வைகோ எந்த வகையிலும் தேற மாட்டார்
ஈழத் தமிழர் பிரச்சினையில் இன்றைக்கு குடியமர்த்தும் பணிகள், அங்குள்ள தமிழர்களுக்கு புனர்வாழ்வு ஏற்பட இந்திய அரசு நிருபமா ராவை அனுப்பி உள்ளது. அங்குள்ள துறைமுகம், விமான நிலையங்களை சீரமைத்தல், மின்சார உற்பத்தி நிலைங்கள் அமைப்பது, விவசாயிகளுக்கு இந்திய டிராக்டர்களை வழங்குவது என பல திட்டங்களை இந்திய அரசு செய்ய உள்ளது. இந்நிலையில் வைகோ ஈழத் தமிழர் பிரச்சினைகள் தனக்குத்தான் பாத்தியதை, பிதிரார்ஜித சொத்து என பேசி வருகிறார். வேறு எவரேனும் அப்பிரச்சினை பற்றி பேசினால் அதனை விமர்சிப்பது அவரது வாடிக்கை. இன்றைக்கு ஒன்றுபட்ட குரலாக ஒலித்து ஈழத் தமிழர் பிரச்சினையை பார்ப்பது அனைவருக்கும் நல்லது.
இராமநாதபுரத்தில், தி.மு.க. நடத்திய ஈழ விடுதலை மாநாட்டிற்கு முன்பு, பிரபாகரனை சந்திக்கவும், தனக்கு அவருடைய அறிமுகம் வேண்டுமென்றும் வைகோ என்னிடம் விரும்பி, ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். பாண்டிபஜார் சம்பவத்தை ஒட்டி, கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபாகரனை நான் தினமும் சந்திப்பது வாடிக்கை. அவருடைய வழக்குகள், மற்ற தேவைகள் குறித்து அறிந்து வர பழ. நெடுமாறன் என்னை பணித்தார். விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் அப்போதுதான் உலகத்திற்கு தெரிய வந்தது. அதற்குமுன் ஈழப் போராட்டம் என்றால், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் பெயர்கள்தான் செய்தித் தாள்களில் வரும். 24.7.1982 அன்று வைகோவுடன், அ.சா.குருசாமி என்ற எங்கள் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரனை பார்க்க உடன் வந்தார். அவர் சிறைக்கு உள்ளே வரவில்லை. வைகோவை, சென்னை மத்திய சிறைச்சாலை உள்ளே அழைத்துச் சென்றேன். அப்போதுதான் பிரபாகரனோடு வைகோவுக்கு முதல் சந்திப்பு நடந்தது.
இரண்டாவது முறை மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட்டபோது, ஆர்க்காடும் தி.மு.க. வேட்பாளராக அத்தேர்தலில் போட்டியிட்டார். வைகோ வெற்றி பெறுவதற்காக மாற்றுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை பெற நான் மேற்கொண்ட முயற்சிகளை வைகோவே பாராட்டியது உண்டு. இப்படி அவருடைய அரசியல் வாழ்க்கையில், அவரின் உயர்வுக்கு 80ல் துவக்கத்திலிருந்து பல முக்கியப் பணிகளுக்கு ஏணியாக இருந்துள்ளேன். ஆனால், பிரபாகரனை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று ஒரு வார இதழின் தொடரில் குட்டிமணியின் வழக்கறிஞர் கரிகாலன் எழுதியதை கூட வைகோ ரசிக்கவில்லை. 27 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற பழைய சம்வங்களை அசை போடும்பொழுது, பல சம்பவங்களைக் குறிப்பிட்டால் பலருக்கு வேதனை தரும்.
பிரபாகரனுடன் உடன் தங்கிய காலங்களுக்கு முன்பாகவே சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈழ தமிழர் பிரச்சினையில் பணியாற்றவும், அதன் உள் விவகாரங்களை கவனிக்கக் கூடிய வாய்ப்புகளும் கிட்டியது. அப்போது ஆரம்பக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் களப் பணியாளர்களாக பேபி சுப்பிரமணியம், கிட்டு, நேசன், சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான் ஆகியோர் தான் முதல் டீம். இவர்களுக்குப் பின் சீலன், புலேந்திரன் ஆகியோர் இரண்டாவது டீம். மூன்றாவது டீம் நடேசன், திலகர், கே.பி. போன்றோர். இவர்களோடு சென்னை நகரை களப் பணி ஆற்றிய காலங்களில் சுற்றியதும், உணவு உண்டதும் இன்றைக்கும் நினைவில் உள்ளது. பிரபாகரன், அலெக்ஸ் ஹேவியின் “ஏழு தலைமுறைகள்” என்ற நாவலை அடிக்கடி விரும்பிப் படிப்பார். அந்நாவலில் உள்ள, இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தரமாட்டார்கள் என்ற வரிகளை அடிக்கோடிட்டு வைத்திருப்பார்.
