“முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அணை பலமாக உள்ளது என்றும், தமிழ்நாடு முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரையில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று அளித்தத் தீர்ப்பை மதிக்காமல் அதை மறுத்து, கேரள அரசு ஒரு சட்டத் திருத்தமே கொண்டு வந்து நிறைவேற்றியதை எடுத்துக்காட்டி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பினை உதாசீனப்படுத்தும் வகையில் கேரள அரசு நிறைவேற்றிய திருத்தச் சட்டத்திற்கு உடன்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்ற அளவில் தமிழக அரசின் வழக்கையே திசை திருப்பி; மீண்டும் ஒரு ஆய்வு நடத்துவோம் என ஐவர் குழுவினை தற்போது உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பதை நாம் மறுக்காவிடினும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. காரணம், இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றச் சார்பிலும் 7 பேர் கொண்ட மிட்டல் குழு சார்பிலும், அணை வலுவாக உள்ளது என்று ஏற்கனவே எடுத்துரைத்திருக்கும் உண்மையினை மீண்டும் திரும்பத் திரும்ப எடுத்துரைக்கும் வகையில் ஐவர் குழுவில் தமிழக அரசின் சார்பில் இடம் பெறுவது தேவையில்லை என்று இப்பொதுக்குழு உறுதியாகக் கருதுகிறது.”

 தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஐவர் குழுவில் நாம் இடம் பெறுவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கின்ற தீர்மானம் இது. நம்முடைய கழகப் பேச்சாளர்களின் பேச்சுக்களானாலும் மற்றும் அமைச்சர்களுடைய பேட்டியானாலும் அதை தெளிவுபடுத்த வேண்டியது; பலமுறை இதுபற்றி சிந்தித்து விவாதித்து இரண்டு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு எல்லா குழுக்களுமே இந்த அணை பலமாக இருக்கிறது என்று சொன்னபிறகும் மறுபடியும் இன்னும் ஒரு ஐந்து பேர் வந்து அணையை தட்டிப் பாருங்கள் பலமாக இருக்கிறதா இல்லையா என்று சொல்லுவது ஏற்கத்தக்கதல்ல என்றும்; ஆகவே இந்த நாடகத்திலே நாங்கள் வேடதாரிகளாக இருக்க விரும்பவில்லை என்றும், நாங்கள் இந்தக் குழுவிலே பங்கு பெறமாட்டோம் என்றும் திட்டவட்டமாக இந்த பொதுக்குழுவின் மூலம் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்வதுதான் இந்த தீர்மானம்.

 முதல்வர் தலைவர் கலைஞரின் பேச்சு

செக்கு மாடு சுற்றி வந்த கதை போல் ஆகிவிட்டது முல்லைப் பெரியாறு பிரச்சினை. உச்சநீதிமன்ற பரிந்துரையின் பேரில் பல குழுக்கள் அமைத்து அணையின் பலத்தை பல முறை சுத்தியல் போட்டு அடித்து, வல்லுநர்கள் ஆய்ந்து விட்டனர்.

மத்திய நீரியல் துறை தலைவர் கே.சி.தாமஸ் தலைமையில் 1979ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் மத்திய அரசின் பொறியில் வல்லுநர்கள், தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் பொறியியல் வல்லுநர்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு அணையை முழுவதுமாக பரிசோதித்துவிட்டு அணை மிக பலமாக உள்ளது என கூறியது. இருப்பினும் புதிய அணை கட்ட வேண்டுமெனில், அதற்கான கால அவகாசம் மற்றும் பல சிக்கல்கள் உள்ளதால், அணைக்கு முட்டு கொடுக்கும் வகையில் ஒரு அணை கட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய நீரியல் துறையின் ஆலோசனைபடி, தமிழக அரசு சார்பில் ரூ.26 கோடி செலவில் ஒரு முட்டு அணை கட்டப்பட்டது. இதற்காக ஜப்பானிலிருந்து வலிமைமிக்க கம்பிகள் இறக்குமதி செய்யப்பட்டன. இவ்வாறு முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டது. இதற்கு பிறகும் நியாயமற்ற வகையில் புதிய ஒப்பந்தம் வேண்டும் என கேரளம் கேட்டது. அணையின் நீர் மட்டமானது ஆண்டுக்கு 20 அல்லது 30 நாட்கள் மட்டுமே 142 அடியை எட்டும். மற்ற காலங்களில் 120 அடிக்கு குறைவாகவே இருக்கும்.

