உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறுதொழில்களுக்கு 1991ஆம் ஆண்டில் இருந்து சேதாரங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, கையினால் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி தொழில்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், செய்யாறு, திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், துறையூர் போன்ற பகுதிகளில் இத்தொழில் நடைபெற்று வருகின்றது. இத்தொழிலுக்கு கடந்த காலங்களில் பல பாதிப்புகள் வந்தன. 1989, 1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் தலைவர் கலைஞர் அவர்களின் கழக அரசு தொடர்ந்து, சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவு கரம் கொடுத்து காத்து வருகின்றது. சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் பல சமயம் அப்போது ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவை சந்திக்க முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள், தனது ஆட்சிக் காலங்களில் இந்த பிரதிநிதிகளை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அவற்றுக்கான தீர்வுகளையும் கண்டவர். இன்றைக்கு கழக ஆட்சியினால் பல நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு, அத்தொழில் புத்துயிர் பெற்றுள்ளது.

 1989ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் இத்தொழிலுக்கு விதிக்கப்பட்டிருந்த 3 சதவீத விற்பனை வரியை நீக்கினார்.


 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட 2 சதவீத விற்பனை வரியை, 1996இல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தலைவர் கலைஞர் அவர்கள் அறவே ரத்து செய்தார். அதே காலகட்டத்தில் சிறு தீப்பெட்டி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு தீப்பெட்டி இறக்குமதி செய்யப்படுவதை மத்திய அரசின் மூலமாக தடை செய்தார்.

 2006இல் ஆட்சிக்கு வந்தவுடன் இத்தொழிலுக்கு தேவைப்படும் மூலப்பொருளான குளோரைட் தட்டுப்பாடு இருந்ததை போக்கும் வகையில் புதுவை மாநில காரைக்காலிலிருந்து பெறவும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யவும் மத்திய அரசின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கு சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்து தீர்மானங்களும் நிறைவேற்றி உள்ளனர்.


 இத்தொழிலுக்கு இருந்த 8 சதவீத கலால் வரியை நீக்கக் கோரி தலைவர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இது நிலுவையில் உள்ளது. 2007இல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் செய்யும் தீப்பெட்டிக்கு ஏற்றுமதி ஊக்கத் தொகையை 7 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக கூடுதலாக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.


 அ.தி.மு.க. ஆட்சியில் சிறு தீப்பெட்டி தொழிலாளர்களின் நலனை கண்டு கொள்ளாமல், அவர்கள் மீது வரிகளைதான் போட்டு தீட்டியது. கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்களுக்கு ஜீவனம் தரும் இத்தொழில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான் புத்துயிர் பெற்றதுடன், இவர்களது வாழ்வில் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. துணை முதல்வர் தளபதி அவர்களின் கவனமும், பார்வையும் இத்தொழிலின் மீது உண்டு.

ஆதியில் சிவகாசி அய்யா நாடார் குடும்பத்தினர் கல்கத்தா மற்றும் வடபுலத்திலிருந்து இத்தொழிலை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாகத் தொடங்கினர். இங்கு வந்து கொள்முதல் செய்த வியாபாரிகள் உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் தற்பொழுது இத்தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் வட மாநிலங்களுக்குச் செல்கின்ற உற்பத்தி அளவும் குறைந்துவிட்டது.

ராட்சச இயந்திரங்களைக் கொண்டு வசதி படைத்தவர்களால் தீப்பெட்டி உற்பத்தி செய்கின்ற ஆலைகள் வேகமாக வளர்ந்து வருவதால் கையினால் செய்யப்படுகின்ற தீப்பெட்டித் தொழிலுக்குப் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படுகின்ற இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்களில் விம்கோ தீப்பெட்டி ஆலை 13 சதவீதம், மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவீதம், கையினால் செய்யப்படும் தீப்பெட்டி ஆலைகள் 69 சதவீதம் என கடந்த காலங்களில் உற்பத்தியை வழங்கி வந்தன. ஆனால் இப்போது பல தனியார் இயந்திர ஆலைகள் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றன. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகளும் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் ஒரு நாளைக்கு தேவையான இரண்டு லட்சம் பண்டல்களை உற்பத்தி செய்ய 2,45,000 தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதனால் வேலை வாய்ப்புக் கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயமாக்கல் நிலையினால் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக் குறைந்துவிட்டது.

இதுமட்டுமல்லாமல், தீப்பெட்டி உற்பத்தி செய்ய நாற்பது மூலப்பொருள்கள் அவசியம். அவற்றினுடைய விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ வஜ்ஜிரம் ரூ.85லிருந்து ரூ.100 ஆகவும், ஒரு கிலோ பைக்ரோமெட் ரூ.75லிருந்து ரூ.100 வரையும், ஒரு கிலோ மெழுகு ரூ.19லிருந்து ரூ.32 ஆகவும் தீப்பெட்டிக்குத் தேவைப்படுகின்ற கேரளத்திலிருந்து வருகின்ற குச்சிகளின் விலை ஒரு குவிண்டால் ரூ.1,100லிருந்து ரூ.1,300 ஆகவும் அதிகரித்து விட்டன. இதனால் கையினால் செய்யப்படுகின்ற தீப்பெட்டி பண்டல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டிகளின் விலையும் அதிகரிக்கின்றது. இத்தொழிலுக்குத் தேவையான குளோரைடு என்ற மூலப்பொருள் அவ்வப்பொழுது கிடைக்காமல் பற்றாக்குறையாகவும் இருந்தது.

