மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் ஏற்படும் முன்பனி, பின்பனி காலங்களில் அதிகாலையில் போர்வையைப் போர்த்தி இனிமையான அரைத் தூக்கத்தில் இருக்கும்பொழுது, திருச்சி வானொலி நிலையத்திலிருந்து ‘சான்றோர் வாக்கு’ எனும் நிகழ்ச்சியில், 1960களில் ஓர் இனிய குரல், அற்புதமாக நேயர் நெஞ்சங்களை வசீகரிக்கும் வகையில் வரும். இந்தக் குரலின் உரையில் தனித்தன்மை இருக்கும். இந்தக் குரலின் சொந்தக்காரர் பேராசிரியர் அ.சீனிவாசராகவன் ஆவார். 

கடந்த 2005ஆம் ஆண்டில் இவருடைய நூற்றாண்டு விழா நடந்தேறியது. இவருடைய படைப்புகள் அனைத்தையும் சென்னை, மயிலாப்பூர் அல்லயன்ஸ் கம்பெனி தொகுத்து, கல்கத்தா மு.சீனிவாசன் அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. அந்தத் தொகுதி பல இலக்கிய ரசனைகள், சுவைகள், அரிய செய்திகள் இடம் பெற்ற அற்புத பெட்டகமாகும். அ.சீனிவாசராகவன் என்றும், அ.சீநிவாசராகவன் என்று இரண்டு வகையாகவும் இவரை குறிப்பிடுவர். தருமபுர ஆதினம் வழங்கிய பட்டமான செந்தமிழ் செம்மல் என்றும்,பேராசிரியர் என்றும் இவரை அழைப்பர்.

கடந்த வாரம் தமிழ்மணியில் ‘இந்த வாரம் கலாரசிகன்’ தொடரில் பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட அ.சீ.ரா.வின் காவிய அரங்கில் பற்றிய செய்தியை பார்த்தபொழுது, பேராசிரியர் சீனிவாசராகவன் பற்றி எழுதவில்லையே என்ற ஆதங்கத்தில் இந்த கட்டுரைய எழுத காலம் தூண்டியது. தினமணியில் வந்த கம்பன் காவிய ரசனையே காவிய அரங்கம் என்ற நூலாக வெளியிடப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தின் கண்டியூரில் 23 அக்டோபர் 1905 அன்று பிறந்தாலும், நெல்லை மண்ணில் வாழ்ந்து அம்மண் வாசனையை விரும்பியவர். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் ஓர் அறிஞர். நாகப்பட்டினத்தில் பள்ளி படிப்பும், திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். பின் அக்கல்லூரியிலேயே ஆங்கில விரிவுரையாளராக சில காலம் பணியாற்றினார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியராக இவர் இருந்தபொழுது ‘சிந்தனை’ என்ற தமிழ் மாத இதழும், ‘திரிவேணி’ என்ற ஆங்கில மாத இதழையும் பதிப்பித்து வெளியிட்டார். ‘சிந்தனை’ இதழ் தி சென்ட்ரல் ஆர்ட் பிரஸ், 14,  சிங்கன்ன நாயக்கன் தெரு, ஜி.டி. மெட்ராஸ் எனும் விலாசத்தில் இருந்து வெளியானது. இவருடைய சிந்தனை ஏட்டில் அரசியல், விஞ்ஞானம், இலக்கியம் என்று அனைத்து வகையான கட்டுரைகள் வெளிவந்துள்ளது. ராஜாஜி, டி.கே.சி., வரலாற்று ஆசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, அவினாசிலிங்கம் செட்டியார், ஏ.ஜி.வெங்கடாச்சாரி, பெ.நா.அப்புசாமி, இரா.திருமலை, நா.பிச்சமூர்த்தி, நீதிபதி மகராஜன், சுதேசமித்திரன் ஆசிரியர் சீனிவாசன், பி.ஸ்ரீ.ஆச்சார்யா, பெரியசாமி தூரன், தமிழறிஞர் கி.சந்திரசேகரன் போன்ற ஆளுமைகளின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தது. மேலும் அ.சீ.ரா.வின் குறிப்புகள், அவரே வகுளாபரணன் (நம்மாழ்வாரின் பெயர்) என்ற புனைப் பெயரில் எழுதிய கட்டுரைகள் சிறப்பாக அமைந்திருந்தது.

 பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரி, நெல்லை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் விடுதலை வேள்வியில் மாணவர்கள் ஈடுபட்டபொழுது, அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். நெல்லைச் சீமையில் காங்கிரஸ், பொதுவுடைமை, திராவிட இயக்கங்களில் இருந்த பலர் இவருடைய மாணவர்கள் ஆவார்கள். 1951ஆம் ஆண்டு தூத்துக்குடியில் வ.உ.சி. கல்லூரி புதிதாகத் தொடங்கப்பட்டபொழுது அக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்கும்படி இவரை, அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஏ.பி.சி. வீரபாகு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதன் பேரில் அந்தப் பொறுப்பை ஏற்று 19 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். வ.உ.சி. நிதி என்று கல்கி பத்திரிகை ரூ.6,457/ சேர்த்து, அந்த நிதியை ஏ.பி.சி. வீரபாகு அவர்களுக்கு அனுப்பப்பட்டு அந்த நிதியைக் கொண்டு துவக்கப்பட்டட கல்லூரிதான் வ.உ.சி. கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.  20 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை, மதுரை பல்கலைக் கழகங்களில் செனட் உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

இவருடைய நெடிய உருவம், புன்னகை, கனிவான பேச்சு அனைத்தும் தென் மாவட்ட மாணவர்களை கவர்ந்தது. இவர் உடைகளில் அதிக கவனம் செலுத்துவார். இவர் அணிந்து வரும் கோட்டு சூட்டை கல்லூரி மாவணவர்கள் அதிகம் ரசிப்பார்கள். இவருடைய ஆங்கில வகுப்பு என்றால் மாணவர்கள் மத்தியில் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும். மற்ற வகுப்பு மாணவர்கள்கூட ஆர்வத்தோடு இவர் வகுப்பில் பின் இருக்கையில் திருட்டுத்தனமாக உட்காருவது வாடிக்கை. இவருடைய வகுப்புகளை கட் அடிப்பதையோ, தூங்குவதையோ மாணவர்களிடம் பார்க்க முடியாது. வறுமையில் வாடும் மாணவர்கள், விடுதிக்கோ, கல்லூரிக்கோ பணம் கட்ட முடியவில்லை என்றால் அவர்களுக்குத் தன்னுடைய சொந்தப் பொறுப்பில் இவரே பணத்தைக் கட்டி, அவர்களுடைய கல்விக்கு உதவியாக இருப்பார்.

இவருக்கு இசைக் கலையில் தீராத ஆர்வம் உண்டு. நெல்லையிலும், தூத்துக்குடியிலும் தொடர்ந்து இசை விழாக்களை நடத்தினார். முத்துசாமி தீட்சிதரின் இசையின் மீது இவருக்கு மிகுந்த ஈடுபாடு, தமிழிசையின் மீதும் ஆர்வம், பாரதியினுடைய கவிதைகள் மீது நாட்டம், இந்த இரண்டு மேதைகள் உலவிய எட்டயபுரம் மண்ணை இவர் மானசீகமாக விரும்பினார்.

வெள்ளைப் பறவை என்ற படைப்பிற்காக சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இவர், நாணல் என்ற புனைப்பெயரிலும் படைப்புகளைப் படைத்தார். நம்மாழ்வாரைப் பற்றி சிறப்பான ஆராய்ச்சி நூலை வெளியிட்டார். ஆங்கிலக் கவிஞர்கள் பிரௌனிங், விட்மன், பிராஸ்ட், வங்கக் கவிஞர் தாகூர் கவிதைகளைத் தமிழில் வழங்கியுள்ளார். இவருடைய பன்மொழிப் புலமை சிறப்பானதாகும். சிலேடை நயமாக, நகைச்சுவையாகப் பேசுவார்.