டாக்டர் எஸ்.எஸ். பிரார் தலைமையில், வட மாநிலத்தவர் 12 பேர் அடங்கிய மற்றொரு குழு அணையை மேற்பார்வையிட்டு அணை மிக பலமாக உள்ளது எனவும், அணையில் 145 அடி உயரம் வரை நீரைத் தேக்கலாம் என்றும் மத்திய நீரியல் துறைக்கு அறிக்கை அளித்தது. இக்குழுவின் அறிக்கையை கேரள அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர், டி.கே.மித்தல் தலைமையில், 11 பேர் கொண்ட குழு பல்வேறு கோணங்களில் அணையை சோதனை செய்து, அணை மிக உறுதியாக இருப்பதாகவும், மிகக் குறைந்த அளிவில்தான் நீர் கசிவு உள்ளது என்றும் அறிக்கை சமர்ப்பித்தது. இதனையும் கேரளா நிராகரித்து விட்டது. கேரள அரசே தன்னுடைய கடற்படையினரை கொண்டு ஆய்வு செய்தது. இக்குழு நீரில் மூழ்கி எக்கோ சோதனை போன்ற பல ஆய்வுகளை செய்தது. அணை பலமாக உள்ளதாகவும், சுமார் 10 அடி அளவுக்கு சேரும் சகதியுமாக உள்ளது என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இக்குழுவின் முடிவையும் கேரளா ஏற்றுக் கொள்ளாது என வீம்பாக மறுத்து விட்டது.

இப்படி குழுக்கள் தொடர்கதை. திரும்பவும் ஒரு ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் தற்பொழுது அமைத்துள்ளது. இதை தீர்க்கமாக தி.மு.க. அரசு ஏற்காது என்று முதல்வர் கூறியுள்ளதில் உள்ள நியாயங்களை உணர வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசு, மறுத்தோ அல்லது மதிக்கத் தவறுகிறதோ என்று யாரும் எண்ணிவிட முடியாது. தி.மு.க. தனது பொதுக் குழுவில் நீதிமன்றத் தீர்ப்பை என்றும் மதிக்கும் என வெளிப்படையாக முதல்வர் சொல்லி உள்ளார். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் காவு போனது மட்டுமல்லாமல், கிடைக்க வேண்டிய நியாயங்கள் தாமதப்பட்டும் கிடைக்காமல் இருக்கின்ற ஆதங்கத்தில் முதல்வர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்; தி.மு.க.வை நாளேடுகளில் விமர்சிக்கும் ஒருவரை லாண்ட் மார்க் புத்தகக் கடையில் சந்தித்தபொழுது, முதல்வர் தலைவர் கலைஞரின் இந்த நடவடிக்கையை மனபூர்வமாக பாராட்டினார். பத்திரிகையாள நண்பர்களும் இது சரியான முடிவு என்கின்றனர்.

