தொன்மை மிக்க தமிழின வரலாற்றை தெரிந்துகொள்ள பற்பல சான்றுகள் உள்ளன. இலக்கியம், அகழ்வாராய்ச்சி, நடுக்கற்கள், சிற்பங்கள், நாணயங்கள், அணிகலன்கள், வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு இவை அனைத்தின் மூலம் நம்முடைய பண்டைய வரலாற்றை உறுதி செய்யலாம்.

பண்டைய நகரங்களான உறையூர், காவிரிப்பூம்பட்டினம், மதுரை, கொற்கை, தொண்டி, முசிறி, கரூர், மாமல்லபுரம், காஞ்சிபுரம் போன்ற பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டால் பல சான்றுகள் கிடைக்கும். கேரளாவில் உள்ள பட்டினத்தில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. அதியமானின் தகடூர், பாரியின் பரம்புமலை, தமிழகத்தினுடைய திருக்கோவில்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டவை ஆகும். அங்கும் கல்லில் செப்பேடுகள் உள்ளன. இதையெல்லாம் முறைப்படுத்தி ஆய்வு செய்து தொகுத்தால் தமிழனின் வரலாறு உலகை பிரமிப்பில் ஆழ்த்தும். இதுமட்டுமல்லாமல் கடல், நதி ஓரங்களிலும் இந்த அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

தென் கோடியில் திருநெல்வேலி அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் தோண்டி எடுக்கப்பட்ட பல பொருட்கள் யாவும் தமிழனுடைய 3,000 ஆண்டு தொன்மையை காட்டுகின்றது. ஆங்கிலேய தொல்லியல் அறிஞர்கள் 1872, 1876, 1903, 1914 என பல கட்டங்களில் நீண்ட ஆராய்ச்சிப் பணிகளை இங்கு மேற்கொண்டனர். இரும்பு, வெண்கலம், முதுமக்கள் தாழிகள் பெருமளவில் இவ்வாய்களில் கிடைத்தன. இந்த ஆராய்ச்சியை மேலும் விரிவாக்கம் செய்து, இதன் நிலைகளை எழுத்தில் பதிவு செய்தால் தமிழனுடைய வரலாறு மேலும் கீர்த்திப் பெறும்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்புலத்தில் பொருந்தல் ஆற்றின் இடக்கரையில் பழனியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள பொருந்தல் என்ற ஊரில் கடந்த 2009 மே மாதம் புதுவை பல்கலைக் கழகப் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஒத்துழைப்போடு இங்கு ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. மதுரைக்கும் சேர நாட்டின் வஞ்சிக்கும் இடையில் அமைந்துள்ளது இச்சிற்×ர். இவ்வூர் ‘வைகாவி நாட்டுப் பொருந்தல்’ என்றும் அறியப்படுகிறது. இங்கு சேரர்கள் குலதெய்வமாக வணங்கிய கொற்றவை உறையும் இடமான அயிரமலையும், ரோம நாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்ற சின்னகலையம்புத்தூர் அருகே உள்ளது. தாமரை குளமும், ராஜராஜபுரமும் இப்பகுதி வரலாற்றில் சிறப்புப் பெற்ற ஊர்களாகும். பொருந்தல் ஊருக்கு அருகிலுள்ள பாசிமேடுப் பகுதியில் 5.5 எக்டேர் பரப்பில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இங்கு கண்ணாடி மணிகளுக்கு மெருகேற்ற செய்யும் உலைக்களம் பூமியில் இருந்துள்ளது. இது முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய சாதனமாகும். சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், வெள்ளை போன்ற பல்வேறு வண்ண மணிகள் 2,000க்கு மேல் இங்கு கிடைத்துள்ளது. ஆகவே, ஆதியில் கண்ணாடி மணிகள் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலை இங்கு இருந்திருக்கலாம் என கருதுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் செங்கல் கட்டடம் பண்டைய காலத்தில் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. இத்தைகய அமைப்பு கொற்கை, அழகன்குளம், பூம்புகார், அரிக்கமேடு, உறையூர், கரூர் நகரங்களிலும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சேர பேரரசின் முசிறி துறைமுகம் அருகில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த கண்ணாடி மணிகளும், பொருந்தலையில் கிடைத்த மணிகளும் ஒன்றுபோல் காணப்பட்டதால், இங்கிருந்து மேலை நாடுகளுக்கு அவை ஏற்றுமதி ஆகியிருக்கும் என்றும் கருகின்றனர். அருகிலுள்ள பழநி வட்டாரத்திலுள்ள கல்வெட்டுகள் பல சிறப்புகளை சொல்கின்ற எழுத்துகளாக அமைந்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு கிடைத்த சங்ககால சதுர வடிவ செப்புக் காசு, சுடுமண் பொம்மை, தந்தத்தால் செய்யப்பட்ட தாயக் கட்டை, எடைக் கற்கள், மோதிரங்கள், காதணிகள் யாவும் முக்கிய அடையாளங்களாக தெரிகின்றன.

