தான் பிறந்த தஞ்சை தரணியில் அமைந்துள்ள பெரிய கோவிலின் கம்பீரத்தின் மீதும், உயர்ந்து நிற்கும் கோபுர அமைப்பின் மீதும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு என்றும் தனிப் பிடிமானம் உண்டு. அக்கோவிலை வடிவமைக்க காரணமாக இருந்த பேரரசன் ராஜராஜனின் புகழை நிலைநாட்டுவதில் தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பல. தமிழர் கலாச்சாரம், பாரம்பரியத்தை போற்ற வேண்டி பூம்புகார் நகரை அமைத்தது, கட்டபொம்மனுக்கு கோட்டை கட்டியது என்று பல செய்திகளை சொல்லலாம். அவ்வகையில் ராஜராஜன் சிலையை தஞ்சை பெருவுடையார் கோவிலின் உள்ளே வைக்க வேண்டும் என்பதற்காக தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையும், ஆர்வமும் அனைவரும் அறிந்ததே. தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் இக்கோவிலில் பல திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. இக்கோவிலைப் பற்றி பொய்யான, மூடத்தனமான கருத்துகளை பலர் பரப்பி வந்தபோதிலும், இக்கோவிலின் பெருமை இன்றும் நிலைத்து நிற்கிறது. 

விவசாயம், கலை, வர்த்தகம், நிர்வாகம், மக்கள் நலன் என்பனவற்றை மனதில் கொண்டு ஆட்சி புரிகின்ற ஆளுமை கொண்ட தலைவனின் ஆட்சியைதான் பொற்கால ஆட்சி என்று குறிப்பிடுவார்கள். அந்த வகையில் நமது தலைவர் கலைஞர் அவர்களும், அரசின் ஒவ்வொரு துறையையும் நல்வழிப்படுத்தி, பல்வேறு திட்டங்களையும், மேலே குறிப்பிட்டுள்ள துறைகளிலும் கவனம் செலுத்தி, அவற்றை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தனது ஆட்சியை நடத்தி வருகின்றார். எனவே, தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சி பொற்கால ஆட்சியாகும். அதுபோலவே ராஜராஜனின் ஆட்சியும் வரலாற்றில் பொற்கால ஆட்சியாக விளங்கியது.

பொற்கால சோழர் ஆட்சியில் ராஜராஜனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு தற்போது வயது 1,000. இதனை போற்றும் வகையில் ஒரு விழாவினை சிறப்பாக நடத்திட வேண்டுமென, துணை முதல்வர் தளபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் கோ. சி.மணி மற்றும் மத்திய அமைச்சரும், தஞ்சை மாவட்டக் கழகச் செயலாளருமான பழனிமாணிக்கம் ஆகியோர் தற்பொழுது முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். அத்தகைய பெருமைகளை கொண்ட தஞ்சை பெருவுடையார் கோவிலின் வரலாற்றினை காண்போம்.

தனது ஏழு வயதில் சிவ பக்தரான ராஜராஜன் எகிப்தியரின் பிரமீடுகள் போன்ற கூர்மையான முனை கொண்ட கோபுரத்தை 190 அடி உயரத்திற்கு கட்டியது உலக அதிசயமாகும். வடக்கே புவனேஸ்வரத்தில் லிங்க ராஜா கோவில்தான் அந்த காலத்தில் உயரமானதாக இருந்தது. ஆனால் அதைவிட இக்கோபுரத்தை உயரமாக அமைத்த பெருமை ராஜராஜனையே சாரும். பெரிய விசாலமான பிரகாரம், 30க்கும் மேற்பட்ட கோவில்களை உள்ளடக்கி உள்ளது. இந்த கோவிலினுடைய பணிகள் சிறக்க 196 பணியாளர்கள், 400 ஆடல் மகளிர், 178 மணியக்காரர்கள், 228 இசைக் கலைஞர்கள் போன்றோரை ராஜராஜன் நியமித்தார். ராஜராஜனுக்கு பிறகு நாயக்கர் காலத்தில் 16 மீட்டர் நீளமுள்ள நந்தி அமைக்கப்பட்டது.

உலக மரபுச் சின்னம் என்று யுனெஸ்கோ அறிவித்த இந்த கோவில் 1004இல் கட்டத் துவங்கி 1010வாக்கில் முடிக்கப்பட்டது. கரிகால் சோழனுக்கும் இந்த பணியில் பங்குண்டு. கரிகாலனுக்கு கல்லணை எப்படி பெருமை சேர்க்கின்றதோ, அதேபோன்று இந்த கோவில் ராஜராஜனுக்கும் கரிகாலனுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. தமிழர்களின் பெருமையை நெஞ்சுயர்த்தி பேசுவதற்கு பெரிய கோவில் ஒரு அடையாளமாகும். ஜெர்மன் நாட்டு கல்வெட்டு அறிஞர் ஹல்ஸ், 1896இல் இங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். அவர்தான் இந்த கோவிலை ராஜராஜன் கட்டினான் என்று கூறினார். 