பல மொழிகளிலிருந்து தரமான கவிதை, நாடகங்கள், சிறுகதைகளை தமிழுக்கு கொண்டுவந்த பெருமை அ.சீ.ரா.வை சாரும். இலக்கிய ஒப்பாய்வு, இலக்கிய ஆய்வு, மொழி பெயர்ப்பு என்ற நிலை இல்லாமல் உரையாசிரியர், இலக்கிய விமர்சகர், நூலாசிரியர், அற்புதமான பேச்சாளர், மனிதநேயப் பண்பு கொண்டவர் என்ற பன்முகத் தன்மைகளை தன்னகத்தே கொண்டவர். ஒன்றுபட்ட நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் எங்கெல்லாம் இலக்கிய விழாக்கள் நடைபெற்றாலும் அங்கெல்லாம் இவரும் இருப்பார். மேலும், வேங்கடத்தை தாண்டியும் தமிழை கொண்டு சென்றதில் இவரது பங்கு சிறப்பான ஒன்றாகும்.

 வெள்ளைப் பறவை (கவிதைகள்), நிகும்பலை, அவன் அமரன், கௌதமி, உதயகன்னி (நாடகங்கள்), மேல்காற்று, இலக்கிய மலர்கள், காவிய அரங்கில், குருதேவரின் குரல், புது மெருகு (இலக்கிய விளக்கம்), திருப்பாவை, திருவெம்பாவை, நம்மாழ்வார், பாரதியின் குரல், கம்பனிலிருந்து சில இதழ்கள் போன்ற இவரது 20க்கும் மேற்பட்ட படைப்புகள் இன்றைக்கும் சிரஞ்சீவியாக திகழ்கின்றன. 

மார்கழி மாதம் பாடப்படும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, கோதையின் திருப்பாவையைக் கொண்டு அவர் எழுதிய கவிதை நடையான ‘துளியும் கடலும் (ஒரு மனச் சித்திரம்)’ ஒரு பகுதி:

பொழுது புலர்ந்தது, பொற்கோழி கூவிற்று,

போகலாம் வாருங்கள் கன்னியரே,

தொழுது பராசக்தி சோதியை நெஞ்சினில்

சூடிட வாருங்கள் கன்னியரே.

கும்மியடி பெண்ணே, கும்மியடி கண்ணே

கோலக் கும்மி அடித்திடடி

நம்பன் இடப்புறத் தன்னை அருள் திறம்

நாடிக் கும்மி அடித்திடடி புகழ்

பாடிக் கும்மி அடித்திடடி

காலை புலர்ந்தது, காட்டினிலே கதிர்க்

கண்கள் மலர்ந்தன, கன்னியரே,

நீல மழை பெய்ய நெஞ்சம் நிறைந்துய்ய

நீலியைப் பாடுவோன் கன்னியரே

நிலவு என்னும் நாடகத்தில் ஷாஜஹான் நோயுற்று முதுமைப் பருவத்தில் படுக்கையில் இருக்கும் பொழுது, குழந்தையைப் போல ஆக முடியவில்லையே! பெரியவர்களாகித் தானே சிறுமைப்படுகிறோம் என்று கூறுவதாக அவர் காட்சியை அமைத்திருப்பார். அப்போது நிலவில் இருந்து குழந்தைகள் பாடுவதாக அவர் வடித்துள்ள ஒரு பாடல்:


பொழுது சாய்ந்தது

புல்வெளியில்;

புதுமை பாய்ந்தது

கீழ்த்திசையில்;


ஆலம் விழுதுகள் ஆடும் இருளில்

ஆந்தை சுழலுது கேள்;

டுஹு டுஹு!

நிலவொளி துள்ளுது

நிழலூடே;

நெருப்பென மின்மினி

இருளுடே;


வெளவால் சிறகில் ஏறிய காற்று

வண்ணம் பாடுது கேள்;

ஓஹா ஓஹா..!

பொழுது சாய்ந்தது

புல்வெளியில்;

புதுமை பாய்ந்தது

கீழ்த்திசையில்.. ..

1948ஆம் ஆண்டு வெளிவந்த சிந்தனை இதழில் கலாச்சாரமும் வருக்கமும் என்ற தலைப்பில் அ.சீ.ரா. எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதியை படித்தால் அவரது முற்போக்கு சிந்தனை நமக்குப் புலப்படும்.

