தமிழக துணை முதல்வர் தளபதி அவர்களுக்கும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் நெடிய தொடர்பும், அத்துறையின் மீது அவருக்கு ஆர்வமும் உண்டு. சென்னை நகரத்தின் மேயராவதற்கு முன்பே 1989இல் கழக ஆட்சியில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தபொழுதே, உள்ளாட்சிச் துறையின் மீது அவருக்கு இருந்த கவனத்தையும், அத்துறையின் மூலம் தனது தொகுதியில் அவர் ஆற்றிய பணிகளையும் மறக்க முடியாது. அவ்வாறான உள்ளாட்சித் துறை அரசு நிர்வாகத்தில் முக்கிய அங்கமாகும். தளபதி அவர்களின் உள்ளாட்சி துறை நிர்வாகத்தைப் பாராட்டி ஐரிஷ் பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

அரசியலுக்கு வருபவர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து அதன்மூலம் மக்களின் செல்வாக்கை பெறுவர். அதன்படி, அலகாபாத்தில் பண்டித நேரு, ஈரோட்டில் தந்தை பெரியார், சேலத்தில் மூதறிஞர் இராஜாஜி, ஏன் விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் போன்றோர் உள்ளாட்சித் துறையில் நகர்மன்றத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த தலைவர்களின் வரிசையில் தலைவர் கலைஞர் அவர்களுடைய சுவடுகளை பின்பற்றி ஓய்வறியாமல் உழைக்கும் அருந்தவப் புதல்வர் தளபதி ஆவார்கள்.

தளபதி அவர்கள் கட்டிக் காக்கின்ற உள்ளாட்சி மக்களுக்கு பிரதான சேவைகளை அளிக்கின்ற துறையாகும். உள்ளாட்சித் துறை இல்லையென்றால் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகாது. தமிழகத்தில் தளபதியின் தலைமையில் அந்தத் துறையை சீர்பட நடத்தி வருவது, இந்தியாவின் மற்ற மாநிலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதர மாநிலங்களில் ஆட்சியில் உள்ளவர்கள், தமிழகத்தில் உள்ளாட்சி துறை எப்படி செயல்படுகின்றது என்பதை காண இங்கு வருகின்றனர். மற்ற வெளிநாடுகளுக்கும் தளபதியினுடைய இப்பணிகள் குறித்த செய்திகள் பரவியுள்ளன. 

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள்கூட இந்தியாவிற்கு வருகை தரும் பொழுது, தமிழகத்தின் உள்ளாட்சி துறையை தங்களுடைய ஆய்வு பணிக்காக கவனிக்கத் தொடங்கி உள்ளனர். கடந்த வாரம் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வந்த ஈடன் என்பவர் இதுகுறித்து அறிந்து கொண்டு, விவரங்களை சேகரித்துக் கொண்டு சென்றுள்ளார். இத்தகைய உள்ளாட்சித் துறை தமிழகத்தில் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பட்டு வருகின்றது. அத்துறைக்கென ஒரு நெடிய வரலாறு உண்டு. இன்றைக்கு தளபதியின் பரிபாலனத்தில் இத்துறை கீர்த்தி பெற்றுள்ளது. வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்த்தால் உத்திரமேரூர் கல்வெட்டு காலத்திலிருந்து இந்த வரலாறு கணக்கிடப்படுகிறது. மக்களின் நலனை காப்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட குழுக்கள் செயல்பட்டதாக இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 10, 11ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற சோழர் ஆட்சி காலங்களிலும் இம்மாதிரி குழுக்கள் செயல்பட்டு வந்துள்ளது கல்வெட்டுகள் மூலம் தெரிகின்றது. 