தொடர்ந்து உண்மைக்கு மாறான பல தவறான குற்றச்சாட்டுகளை கூறி கேரளம் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்தை தடுத்து வருகின்றது. அவை;

1. 100 ஆண்டு முன்பு கட்டப்பட்ட அணை பாதுகாப்பற்றது; உடைந்துவிடும்

2. அணை உடைந்தால் கேரளாவில் மூன்று மாவட்டங்களுக்கு சேதம் ஏற்படும்

3. 999 ஆண்டு ஒப்பந்தம் என்பது பொய்யானது; 99 ஆண்டில் 

9 சேர்ந்து கொண்டது

4. குமுளியில் உள்ள குடியிருப்பு பகுதி நீரில் அழிந்துவிடும்; 

5. கல் உடைப்பதினால் வன மிருகங்கள் ஓடிவிடும்

6. பூர்வகுடிகள் குடியிருப்பு நீரில் மூழ்கி விடும்

7. 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்தினால் காடுகள் அழிந்துவிடும்

8. 136 அடிக்கு மேல் தண்ணீர் மட்டத்தைக் கூட்டினால் புற்கள் நீரில்

மூழ்கியதினால் மானினம் அழிந்துவிடும். மான்களை வேட்டையாட முடியவில்லையென புலிகள் எண்ணிக்கை குறைந்துவிடும்

9. நீர் மட்டத்தை உயர்த்துவதினால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கும்

10. நாட்டின் விடுதலைக்குப் பின் 1886ஆம் ஆண்டு ஒப்பந்த காலம்

முடிந்துவிட்டது

11. பாதுகாப்பற்ற நிலையில் அணை உள்ளது; எனவே, புதிய ஒப்பந்தத்தின் மூலம்

புதிய அணையை நிர்மாணிக்க வேண்டும்.

12. 45,000 கோடி ரூபாய் மதிப்பிட்டில் மூன்று மாவட்ட மக்களுக்கு காப்பீடு 

செய்ய வேண்டும்

13. ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் தமிழகம் கேரளாவுக்கு அளிக்க வேண்டும்

14. மின்சாரத்தில் ஒரு பகுதிக்கான பணம் கேரளாவுக்கு வேண்டும்

கேரள அரசின் எம்.கே. பரமேஸ்வரன் நாயர் செயற் பொறியாளராக இருந்த பொழுது அதன்படி, முல்லை பெரியாறில் 136 அடி வரை நீரை தேக்கினால், மீதம் உள்ள 16 அடி நீர் இடுக்கி அணைக்கு வந்து சேரும். அதை பயன்படுத்தி இடுக்கி அணையில் மின் உற்பத்தியை மேம்படுத்தலாம் என திட்டமிட்டு கேரள அரசுக்கு சொன்னதனால் தேவை இல்லாமல் உண்மைக்கு மாறாக கேரள அரசு பேச ஆரம்பித்தது. 

முல்லைப் பெரியாறின் நதி மூலம் நெல்லை மாவட்டம், சிவகிரி சுந்தரவனப் பகுதியிலிருந்து வடக்கு முகமாக சேத்தூர், வத்திராயிருப்பு, கொடிக்குளம், சிங்கிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில், 1,830 மீட்டர் உயரத்தில் பெய்யும் மழையே முல்லைப் பெரியாறின் உற்பத்தி ஸ்தலம். தமிழகத்திலிருந்து உற்பத்தியாகின்ற நதியைப் பெற நமக்கு எவ்வளவோ சிக்கல்கள். ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பொழுது, தன்னுடைய சொந்த முயற்சியில், பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் பென்னிகுயிக் இந்த அணையை கட்டி இம்மாவட்டங்களுக்கு அர்ப்பணித்தார். 

