ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து, கடந்த 20.10.1986 அன்று தூத்துக்குடி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் இருந்து தற்பொழுது ஆறு ஆக குறைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, பன்னிரெண்டு ஒன்றியங்கள் உள்ளன. வருகின்ற 20.10.2010 அன்று இம்மாவட்டம் வெள்ளி விழாவைக் கொண்டாடுகின்றது.

வீரம் விளைந்த இந்த மாவட்டத்தில் வானம் பார்த்த கரிசல் மண்ணும் இருக்கின்றது. தாமிரபரணி பாயும் தீரவாசம் நிலங்களும் உள்ளன. தேரிக்காடுகள், கடற்கரை பகுதி என பல பூகோள அமைப்புகளைக் கொண்ட மாவட்டமாகும். பொதிகையில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி இம்மாவட்டத்தில் உள்ள புன்னக்காயல் கடலில் கலக்கின்றது. வரலாற்றில் கொற்கை, பழையகாயல் துறைமுகங்கள் சிறப்புப் பெற்றிருந்தன. இம்மண்ணில் கட்டபொம்மன், தீரன் சுந்தரலிங்கம், ஊமைத்துரை, வெள்ளையத் தேவன், முண்டாசுக்கவி பாரதி, வ.உ.சி. போன்ற ஆளுமைகள் உலவினர். காட்டிக் கொடுத்தார் எட்டயபுரம் ராஜா வம்சம் என்பர். அக்குடும்பத்தினர் தமிழுக்கும், தமிழிசைக்கும் தொண்டாற்றியதை மறக்க முடியாது. விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியத் தாக்கத்தால் ஆங்கிலேய அரசை எதிர்த்து உப்பளத் தொழிலாளர்கள் குலசேகரப் பட்டினத்திலிருந்து உடன்குடி வரை உள்ள தந்தி கம்பங்களை அறுத்தும், உப்பள அதிகாரி லோனை வெட்டிக் கொன்றனர். அக்கொலை வழக்கு லோன் கொலை வழக்கு எனப்பட்டது. அவ்வழக்கில் பல தியாகிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அதுபோன்று பூச்சிக்காடு கள்ளுக்கடை, மாவடி பண்ணை வழக்குகளிலும் ஆங்கிலேயர்களால் பலர் கடும் தண்டனைக்கு ஆளாயினர். இவ்வாறு இம்மாவட்டம் விடுதலைப் போராட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. புனித சவேரியர், வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற வெளிநாட்டை சார்ந்தவர்கள் இம்மண்ணில் அருந்தொண்டுகள் செய்துள்ளனர். எட்டயபுரத்தில் இருந்த உமறுப் புலவர், காயல்பட்டினத்தில் பிறந்த சீதக்காதி, சதக்கதுல்லா அப்பா, காசிம் புலவர் போன்றோர் இஸ்லாம் மக்கள் மத்தியில் கீர்த்திப் பெற்றவர்களாக விளங்கினர்.

இசைக்கு அடித்தளம் அமைத்த விளாத்திக்குளம் சாமிகள் இவரைப் பற்றி தமிழ்நாடு அறிய வேண்டும். காடல்குடி ஜமீன்தார் பரம்பரையில் வந்தாலும் கூரை வீட்டில் ஒரு துறவி போல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணியம், காருகுறிச்சி அருணாசலம் போன்றவர்கள் தங்கள் குருவாக ஏற்று காடல்குடி ஜமின் நல்லப்ப நாயக்கரை போற்றினர். பெருங்குளத்தில் பிறந்த மாதவய்யா, பெ.நா.அப்புசாமி, விட்டலாபுரத்தில் பிறந்த பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எட்டயபுரத்தில் பிறந்த இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, ஒட்டநத்தத்தை சேர்ந்த பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார், மதுரகவி பாஸ்கரதாஸ், குருமலை சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் அ.சீனிவாச ராகவன், சாத்தான்குளம் ராகவன், உரையாசிரியர் வை.மு. கோபால கிருஷ்ணம் ஆச்சாரியார் என ஒரு நீண்ட அறிஞர் பட்டியலே இம்மாவட்டத்திற்கு உண்டு. திரை உலகில் மறைந்த நடிகர் சந்திரபாபு, திருவைகுண்டத்தில் பிறந்த எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.எஸ்.பாலையா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர் இடைச்செவல் என்ற ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் போன்றோர் சாகித்ய அகாடமி விருது பெற்றது முக்கிய செய்தியாகும்.

