்தினால் அடுத்த தலைமுறையும் பாதிப்புக்குள்ளானது. தினமும் 6,000 பேர் இன்று மருத்துவமனை சென்று வருகின்றனர். இத்தகைய கொடூரமான விளைவுகளை ஏற்படுத்திய விபத்து குறித்து, 178 சாட்சியங்களை விசாரித்து அளிக்கப்பட்டுள்ள இந்த தண்டனை மிகவும் குறைவு என்பதற்காகவே இப்பொழுது தீர்ப்பை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த வழக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 304(2)ன்படி பதிவு செய்திருந்தால், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.
இந்நிறுவனத்தின் பாதுகாப்பு குறித்து 1982இல் தணிக்கை செய்யப்பட்டு, அதில் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கார்பைட் நிறுவனம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் விளைவாக, மீத்தேல் ஐசோனைட் என்ற விஷ வாயு கார்பைட் நிறுவனத்திலிருந்து, 3.12.1984 அன்று கிட்டத்தட்ட 40 டன் எடையுள்ள நச்சு வாயு, நள்ளிரவு நேரத்தில் வெளியேறி காற்றில் கலந்ததால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த சுற்றுவட்டார பகுதியில் வாழ்ந்த குடிசைவாசிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த விஷவாயு குறைந்த வெப்ப நிலையிலேயே இருக்கவேண்டும். ஆனால், குளிரூட்டும் கருவி பழுதடைந்த இருந்த காரணத்தால் அதிக வெப்ப நிலையில்தான் இந்த கோர விபத்து நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் கவலையற்ற, அலட்சியமற்ற போக்கே இதற்கு காரணம். மேலும் ஆலையில் உள்ள ஆயிரம் டன் கழிவுகள், நிலத்தடி நீரில் கலந்து இன்றளவும் நிலம், பயிர்களை அழித்து வருகின்றது. ஏன், பெண்கள் தாப்பாலில் விஷத்தன்மை ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
யூனியன் கார்பைட் கார்பரேஷன் நடந்த விபத்துக்கு 470 மில்லியன் டாலர் இழப்பீடு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் 1989இல் தீர்ப்பு அளித்தது. அதாவது இந்திய மதிப்பில் 750 கோடி ரூபாய் இந்திய அரசுக்கு நஷ்ட ஈடாக அந்த நிறுவனம் வழங்கியது. இத்துடன் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டதுபோல் நீதிமன்றம், இது சம்பந்தமான மற்ற குற்ற வழக்குகளை நிராகரித்தது. இதற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் 1991இல் இந்த குற்ற வழக்குகள் விசாரணைக்கு வந்தன. ஆனால் காலதாமதத்தை காரணம் காட்டி இவ்வழக்கு விசாரணை மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆட்சி நிர்வாகத்திலிருந்தவர்களின் தவறுகளால் இந்த குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. நஷ்ட ஈடாக பெறப்பட்டத் தொகையிலிருந்து உயிரிழந்தோருக்கு ரூ.1 லட்சமும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000/ வழங்கப்பட்டது. இழப்பீட்டுத் தொகையை பிரித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலே சொல்லப்பட்டுள்ள தொகையை காட்டிலும் குறைவாகத்தான் கிடைக்கும் என்பதுதான் உண்மை நிலை. படிக்கத் தெரியாத பாமர மக்கள் தங்களுக்குண்டான இழப்பீட்டுத் தொகையை பெற முடியாத நிலையில் இருந்தனர். இந்த இழப்பீட்டு தொகையான சாதாரண சாலை விபத்தில் கொடுக்கப்படும் தொகையை காட்டிலும் மிகவும் குறைவு ஆகும். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்குண்டான இழப்பீட்டு தொகை கிடைத்திட வழிவகைகளை காண வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 18 வயதுக்கும் குறைவானவர்களின் எண்ணிக்கையை அரசு சரிவர பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஒரு சில மாதங்களிலேயே நின்று போனது.
