மெய்ப்படும் தமிழக துறைமுகங்கள்
சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களோடு தற்போது எண்ணூரிலும் முக்கிய துறைமுகம் ஏற்பட இருக்கின்றது. தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், வணிக துறைமுகங்களும் கீர்த்திப் பெற்றதாக இருந்துள்ளது. கொற்கை, பழைய காயல், தொண்டி, காவிரிபூம்பட்டினம், முசிறி, உவரி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் ஆதியில் துறைமுகங்கள், வணிக தலங்களாக அமைந்திருந்தன. இத்துறைமுகங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கொற்கை முத்தின் சிறப்பை அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. டாக்டர் கால்டுவெல்லும் பழைய காயல், கொற்øகை பெருமைகளைப் பாராட்டியுள்ளார். மார்கோ போலோவும் தன்னுடைய குறிப்பில், இந்த நகர அமைப்புகள், மாட மாளிகைகள் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். உலக அழகி கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பிளினி குறிப்பிட்டுள்ளார்.
கொற்கை, புகார் போன்ற துறைமுகங்களில் அரேபிய குதிரைகள் ஓடுகின்ற சத்தம், பொருட்களை வாங்கும் பொழுது ரோமானியர்கள் கொடுக்கும் பொற்காசுகளின் சலசலப்பு, உயர்தமிழ் செம்மொழிக்கு ஒப்ப அரபி, ரோமானியரின் மொழி, பேச்சுக்கள், இரவு நேரங்களில் வெளிநாட்டு லாந்தர்களின் மந்தகாச ஒளி, வெளிநாட்டினர் நடமாட்டத்தில் தூங்கா நகரங்களாக இவை இருந்தன. இந்து, கிறித்துவம், இஸ்லாம் மத நல்லிணக்கமும் பேணப்பட்டது.
இந்த துறைமுகங்கள் பண்டைய காலத்தில் கடற்கொள்ளையர் அணுக முடியாத வகையில் பாதுகாப்பானதாக இருந்துள்ளன. கொற்கை முத்து மற்றும் சேர நாட்டிலிருந்து வந்த மிளகு, ஏலம், கிராம்பு, இலவங்கம், இஞ்சி, மெல்லியத் துணிகள், அரிசி, வைரம், யானைத் தந்தம், பழங்கள் போன்ற பொருட்களை யவனர், உரோமர், எகிப்தியர், கிரேக்கர் ஆகியோர் தங்களுடைய பொற்காசுகளை கொடுத்து, தமிழ் மண்ணிலிருந்து கடல் வழியாக எடுத்துச் சென்றதற்கு சான்றுகள் உள்ளன. வங்கக் கடலில் தமிழர்களின் கலாச்சாரமும், ஆளுமையும் கொடிக் கட்டிப் பறந்தது.
13ஆம் நூற்றாண்டுக்குப் பின் கொற்கை துறைமுகம் பழக்கத்தில் இல்லாமல் போனபின், பாண்டியர்கள் பழைய காயலை துறைமுகமாகப் பயன்படுத்தினர். இங்கு அராபியர், சீனர், ரோமானியர் ஆகியோர் வந்தனர். பீங்கான்கள், உருளைக்கிழங்கு இந்தத் துறைமுகத்தின் வாயிலாக வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று வின்சன்ட் ஸ்மித் கூறுகின்றார். கொற்கை, பழைய காயலில் முத்து எடுக்கும் பாங்கினை நற்றினையும், ஐங்குறுநூறும் சொல்கின்றது. மணப்பாடு, உவரி பற்றியும் இலக்கியத்தில் ஆதாரங்கள் உள்ளன. காவிரிப் பூம்பட்டினத்தைப் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, மார்கோ போலோவின் எழுத்துக்கள் வர்ணிக்கின்றன.