அரசியல் தளத்தில்  கே.வி.கே.சாமி, கே.டி.கோசல்ராம், நல்லகண்ணு, ஏ.பி.சி. வீரபாகு, சோ.அழகிரிசாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி, தியாகி பெஞ்சமின் என்ற ஆளுமைகளின் பட்டியலும் நீளும். திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் உள்ளடக்கிய நவத்திருப்பதிகள், கழுகுமலை, கிறித்துவர்கள் வணங்கும் மணப்பாடு, தூத்துக்குடியில் உள்ள மாதா கோவில் என்ற திருத்தலங்களும் உண்டு. இம்மாவட்டத்தில் கிறித்துவ, இந்து, இஸ்லாம் மக்கள் சகோதர பாசத்தோடு பழகுவது ஒரு வாடியாக்கையான நிகழ்வாகும். கோவில்பட்டி வணிக தொழில் நகரமாக விளங்குகிறது. தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவில் உள்ள பத்து துறைமுகங்களில் முக்கியமானதாக திகழ்கின்றது. அதுபோல் திருச்செந்தூர், சாத்தான் குளம் போன்ற பகுதிகளில் மின் உற்பத்தி நடைபெறுகின்றது. தூத்துக்குடி பகுதியை ஒட்டி 8,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, புன்னைக்காயல் வரை பச்சைப் பசேலென்று வாழை, நெல்வயல்கள் உள்ளன. பெருங்குளத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து சேர்கின்றன. இப்படி பல சிறப்புகள் இந்த மாவட்டத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

இம்மாவட்டத்தின் கவிஞர் தேவதேவன்,

.. .. நீருக்கும்

சூரியனுக்கும் நடுவே

நீரோடு நீராய்க்

காய்ச்சப்படும் மனிதன்

முதிர்கிறான்

ஒரு தானியக்கதிராய்.. ..

என்று சொல்லியவாறு இன்றைக்கு தூத்துக்குடி துறைமுக உப்பு என்ற நிலை மாறி, மின்சாரம் தயாரிக்கும் நகரமாகிவிட்டது. நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நகரத்திற்கு ஸ்பிக் தொழிற்சாலை, தேங்காய் எண்ணெய், பெயிண்ட் உற்பத்தி ஆலைகள் இருந்தன. ஆனால் இன்று ஸ்டெர்லைட் இரசாயன தொழிற்சாலை, கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலைகள் என பல தொழிற்சாலைகள் இந்நகரத்தில் பெருகிக் கொண்டிருக்கிறது. அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், சேதுக் கால்வாய்த் திட்டம் மற்றும் சேலம் இரும்பாலை திட்டத்திற்கு மத்திய அரசின் கவனத்தை திருப்ப எழுச்சி நாள் அறிவித்தார்.

இங்குள்ள கடலின் ஆழத்தை பதினாறு அடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. கிழக்குக் கடற்கரை சாலை அமைந்ததால் தூத்துக்குடி எதிர்காலத்தில் வளர வாய்ப்புள்ளது. தூத்துக்குடியில் உள்ள பக்கிள் ஓடை பிரச்சினை ஓரளவு சீர் செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியிலிருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை இரயில் போக்குவரத்து பரிசீலனையில் உள்ளது. சிப்காட் வளாகம், உணவுப் பூங்கா போன்ற திட்டங்கள் தற்போது வந்துள்ளன. இங்கு இருந்த 20 சதவீத நிலக்கரி இறக்குமதி காரைக்கால் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டது அனைவருக்கும் கவலையைத் தருகின்றது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்ற கருத்து பலமாக உள்ளது. மராட்டியத்தில் இரத்தினகிரியில் அல்போன்ஸா மாம்பழ உற்பத்தி பாதிக்கப்படும் என்பதற்காக அங்கிருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் குடி புகுந்தது அனைவருக்கும் வேதனையைத் தருகின்றது.

முத்து நகரத்தில் முத்துக் குளியல் என்பது அரிதாகிவிட்டது. மீன்பிடி தொழிலும் பெரிதாக மீனவர்களுக்குக் கைக் கொடுக்கவில்லை. மாநில அரசு பல்வேறு திட்டங்களை இவர்களுக்கு வழங்கியுள்ளது. தூத்துக்குடியின் சிறப்பான மெக்ரான் பிஸ்கட் வெளிநாடுகளுக்கு செல்கின்றது. மெக்ரான் என்று சொன்னாலே வாயில் எச்சில் ஊரும். தூத்துக்குடியை சுற்றியுள்ள 23 தீவுகளை சுற்றுலாத் தளங்களாக அமைக்கும் திட்டங்கள் உள்ளன. வரலாற்றில் வ.உ.சி. தொழிற்சங்கப் போராட்டம் நடத்திய, கோரல் மில், மதுரா கோட்ஸ் ஆலை இன்றைக்கு இல்லாமல் போய்விட்டது. தூத்துக்குடி நகரம் இந்தியாவுக்கே உப்பிட்டது. ஆனால் இன்று குஜராத்திலிருந்து உப்பு வருகின்ற நிலைமை உள்ளது. குஜராத்தில் கடல் வளம் இருப்பதால் உப்பு தயாரிக்கின்றனர். ஆனால் தூத்துக்குடியில் நிலத்தடி நீரில் உப்பு தயாரிக்கப்படுகின்றது. பழமையான உப்பு தொழில் மருகி வருகின்றது. இதில் வருமானமும் இல்லை. இத்தொழிலை நம்பி 60,000 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் உள்ள கழுகுமலை ஒரு சுற்றுலா தளமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, ஆந்திராவில் உள்ள போச்சம்பள்ளிக்கும், கழுகுமலைக்கும் தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் வடக்கே உள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிகளில் மழை இல்லாததால் விவசாயம் பொய்த்து வருகின்றது. இப்பத்தியாளர் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தொடர்ந்த வழக்கின் காரணமாக அச்சன்கோவில் பம்பை இம்மண்ணில் வைப்பாற்றில் இணைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. ஆனால் கேரளா சண்டித்தனம் செய்து வருகிறது. வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை வழங்க கேரளா முரண்டு பிடிக்கிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இம்மண்ணில் விவசாயம் செழித்து வளரும்.