முல்லைப் பெரியாறு பிரச்சினை 197879வாக்கில், தமிழகத்தில் எம்.ஜி.ஆரும் கேரளத்தில் அச்சுதமேனனும் முதல்வர்களாக இருந்தபொழுது துவங்கியது. கேரளா முன்னுக்குப்பின் முரணாகவும் வாய்மையற்ற முறையில் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை மூடி மறைத்து உண்மைக்கு மாறாக 99 வருடம்தான் ஒப்பந்தம் என கருத்துகளை துணிச்சலாகச் சொல்லத் துவங்கியது. 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 1.11.1956இல் தான் தற்போதைய கேரள மாநிலம் உருவானது. தேவிகுளம், பீர்மேடு பகுதியில் 4 தமிழர்கள், குமரி மாவட்டத்தில் 11 தமிழர்கள், புதுக்கடையில் 6 தமிழர்கள் என பலரை கேரள போலீஸார் சுட்டு வீழ்த்தினர். தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழகத்தோடு இணைந்திருந்தால் இப்போது ஏற்பட்டிருக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை ஏற்பட்டிருக்குமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அணை பலவீனமாக இருக்கிறது என்று பொய்யான பத்திரிகை செய்திகள், சி.டி.க்களை உருவாக்கி கேரள அரசு உலவவிட்டது. மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் தவறான கருத்துகளை எடுத்து வைத்தது. திருவனந்தபுரத்தில், 25.11.1979 அன்று, அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும், அன்றைய கேரள முதல்வர் அச்சுதமேனனும் சந்தித்து பேசியதன் விளைவாக ஏற்பட்ட ஒப்பந்தத்தில் தமிழகத்தின் உரிமைகள் யாவும் விட்டுக் கொடுக்கப்பட்டன. இக்கூட்டம் மத்திய நீரியல் துறை தலைவர் கே.சி.தாமஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பொதுப்பணித் துறை பொறியாளார் ஜார்ஜ் மாத்யூ, உன்னிகிருஷ்ணன், பொதுப்பணித் துறை அமைச்சர் ராஜா முகமது, தலைமைச் செயலாளர் பத்மநாபன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சிரியாக் போன்றோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கேரளத்தை சார்ந்தவர்களே மிகுதியாக இருந்த காரணத்தினால் கேரளத்தின் குரலே ஓங்கி ஒலித்தது. அப்போது தமிழகம் இழந்த உரிமைகள்:

 ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னர் அணையின் 48 அடி தண்ணீர் தமிழகத்தின் பயன்பாட்டில் இருந்தது. ஒப்பந்தத்திற்கு பின்னர் 3இல் 2 பங்கு தண்ணீர் கேரளத்தின் இடுக்கி அணைக்கு சென்றது. மீதம் உள்ள 1 பங்கு தண்ணீரே தமிழகத்திற்கு கிடைத்தது.

 அணையின் பாதுகாப்பினை கேரளாவே ஏற்றுக் கொண்டது. ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீசாருக்கு தமிழக அரசு ஊதியம் கொடுக்கிறது.

 அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்டது.

 தமிழ்நாட்டின் கட்டுபாட்டிலிருந்து குமுளி அணை வரைக்குமான சாலையை கேரள அரசு தனது கட்டுபாட்டில் கொண்டு வந்துவிட்டது. 

 அணையில் மீன் பிடிக்கும் தமிழகத்தின் உரிமையும் பறிபோனது.

 போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு போன்றவற்றை தமிழகம் முற்றிலும் இழந்து விட்டது.

 ஒப்பந்தத்திற்கு முன்பு அணைக்கு கேரள அரசு அதிகாரிகள், தமிழக அரசின் அனுமதி பெற்றுதான் செல்ல முடியும். ஆனால் நிலைமைகள் மாறி தற்போது தமிழக பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு முன் சோதனை சாவடி ஒன்றை கேரள அரசு அமைத்து, வரி வசூலித்து பின்னர்தான் அனுமதி அளிக்கப்படுகின்றது.

 தமிழக பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பல ஏக்கர் இடத்தில் கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து பல கட்டடங்களை கட்டியுள்ளது.

 படகில் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளானாலும், அலுவலரானாலும் சோதனைச் சாவடியில் பெயர் பதிவு செய்துவிட்டுதான் செல்ல முடியும். தமிழகத்திற்கு என தனி பாதை ஒன்று அமைக்க எவ்வளவோ முயற்சித்தும் இன்று வரை இயலவில்லை.

 அணைக்கட்டில் தனியாக வயர்லஸ் செட் மற்றும் தனி நீர் மட்ட அளவுகோல் போன்றவற்றை பயன்படுத்தி கொண்டு கேரளா நமது உரிமைகளை பறித்துக் கொண்டுள்ளது.