இவற்றுக்குப் பின் போர்ச்சுக்கீசியர் காலத்தில் தூத்துக்குடித் துறைமுகம் சிறப்புப் பெற்றது. தூத்துக்குடி தண்ணீர் தூற்றி, மண் கொட்டி நிரவப்பட்ட பகுதி என்று கருதப்பட்டது. வங்கக் கடலில் தமிழனின் பாய்மரக் கப்பல்களும், கட்டுமரங்களும், சோழர்களின் போர் கப்பல்களும், மூவேந்தர்களுடைய கடல் ஆதிக்கமும் வரலாற்றில் இருந்ததை எவரும் மறுக்க முடியாது. தமிழகத்தின் மீது மேலைநாட்டவர்களுக்கு பிடிமானம் இருந்தது. எனவே, கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்றவர்கள் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடலை நோக்கி வர திட்டமிட்டனர். இதுவே ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் என பல தரப்பினரும் வரக் காரணமாக இருந்தது. பின்னர் கிழக்கிந்திய கம்பெனியும் துவக்கப்பட்டது.
தூத்துக்குடியில், ஆங்கிலேயர்களை எதிர்த்து வ.உ.சி. கப்பல் விட்டதையும், அதுகுறித்து பாரதி பாடியக் காட்சிகளையும் இன்றைக்கு நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது. இவ்வாறு துறைமுகங்கள் தமிழகத்திற்கு புதிதல்ல. இன்றைக்கு துறைமுகங்களின் வளர்ச்சி தமிழகத்தில் பல வகையில் எட்டியுள்ளது என்பதை அறிய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்லாமல் தனியாரும் துறைமுகங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
சென்னை, தூத்துக்குடி போன்ற பெரிய துறைமுகங்கள் தவிர, குளச்சல், கன்னியாகுமரி, கூடங்குளம் மனப்பாடு, புன்னைக்காயல், வாலிநோக்கம், பாம்பன், இராமேசுவரம், நாகப்பட்டினம், கடலூர், திருக்கடையூர், பி.ஒய்.3 ஆயில் பீல்டு, காட்டுப்பள்ளி, திருசோபுரம் என பதினைந்து சிறு துறைமுகங்கள் உள்ளன. மீன்பிடித் தொழில் செய்யக் கூடிய வகையில் இந்த துறைமுகங்கள் இருக்க வேண்டும். புதிய துறைமுகங்களின் வரவால் நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகள், அருகே பல தொழிற்சாலைகள் போன்றவை ஏற்படும்.
2007ஆம் ஆண்டு கடல் சாரா கொள்கை ஒன்றை அரசு அறிவித்தது. அதன்படி துறைமுக மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் பதினைந்து துறைமுகங்கள் என்று கணக்கெடுக்கப்பட்டு இன்றைக்கு இருபதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் நூறு ஏக்கர் பரப்பளவில் கடல் அரிப்பைத் தடுக்க சுவர்கள், கப்பல்கள், படகுகள் நிறுத்த திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. சில துறைமுகங்களை தனியார் மூலம் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. கடலூர் துறைமுகத்தில் செம்பிளாஸ்ட் நிறுவனம், குளோரைடு பயன்படுத்துவதற்காக மெரின் டெர்மினல் அமைத்துள்ளது. மேலும் இத்துறைமுகத்தில் பவர்ஜென் கார்ப்பரேஷன் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கப்பலில் வரும் சரக்குகளை பாதுகாக்க வசதி செய்து தர திட்டமிட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் சென்னை பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெயை சுத்திகரிக்க வேண்டிய கட்டுமானப் பணிகளை மேற்கொடுள்ளது. இவ்வாறு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் துறைமுகங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
சமீபத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட மாமல்லபுரம், முகையூர் துறைமுகத்தில் 500 கோடி செலவில் கப்பல் பழுது பார்க்கும் பணிகள் நடைபெறும் வகையில் திட்டங்கள் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் திருசோபுரம், சிலம்பிமங்கலம் ஆகிய இடங்களில் துறைமுகங்கள் அமைக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருசோபுரத்தில் சுமார் 1,800 கோடி செலவில் நாகார்ஜூனா எண்ணெய் நிறுவனம் அமைக்கிறது. அங்கு அந்நிறுவனம் பெட்ரோலிய பொருட்கள், குருட் ஆயிலை இறக்குமதி செய்து சுத்திகரிக்கும் பணியை செய்ய இருக்கிறது. சிலம்பிமங்கலத்தில் குட்எர்த்ஷிப் பில்டிங் நிறுவனம் துறைமுகம் அமைக்கிறது. இத்துறைமுகத்தில் பல ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை நிறுத்தும் வசதி செய்யப்பட உள்ளது.
