மதுரை அருகே உள்ள யானை மலையை உடைக்கப் போவதாகவும், அதை எதிர்த்து தான் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதாகவும், வைகோ ஏடுகள் மூலம் சொல்லியுள்ளார். பிரச்சினையே இல்லாதபோது, பிரச்சினை உள்ளதுபோல் பாசாங்கு செய்து போராட்டம் என்று கூறினார். இதை மறுத்து தொடக்கக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கழக அரசின் சார்பில் அறிக்கை வெளியிட்டார்.

வைகோவின் இந்த செயலை எண்ணிப் பார்க்கையில், ஸ்பெயின் நாட்டில், 18ஆம் நூற்றாண்டில் உலகின் முதன் முதலாக எழுதப்பட்ட செர்வண்டோவின் படைப்பான டான் குயிக் ஷாட் என்ற இலக்கியம் தான் நினைவுக்கு வருகிறது. உலகில் பைபிள் போன்று, அதிக மொழிகளில் அச்சிடப்பட்டு அனைவராலும் படிக்கப்பட்டு வருகின்றது, இந்த பழங்கால படைப்பு. முகமது பின் துக்ளக் போன்று, டான் குயிக் ஷாட், தான் ஒரு வீரனென்று காற்றாடியோடு போராடுவார். பல வீரசாகச செயல்களை செய்து வந்ததாக அந்த பாத்திர படைப்பு பற்றி கிண்டலாக கூறப்பட்டுள்ளது.  

எனது அரசியலில் முதல் எதிரி ஜெயலலிதாதான் என்று சண்டமாருதம் செய்து, இதுதான் எனது பிரகடனம் என கூறி, வைகோ குமரி முனையிலிருந்து சென்னை வரை 1,800 கிலோ மீட்டர் தூரம் கால் கடுக்க வீராப்போடு நடந்தார்; ஊழல் நாயகி, டான்சி ராணியின் சொத்துகளை பறிமுதல் செய்து, ஜெயலலிதாவை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தாமல் விட மாட்டேன்; தூத்துக்குடி ஸ்டெர்லெய்ட் தாமிர ஆலையை முடியே தீருவேன் என்று ஆவேச நடைபயணம் மட்டுமல்லாது சென்னை உயர்நீதி மன்றத்தில் தானே வழக்காடினார்; என எத்தனை போராட்டங்கள்..

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தன்னுடைய மருமகனின் திருநெல்வேலியில் உள்ள வணிக நிறுவனத்திற்கு தொழில் ரீதியான ஆதாயங்களை பெற்றது என்பது ஒரு தனிக் கதை.

அந்த போராட்டங்களின் முடிவு என்ன? அது முடிவுக்கு வராத ‘கமுக்கம்’ என்ன? 

இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் தினமும் செய்தித் தாள்களில் இடம் பெறலாம். எதிலும் நான்தான் என சொல்லிக் கொள்வது அவரது வாடிக்கை.

வேறொன்றும் இல்லை!

 பாஞ்சாலங்குறிச்சி பாமரன்