 அணைக்கு அருகில் உள்ள வன விருந்தினர் விடுதி மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கு வந்து கொண்டிருந்த மின்சாரத்தையும் கடந்த பத்து ஆண்டு காலங்களில் பறித்து கொண்டு விட்டனர்.

இவ்வாறான நிலையில் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வல்லான் வகுத்த வழி என்ற நிலைப்பாட்டில் கேரளா தவறுக்கு மேல் தவறு செய்தது. அணையை பலப்படுத்தும் பணியானது 1980ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு போட்ட முட்டுகட்டைகளாலும், வனத்துறையினரின் தொல்லைகளாலும் அப்பணி 18 ஆண்டுகள் வரை காலம் தள்ளி, 1998இல் முடிவுற்றது.

1989இல் தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து, இன்றைய முதல்வர் இதுகுறித்து ஆய்ந்து தீர்க்க முற்பட்டார். ஆனால் தி.மு.க. ஆட்சி 1991 ஜனவரி வரை இருந்தது. அதற்குப்பின் 1996ஆம் ஆண்டில் திரும்பவும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க துவங்கியது.

தமிழக அரசு, கேரளாவுக்கு 30க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளது. 2001ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் தலைவர் கலைஞரும், கேரள முதல்வர் ஈ.கே.நாயனாரும் திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் தமிழகம் திரும்பிய முதல்வர் சென்றோம், விருந்துண்டோம், வெறுங்கையோடு வந்தோம் என மிகவும் மனம் வருந்தி சொன்னார். பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. 136 அடிக்கு மேல் நீரை தேக்கக் கூடாது என்பதில் கேரளா குறியாக இருப்பதால் இனி பேசி பயனில்லை என்ற காரணத்தால் உச்சநீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு.

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால், அது உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் மாதிரி கேரள முதல்வர் அச்சுதானந்தம் தற்போது செயல்படுகிறார். பூகம்பம் ஏற்பட்டு விடும்; வெள்ளம் வந்துவிடும் என்பது போன்ற காரணங்களையே கடந்த 30 ஆண்டு காலமாக கேரளா சொல்லிக் கொண்டு வருகிறது. ஏற்கனவே அணையின் கட்டுமானத்தின் பலத்தை பற்றியும், அதன் கால நிலைகளை பற்றியும் நிபுணர்கள் அளித்த அறிக்கைகளைக் கொண்டு உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கிய பின்னர், கேரளா கூப்பாடு போடுவது வீண் வெட்டி வேலையாகும்.

இன்னொரு குற்றச்சாட்டினையும் கேரளம் கூறுகிறது. அணையின் நீர்மட்டம் அபாய நிலைக்கு மேல் உயர்ந்துவிடும் பட்சத்தில், தமிழகத்தின் தேவைக்கு போக மீதம் உள்ள நீர் வடிய போதிய வசதிகள் அணையில் இல்லை என்று சொல்லி வருகிறது. 36 அடி அகலம், 16 அடி உயரம் கொண்ட உபரி நீர் வழிந்தோடக் கூடிய குகஐஃ ஙிஅஙு 10 இருக்கிறது. இதன்மூலம் விநாடிக்கு சுமார் 80,000க்கும் அதிகமான நீரை வெளியேற்ற இயலும். இது போதாதென்று கேரளம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் நான்கு குகஐஃ ஙிஅஙுக்கள் அமைக்கப்பட்டது. ஆகமொத்தம் இவற்றின் மூலமாக ஒரு இலட்சம் கன அடிக்கும் அதிகமான உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பென்னிகுவிக் காலத்திலேயே நீரின் மட்டம் 70 அடியாக இருக்கும்பொழுதே, ஒரு சுரங்கம் அமைத்து அதன் மூலம் நீரை வெளியேற்றி தமிழகத்திற்கு திருப்பலாம் என்ற ஒரு திட்டம் இருந்தது. அத்தகைய ஒரு சுரங்கத்தை தற்போது தமிழகம் அமைத்தால் அதனை கேரளம் ஏற்குமா என்பது சந்தேகமே.