இந்த செப்பு காசுகளில் வில், அம்பு பொறிக்கப்பட்டிருப்பதால் இவை சேர நாட்டின் காசுகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சுடுமணல் பொம்மைகளில் ஆண், பெண் உருவங்கள் உள்ளன. கருப்பு, சிவப்பு மண் பாண்டங்கள், நான்கு கால்கள் கொண்ட ஜாடிகள், குவளைகள், குடங்கள் போன்றவை பொருந்தல் ஆய்வில் கிடைத்துள்ளது. நான்கு கால்கள் உள்ள மண் ஜாடியில் நெல் மணிகளும் கிடைத்தன. இவையாவும் கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது என்ற தகவல்களும் உள்ளது. இப்பகுதி மன்னர்கள் பேகன், பதுமன் போன்றோரின் ஆளுமையையும் சொல்கின்றது. இதுகுறித்து புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள இசைக் கல்வெட்டும் முக்கியமானதாகும். இதை ஆண்டிப்பாறை என மக்கள் அழைத்தனர். இக்குகையில் தமிழ் எழுத்துக்களை கொண்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்களை அசோகன் பிராமி என்று சொல்வர். ள, ழ, ற, ர போன்ற தமிழ் எழுத்துக்கள் இருப்பதால், இவை கி.பி.3ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என சுப்பிரமணிய அய்யர், மயிலை சீனி வேங்கடசாமி போன்றோர் குறிப்பிடுகின்றனர். இங்கு கிடைத்த ஒரு கல்வெட்டில் இசைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த சமண முனிவர்கள் இசையை அறிந்து வைத்திருந்தார்கள் என அறியப்படுகிறது. இத்தகைய இசைக் கல்வெட்டுகள் தமிழை தவிர வேறு எந்த மொழியிலும் காணப்படவில்லை என ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர், சுந்தரேசனார் போன்ற ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சங்க காலத்தில் சேரர், வேளீர் அரசர்களின் ஆட்சிகள் கொங்கு மண்டலத்தில் நடைபெற்றுள்ளது. பதிற்றுப்பத்தில் இப்பகுதியை பற்றிய செய்திகள் உள்ளன. பண்டைக் காலத்தில் வணிகம் மற்றும் தொழில்கள் இங்கு நடைபெற்றதாக வரலாறு சொல்கின்றது. பெரும் புலவர்கள் பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார், கடையேழு வள்ளல்களின் வரிசையில் இருக்கும் குமணன், பேகன் வாழ்ந்த பகுதியாகும். நன்னூலை எழுதிய சமண மதத்தைச் சேர்ந்த பவணந்த அடிகள், சிலம்புக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர். சங்ககால மன்னன் காமூர் காங்கேயம் பகுதியை ஆண்டார். புறநானூற்றில் இடம் பெற்றுள்ள பிட்டங்கொற்றன் இங்குள்ள குதிரை மலையில் ஆட்சி புரிந்துள்ளான்.

கபிலரையும், மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் பாடிய இளங்கீரனார் கொங்கு வட்டத்தைச் சேர்ந்தவர்.பதிற்றுப்பத்தில் கூற்றப்பட்டுள்ள அருங்களம் என்ற ஊர் சென்னிமலை அருகே கொடுமணலில் உள்ளது. இப்பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் செய்தபொழுது இரும்பு உருக்கு உலைகள், கல்மணி தொழிற்கூடங்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டது. 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாலையோடுகள் காணப்பட்டது. பாலக்காடு கணவாய் வழியாகவும், அரபுக் கடல் வாயிலாகவும் வெளிநாடுகளில் வணிகம் நடைபெற்றது என்று கூறுவதற்கு சான்றாக ரோமாணிய நாணயங்கள், பொள்ளாச்சி, வெள்ளலூர், சாவடிப்பாளையம் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. தமிழகத்திலேயே இங்குதான் அதிக அளவில் ரோமாணிய நாணயங்கள் கிட்டியுள்ளன. சேர மன்னனின் மரபை விளக்கும் வரலாற்றுச் செய்திகள் புகளூரிலும், அறச்சலூரிலும் உள்ளன. அதேபோன்று பேரூர், போளுவம்படி ஆகிய பகுதியில் நடைபெற்ற தொல்லியல் ஆராய்ச்சிகளில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வட இந்தியாவுடனான தொடர்பு குறித்த செய்திகளும் கிட்டியுள்ளது. சேரர்களின் தலைநகரமாக விளங்கிய கரூர்வஞ்சி அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வளங்கெழு முசிறி சேரர்களின் துறைமுகமாகவும், காலத்தால் சிறப்பு வாய்ந்த நகரமாகவும் விளங்கியது. 