ஜனநாயகத்தின் தொட்டிலான கிரேக்கத்தில் சிட்டி ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்பட்ட நகர அரசுகளின் மூலம் தான் அரசு, ஜனநாயகம், அரசு நெறிமுறைகள் தோன்றி வளர்ந்தது. அங்குள்ள ஏதென்ஸ் நகரில் சாக்ரடீஸ் மக்களை சிந்திக்க செய்தார்.  பண்டைய காலத்தில் பாடலிபுத்திர நகரத்தை நிர்வகிக்க ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டது எனவும், அக்குழுக்கள் வரி வசூலித்தல், நீதியை நிலை நாட்டுதல், சமூக வளர்ச்சி போன்றவற்றை கவனித்தன என்றும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் தெரிவிக்கின்றது. சிறப்புமிக்க கலா சாலைகள் அமைந்த காஞ்சி, நாளந்தா, தட்சசீலம் ஆகிய பழங்கால நகரங்களில் உள்ளாட்சிகள் சீர்பட நடந்தன என்று வரலாறு சொல்கின்றது.

சென்னை நகராட்சி சட்டம் 1867ஆம் ஆண்டு உருவானது. அதன்மூலம் சென்னை மாகாணம் பிறந்தது. இதில் கல்வி மற்றும் சாலைகள் பாதுகாப்பு, துப்புரவு, வரிகள் விதித்தல் வசூலித்தல் போன்ற பணிகள் நடைபெறலாயின. பின்னர், 1726ஆம் ஆண்டில் மேயர் கோர்ட் அமைக்கப்பட்டது. இதன் முக்கிய பணி  கட்டடங்கள், சாலைகள் போன்றவற்றை அமைப்பதோடு அவற்றை மாநகராட்சி உறுப்பினர்களை கொண்டு பாதுகாத்தல் ஆகும். 1850 இந்திய அரசு நகரங்கள் மேம்பாட்டு சட்டம், 1854 மாவட்ட சாலை நிதிகள் அமைப்பு விதி போன்றவை மூலம் நிர்வாக அமைப்பிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது.

1866இல் மாவட்ட சாலை வரிச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் தோணித் துறை வரி, வண்டி வரி, மீன்பிடி வாடகை போன்றவை வசூலிக்கப்பட்டு சாலைகள் பராமரிக்கப்பட்டன. 1870இல் லார்டு மேயோ தீர்மானம் நகரங்களை நகராட்சிகளாக மாற்றியமைத்தது. 1871ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உள்ளாட்சி நிதிச் சட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் வரி வசூலிக்கும் அதிகாரத்தைப் பெற்றன. உள்ளாட்சித் துறையின் தந்தை என போற்றப்படும் லார்டு ரிப்பன் பிரபுவின் தன்னாட்சி உடமை தீர்மானம் 1882இல் பிறப்பிக்கப்பட்டது. இவர் கட்டிய ரிப்பன் கட்டடம் ஒரு வரலாற்று சின்னம். உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்தியதன் பெருமை ரிப்பன் பிரபுவையே சாரும். இவரது தீர்மானத்தின்படி மாநில அரசுகளே நகர்புற, ஊரக வளர்ச்சிக் கழகங்கள் அமைத்துக் கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டது. கல்வி, மருத்துவம், பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவற்றுக்கு ஆகின்ற செலவுகளுக்கு வருவாயை உயர்த்திக் கொள்ளவும் இக்கழகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு அதிகப்படியாக வசூலிக்கும் வருவாயின் ஒரு பகுதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். மாவட்டக் கழகம், மாவட்டம், வட்டாரம், ஒன்றியம், ஊராட்சி ஒன்றியங்கள் போன்றவை 1884 ஆம் ஆண்டு உருவான மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் உருவாக்கப்பட்டது. இவற்றுக்கு 1909ஆம் கொண்டு வரப்பட்ட மிண்டோ மார்லி சட்டத்தினால் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது.