இவ்விபத்துக்குப் பிறகு, நிறுவனத்தின் அப்போதைய தலைவராக இருந்த ஆண்டர்சனை மத்தியப் பிரதேச காவல் துறை கைது செய்தது. ஆனால், 1984, டிசம்பர் 7ஆம் நாள், வெறும் 25,000 ரூபாய் ரொக்க ஜாமினில் வழங்கப்பட்டு, அவர் டில்லி சென்று அங்கிருந்து அமெரிக்கா சென்று விட்டார். அதன்பின் இந்தியா பக்கம் அவர் எட்டிப் பார்க்கவில்லை. அவருக்கு அனுப்பப்பட்ட வழக்குமன்ற சம்மன்கள் அனைத்தையும் அலட்சியப்படுத்தினார். அமெரிக்க அரசாங்கமும் அவரை நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டுவர ஒத்துக் கொள்ளவில்லை. சி.பி.ஐ. அவரை பதுங்கியுள்ளார்; பிடிக்க இயலவில்லை என அறிக்கையும் வழங்கியது. ஆனால் ஆண்டர்சன் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ்வதை ரிடீப்.காம் எனும் பத்திரிகை நடத்தும் இந்திய அபாராட் பத்திரிகையின் செய்தியாளர் கண்டுபிடித்தார். ஒரு சாதாரண வழக்கிலேயே பிடிபட்டால் சட்டம் எப்படியெல்லாம் கடுமையாக நடந்து கொள்கிறது. ஆனால் ஆயிரகணக்கானோர் மடிந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனி நபர் உல்லாசமாக ஒரு தீவில் இருப்பது எவ்வளவு வேதனையை தருகிறது. கொலை வழக்கில் எல்லாம், ஆயுள் மற்றும் மரண தண்டனைகள் வழங்கும்போது இந்த கொடூர நிகழ்வுக்கு எவ்வளவு கடுமையான தண்டனையை பெற்றுத் தந்திருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வி. விபத்தில் பாதிக்கப்பட்ட பலரும் இத்தீர்ப்பினை கண்டும் பெரும் கவலை கொண்டுள்ளனர். அளிக்கப்பட்ட தண்டனை போதாது; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசப்படுகின்றனர்.
இந்த வழக்கில் இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மத்திய அரசும் யு.சி.சி.யும் புதிதாக ஒரு உடன்படிக்கையை மேற்கொண்டன. அதன்படி இழப்பீட்டு தொகையை கார்பைட் கம்பெனி வழங்கி விட்டால் மற்ற அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற்று கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்து என்பதாகவே பதிவு செய்யப்பட்டது ஒரு பெரும் துரோகமாகும். திட்டமிடப்படாத கொலை என்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் தண்டனை கடுமையானதாக இருந்திருக்கும் என்பதே அனைவரின் கருத்தாகும்.
விபத்து நடந்து கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு காலகட்டங்களில் அமெரிக்க நீதிமன்றங்களிலும், இந்திய நீதிமன்றங்களிலும் பல தரப்பினரும் வழக்குகளை பதிவு செய்தனர். அமெரிக்க நீதிமன்றமோ இவ்விபத்து தொடர்பாக அங்கு தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. ஆண்டர்சனை கொலை குற்றம் புரிந்தவர் என இந்திய நீதிமன்றம் அறிவித்தது. அவர் பாதுகாப்பாக தப்பித்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்று பி.சி.அலெக்சாண்டர் குறிப்பிடுகின்றார். இதற்கிடையில் இந்நிறுவனத்தை சுற்றிலும் நச்சு வாயுக்கள் கலந்திருந்தன என்பதை கிரின்பீஸ் அமைப்பு அறிவித்தது.