கடல் மூழ்கிகள், புவியியல் கடலியல், தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு, கோவாவில் செயல்படும் ஆழ்கடல் ஆய்வு மையம் கடந்த பல ஆண்டுகளாக பூம்புகார் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் அண்மையில் செங்கற்களாலான கட்டுமானம், எழுத்துக்களுடன் கூடிய முதுமக்கள் தாழி, வண்ணப் பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கிரஹம் கான்காக் என்பவர் 2001ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஆய்வு செய்து பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானங்களை கண்டறிந்தார். இதன் மூலம் தமிழனின் நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்தைவிட முந்தையது என தெரியவருகிறது. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா வித்யாலயா பல்கலைக் கழகம், அருகிலுள்ள சிங்கடிவாக்கம் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டது. அப்போது, பழங்கால மனிதன் பயன்படுத்திய துளையிடும் கல், ஈட்டி போன் கல், சிறிய கல் ஆயுதங்கள் கிடைத்துள்ளன.

உலக அளவில் உருவ எழுத்து, ஒலி எழுத்து, சுருக்கெழுத்து என இருந்து வளர்ச்சிப் பெற்று தற்போதைய நிலையை எட்டியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மௌரிய மன்னன் அசோகன் தான் முதன் முதலில் எழுத்தை உருவாக்கினான் என்றும், அதற்கு பின்புதான் தமிழ் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் தமிழர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக்களை உருவாக்கியிருந்தனர். திருவண்ணாமலை, விழுப்புரம், கிருட்டிணகிரி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களில் பட எழுத்துக்களைக் காண முடியும். நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூர், கோவை மாவட்டம் சூலூரில் கிடைத்த சுடுமண் தட்டு, கொடுமணல், அழகன்குளம், மருங்கூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பானையோடுகள், கரூரில் கிடைத்த மோதிரம்; மதுரையில் கொங்கற்புளியக்குளம், விக்கிரமங்கலம் மலைகளில் காணப்படும் எழுத்துக்கள்; கேரளவின் எடக்கல் மலை, இலங்கை ஆனைக்கோட்டை செப்பு முத்திரை போன்றவற்றில் உள்ள தமிழ் எழுத்துக்களை கொண்டே தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள முடியும். ஆகவே, மிகவும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழையே, மௌரிய மன்னனும், திபேத்திய மன்னனும் பயன்படுதியிருப்பர் என்று கூறப்படுகின்றது. 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இப்படியான தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற செய்திகள் உள்ன. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டால் இன்னும் பல தரவுகள் நடக்குக் கிடைக்கும். இந்திய திருநாட்டின் வடபுலத்தில் பாடலிபுத்திரம், கன்னோஜி, உஜ்ஜயினி, இந்திரப்ரஸ்தம், தட்சசீலம் போன்ற ஒரு சில பெருநகரங்களையே சிறப்பாக சொல்ல முடியும். ஆனால் பண்டைய தமிழகத்தில் சிறிய நிலப் பரப்பிலேயே சிறப்பு வாய்ந்த நகரங்களாக, தெற்கேயிருந்து களக்காடு, திருச்செந்தூர், மணப்பாடு, உவரி, கொற்கை, பழைய காயல், ஆதிச்சநல்லூர், தென்காசி, திருவில்லிப்புத்தூர், இராமநாதபுரம், மதுரை, தொண்டி, உறையூர், கரூர், முசிறி, காங்கேயம், காவிரிப்பூம்பட்டினம், மாமல்லபுரம், காஞ்சி, தகடூர், பரம்புமலை என வரலாற்றை சொல்லும் எண்ணற்ற நகரங்கள் இருந்துள்ளன. இதிலிருந்து வடபுலத்து நாகரிகத்தைவிட தமிழனின் நாகரிகமும், ஆளுமையும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.

வடக்கில் மகதப் பேரரசு, மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, முகலாயப் பேரரசு என பெரிய பேரரசுகள் இருந்திருந்தாலும், அத்தகைய நிலப்பரப்பைவிட தமிழகத்தில் அமைந்த சிறியப் பரப்பில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சி மேலோங்கிதான் இருந்துள்ளது. ஆனால் தமிழனுடைய வரலாறு சரியாக, சீறாக, நேராக எழுதப்படாததால், ஏதோ குப்தர் காலம் தான் பொற்காலம் என்றும், மௌரியப் பேரரசு பலம் வாய்ந்தது என்பது போலவும் கூறப்படுகின்றது. சரியான தரவுகள் இல்லாததால் தமிழனுடைய சிறப்பை சொல்ல முடியாமல் போய்விட்டது. எனவே, இத்தகைய அகழ்வாய்வு, கல்வெட்டு, சிற்ப ஆய்வுகள் மேலும் வளர வேண்டும். இவையாவும் அரசியல், வட்டாரம் போன்ற அனைத்து மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடைபெற வேண்டிய நடவடிக்கை ஆகும். இதுகுறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.