இதற்கிடையில், 15.3.2006 அன்று நீர்வளப் பாதுகாப்பு (திருத்தம்) 2006 என்ற விநோதமான சட்டத்தை கேரள சட்டமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொண்டு வந்தது. இம்மாதிரி சட்டங்கள் இந்தியா என்ற கூட்டாட்சியில் இதுவரை எந்த மாநிலமும் கொண்டு வர முயலவில்லை.

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய அணைக் கட்ட மத்திய அரசு தந்த தவறான அனுமதியின் பேரில் ஆய்வு நடத்தியுள்ளது. கேரள நீர்ப் பாசனத் துறை நிர்வாகப் பொறியாளர் ஜார்ஜ் டேனியல் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட 3 கி.மீ. பகுதியில் ஆய்வுப் பணியை தொடங்கினர்.

இதை தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், சட்டத்தின் ஆட்சியை மிதித்து கேரளா தான்தோன்றித் தனமாக முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். தொடர்ந்து இப்பிரச்சினையில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி கொடுத்த நாளிலிருந்து முதல்வர் கலைஞர் தன்னுடைய நியாயமான எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்தும், செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்று கேரள அரசு நடந்து கொள்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சபர்வால், தாக்கர் மற்றும் பாலசுப்பிரமணியம் அடங்கிய பெஞ்ச் 27.2.2006 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

“நிலநடுக்கம் உட்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்புக் குறித்து ஆராயப்பட்டுள்ளது. நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்தில் எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொண்டதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.”

முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைக்கும் உயரத்தின் அளவைக் குறைத்ததனால் தமிழகத்தில் பாசனப் பகுதி ஏறத்தாழ இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவு குறைந்து விட்டது. ஏறத்தாழ ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஏக்கர் நிலம் கடுமையாகப் பாதிக்கப்படும். மின் உற்பத்தி ஏறத்தாழ ரூ.75 கோடி அளவுக்கு குறைந்துவிட்டது. மேலும் 140 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அணையில் 40 சதவிகிதம் அளவுக்கு உற்பத்தித் திறன் குறைந்துவிட்டது.

அணையின் நீர் மட்டம் குறைந்தாலும் அணை அமைந்துள்ள எட்டாயிரம் ஏக்கர் நிலத்திற்கும் தமிழக அரசு குத்தகைப் பணம் இன்று வரையில் தவறாமல் செலுத்தி வருகிறது. அரபிக் கடலில் வீணாகக் கடலில் கலக்கும் நீரின் அளவு 2313 கன மீட்டர். ஆனால் பெரியாறு அணையில் நாம் கூடுதலாக தேக்கி வைக்கக் கோருவது 126 மில்லி கன மீட்டர் மட்டுமே. ஆனாலும் வீணாகக் கடலில் கலக்க விடுவோமே ஒழிய தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர் தர அனுமதிக்க மாட்டோம் என்று கேரள அரசு வெட்டி வாதம் செய்கிறது. கேரளா, தமிழகத்திலிருந்து அரிசி, மின்சாரம், பால், சிமெண்ட், மணல், காய்கறி, ஆடு, மாடு, கோழிகள் உண்ணும் தீவனங்கள் போன்ற அத்தியாவசிய பண்டங்களைப் பெற்றுக்கொண்டு வேண்டுமென்றே பிடிவாதப் போக்கோடு நடந்து கொள்வதையும் உலகவாதம் பேசும் இன்றைய கேரள ஆட்சியாளர்களின் நிலையை நாம் அனைவரும் ஒருகுரலாகக் கண்டிக்க வேண்டும்.