80களின் துவக்கத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை இரவு வைகோ சென்னைக்கு திரும்புவது வாடிக்கை. அப்பொழுது என்னிடம் அவர், விமான நிலையத்திற்கு வாருங்கள். பிரபாகரனை சந்திக்க வேண்டும் என்பார். இரவு 10 மணிக்கு அடையாறு, இந்திரா நகர் பிரபாகரன் வீட்டிற்கு இவரை அழைத்துச் சென்றால், பிரபாகரனும், பாலசிங்கமும் வைகோவை சந்திப்பதை தவிர்த்தார்கள். இதைச் சொன்னால் வைகோ கவலை அடைவார் என்பதற்காக, தூங்கிவிட்டார்கள் என சொல்லி பல சமயம் நான் சமாளித்துள்ளேன். வைகோவிற்கு இவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக, 1987இல் எனது வீட்டிற்கு வைகோவையும், பாலசிங்கத்தையும் அழைத்து பேச வைத்து, அவர்களோடு தொடர்பை ஏற்படுத்தியவன். இதற்காக என்னிடம் பல முறை தொலைபேசியிலும், நேரிலும் பேசியதை எல்லாம் வைகோ மறந்திருக்கலாம். அந்த சந்திப்பின் போது அடேல் பாலசிங்கம், பேபி சுப்பிரமணியம், நடேசன், யோகி, ஜானி போன்றவர்கள் இருந்தனர். அதற்குப் பிறகுதான் வைகோவிற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு நெருக்கம் ஏற்பட்டது.
மற்றொரு நிகழ்வு; 1983ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கொடூர கலவரத்தின் போது, ஈழ விடுதலை மாநாட்டை நியூயார்க்கில் டாக்டர் பஞ்சாட்சரம், டாக்டர் சத்யேந்திரா போன்றோர் நடத்தினர். அதற்கான பணிகளை தமிழகத்தில் நெடுமாறனும், நானும் மேற்கொண்டோம். அனைத்துக் கட்சித் தலைவர்களை அங்கு அனுப்ப ஏற்பாடு செய்த பொழுது, தி.மு.க. சார்பில் பேராசிரியர் வரவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், வைகோ அந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பினார். அவரை முதன் முதலாக ஈழப் பிரச்சினையில் உலக அளவில் பேச வைக்கின்ற பணியையும் முதலில் செய்தவன் அடியேன். இப்படி பல நிகழ்வுகளை சொன்னால் பக்கங்கள் காணாது.
22.9.1988 அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கிட்டுவை சந்திக்க வேண்டுமென வைகோ கூறினார். அதற்கும் ஏற்பாடு செய்தேன். அப்போது வைகோ, என்.வி.என். சோமு வந்தனர். கிட்டுவின் வழக்கு சம்பந்தமாக தேசிய பாதுகாப்புச் சட்ட விசாரணைக் குழுவின் முன் சற்குண பாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் ஆஜராக, வைகோவின் கோரிக்கையை ஏற்று கலைஞர் அனுமதி அளித்தார். உடனே வைகோ, இவர்கள் இருவரையும் விசாரணைக் குழு முன் ஆஜராக அழைத்துச் செல்லுங்கள் என்று என்னிடம் கூறினார். நீதிபதி கனகராஜ் தலைமையில் இருந்த அக்குழுவிடம், கிட்டுவின் நியாயங்களைச் சொல்வதற்காக, சற்குண பாண்டியனையும், சுப்புலட்சுமி ஜெகதீசனையும் அழைத்துச் சென்றேன்.
