தஞ்சை பெரிய கோவிலுக்கு வயது 1000!
பொற்கால சோழர் ஆட்சியில் ராஜராஜனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு தற்போது வயது 1,000. ஏழு வருடங்களில் சிவ பக்தரான ராஜராஜன் எகிப்தியரின் பிரமீடுகள் போன்ற கூர்மையான முனை கொண்ட கோபுரத்தை 190 அடி உயரத்திற்கு கட்டியது உலக அதிசயமாகும். வடக்கே புவனேஸ்வரத்தில் லிங்க ராஜா கோவில்தான் அந்த காலத்தில் உயரமானதாக இருந்தது. ஆனால் அதைவிட இக்கோபுரத்தை உயரமாக அமைத்த பெருமை ராஜராஜனையே சாரும். பெரிய விசாலமான பிரகாரம், 30க்கும் மேற்பட்ட கோவில்களை உள்ளடக்கி உள்ளது. அக்காலத்தில் 400 நடன மாதுகள், 50 சிவமறை ஓதுவார்கள் நாள்தோறும் பணியில் இருந்தனர். ராஜராஜனுக்கு பிறகு நாயக்கர் காலத்தில் 16 மீட்டர் நீளமுள்ள நந்தி அமைக்கப்பட்டது.
உலக மரபுச் சின்னம் என்று யுனெஸ்கோ அறிவித்த இந்த கோவில் 1004இல் கட்டத் துவங்கி 1010வாக்கில் முடிக்கப்பட்டது. கரிகால் சோழனுக்கு இந்த பணியில் பங்குண்டு. கரிகாலனுக்கு கல்லணை எப்படி பெருமை சேர்க்கின்றதோ, அதேபோன்று இந்த கோவில் ராஜராஜனுக்கும் கரிகாலனுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. தமிழர்களின் பெருமையை நெஞ்சுயர்த்தி பேசுவதற்கு பெரிய கோவில் ஒரு அடையாளமாகும். ஜெர்மன் நாட்டு கல்வெட்டு அறிஞர் ஹல்ஸ், 1896இல் இங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். அவர்தான் இந்த கோவிலை ராஜராஜன் கட்டினான் என்று கூறினார்.
விஜயலாயன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன், மதுராந்தக உத்தமசோழன் தொடங்கி ராஜராஜன் காலத்திற்கு பிறகும் 176 ஆண்டுகாலம் சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய தஞ்சை தரணியில் இக்கோவில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
சோழப் பேரரசானது வடக்கே துங்கபத்திரா, கிழக்கே வங்கக் கடல், வடகிழக்கே ஒரிசா, கலிங்கம், தெற்கே லட்சத்தீவு, மாலத்தீவு என பரந்து விரிந்து விளங்கியது. இப்பேரரசுக்குதான் தஞ்சை தலைநகராக விளங்கியது. அத்தகைய பெருமைக்குரிய தஞ்சைக்கு அடையாளமாக விளங்குவது இப்பெரிய கோவில்.
சோழப் பெருமான் சுந்தர சோழனுக்கும், திருக்கோவிலூர் மலையமான் குலத்தைச் சார்ந்த வானவன் மாதேவிக்கும் இரண்டாவதாக பிறந்தவர் ராஜராஜன். இவரின் கலை ஆர்வத்தால் எழுந்ததுதான் இக்கோவில். இக்கட்டடத்தை வடிவமைத்தவர் வீரசோழன் குஞ்சரமல்லன் ராஜராஜப் பெருந்தச்சன் ஆவார். இவருக்கு உறுதுணையாக நின்று பணியாற்றியவர் கண்டராதித்தப் பெருந்தச்சன்.
தொழில் நுட்பங்கள், வசதிகள் இல்லாத அக்காலத்தில் எழுந்து நிற்கும் இக்கோபுரத்தை கட்டுவதற்கு எவ்வளவு சிரமங்கள் இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. லாரி, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள், கிரேன் போன்ற அமைப்புகள், இன்றைய எளிதான கட்டட அமைப்பு முறைகள் அன்றைக்கு இல்லாத நிலையில், இக்கோபுர கட்டுமானப் பணி நடைபெற்றுள்ளது. இது ஒரு அதிசயமாகும். தாஜ்மகால் போன்ற கட்டடங்கள் சிறைக்கைதிகளால் கட்டப்பட்டது. ஆனால் தஞ்சை பெரிய கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் சிவபக்தர்களே. இதற்கு நிதி ஆதாரம் வழங்கியவர்களின் அத்துனை பேருடைய பெயர்களையும் ராஜராஜன் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது மற்றொரு முக்கிய செய்தியாகும்.
தஞ்சை பெருவுடையார் கோவிலைச் சுற்றி அகழியும், கோட்டை கொத்தளங்களும் நாயக்கர் மன்னரான செவ்வப்ப நாயக்கரால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோட்டைச் சுவர் வாயில் மராட்டிய மன்னரால் அமைக்கப்பட்டது. ஐந்து அடுக்கு உள்ள கேரளாந்தகன் வாயிலும், ராஜராஜன் வாயிலும் 40 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இவ்விரண்டு வாயில்களும் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. ராஜராஜன் வாயிலை ஒட்டி திகழும் சுற்று மண்டப கல்வெட்டுகள் திருச்சுற்று மாளிகை என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜன் காலத்தில் இரண்டு தளமாக இருந்து, தற்பொழுது ஒரு தளமாக காணப்படுகிறது. நெடிதுயர்ந்த விமானத்தின் பெயர் தட்சிணமேரு ஆகும்.