நாகப்பட்டினத்தில் உள்ள காவேரி, வானகிரி, திருக்கடையூர், திருக்குவளை ஆகிய பகுதிகளில் உள்ள சிறிய துறைமுகங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. பெல் பவர் நிறுவனம் சுமார் 1,320 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையம் அமைக்க உள்ளது. அதற்கு தேவையான நிலக்கரியை கையாளுவதற்கு காவேரி துறைமுகத்தை 200 கோடி ரூபாயில் சீரமைத்து வருகிறது. இதுபோன்று வானகிரியில் என்.எஸ்.எல். என்ற நிறுவனம் 1,500 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு ஏதுவாக இத்துறைமுகத்தை வளப்படுத்துகிறது. 1996ஆம் ஆண்டீல் திருக்கடையூரில், பி.பி.என். பவர் ஜெனரேட்டிவ் நிறுவனம் துறைமுகத்தை அமைத்தது. இங்கு நாப்தா, இயற்கை வாயுவை கொண்டு வந்து அதனை பயன்படுத்தும் முகமாக சுமார் 300 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தையும் தொடங்கியுள்ளது. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள வேட்டைக்காரன் இருப்பு பகுதியில் டிரிடெம் போர்ட் மற்றும் பவர் கம்பெனி நிறுவனம் 2,000 மெகாவாட் மின் நிலையத்தை அமைக்க இருக்கிறது. இதற்கு வேண்டிய நிலக்கரியை கொண்டு வருவதற்காக, 270 ஏக்கர் அரசு நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
ரூ.1,800/ கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம், மணப்பாட்டில் துறைமுகம் அமைய உள்ளது. இங்கு 100 ஏக்கர் நிலம் இந்தியன் பவர் புராஜக்ட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு, அங்கு அந்நிறுவனம் 2,000 மெகாவாட் காஸ்டர்பைன் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க இருக்கிறது. கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக கடல் நீரை சேமித்து வைக்க வசதியாக ஒரு கி.மீ. நீளத்திலும், 200 மீட்டர் அகலத்திலும் தடுப்பணை, பவர்பிளாண்ட், ஆர்.சி. சி., ஜெட்டி போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. கோஸ்டல் தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரியை பயன்படுத்துவதற்காக பனையூர் துறைமுகத்தை மேம்படுத்தி வருகிறது.
சுமார் 1,300 கோடி ரூபாய் செலவில், 4,000 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவைப்படும் நிலக்கரியை கையாளக் கூடிய வகையில், பரங்கிப்பேட்டை துறைமுகத்தை ஐ.எஸ். மற்றும் எப்.எஸ். லிமிடெட் நிறுவனம் சீரமைத்துள்ளது. உடன்குடி துறைமுகத்தில், கப்பலில் வரும் பொருட்களை இறக்கி பாதுகாக்க, 800 கோடி செலவில் இடம் அமைகிறது. இப்பணியை சென்னை உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் 1,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இங்கு நிலக்கரி பயன்பாடு இருக்கும்.
இவ்வாறு துறைமுகங்கள் வளர்ச்சி பெற்றாலும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சேதுக் கால்வாய் பணிகள் முடிவடைந்து, செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க அளவில் இருக்கும். துறைமுகங்கள் ஒரு பக்கம் தொழில் ரீதியாக வளர்ந்தாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும், மீன்பிடித் தொழிலை பாதுகாக்கும் வகையிலும் கிழக்குக் கடற்கரை துறைமுகங்கள் அமைய வேண்டும். தொழில் துறையும், வணிகத் துறையும் இதில் கவனம் செலுத்தும் பொழுது, மீனவர்களுடைய தொழில் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தமிழக துறைமுகங்களின் வளர்ச்சி அமைய வேண்டும். அம்மாதிரியே மத்திய மாநில அரசுகளின் செயல் திட்டங்கள் உள்ளதால், சரி சமமான வளர்ச்சியாக இத்திட்டங்கள் அமையும். கனவாக இருந்த துறைமுகத் திட்டங்கள் மெய்ப்படும்போது தமிழனுடைய மாண்பும் மேம்படும் என்பதில் அய்யமில்லை.