1989 ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அப்போது என்னிடம் நெருக்கமாக இருந்த இவர், 1989இல் கோவில்பட்டி தொகுதியில் நான் போட்டியிட்ட போது, தேர்தலில் என் மீது அக்கறை காட்டவில்லை என்பதை தேர்தல் களத்தில் அறிந்தேன். அன்றைக்கு வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்த நான், தோல்வி அடையக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டது யாரால் என்பதை அவரின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், ரகசியமாக இலங்கைக்குச் சென்றார். விடுதலைப் புலி தோழர்களிடம் தன்னை ஈழத்துக்கு இரகசியமாக அழைத்துச் செல்லுங்கள் என வைகோ கூறினார். இதில் அவர்கள் ஆர்வமாகவும், அக்கறையாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆயினும், இவரின் தொடர் வற்புறுத்தலுக்கு இணங்கி இவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். அப்போதே இச்செய்தியை அவர்கள் என்னிடம் சொல்லி விட்டார்கள். ஈழ ரகசியப் பயணத்தால் இவர் சாதித்தது ஒன்றும் இல்லை. அன்றைக்கு தமிழகத்தை ஆண்ட கலைஞருக்குத்தான் நெருக்கடியை தந்தது. குமரி அனந்தன் இந்தப் பிரச்சினையை சட்டப் பேரவையில் எழுப்பினார். அவர் ஈழம் செல்வது எனக்குத் தெரியக் கூடாது என வைகோ நினைத்தார். கலைஞருக்கு அவர் எழுதிய ரகசிய ஈழப் பயணக் கடிதத்தை என்னிடம் தராமல், வேறு ஒருவர் மூலம் கொடுத்து அனுப்பினார். அதற்கு முன் ஈழத் தமிழர் பிரச்சினையில் சின்ன செய்தியானாலும் என்னிடம் விவாதித்த வைகோ, கமுக்கம் காட்டினார். விடுதலைப் புலிகளோடு நெருக்கமாகி விட்டதால் என்னுடைய உதவி இனிமேல் தேவை இல்லை என்ற மனப்பான்மையை வைகோ கொண்டிருந்தார்.
துவக்கத்தில் இவருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பாலமாக இருந்த என்னை துண்டித்துவிடவும் விரும்பினார். இவை அவரது வாடிக்கை, பண்பு. எதிலும் சந்தேகம்; தன்னுடன் இருப்பவர்கள் ஆலமரத்தின் கீழ் உள்ள செடியாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். இவற்றை சொல்வது நாகரிகம் இல்லையென்றாலும், சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமார் பத்மநாதன், இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோதான் என அளித்த பேட்டியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கடந்த 22.8.2010 அன்று வெளியிட்டது. அப்பேட்டியில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரன் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதனை மார்க்சிஸ்ட் கட்சி மகேந்திரனே மறுத்தார். கலைஞர் அவர்களும் இதுகுறித்த உண்மைகளை குமார் பத்மநாதன் தெரிவிக்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டார். ஏனெனில், கலைஞர் அவர்களுக்கும், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கும் இலங்கையில் போர் நிறுத்தத்தால் நல்ல பெயர் கிடைத்து விடும். அது கூடாது என்ற நோக்கில் வைகோ, இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டாம் என கூறியதாக கே.பி. மூலம் கருத்துகள் வெளிப்பட்டன. இதையும் உடனே மறுக்காமல், மூன்று நாள்களுக்கு பின்பே வைகோ மறுக்கிறார். எந்த பிரச்சினையிலும் உடனே அறிக்கை விடும் வைகோ, இதற்கு தாமதம் காட்டியது ஏன் என்று தெரியவில்லை.
இதுகுறித்து அடியேன் நினைவுக்கு எட்டியவரை சில செய்திகள்; அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நடேசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொறுப்பாளர் மகேந்திரனிடம் பேசியது உண்மை. வைகோ அவர்கள், போர் நிறுத்தம் கூடாது. தொடர்ந்து போரை நடத்துங்கள். இப்போது என்ன போர் நிறுத்தத்திற்கு அவசியம்? அது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு பெருமையை சேர்க்கும் என்ற கருத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி தோற்று அடிவாங்கும். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். நான் நாடாளுமன்றத்தில் இருப்பேன். பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். நான் பார்த்துக் கொள்கிறேன் என திட்டவட்டமாக வைகோ கூறியது உண்மை.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கலைஞர் அவர்கள் ஈடுபாடு காட்டினால் அதை விமர்சிப்பதும், செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு உதவிகள் செய்தால் அது நிறைவேறாது என்று குறை கூறியதும் வைகோவின் மனசாட்சிக்கே நன்றாகத் தெரியும். கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினால் அதையும் விமர்சிப்பார். அடுத்து பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். அப்போது நான் பார்த்துக் கொள்கிறேன் என ஈழத் தமிழர்களிடம் பேசியது எல்லாம் அனைவரும் அறிவர். இவையெல்லாம் கடந்தகால நிகழ்வுகள்.