“இற்றைக்கு சுமார் 12,000 வருஷங்களுக்கு முன் மனிதத் தொகுதியில் குறிப்பிட்ட சில கூட்டத்தார்தாம் காட்டுமிராண்டி தனத்திலிருந்து வெளியேறி, நாகரிகத்தின் முதற் படியை அடைந்தார்கள். சுமார் 100 வருஷங்களுக்கு முன்பு கூட டாஸ்மானியர்கள் காட்டு மிராண்டிகளாய் இருந்தார்கள். ஆகவே மனித வருக்கம் முழுவதும் ஒரே காலத்தில் ஒரே சீராக முன்னேறவில்லை என்பது வெளிப்படை. ஏதாவது ஓரிடத்தில் ஒரு கூட்டத்தாரிடம் முன்னேற்றம் ஏற்பட்டால், அந்த முன்னேற்றம் பல இடங்களுக்கு பரந்தது என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக இரும்பு உருக்கும் முறை கருங்கடற் கரையிலிருந்து புறப்பட்டுச் சென்று நிக்ரோவருக்கும், ஸ்காண்டிலேவியருக்கும் கிட்டியது; ஆனால் அப்போது ஆஸ்திரேலியாவுக்கும், அமெரிக்காவுக்கும் போகவில்லை. இந்த ஒரு நூற்றாண்டுக்குள் ஐரோப்பிய நாகரிகம் வியாரிபாரிகள் மூலமாயும் பாதிரிகள் மூலமாயும் உலகெங்கும் பரவிவிட்டது. நேற்று வரையில் ஏணியின் கீழ்ப்படியில் நின்று கொண்டிருந்த அமெரிக்க இந்தியருக்கும், ஆப்பிரிக்கா நீக்ரோவருக்கும், தாகிதியருக்கும், எழுத படிக்கவும், மோட்டார் ஓட்டவும் தெரிந்துவிட்டது. ஆயிரக்கணக்கான வருஷமாக மெல்ல வளர்ந்த நாகரிகம் நாலைந்து தலைமுறைக்குள் இவர்களுக்குக் கிடைத்து விட்டது. வருக்க அமைப்பும் பண்பும் மாறாமல் இருக்கும்பொழுதே கலாசாரம் எவ்வளவு வேகமாக மாறமுடியும் என்பது இதிலிருந்து விளங்கவில்லையா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழிலே கலைக் களஞ்சியம் உருவாக்கப்பட்ட போது அது எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி அ.சீ.ரா.வின் கருத்துகளை, அவரது சிந்தனை இதழில் (டிசம்பர், 1948) வகுளாபரணன் என்ற புனைப் பெயரில் எழுதியுள்ளதை காணலாம்: 

“உலகில் உள்ள அறிவு மணிகளையெல்லாம் தமிழிலே திரட்டி ஒரு கலைக் களஞ்சியமாகத் தரும் அருமையான முயற்சியில் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் முனைந்திருப்பது உங்களுக்கு தெரியும். களஞ்சியத்தில் எத்தகைய அறிவு முறையிலே சேகரிக்கப்படும் என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் ஒரு மாதிரி மணியை இந்த மாசம் 12ஆம் தேதி கழகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். இருபது பக்கங்களை கொண்ட இச்சிறு வெளியீட்டில் 32 விஷயங்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு குறிப்பும் ஒரு அறிவுத் துறையைப் பற்றியது. முதற் குறிப்பு ஸ்ரீ ராம கிருஷ்ண இயக்கம் என்பது. இது நமது நாட்டுப் பண்பாட்டுச் சரித்திரத்தைப் பற்றியது. அடுத்த குறிப்பான மகரந்த சேர்க்கை தாவரங்களின் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசுகிறது. இப்படியாக 32 குறிப்புகளும் பல்வேறு அறிவுத் துறைகளைச் சார்ந்தவை. இதன் மூலமாக கலைக் களஞ்சியம் எவ்வளவு பரந்த அறிவுக் கழனியிலிருந்து மணிகளைத் திரட்ட வேண்டியிருக்கிறது, திரட்டப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுகிறோம்.