இக்கோவிலிலுள்ள பிரகதீஸ்வரர் லிங்கம் 3 அடி உயரத்தில் பீடத்தில் 55 அடி சுற்றளவில் 6 அடிக்கு கோமுகம் கொண்டது. ஒரே கல்லில் செய்யப்பட்ட பீடத்தின் எடை 500 டன்னுக்கு மேலானதாகும். இதை எப்படி மலையிலிருந்து இப்பகுதிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வியக்கத்தக்க வினாவாகும். இந்த கோவிலுக்கு வேண்டிய கற்கள் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில், நார்த்தாமலை ஆகிய இடங்களிலிருந்து சகடை வண்டிகளில் கொண்டு வரப்பட்டது. தெற்கு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட மண்தான் சிவாஜி நகர், செல்வ நகர் போன்ற மேட்டு பகுதிகளாகும். கோவில் கட்ட நான்கு புறமும் பல மைல் கற்கள் தூரம் சாரங்கள் அமைத்து மிக கனமான கட்டுமான பொருட்களை மக்கள் தூக்கி சென்றுள்ளனர். அன்றைய தமிழன் எவ்வளவு பலம் பொருந்தியவனாக இருந்திருக்கிறான் என்பதை தெரிந்து கொள்வதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?
வரலாற்றில் சோழர் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின் பல படையெடுப்புகளில் பல சேதாரங்கள் ஏற்பட்ட பின்பும் கோபுரம் கம்பீரமாக நிற்கிறது. இந்த கோபுரம் இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டது. உள் சுவர் 11 அடி கனமும், வெளி சுவர் 13 அடி கனமும், இடைவெளி 6 அடி என்ற முறையில் உறுதியோடு கட்டப்பட்டது.சோழர், விஜயநகர பேரரசு, நாயக்கர் காலம், மராட்டியர் காலம் என ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு இக்கோவிலில் பணியை மேற்கொண்டுள்ளனர்.
பெரிய கோவிலின் நிழல் தரையில் விழாது என்ற வாதம் உண்மையில்லை என்று சொல்பவர்கள் உண்டு. 216 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் நிழல் தரையில் விழும் என்பதுதான் அறிவியல் பூர்வமான கருத்து. வெள்ளைக்காரனுடைய உருவம் உள்ளது என்று சொல்வதுண்டு. ஆனால் நாயக்கர்கள் ஆட்சியின் டென்மார்க் வணிக உறவுகள் இருந்தபோது 1620இல் வெள்ளையர்கள் உருவம் பொறிக்கப்பட்டது. இதில் என்ன துக்கமான செய்தி என்றால் ராஜராஜன் சிலையை கோவிலில் வைக்க, 37 ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.க. ஆட்சியில் முதல்வர் அவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டும், அம்முயற்சி ஈடேறவில்லை. அது இன்றைக்கும் வேதனையைத் தருகிறது. மேலும், அந்த சிலையை கோவிலின் வெளியே வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது கவலை தரும் செய்தியாகும்.
பன்னாட்டு அளவில் தமிழரின் பெருமை, கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை பறைசாற்றும் இந்த தஞ்சை பெரிய கோவில் காலம் வழங்கிய அருட்கொடையாகும். அதை மேலும் பாதுகாத்து, வரும் காலங்களிலும் பெரிய கோவிலின் பெருமை பேசப்பட வேண்டும். மானுடம் என்பது ஒரு நீர்க்குமிழ் போன்றது. மானுடத்தினுடைய சாதனைகளை பறைசாற்றுவது இம்மாதிரியான கலாச்சார பண்பாட்டு சின்னங்கள்தான். அவற்றை பாதுகாப்போம்! எந்நாளும் அதை போற்றுவோம்!!
இக்கோவிலின் பிரமாண்டத்தையும், கம்பீரத்தையும் பார்த்து மக்கள் வைத்த பெயரே பெரிய கோவில் என்பதாகும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தஞ்சாவூருக்கு செல்பவர்களுக்கு தஞ்சைக்கு வெகு தொலைவிலேயே இக்கோவிலின் கோபுரம் தெரியும். தற்பொழுது கட்டடங்கள் பெருகிவிட்டதால் அத்தகைய வாய்ப்பு குறைந்துள்ளது.
750 அடி நீளமும், 400 அடி அகலமும் கொண்ட கோட்டைச் சுவருக்குள் இக்கோவில் அமைந்துள்ளது.
தஞ்சையை அடுத்த நான்கு மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்தே இக்கோவிலை கட்டுவதற்காக சாரங்கள் அமைக்கப்பட்டன. அதன் காரணமாகவே அக்கிராமம் சாரப்பள்ளம் என்று அழைக்கப்பட்டது.
இக்கோவிலில் 12 உயரமுள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டதாகும். மேலும் இக்கோவிலின் காவல் தெய்வங்களான துவாரபாலகர்களும், கர்ப்பகிரகத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் இங்கு வரும் அனைத்து நாட்டினரையும் மிகவும் கவருவதாக உள்ளது.
திருப்பணிக்காக பெறப்பட்ட நிதியிலிருந்து கோவில் கட்டப்பட்ட பின், மீதம் இருந்த நிதியைக் கொண்டு பள்ளிகள், கால்வாய்கள், மருத்துவமனைகள், களஞ்சியங்கள் போன்ற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டன.