2009 மே மாதம் இலங்கையில் போர் உச்சத்தில் இருக்கும்பொழுது கலைஞர் அவர்கள் அண்ணா நினைவிடத்தில் உண்ணாநோன்பு இருந்ததை கேலி பேசியவர் வைகோ. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் கலைஞர் அவர்களுக்கும், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு பெருமையும், புகழும் கிடைக்கும்; தனக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற நிலையில் வைகோ போர் நிறுத்தம் கூடாது என்று அவருடன் நட்பில் இருந்த நடேசனிடம் பேசியது உண்மை. இதே நடேசன் என்னிடம் இதனை அப்படியே அப்போது கூறினார். கலைஞர் அவர்கள் விரும்பியபடி அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தால், பாசிச சிங்கள அரசின் கொடிய துயரங்களிலிருந்து ஈழத் தமிழர்கள் ஓரளவு பத்திரமாக இருந்திருப்பார்கள். என்ன செய்வது? கேட்பார் பேச்சைக் கேட்டு அழிவு ஏற்பட்டு விட்டது.
ஈழப் பிரச்சினையில் கலைஞரின் தொடர் நடவடிக்கைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். கலைஞர் அவர்கள் ‘டெசோ’ என்ற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பை 1985இல் உருவாக்கினார். அதில் பழ.நெடுமாறன், கி.வீரமணி, பார்வர்டு பிளாக் தலைவர் மறைந்த அய்யன் அம்பலம் ஆகியோரை உறுப்பினர்களாக்கி, அந்த அமைப்பு வேலூர், திருச்சி, கோவை, தூத்துக்குடி போன்ற இடங்களில் பெரிய மக்கள் திரள் பேரணி நடத்தியது. வேலூர் பேரணியின் போது, பழ. நெடுமாறன் கலைஞரிடம் சொல்லாமல் ரகசியமாக ஈழத்துக்குச் சென்றார். அப்போது கலைஞர், நெடுமாறன் எங்கய்யா? என்று தி.சு.கிள்ளிவளவனிடமும், என்னிடமும் கேட்டார். பதில் சொல்ல முடியவில்லை. அடுத்த நாள், நெடுமாறன் ஈழத்திற்கு ரகசியமாக செல்கிறேன் என்று எழுதிய அவரின் கடிதத்தை, ஆலிவர் ரோடு இல்லத்தில் கலைஞரிடம் வீட்டில் சேர்த்தபோது, என்னிடம் “அதற்குத்தான் நெடுமாறன் தாடி வளர்த்தாரா? முகத்தில் அலர்ஜி என்று கூறினாரா?” என கலைஞர் கேட்டார். மறுநாள் முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், ஈழத்துக்குச் சென்ற மாவீரன் நெடுமாறன் வீரத்தைப் போற்றுகிறேன்; பத்திரமாக தமிழகத்துக்கு திரும்ப வேண்டும் என்ற கவலை என்னை வாட்டுகிறது என எழுதினார்.
இறுதியாக 4.5.1986 அன்று ஈழத் தமிழர் நலன் காக்க அகில இந்திய டெசோ மாநாட்டை மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் வாஜ்பாய், என்.டி.ராமராவ், எச்.என்.பகுகுணா, ஜஸ்வந்த் சிங், ராமுவாலியா, உபேந்திரா, ராச்சய்யா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் கலந்து கொண்டனர். அத்துடன், ஈழத் தமிழர் தலைவர்கள் அமிர்தலிங்கம், சிவ.சிதம்பரம், சம்பந்தன், சந்திரஹாசன், ஈழவேந்தன் போன்றவர்களோடு, எல்.டி.டி.ஈ., டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈராஸ் போன்ற போராளி இயக்கங்களும் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் பாண்டியன் ஓட்டலில் நடைபெற்றது. அதில் தலைவர் கலைஞர், என்.டி.ஆர். ஆகியோர் போராளிக் குழுக்களுக்கிடையே சகோதர, பாச ஒற்றுமையை பாதுகாக்க கோரிக்கை வைத்தனர்.