கலைக் களஞ்சியத்தைப் பற்றிய முதற் கேள்வி அது தருகின்ற விவரங்கள் நம்பத் தகுந்தவையா என்பதுதான். அந்தந்தக் துறையிலே சிறந்த நிபுணர்களைக் கொண்டு குறிப்புகளை தயாரித்தால்தான் களஞ்சியத்தில் உள்ள பொருள் மணிகளாக இருக்கும். அது மாத்திரம் இல்லை. கருத்து வேற்றுமை என்பது இல்லாத விஷயங்கள் அபூர்வம். ஆகவே, எந்த விஷயத்தைப் பற்றி எழுதும்போதும் நிதானத்தோடும், நடுநிலையோடும் எழுதவேண்டும். அநாவசியமாக விவாதத்தை எழுப்பும் முறையில் களஞ்சியத்தில் உள்ள குறிப்பு அமையக்கூடாது. உதாரணமாக, திருவள்ளுவரைப் பற்றி இங்கே இந்தப் புத்தகத்தில் காணும் ஒரு குறிப்பு; கௌடில்யர் அர்த்த சாஸ்திரம் குறிப்பிட்ட ஒரு காலத்து அரசருக்கு மட்டும் உதவும். ஆனால் குறளோ என்றென்றும் எல்லோருக்கும் உதவும் என்று பேசுகிறது. முதலில் கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்தை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றைய அரசியல் நிபுணர்களோடு வள்ளுவரை ஒப்பிட வேண்டாமா. அப்போதுதானே அவர் தனிப் பெருமை தெரியும் என்று கேட்கலாம். விருப்பு வெறுப்பின்றி இதைச் செய்து முடிவு காணுவதற்கு இங்கே இடமில்லை. கண்ட முடிவுகளை தொகுத்துக் கூறுவதற்குக் கூட இருக்கின்ற இடம் போதாது. அப்படியே ஒப்பிடுவதானாலும் கௌடில்யரை மாத்திரம் ஒப்பிடுவதால் வள்ளுவரின் பெருமையை நிலைநாட்டி விட்டோம் என்பதற்கில்லை. வேண்டுமானால் கௌடில்யர் போன்ற அரசியல் நிபுணர்கள் கூறுவது ஒரு காலத்திற்கு மட்டும் பொருந்தும் என்றும், வள்ளுவர் கூறுவது எக்காலத்திற்கும் பொருந்தும் என்றும் சொல்லலாம். இப்படி எழுதுவதால் அவசியமில்லாத விவாதம் மறைகிறது. உண்மையும் அழுத்தம் பெறுகிறது. கலைக் களஞ்சியம் பிரச்சார மேடையல்ல. உண்மையை நிதானத்தோடும், நடுநிலைமையோடும் திரட்டித் தரும் ஒரு சாதனம். இதை கலைக் களஞ்சிய ஆசிரியர்கள் ஆழமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.”

ராஜாஜி, ஜாகிர் உசேன், அவினாசிலிங்கம் செட்டியார், டி.கே.சி., வையாபுரி பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, நீதிபதி மகராஜன், ஏ.எல்.முதலியார், கி.வா.ஜ., பி.ஸ்ரீ. ஆச்சார்யா, முன்னாள் கல்வி அமைச்சர் ஹுமாயுன் கபீர், கே.பட்சிராஜன், பெ.நா.அப்புசாமி, மீ.பா.சோமு, தொ.மு.பாஸ்கரத் தொண்டமான், ஏ.என்.மகரபூஷணம், கு.அழகிரிசாமி, தொ.மு.சி. ரகுநாதன், ல.சண்முகசுந்தரம், வினோபா சீடர் திருமலை, பேராசிரியர் நா.வானமாமலை போன்றவர்களுடன் தொடர்ந்து நட்போடு பழகி வந்தார். டி.கே.சி.யின் வட்டத்தொட்டி விவாதத்திலும் இருப்பார். எட்டயபுரத்தில் கல்கி நிறுவிய பாரதி நினைவு மண்டபம் திறப்பு விழாவிலும் முக்கியப் பங்கு ஆற்றினார்.

தில்லியில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டிற்கு பண்டித நேரு தலைமையேற்றார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உன்னத மணிவாசகத்தைத் தொடக்கத்தில் வைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார் பேராசிரியர். ஒரு சிலர் இந்தியில் பேச வேண்டும் எனக் குரல் எழுப்பினர். இதைக் கண்ட நேரு வெகுண்டு “அற்புதமாக ஆங்கிலத்தில் பேசும் இவர் பேச்சில் ஏன் குறுக்கிடுகிறீர்கள். உட்காருங்கள்” என்று கறாராகக் கூறினார். இறுதிவரை அப்பேச்சைக் கேட்ட நேரு, பேராசிரியரைக் கட்டித் தழுவிப் பாராட்டினார்.