வளைகுடா நாட்டில் எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்த 11 அமெரிக்கர்கள் விபத்தில் பலியானதற்கு அமெரிக்கா எவ்வளவு கோரதாண்டவம் ஆடியது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவ்விபத்திற்கு வாஷிங்டன் 1.5 பில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக அந்த எண்ணெய் நிறுவனம் தரவேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து பேசுவது போல பேசி பெற்றது. ஆனால் பெரும் பாதிப்புக்குள்ளான போபாலின் நியாயத்தை வெள்ளை மாளிகை மறுக்கின்றது.
தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து கருத்து கூறுகையில், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் ஒ.எம்.அகமதியும், கே.ஜி.பாலகிருஷ்ணனும் இது என்ன நியாயம்? என்று கேள்வி கேட்டுள்ளனர். இதிலிருந்தே நியாயங்கள் மறுக்கப்பட்டுள்ளது தெளிவாகின்றது. பல குழப்பங்கள், பல முடிச்சுகள், பல தகிடுதத்தங்கள். ஆனால் ஒன்று தெளிவாக தெரிகின்றது. உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயங்கள் கிடைக்கவில்லை என்பது உறுதிபடுகின்றது. மத்தியப்பிரதேச மாநில முன்னாள் அட்வகேட் ஜெனரல் அஜய் மிஸ்ரா இந்த தீர்ப்பைப் பற்றி குறிப்பிடும்பொழுது, ‘நீதித்துறையில் பல மாற்றங்கள் செய்து, குறைகளை களைய வேண்டி இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பே உதாரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரபல வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி, ‘நீதிபதிகள் பதிவு செய்யும் கருவிகளாக இல்லாமல், மக்கள் நலன் காக்கும் காவலர்களாக இருக்கவேண்டும்’ என்று குறைபட்டுள்ளார். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் விபத்து நடந்தது என்னவோ இந்தியாவில். ஆனால் அமெரிக்க கார்பைட் நிறுவனம் இவ்வழக்கை இந்திய நீதிமன்றங்களில் விசாரிக்க கூடாது என திமிராக பதில் சொல்லியிருப்பது மிகவும் வேதனையை தருகிறது.
இந்தப் பிரச்சினைக் குறித்து ஆராய மத்திய அரசின் அமைச்சரவைக் குழுக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், மத்திய இரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி 60 பக்க அறிக்கையை வழங்கினார். 1984இல் ஆண்டர்சன் தப்பி ஓடியது குறித்து சர்ச்சைகள் அன்றைய பிரதமர் இராஜிவ் காந்தி, நரசிம்மராவ், அர்ஜுன் சிங் ஆகியோரை சுற்றி எழுந்துள்ளன. இந்த கேள்விக்கு பதில் என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை.
ஆயிரகணக்கான விலை மதிப்பற்ற மக்களின் அழிவுக்கும், ஏற்பட்ட நாசத்திற்கும் பதில் இல்லை. நீதி புதைக்கப்பட்டு விட்டது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். இதை மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியும் கவலையோடு தெரிவித்துள்ளார். இதிலிருந்து இவ்வழக்கில் எவ்வளவு மோசமான அணுகுமுறைகள் நடந்துள்ளன என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அப்படியானால் இப்பிரச்சினையில் கட்சி மாச்சரியங்களை மறந்து நீதியை நிலைநாட்ட தைரியமான நடவடிக்கைகள் வேண்டும். சட்டங்களுக்காக மக்கள் இல்லை; மக்களுக்காகத்தான் சட்டம். சட்டத்தின் ஆட்சி என்பது மக்கள் நலன் குறித்த ஜனநாயகத்தின் அடிப்படை கூறு ஆகும். அத்தகைய கூறுகள் நல்லவையாக இருக்கவேண்டும். அவை கொடியவையாக மாறினால் எதிர்விளைவுகள் ஏற்பட்டு நாட்டின் அமைப்பு முறைக்கே கேடு விளையும். அந்த வகையில் அரசியல் மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து மனித நேய நோக்கோடு போபால் வழக்கைப் பார்த்தால் பாரதியின் வாக்கில் சிறுமை கண்டு பொங்கி எழு வேண்டும் என்பதுதான் நமது பதிலாகும்.