ஈழத் தமிழர் தலைவர்கள் பாலசிங்கம், சந்திரஹசாசன், சத்தியேந்திரா போன்றவர்கள் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நாடு கடத்தியபோது, 24 மணி நேரத்தில் அதைக் கண்டித்து மாபெரும் பேரணியை சென்னையில் தலைவர் கலைஞர் அறிவித்தார். அந்தப் பேரணியின் எழுச்சிக் கண்டு நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்பவும் தமிழகம் அழைக்கப்பட்டனர். கலைஞர் பிறந்த நாள் விழா 3.6.1986 அன்று ஈழ தமிழர்களுக்காக உண்டியல் மூலம் கழக உடன்பிறப்புகள் கொடுத்த நிதியை தலா 50,000 வரை போராடும் அமைப்புகளுக்கு வழங்க திட்டமிட்டார். இப்படி பல சம்வங்களில், செய்திகளில், கலைஞரின் நடவடிக்கை இருந்துள்ளது.
வைகோ போன்றவர்கள் ஈழத் தமிழர்கள் பிரச்சினை தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று மார்தட்டி உரத்த குரலில் இப்போது பேசுவதும், அவர்களின் போராட்டம் சேப்பாக்கம் சாலை ஓரத்திலிருந்து வேறு எங்கும் நகர விடாமல் பார்த்துக் கொண்டதும் ஈழப் பிரச்சினையில் ஒரு பின்னடைவே. ஈழம் என்றால் தான்தான் என்ற வைகோவின் மமதையும் ஒரு காரணமாகும். மற்றவர்கள் ஈழப் பிரச்சினையில் ஏதாவது செய்தால் அதை ரசிக்கவும், பாராட்டவும், மனதளவில் வைகோ ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்.
வேலூர் சிறையில் ஈழப் பிரச்சினைக்காக, பொடா கைதியாக வைகோ இருந்தார். அந்த தியாகத்தை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அந்த ஒன்றை மட்டுமே கொண்டு, மற்றவர்கள் இப்பிரச்சினையை ஆர்வம் செலுத்தினால், அதை ஏற்றுக் கொள்ளாத போக்கு அவரிடம் இருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். யாரால் வேலூர் சிறைக்கு சென்றார்? அப்போது கலைஞர் குரல் கொடுக்கவில்லையென்றால் நிலைமைகள் என்ன மாதிரி ஆகி இருக்கும். ஆனால், இன்று ஈழப் பிரச்சினையில் நீலிக் கண்ணீர் வடிக்கும் ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு இவரது போராட்டக் குரல் ஒலிக்கிறது! என்ன வேடிக்கை!
பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த ஜெயலலிதாவை வைகோ கண்டித்ததுண்டா என்று சில மாதங்களுக்கு முன், கலைஞரின் கருத்துக் குறித்து ஒரு வார இதழின் நிருபர் கேட்ட கேள்விக்கு, கலைஞர் அவர்களைப் பார்த்து பழங்கதைகளைப் பேசக் கூடாது என்று சொல்லும் வைகோ, பொடா சிறையில் நான் இருக்குபொழுதே ஜெயலலிதாவை கண்டித்து விட்டேன் என்று சொன்னார். ஆனால் இப்பொழுதும் கண்டிக்கிறேன் என்று வாயில் வரவில்லையே? அன்று கண்டித்ததை இன்று கண்டிக்க முடியவில்லையா? ஏன்?
பழங்கதையை பேசும் பழைய வை.கோபால்சாமி அவர்களே, 1993இல் தங்களின் ஆதாயத்திற்காக விடுதலைப் புலிகளின் ஊர்ஜிதமாகாத திட்டத்தை குறித்து மத்திய அரசு அனுப்பிய கடிதம் பற்றிய சர்ச்சையில் பல சமயங்களில் இன்று வரை அரைத்த மாவைதானே நீங்கள் அரைக்கிறீர்கள். இதுவும் பழங்கதை இல்லையா? தேய்ந்து போன கிராமபோன் ரிக்கார்டு இல்லையா? இதையெல்லாம் பேசிவிட்டு கலைஞர் அவர்களைப் பார்த்து பழங்கதைகள் பேசுகிறார் என்கிறீர்களே. இது பைத்தியக்காரத்தனமில்லையா? இதைக் குணப்படுத்த குணசீலத்திற்கோ அல்லது ஏர்வாடிக்கோதான் உங்களை அனுப்ப வேண்டும். இந்தப் பிரச்சினையில் அன்றைக்கு தமிழகம் முழுவதும் 1993இல் ஓலமிட்ட தாங்கள், ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து கொண்டு அந்தக் கடிதத்தை அனுப்பிய நரசிம்மராவ் ஆட்சியைப் பார்த்து நாடாளுமன்றத்தில் கேட்டு இருக்கலாமே? அப்போது ஏன் தயக்கம் ஏற்பட்டது? விடிய விடிய தமிழகமெங்கும் ஒப்பாரி வைத்த தாங்கள் டில்லியில் இருக்கும்பொழுது ஒப்பாரிக்கு விடுமுறை விட்டீர்களே, ஏதாவது பயமா? நரசிம்மராவ் ஆட்சியில், ராஜீவ் படுகொலையின்போது உள்துறை அமைச்சராக இருந்த சவாணை பலமுறை பார்க்கப்போன தாங்கள் இதுகுறித்து பேச வசதியாக மறந்து விட்டீர்களா?