கேரளாவில் உள்ள பால் ஜாக்கரயா போன்ற இலக்கியக் கர்த்தாக்களும் மற்றும் சில சமூக ஆர்வலர்களும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மறுப்பது நியாயமற்ற செயல் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஏட்டிக்கு போட்டி என்ற வகையில் ஜெயலலிதா, ஐவர் குழுவை புறக்கணிக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஏனோ இவரது அன்பு அண்ணன் வைகோ இந்த அறிக்கையின் மறு பதிவாக அறிக்கை வெளியிடவில்லை. ஒருவேளை இந்த அறிக்கையின் நகல் அவருக்குக் கிடைக்கவில்லையோ என்னவோ. திரும்பவும் ஐவர் குழுவில் பங்கு பெற்று, கிணற்றில் போட்ட கல்லாக இப்பிரச்சினை ஆகவேண்டும் என்று ஜெயலலிதா விரும்புகிறார். அவரது இந்த ஆசை ஒருகாலும் நிறைவேறாது.

தக்காண பீடபூமியில் உள்ள தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்படும் மொழிகள் தீந்தமிழில் இருந்து பிறந்த சேய் மொழிகளே ஆகும். அவ்வாறான தொடர்புகள் இருந்தும், நதிநீர்ப் பிரச்சினையில் அண்டை மாநிலங்கள் சிக்கலை உருவாக்குகின்றன. கேரளத்தில் நீர் வளமும், வன வளமும் அதிகம். கர்நாடகத்தில் நீர் வளம், தாது வளம் அதிகம். ஆந்திராவில் நீர் வளமும், தாது வளமும் உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு இந்த மாதிரியான இயற்கை வளங்கள் இல்லை. மனித வளம் மற்ற மாநிலங்களைவிட அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் கூட்டுறவோடு பிரச்சினைகளை தீர்க்க அண்டை மாநிலங்கள் இணக்கம் காட்டாமலேயே இருந்து வருகின்றன. இருப்பினும், தமிழக முதல்வர் அவர்கள் கர்நாடகாவில் நீண்ட நாள் திறக்கப்படாமல் இருந்த வள்ளுவர் சிலையை திறந்து வைத்தபின் கர்நாடகத்துடன் ஒரு இணக்கமான சூழல் உருவாயிற்று.

இவ்வாறு ஆந்திரம் பாலாறு, பொன்னியாறு; கர்நாடகம் காவிரி, ஒக்கனேக்கல் போன்றவற்றில் பிரச்சினை செய்கின்றன. கேரளவோ முல்லைப் பெரியாறு, குமரியில் உள்ள நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவிநயினாறு, உள்ளாறு, மத்திய அரசே ஏற்றுக் கொண்ட அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்பு திட்டம், ஆழியாறு பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழா, பம்பாறு என்று அனைத்து நதி நீர்ப் பிரச்சினையிலும் தமிழகத்தை வம்புக்கு இழுக்கின்றது. 

நியாயமான பிரச்சினைகளிலும் கேரளா அடம் பிடிக்கின்ற நிலை உள்ளது. பௌதீகத்தில் இடம் மாற்று தோற்றப் பிழை என்று குறிப்பிடுவது உண்டு. தவறான பார்வையில் எதையும் பார்க்கும்பொழுது பிழைதான் தெரியும் குறிப்பிட்டவாறு கேரளாவின் தவறான பார்வையாலும், அணுகுமுறையாலும் நியாயங்கள் மறுக்கப்படுகின்றன. உண்மைகள் மறைக்கப்படுகின்றன. தூங்குபனை எழுப்பலாம்; தூங்குவது போல் பாசாங்கு செய்பவனை எப்படி எழுப்ப முடியும். இதுதான் கேரளாவின் போக்கு. இப்போக்கு பல்வேறு மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள் அமைந்த பன்மையில் ஒருமை என்ற இந்திய ஜனநாயகத்திற்கு உகந்ததுதானா என்பதை கேரளம் எண்ணிப் பார்க்க வேண்டும்.