கம்பன், பாரதி, ஆழ்வார்கள், சைவ இலக்கியங்களில் மட்டும் அல்லாமல், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற பல தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர், இந்த இலக்கியங்களில் உள்ள மெய்ப்பாட்டையும், காட்சிகளையும் சுவையாக, இனிமையாகத் தன்னுடைய சொற்பொழிவுகளில் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சில சூழ்நிலைகளால் பேராசிரியர் தாமதமாக வர நேரிட்டது. ரா.பி.சேதுப்பிள்ளை இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், முதலில் பேசினார். பின் பேச வந்த போராரியர் “சேது கட்டி முடித்தாயிற்று; ராகவன் வந்திருக்கின்றேன்” என்று பேச ஆரம்பித்தபொழுது ரா.பி.சே. மட்டுமல்லாமல் அரங்கத்தில் இருந்த அனைவரும் மகிழ்ந்தனர்.

 கோலாலம்பூரில் நடைபெற்ற உலக தமிழ் மாநாடு, இந்தோனேஷியாவில் நடைபெற்ற பன்னாட்டு இராமாயண மாநாடு போன்றவற்றில் கலந்து கொண்டுள்ளார். 1996ஆம் ஆண்டில் கருமுத்து செட்டியார் தலைமையில் நடந்த மதுரை தொழில் வளர்ச்சிக் கூட்டத்தில் தமிழ் பயிற்றுமொழி அவசியம் தேவையென்று குரல் கொடுத்தார். ஆழ்வார் திருநகரியில் நடைபெற்ற மாறன் செந்தமிழ் மாநாட்டில் பிற மதத் தலைவர்களைப் பங்குபெற அழைத்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினார்.

ஒருமுறை சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபொழுது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நீண்டகாலமாக சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த கோவில்பட்டி சோ.அழகிரிசாமியுடன் இவரை சந்தித்தபொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றின் செய்திகளைக் கூட, ஒரு சட்டக் கல்லூரி பேராசிரியர் போன்று என்னுடன் அவர் விவாதித்தது இன்றைக்கும் நினைவில் உள்ளது. அவருக்கு தெரியாத விஷயங்கள், செய்திகள் இருக்காது என்ற சிந்தனைதான் நமக்கு ஏற்படுகிறது.

கிழக்குப் பதிப்பகம் ஹோமரின் ஒடிசியை தமிழில் வெளியிட்டுள்ளது. அதன் அறிமுக உரையில் சீனிவாச ராகவன் என்ற ஒருவர் ஏற்கனவே ஒடிசியை தமிழாக்கம் செய்துள்ளார் என்ற செய்தியை பார்த்தவுடன் ஆத்திரமும் கோபமும் வந்தது. அதை எழுதியவர் நாகூர் ரூபி என்பவர். கிழக்குப் பதிப்பகத்தைச் சார்ந்த நண்பர் பா.ராகவனிடம் என்ன இப்படி அ.சீ.ரா.வைப் பற்றி தாங்கள் வெளியிட்டுள்ள ஒடிசி நூலில் நாகூர் ரூபி எழுதியுள்ளாரே என்று கேட்டபொழுது, அவரும் வருத்தப்பட்டார். இந்த அளவு தமிழில் ஆளுமை கொண்டவர்களை பற்றி தெளிவு இல்லாமல் எழுதுகின்ற நடைமுறையை, இன்றைக்கு இலக்கியத்தைப் பற்றி அக்கறை உள்ளவர்கள் ஈடுபடுவது தவிர்க்க வேண்டும். 

இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி போப் ஆண்டவர் 1967ஆம் ஆண்டு இவரை கௌரவித்தார். 5.1.1975ஆம் நாளன்று இவர் காலமானார். ஆங்கில தமிழறிஞர், பேராசிரியர், படைப்பாளி, சொற்பொழிவாளர், கவிஞர், பத்திரிகையாளர், இசை ஆர்வலர், மாணவர்களின் பாதுகாவலர் என பன்முகம் கொண்ட பேராசிரியர் அ.சீ.ரா.வின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.