இன்றைய தினமணியில் (28.11.2009), ஏடுகள் அனைத்தும் நமது தலைவர் கலைஞர் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதனால் ஜனநாயகத்திற்கு அழிவு ஏற்பட்டுள்ளதென்றும், தலைவர் கலைஞர் அவர்கள் சாதித்தது என்ன என்றும் புலம்பல் புயல் வைகோ புலம்பி உள்ளார். சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் என்ன என்ற நிலையில் இவருடையப் பேச்சுக்களை இப்பொழுது யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், தினமும் ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார் வைகோ. அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை.

தலைவர் கலைஞர் அவர்கள் சாதித்தது தமிழினம் அறியும். ஜனநாயகத்தைக் காக்க மிசாவை எதிர்த்தது, ஈழத் தமிழர்க்காக ஆட்சியை இழந்தது, மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தது, சமூகநீதியில் சாதனை, தமிழ் செம்மொழி, சேது சமுத்திரத் திட்டம் போன்ற பல முக்கியப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், தமிழக மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பல்வேறு நலத் திட்டங்களை நித்தமும் செய்து வருகிறார். சொல்வதை செய்கிறார்; செய்வதை சொல்கிறார். இவரது சாதனைகளை சரித்திரம் சொல்லுகின்றது. வைகோவுக்கு பிரச்சினைகள் வரும்பொழுதெல்லாம் காப்பாற்றுவது தலைவர் கலைஞர் அவர்களே. வேலூர் சிறைக்கும், பூந்தமல்லி நீதிமன்றத்துக்கும் வைகோவைச் சந்திக்க ஏன் செல்ல வேண்டும்? அப்போது தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களைப் பிடித்துக்கொண்டு வைகோ கண்ணீர் வடித்தது தெரியாதா? 

மதுரையில் 2006இல் சேது சமுத்திரத் திட்டத் துவக்க விழா நடந்தபொழுது, அழைப்பிதழிலும், மேடையிலும் அச்சிடவோ, அமரவோ முடியாது என்ற மரபுகளைத் தளர்த்தி பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி ஆகியோர் முன்னிலையில் வைகோ பேச விரும்பிய விருப்பத்தைப் பூர்த்தி செய்தது தலைவர் கலைஞர் அவர்கள்தான். மரபுகளும் சட்டங்களும் எப்படி இருந்தாலும் பரவாயில்லை; வைகோ அந்த நிகழ்ச்சியில் பேச வேண்டும் என்ற கைகோவின் ஆசைக்காக மத்திய அரசிடம் வாதிட்டது தலைவர் கலைஞர் அவர்கள்தான். இன்றைக்கு அவரோடு தோழமையில் உள்ள ஜெயலலிதா, அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் வைகோ பேசுவதைக்கூட விரும்புவதில்லை; தவிர்த்தும் உள்ளார். வைகோவே அதற்காக வருத்தப்பட்டது உண்டு. 

இன்றைக்கு எந்த பத்திரிகையை தலைவர் கலைஞர் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கிறார்? அதை அவரால் நிரூபிக்க முடியுமா? ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள அழிவு என்று பேசும் வைகோ, பொடா சட்டத்தில் இவரை ஜெயலலிதா ஜெயிலில் அடைக்க சொன்னதுதான் ஜனநாயாகம் என்று ஒப்புக் கொள்கிறாரா? அப்படியென்றால், அதேபோன்ற ஜனநாயகத்தை தலைவர் கலைஞர் அவர்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என விரும்புகிறாரா?

திராவிட இயக்கத்தின் சித்தாந்தியாக இன்றைக்கு அனைவரின் நினைவில் வாழும் முரசொலி மாறன் மறைவின்பொழுது, இறுதி மரியாதை செலுத்துவதற்காக வேலூர் சிறையிலிருந்து, நீதிமன்ற அனுமதியின்பேரில் வெளியே வந்து வைகோ அழுத கோலம் என்ன? அதைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள்கூட மூக்கிலிருந்து வந்த சளியும், கண்களில் இருந்து வந்த அருவி போன்ற கண்ணீரும் உண்மையில்லையா? நடிப்பா? என்று இப்போதும் பலர் பேசுகின்றனர். ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அன்றைய வை.கோபால்சாமி, சட்டக் கல்லூயில் மாணவராக இருந்தபோது மறைந்த திரைப்பட இயக்குநர் ஸ்ரீதரிடம் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்க, அவருடைய அடையாறு இல்லத்திற்கு சென்றதாகவும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் ஒரு சில நண்பர்கள் தெரிவித்தனர். அம்முயற்சி வெற்றிப் பெற்றிருந்தால், அவர் நடித்தும் இருந்திருப்பார்; நடிகர் ஏ.வி.எம்.ராஜன் போன்று நடிப்பை விட்டுவிட்டு, இன்று மத போதகராகவும் மாறியிருக்கக் கூடும். இவ்வாறெல்லாம் நடந்து, அவர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் எங்களைப் போன்ற பலரின் வாழ்வு இன்றைக்கு நிம்மதியாக இருந்திருக்கும்.