ராயல் கமிஷன் அறிக்கை (1907), மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை (1814) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு 1919ஆம் ஆண்டில் இந்திய அரசியல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி சட்டம், உள்ளாட்சி அமைப்புகளை மாநில நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து இரட்டை ஆட்சி முறை அறிமுகமாகியது. இச்சட்டத்தின் மூலம் நகராட்சிகள், மாநகராட்சிகள் தோன்றி, இவற்றுக்கு சேர்மன், மேயர் போன்றோர் தலைவர்களாக விளங்கினர். 1919இல் சென்னை மாநகராட்சி சட்டம், 1920இல் மாவட்ட நகராட்சி சட்டங்கள் போன்றவை இயற்றப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றடுக்கு முறை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் படாததால் நிதி ஆதாரங்கள் முறையாக பகிர்ந்தளிக்காத நிலையில் நிர்வாக சீர்கேடுகள் நடந்தேறின. அந்த முறை திரும்பப் பெறப்பட்டது. 1920இல் கொண்டு வரப்பட்ட உள்ளாட்சி கழகங்களின் சட்டத்தின் மூலம் கிராம, ஒன்றிய, மாவட்ட ஊராட்சிகள் உருவாயின. 1950ஆம் ஆண்டில் சென்னை சிற்×ராட்சி சட்டம் இயற்றப்பட்டு, அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெறவேண்டும், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, சிற்×ராட்சிகளின் எல்லைகள் போன்ற பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1954ஆம் ஆண்டில் வட்டக் கழகங்கள் நீக்கப்பட்டன.

மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சிகளை ஏற்படுத்தி, அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றிற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்களை ஊராட்சிகளுக்கு ஏற்படுத்தில் தருதல்; மாவட்ட, ஊராட்சி, ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் போன்றவற்றின் செயல்பாடுகளை ஒன்றிணைப்பது போன்ற பரிந்துரைகளை பல்வத்ராய் மேத்தா கமிட்டி அறிக்கை குறிப்பிட்டிருந்தது. இதற்குப் பிறகே, 1958இல் சென்னை ஊராட்சிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. கழக ஆட்சிக்குப் பின், 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு, தனி அலுவலர்களைக் கொண்டு நிர்வாகம் செய்யப்பட்டது. 1994ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் இயற்றப்பட்டு, தற்போதைய மூன்றடுக்கு முறை அமுலுக்கு வந்தது.

இவ்வாறு நீண்ட வரலாற்றைக் கொண்ட உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகத்தின் துவக்க ஊற்றுக் கண்ணாக இருந்தன. மக்களாட்சி, குடியரசு என்ற அரசியல் உரிமைகளை பரிணாம வளர்ச்சியில் எட்ட இந்த உள்ளாட்சி அமைப்புகளே அடிப்படை மட்டுமல்லாமல் அடிகற்களாகவும் விளங்குகின்றன. பண்டையத் தமிழகத்தில் அரசர்கள் ஆண்டாளும் உள்ளாட்சிகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்த ஜனநாயக முறைகள் இருந்ததாக சங்கப் பாடல்கள் கூறுகின்றன. அக்காலத்தில் தமிழகம் கிரேக்கம் போன்ற நாகரிக நாடுகளில் உள்ளாட்சி அமைப்புகளே மக்களின் நலனை பேணி காத்தது.

உள்ளாட்சி நல்லாட்சியாக இருந்தால்தான் அந்த அரசு மக்களால் போற்றப்படும். அந்த வகையில் உள்ளாட்சித் துறையின் மூலம் சென்னை நகரத்தில் எத்தனையோ பாலங்கள், அடிப்படை வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதேபோல் கிராமப்புறங்களில் சாலை, குடிநீர் என இன்றைக்கு வசதிகள் பெருகி வருகின்றன. தலைவர் கலைஞர் ஆட்சி காலங்களில் கிராமங்களை நோக்கிப் பயணிக்கும்போது கலங்கரை விளக்கம் போன்று தண்ணீர் தொட்டிகள் இருப்பதை காணலாம். கிராமங்களில் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள் என 1989, 1996 மற்றும் தற்போதைய ஆட்சி காலங்களில்தான் இம்மாதிரியான சாதனைகள் நடந்தேறியுள்ளன. தற்போது தலைவர் கலைஞரின் ஆட்சியில் உள்ளாட்சித் துறையில் பல்வேறு திட்டப்பணிகள் நடக்கின்றன. அந்த சீர்மிகு பணிகளுக்கு கர்த்தா தளபதி அவர்களே!