தீப்பெட்டித் தொழிலை மேம்படுத்தும் விதமாக, தலைவர் கலைஞர் அவர்களின் பரிந்துரையை ஏற்று, ‘கிளஸ்டர்ஸ்’ எனப்படும் ‘குழும தொழில் பொது பயன்பாட்டு மையங்களை’ அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விருதுநகர் அருகே உள்ள மேலவள்ளிக்குளம் கிராமத்தில் வரும் ஜனவரி மாதம் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில், மத்திய அமைச்சர் தின்சா படேல் கலந்துகொண்டு ஆறு மையங்களை துவக்கி வைக்க உள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த தீப்பெட்டி தயாரிப்பில் 30 சதவீதம் வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கிளஸ்டர்கள் எனப்படும் குழும தொழில் பொது பயன்பாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஒரே மாதிரியான பொருள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் அதே பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சிறு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, ஒரே குழுமமாக ஆக்கி, அந்த தொழிலின் ஆதாரம், உற்பத்தி, வர்த்தகம் போன்றவற்றை மேலும் வலுப்படுத்துவதே கிளஸ்டர்கள் அமைக்கப்படுவதன் நோக்கம். இதன்மூலம் போட்டிகளை சமாளிப்பது மட்டுமல்லாது, உற்பத்தி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றையும் மேம்படுத்தி விரிவுபடுத்தவும் முடியும். இந்த வகையில் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கவலையைப் போக்கும் வகையில் தலைவர் கலைஞர் அவர்களின் அனுதாபமும், பரிவும் உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 3,537 கையினால் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி தொழில் முனைவோர் இயங்கி வருகின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கென ஆறு இடங்களில் கிளஸ்டர்கள் அமைக்கப்படவுள்ளன. தென் தமிழகத்தில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருவில்லிபுத்தூர் மற்றும் கழுகுமலை ஆகிய இடங்களிலும், வட தமிழகத்தில் குடியாத்தத்திலும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கழக ஆட்சியின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசின் குழும தொழில் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகம், இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தினை மையமாகக் கொண்டு விருதுநகர், சாத்தூர், திருவில்லிபுத்தூர், கோவில்பட்டி, கழுகுமலை ஆகிய ஐந்து இடங்களில் குழும தொழில் பயன்பாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த மையங்கள் வரும் 10ஆம் தேதி துவக்கி வைக்கப்படவுள்ளன. 

இந்த கிளஸ்டர்கள் அமைப்பதற்கு, அத்திய அரசு மானியமாக 75 சதவீதமும், தமிழக அரசு மானியமாக 10 சதவீதமும், குழுமத் தொழில் அங்கத்தினர் பங்குத் தொகையாக 10 சதவீதமும், வங்கிக் கடனாக ஐந்து சதவீதமும் வழங்கப்படவுள்ளது. விருதுநகரில் அமைக்கப்படும் கிளஸ்டருக்கு, மொத்தம் ஒரு கோடியே 56 இலட்சம் ரூபாய் என திட்டமிடப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு 85.54 இலட்ச ரூபாயும், மாநில அரசு 10.73 இலட்ச ரூபாயும், குழுமத் தொழில் அங்கத்தினர் 34.73 இலட்ச ரூபாயும் பங்கிட்டுக் கொள்ளப்படும்.

தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப் பொருட்களான பொட்டாசியம் குளோரைட் மற்றும் மெழுகு போன்றவை, கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. கிளஸ்டர்கள் ஏற்படுத்துவதன் மூலம் மூலப்பொருட்கள் கிட்டங்கியும் உருவாக்கப்படும். இதன்மூலம் அரசாங்கத்தின் உதவியோடு, நியாயமான விலையில் மூலப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தொழில் முனைவோர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க முடியும்.

பல பெயர்களில் இயங்காமல் ஒரே மாதிரியான லேபிள் ஒட்டப்பட்டு, சர்வதேச அளவிலான வர்த்தகப் போட்டியில் கலந்து கொள்ளுமளவுக்கு, கையினால் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியின் தரமும், உற்பத்தியும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இத்தொழிலைச் சார்ந்தவர்கள் வைகோ போன்றவர்களிடம் கோரிக்கை வைத்தும் எதுவும் நடக்கவில்லை. கடந்த வாரம் கோவில்பட்டியில் சம்பந்தபட்ட உற்பத்தியாளர்களை சந்திக்கும்பொழுது, “50 ஆண்டுகளாக இந்த கரிசல் காட்டில் பலருக்கு பிழைக்க வழி தந்த இத்தொழில் அழிந்து போய்விடுமோ என்று பயந்தோம். ஆனால், தலைவர் கலைஞர் அவர்கள் தாம் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சமயமும், எங்களையும் கவனத்தில் கொண்டு எஙகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பது மிகவும் ஆறுதலாக உள்ளது. இந்த சிறு தீப்பெட்டி தொழில் முற்றிலும் அழிந்து விடாத வகையில் கிளஸ்டர் முறை எங்கள் வாழ்வில் ஒளியேற்றும்” என்று சொன்னார்கள்.

இந்த பிரச்சினையில் இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இருப்பினும், தலைவர் கலைஞர் அவர்கள், இவர்களின் பிரச்சினைகளை சென்னை கோட்டையிலிருந்து அறிந்து போக்கிட, பல்வேறு பணிகளுக்கு இடையில் கவனத்தில் கொண்டு ஆற்றிய பணியை தென் தமிழகத்திலுள்ள இலட்சகணக்கான சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நன்றியோடு பார்க்கின்றனர்.