விஜயாலயன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன், மதுராந்தக உத்தமசோழன் தொடங்கி ராஜராஜன் காலத்திற்கு பிறகும் 176 ஆண்டுகாலம் சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய தஞ்சை தரணியில் இக்கோவில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

சோழப் பேரரசானது வடக்கே துங்கபத்திரா, கிழக்கே வங்கக் கடல், வடகிழக்கே ஒரிசா, கலிங்கம், தெற்கே லட்சத்தீவு, மாலத்தீவு என பரந்து விரிந்து விளங்கியது. இப்பேரரசுக்குதான் தஞ்சை தலைநகராக விளங்கியது. அத்தகைய பெருமைக்குரிய தஞ்சைக்கு அடையாளமாக விளங்குவது இப்பெரிய கோவில்.

சோழப் பெருமான் சுந்தர சோழனுக்கும், திருக்கோவிலூர் மலையமான் குலத்தைச் சார்ந்த வானவன் மாதேவிக்கும் இரண்டாவதாக பிறந்தவர் ராஜராஜன். இவரின் கலை ஆர்வத்தால் எழுந்ததுதான் இக்கோவில். இக்கட்டடத்தை வடிவமைத்தவர் வீரசோழன் குஞ்சரமல்லன் ராஜராஜப் பெருந்தச்சன் ஆவார். இவருக்கு உறுதுணையாக நின்று பணியாற்றியவர் கண்டராதித்தப் பெருந்தச்சன்.

தொழில் நுட்பங்கள், வசதிகள் இல்லாத அக்காலத்தில் எழுந்து நிற்கும் இக்கோபுரத்தை கட்டுவதற்கு எவ்வளவு சிரமங்கள் இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. லாரி, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள், கிரேன் போன்ற அமைப்புகள், இன்றைய எளிதான கட்டட அமைப்பு முறைகள் அன்றைக்கு இல்லாத நிலையில், இக்கோபுர கட்டுமானப் பணி நடைபெற்றுள்ளது. மேலும், ராஜீஸ்வரம் என்று அழைக்கப்படும் இந்த ஆலய பகுதியில் கோவில் கட்டும் முன் அஸ்திவாரம் அமைக்க குழிகளை தோண்டி, அக்குழிகள் சுமார் ஒரு வருடம் வரை பாதுகாக்கப்பட்டன. ஏனென்றால் சூரிய ஒளியால் குழியில் உள்ள மண் கல்லாகி விடும் என்று நம்பப்பட்டது. இது ஒரு அதிசயமாகும். தாஜ்மகால் போன்ற கட்டடங்கள் சிறைக்கைதிகளால் கட்டப்பட்டது. ஆனால் தஞ்சை பெரிய கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் சிவபக்தர்களே. 

நிலப்பரப்பு கூற்றம், நாடு என வகைபடுத்தப்பட்டது. விவசாயம் நிறைந்த பகுதியை ஊர் என்றும், வணிகர்கள் மிகுந்து காணப்பட்ட பகுதியை நகரம் என்றும் மாற்றிய பெருமை ராஜராஜனையே சாரும். மாமல்லபுரம் தொடங்கி கேரளம் வரை உள்ள பகுதிகளை தன்னகத்தே கொண்டதோடு மட்டுமல்லாமல், ஈழத்தில் உள்ள கிராமங்கள் வரை யார் யார் கொடை கொடுத்தார்களோ அவர்களது பெயர்களை எல்லாம் கல்வெட்டில் பதிவு செய்த பெருமை ராஜராஜனையே சாரும். ஒவ்வொரு ஊரும் 1,44,500 கலம் நெல் மணிகளும், 2,800 கழஞ்சு தங்கமும் பெருவுடையார் கோவிலுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான் ராஜராஜன். குந்தவை நாச்சியார்40.46 கிலோ எடையுள்ள பாத்திரங்கள் மட்டுமல்லாமல் ஏராளமான நகை மற்றும் ஆபரணங்களை வழங்கியுள்ளார்.