அவருக்காக உழைத்தவர்களின் வாழ்வை நாசம் செய்தார். மனசாட்சி இருந்தால் எண்ணிப் பார்க்க வேண்டும். வைகோவால் வஞ்சிக்கப்பட்டவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை அளித்தவர் தலைவர் கலைஞர். விரோதம் பாராட்டாமல் அத்துனை பேரையும் தாயுள்ளத்தோடு பரிவு காட்டி தன்வசம் ஆக்கிக் கொண்ட தலைவர் கலைஞரின் பெருந்தன்மை என்ன? இத்தனை பேர் வாழ்வையும் நாசம் செய்த வைகோவின் பண்பு என்ன? துவம்சம் என்று அடிக்கடி வைகோ பேசுவார். இத்தனைப் பேரையும் துவம்சம் செய்தது வைகோதான். உழைத்தவர்களுக்கு நன்றி என்ற அங்கீகாரத்தை கொடுக்கக் கூடாது என்றும், ஏதோ தனக்கு மட்டும் அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தத் தெரியும்; மற்றவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள், தன்னுடன் உள்ளவர்களைப் பகடைக்காய்களாக வைகோ நினைப்பது முட்டாள்தனம். வைகோவின் சுயரூபம் யாருக்கும் தெரியாது என்றும், அடுத்தவர்களை ஒழிக்கும் தனது மறைமுகத் திட்டங்களை (ஏடிஞீஞுண அஞ்ஞுணஞீச்) எவரும் அறியவில்லை என்று நினைப்பது வைகோவின் பைத்தியக்காரத்தனம். தன்னுடன் கடந்த காலங்களில் இருந்தவர்களுக்கு, தனது கடந்தகால நிலைமைகள் தெரியும் என்பதற்காக அவர்களை புறந்தள்ளி, புதியவர்கள் அதாவது தனக்கு முன்பின் அறிமுகம் ஆகாதவர்கள், 1998க்குப் பின் தன்னை இந்திரன்! சந்திரன்!! என புகழ்பாடும் கத்துக்குட்டிகளை வைத்துக்கொண்டு இன்றைக்குக் கட்சியை நடத்துகின்றார். கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியாமல், புத்திர யோசனைகளுக்குக் கட்டுப்பட்டு காரியங்களை ஆற்றுகின்றார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவரை கையில் வைத்துக் கொண்டு தனக்கு வேண்டிய பணிகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்தபின் அவர்களை தெருவில் விட்டுள்ளார். இன்றைக்கு அவரோடு இருப்பது யார்? தி.மு.க.விலிருந்து அன்றைக்கு அவரோடு சென்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப் பார்க்கும்பொழுது தணிகையிலிருந்து குமரி வரை எண்ணினால் இன்றைக்கு பத்து பேர் கூட இருக்காது. இப்படிப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் கட்டெறும்பாக தேய்ந்து கொண்டு இருக்கும் தன் இயக்கத்தைப் பாதுகாக்கவும், கட்டிக் காக்கவும் திராணி இல்லாத மனிதர், தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து விரல் விட்டு வினா எழுப்ப உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? அதையும் தினமணி தூக்கிப் பிடிக்கிறது; தினமணி எவ்வளவுதான் வைகோவுக்கு முட்டுக் கொடுத்தாலும் அவர் தேறமாட்டார்.

பேச்சேத் தொழில் என்று நம்பும் வைகோவுக்கு, ‘பம்பரம்’ சின்னத்தை மாற்றி ‘மைக்’ சின்னத்தைக் கொடுக்கலாம். தவளைத் தன் வாயால் கெடுவதுபோல் வைகோ தன் வாயால் கெடுவார்.