கோவில்பட்டியில் நெசவாலைகள், நீண்டகாலமாக இருக்கும் லட்சுமி மில்ஸ், லாயல் மில்ஸ் பல குடும்பங்களுக்கு தீபம் ஏற்றி வந்தது. ஆனால் இன்றைக்கு அந்த ஆலைகளில் அதிகமான பணிகள் இல்லையென்ற செய்திகளும் உள்ளன. கோவில்பட்டியில் காக்கி விளையாட்டை, லட்சுமி மில்ஸ் குப்புசாமி நாயுடு நினைவு போட்டி ஆண்டுக்கு ஒரு முறை அகில இந்திய அளவில் நடத்தி வருகின்றனர். இங்கு தீப்பெட்டித் தொழிற்சாலைகளே ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை தருகின்றது. இங்குள்ள சேவும், கடலை மிட்டாயும் பலர் விரும்பி திண்கின்ற பண்டங்களாகும். எட்டயபுரத்தில் முத்துசாமி தீட்சிதர் சமாதி உள்ளது. பாரதியின் பெயரில் இசை, கலை, வரலாறு ஆராய்ச்சி செய்யும் ஒரு கல்வி நிறுவனத்தை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

திருவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரர், ஆழ்வார் நகரில் வாசம் செய்த நம்மாழ்வார் போன்றோர்களுடைய தமிழ்ப் பணி இன்றைக்கும் வரலாற்றில் உள்ளது. புளியோதரை என்பது, நம்மாழ்வார் வாய்மூடி மௌனியாக இருந்தபொழுது, புளியமரத்தின் கீழ் இருந்த சாதத்தில் புளி விழந்து புளி சாதம் ஆனதாக ஒரு செய்தி உள்ளது. அதுபோல குமரகுருபரர் காசிக்கு சென்றபொழுது ஒளரங்கசீப் இவரை பாராட்டி தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபொழுது, குமரகுருபரர் காசியில் இந்துக்களுக்கு மடம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஒளரங்கசீப் அதனை ஏற்று மடம் அமைத்துக் கொடுத்தார். அம்மடத்திற்கு இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களும் வரவேண்டும் என சொல்லியது வரலாற்று செய்தியாகும்.

இம்மாவட்டத்தில் சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி ஒட்டிய பகுதிகளில் பாயும் தாமிரபரணி உபரி நதிகளை இணைத்து தேரிக்காட்டிற்கு வரக் கூடிய நதி நீர் இணைப்புத் திட்டமும் துவக்கப்பட்டு, அத்திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு இம்மாவட்டம் பிரிந்து 25 ஆண்டுகளில் ஏற்றத்தையும் இறக்கத்தையும் கண்டு இருந்தாலும் தமிழக பொருளாதார வளர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் பிரதான இடம் பெற்றுள்ளது. சேதுக் கால்வாய் திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள தடங்கல்களால் தூத்துக்குடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. 1986இல் திருநெல்வேலியிலிருந்து இம்மாவட்டம் பிரிந்த பொழுது ஒரு சிலர் வருத்தப்பட்டனர். தனி மாவட்டமாக அமைந்த தூத்துக்குடியை வரவேற்றவர்களும் உண்டு. நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடி இருந்தபொழுது இருந்த அதனுடைய அமைப்பையும், வரலாற்றையும் இழந்துவிட்டது என ஒரு சிலர் கருதினர். ஆனாலும் நிர்வாகம், பொருளாதாரம், மக்கள் தொகை பெருக்கம் என்ற நிலையில் தனிக் குடித்தனம் என்பதை எவரும் தடுக்க முடியாது. என்னதான் தூத்துக்குடி பிரிந்தாலும் பேச்சு வழக்கிலும், கலாச்சாரத்திலும் நெல்லையோடு பின்னி பிணைந்துள்ளது. இதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.