1983இல் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை பற்றி பேசுங்கள் என்று பொன்.முத்துராமலிங்கமும், நானும் குறிப்பிட்டபோது, வைகோ, தமிழ்நாட்டில் கூட்டங்களில் பேசி, கலைஞருக்கு சங்கடத்தை உருவாக்க வேண்டும் என்று அடித்துச் சொன்னார். இதுதான் தனக்கு அரசியல் என்றும் குறிப்பிட்டார்.
ஈழத் தமிழர்களுக்காக அப்படி உழைத்தேன், இப்படி உழைத்தேன்; வேறு யாரும் அவர்களைக் கவனிக்கவில்லை; நான்தான் செய்தேன் என பேசும் வைகோவே, உங்களை தமிழக மக்கள் எப்படி கவனித்தார்கள்? தேர்தல் மூலம் மக்கள் உங்களைப் புறக்கணித்தனரே! இதைவிடவா வேறு ஒரு குட்டு உங்களுக்கு வேண்டும்? 1996இல் அழகிரிசாமி (சி.பி.ஐ.), 2009இல் மாணிக்க தாகூர் (காங்கிரஸ்) என புதுமுக வேட்பாளர்களிடம், ஒரு கட்சியின் தலைவர் தோல்வி அடைந்தது பற்றி கவலைப்பட்டது உண்டா? ஒரு காலத்தில், மு.கண்ணப்பன், எல்.கணேசன், பொன்.முத்துராமலிங்கம், செஞ்சி இராமச்சந்திரன் போன்றவர்களோடு இணைந்து, கம்பீரமாக மேடைகளில் அமர்ந்த வைகோ, இன்று யாருடன் அமர்கிறார். இதையெல்லாம் பற்றி சிந்திக்காமல் உரத்த குரலில் ஏற்ற, இறக்கமாக பேசினாலே அரசியல் முடிந்துவிடும் என்று நினைப்பவரிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்.
90லிருந்து வைகோவுக்கு ஆதரவாளர்களாக இருந்து அவரைத் தூக்கிப் பிடித்தவர்கள் ஒவ்வொருவரையும் புறக்கணித்து நன்றி பாராட்டாமல் வெளியேற்றினார். வீடு கட்டும் தொழிலாளி, வீடு கட்டிய பின் வீட்டுக்காரரிடம் ஒப்படைத்து செல்வதை போன்று, எங்களை போன்றவர்கள் வெளியே நடையை கட்ட வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்தான் வைகோ. இன்றைக்கு அவருடன் இருக்கின்ற ஒரு சிலர் கூட, அறிவாலயத்திலிருந்து வந்தவர்கள் இல்லை. 98லிருந்து புதிதாக வந்தவர்களை கொண்டு ஒரு குழு மனப்பான்மையுடன் அரசியல் நடத்துகிறார். அந்த மனப்பான்மையால் தான், சிவகாசி, விருதுநகர் தொகுதிகளில் தேர்தலில் வைகோவிற்கு மக்கள் பலத்த அடியை கொடுத்து, அறிமுகமில்லாத புதுமுகங்களிடம் தோல்வி அடைய செய்தனர். இன்றைக்குத் தேர்தல் ஆணையமும் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான். இயற்கையே இவருக்கு பொறுத்தமான பதிலை தந்துள்ளது. எவ்ளவுதான் இவரைத் தூக்கிப் பிடித்தாலும், எந்த வகையிலும் இவர் தேற மாட்டார்.