சாகசக்காரி, டான்சிராணி, எம்.ஜி.ஆர். கட்சியை கபளீகரம் செய்த நயவஞ்சகி, சூன்யக்காரி என பல.. .. அன்றைக்கு ஜெயலலிதாவைப் பார்த்து வைகோ சொன்ன மணிவாசகங்கள்; இன்றைக்கு அவர் அழைக்கும் புரட்சித் தலைவி வேலூர் சிறையில் தூக்கிப் போட்டபொழுது வைகோவின் அரசியல் வாழ்வுக்கு மறுமலர்ச்சி கொடுத்த தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்கும் தகுதி என்ன உள்ளது?  

காந்தாரி உலக்கையில் இடித்துக் கொண்டதைப் போல துணை முதல்வர் தளபதியின் எழுச்சியை, சாதனை, ஆளுமை இவற்றைக் கண்டு வைகோ புலம்புகிறார்; வெதும்புகிறார். இப்படிப்பட்ட நிலையில் உன் நிலையையும் உன் தளத்தையும் சரி செய்துவிட்டு மற்றதைப் பார் என்ற கிரேக்கப் பழமொழிக்கேற்ப, உன் கண்ணில் உத்திரம் அளவு அழுக்கு இருக்க, அடுத்தவர் கண்ணில் உள்ள தூசியைப் பார்த்து பரிகாசம் செய்வது அபத்தமான நடவடிக்கை. 

பேசுவது நாத்திகம்; போடுவது கறுப்புத் துண்டு. ஆனாலும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு செய்த துரோகத்திற்கும், இவரை நம்பியவர்கள் பலரின் வாழ்வை சூன்யமாக்கியப் பாவத்திற்கும் எந்த தேவர்களின் திருச்சபைக்குச் சென்று மண்டியிட்டு பாவமன்னிப்புக் கேட்டாலும், இவருக்கு விமோசனம் கிடைக்காது என்பது நம்பிக்கை. அதுவே இயற்கையின் நியதி.

வைகோ கடந்து வந்த அரசியல் பாதையை ஆய்வு செய்தால், வரலாற்று நூல்களில் எஸ்டிமேட் என்ற தலைப்பை இறுதியில் கொடுப்பார்கள். வைகோவுக்கு அந்த எஸ்டிமேட் மிகவும் அற்பமாக இருக்கும். வைகோ தாயகத்தில் அமர்ந்து அண்ணல் காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் நூல்களை ஓய்வாக படிப்பது நல்லது! இது தமிழினத்திற்கும் நிம்மதியைத் தரும்!!

இந்த வாரம் ஆனந்த விகடன் ‘காமெடி குண்டர்’ என்ற தலைப்பில் “அடாத மழையிலும், அடித்து வெளுக்கும் வெயிலிலும் தளராது, கண் துஞ்சாது இன்னமும் என்னை விட்டு விலகாத தாயகம் வாட்ச்மேனுக்கு ‘கனா காணும் காலங்கள்.. கரைந்தோடும் மேகங்கள்’ பாட்டைச் சமர்ப்பணம் செய்ய வேண்டுகிறேன்” என்று வைகோ கூறுவதாக வெளியிடப்பட்டுள்ளது. திருந்தாத, திருத்தவும் முடியாத ஜென்மங்களைப் பற்றி பேசுவது, எழுதுவது, நினைப்பது போன்ற அனைத்தும் வீணான வெட்டி வேலை.

அரசு அதிகாரி ஒருவன், பெயர் விகடராமன். அவன் சவாரி செய்த குதிரை பலவீனமாக மெலிந்திருந்தது. அது நடப்பதற்குக் சண்டித்தனம் செய்தது. ஆனாலும், விகடராமன் குதிரைச் சவாரியை விடுவதாயில்லை. தன்னுடைய ஊழியர்களை அழைத்து இரண்டு பேரைப் பின்னால் இருந்து தள்ளவும், மூன்று பேரைக் கடிவாளத்தைப் பற்றி இழுக்கும்படியும் உத்தரவிட்டான். அருகில் இருந்து பார்த்த காளமேகப் புலவர், இது நடக்கிற கதையா? என்று நகைத்துப் பாடியது:

“முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க

பின்னே யிருந்திரண்டு பேர்தள்ள எந்நேரம்

வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம்போங்க காத வழி!”

இதுதான் வைகோவின் ம.தி.மு.க!

தனிமரமாக நிற்கும் வைகோ ஒருகாலும் தோப்பு ஆகமாட்டார்!

கூரை ஏறிக் கோழிப் பிடிக்காதவன், 

வானம் ஏறி வைகுண்டம் போவானா?; 

நல்ல மாடு தானே ஊர்ல நல்ல விலை போகும்; 

இதுதான் வைகோவின் இன்றைய நிலைமை.