தஞ்சை பெருவுடையார் கோவிலைச் சுற்றி அகழியும், கோட்டை கொத்தளங்களும் நாயக்கர் மன்னரான செவ்வப்ப நாயக்கரால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோட்டைச் சுவர் வாயில் மராட்டிய மன்னரால் அமைக்கப்பட்டது. ஐந்து அடுக்கு உள்ள கேரளாந்தகன் வாயிலும், ராஜராஜன் வாயிலும் 40 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இவ்விரண்டு வாயில்களும் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. ராஜராஜன் வாயிலை ஒட்டி திகழும் சுற்று மண்டப கல்வெட்டுகள் திருச்சுற்று மாளிகை என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜன் காலத்தில் இரண்டு தளமாக இருந்து, தற்பொழுது ஒரு தளமாக காணப்படுகிறது. நெடிதுயர்ந்த விமானத்தின் பெயர் தட்சிணமேரு ஆகும். 1931இல் பெட்ரோமாஸ் விளக்கினுடைய ஒளியின் மூலம் கருவறையிலிருந்த சோழர் கால கல்லோவியங்கள் கண்டுகொள்ளப்பட்டது. நடனத்தின் 108 முத்திரைகளில், 81 முத்திரைகள் செதுக்கப்பட்ட ஒரே கோவில் பெருவுடையார் கோவிலாகும்.

இக்கோவிலிலுள்ள பிரகதீஸ்வரர் லிங்கம் 3 அடி உயரத்தில் பீடத்தில் 55 அடி சுற்றளவில் 6 அடிக்கு கோமுகம் கொண்டது. ஒரே கல்லில் செய்யப்பட்ட பீடத்தின் எடை 500 டன்னுக்கு மேலானதாகும். இதை எப்படி மலையிலிருந்து இப்பகுதிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வியக்கத்தக்க வினாவாகும். இந்த கோவிலுக்கு வேண்டிய கற்கள் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில், நார்த்தாமலை ஆகிய இடங்களிலிருந்து சகடை வண்டிகளில் கொண்டு வரப்பட்டது. தெற்கு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட மண்தான் சிவாஜி நகர், செல்வ நகர் போன்ற மேட்டு பகுதிகளாகும்.  கோவில் கட்ட நான்கு புறமும் பல மைல்கற்கள் தூரம் சாரங்கள் அமைத்து மிக கனமான கட்டுமான பொருட்களை மக்கள் தூக்கி சென்றுள்ளனர். அன்றைய தமிழன் எவ்வளவு பலம் பொருந்தியவனாக இருந்திருக்கிறான் என்பதை தெரிந்து கொள்வதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

வரலாற்றில் சோழர் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின் பல படையெடுப்புகளில் பல சேதாரங்கள் ஏற்பட்ட பின்பும் கோபுரம் கம்பீரமாக நிற்கிறது. இந்த கோபுரம் இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டது. உள் சுவர் 11 அடி கனமும், வெளி சுவர் 13 அடி கனமும், இடைவெளி 6 அடி என்ற முறையில் உறுதியோடு கட்டப்பட்டது.சோழர், விஜயநகர பேரரசு, நாயக்கர் காலம், மராட்டியர் காலம் என ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு இக்கோவிலில் பணியை மேற்கொண்டுள்ளனர்.

பெரிய கோவிலின் நிழல் தரையில் விழாது என்ற வாதம் உண்மையில்லை என்று சொல்பவர்கள் உண்டு. 216 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் நிழல் தரையில் விழும் என்பதுதான் அறிவியல் பூர்வமான கருத்து. வெள்ளைக்காரனுடைய உருவம் உள்ளது என்று சொல்வதுண்டு. ஆனால் நாயக்கர்கள் ஆட்சியில் டென்மார்க் வணிக உறவுகள் இருந்தபோது 1620இல் வெள்ளையர்கள் உருவம் பொறிக்கப்பட்டது. 

பன்னாட்டு அளவில் தமிழரின் பெருமை, கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை பறைசாற்றும் இந்த தஞ்சை பெரிய கோவில் காலம் வழங்கிய அருட்கொடையாகும். அதை மேலும் பாதுகாத்து, வரும் காலங்களிலும் பெரிய கோவிலின் பெருமை பேசப்பட வேண்டும். மானுடம் என்பது ஒரு நீர்க்குமிழ் போன்றது. மானுடத்தினுடைய சாதனைகளை பறைசாற்றுவது இம்மாதிரியான கலாச்சார பண்பாட்டு சின்னங்கள்தான். அவற்றை பாதுகாப்போம்! எந்நாளும் அதை போற்றுவோம்!!

மறைந்த பழம்பெரும் நடிகை ஜி.வரலட்சுமி அவர்கள் ‘ராஜராஜ சோழன்’ எனும் திரைப்படத்தில், தனது அருமையான குரலில் பாடலை பாடியிருப்பார். அப்பாடல் இன்றும் நமது நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

தஞ்சை பெரிய கோவில்....

... .. .. பல்லாண்டு வாழ்கவே!