அண்டைய மாநிலமான கேரளம் தொடர்ந்து தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுகின்றது. சில நாட்களுக்கு முன் அட்டப்பாடி பகுதியில் தமிழர்கள் அனைவரும் தங்கள் நிலங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேற வேண்டுமென கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அங்குள்ள தமிழர்கள் தொடர்ந்து இதனை எதிர்த்து போராடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு திட்டம், விருதுநகர் மாவட்டத்தில் அழகர் அணை திட்டம், தேனி மாவட்டத்தில் அனைவரும் அறிந்த முல்லைப் பெரியாறு பிரச்சினை, கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழா, சிறுவாணி போன்ற பல்வேறு நீர்ப் பிரச்சினைகளிலும் தமிழக உரிமைகளை கேரளா மறுக்கின்றது. தமிழகத்திற்கு சொட்டு நீர் தர வேண்டுமென்றாலும் கேரள சட்டமன்றத்தின் அனுமதி வேண்டும் என்று, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விநோதமான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. தமிழகத்தின் எல்லையில் உள்ள கண்ணகி கோவில் பிரச்சினையிலும் கேரளா வம்பு செய்கின்றது. குமரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிராமத்தையே கேரள அரசு தங்களுடையது என உரிமை கொண்டாடி, அங்கு ரேஷன் அட்டையை கேரள அரசின் வருவாய் துறை அதிகாரிகள் வழங்கியிருப்பது வேடிக்கையான செயல்.

இந்தியாவின் விடுதலைக்கு முன், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு அட்டப்பாடி பகுதியில் ஜமீன்தார்களின் விவசாய நிலங்களை தமிழர்கள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். 1956ஆம் ஆண்டு இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் பெரும்பாலாக வாழக் கூடிய அட்டப்பாடிப் பகுதி கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பாலக்காடு அதனை சுற்றியுள்ள பல தமிழ் கிராமங்கள் கேரள மாநிலத்தில் சேர்க்கப்பட்டது. அட்டப்பாடி வள்ளுவநாடு அரசரின் கீழ் மூப்பில் நாயர் என்ற ஜமீன்தார் இப்பகுதியை ஆண்டார் என வரலாறு கூறுகிறது. அவருக்கு கீழ் சிறு ஜமீன்தாரர்களான ஆரியப் பாலாட்டு செட்டியார், வாசுதேவன், அலெக்சாண்டர் ஆகியோர் 99 ஆண்டு குத்தகைக்கு மூப்பில் நாயரிடம் விவசாய நிலங்களைகளைப் பெற்று பழங்குடி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் குத்தகைக்குக் கொடுத்தனர். இதன் மூலம் தமிழர் நிலங்கள் கைமாறியது.

கேரள அரசு ஜமீன் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த பின், இந்த நிலங்களை மூப்பில் நாயருக்கு வரி செலுத்தி வந்த எம்.ஆர். ரசீது என்ற உரிமையில் விவசாயம் செய்து வந்தவர்களுக்கு பத்திரப் பதிவும் மற்றும் பட்டாவும் வழங்கப்பட்டது. பழங்குடிகள் அதே இடத்தில் தொடர்ந்து விவசாயம் செய்யாமல் இடம் பெயர்ந்து செல்லும்போது தங்கள் நிலங்களை தமிழர்களுக்கு விற்பனை செய்ததும் உண்டு. 

கேரளா அரசு, 1975ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் பழங்குடி மக்களின் நிலங்கள் பழங்குடிகளுக்கே என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இதன்படி 1986இல் பாலக்காடு மாவட்ட ஆட்சியரால் பழங்குடிகளிடம் இருந்து விலைக்கு வாங்கிய விவசாய நிலங்களை ஏழு நாட்களுக்குள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால் அப்போது விவசாயிகளின் போராட்டத்தாலும், நீதிமன்ற தடையினாலும்; கேரள அரசால் எதையும் மேற்கொண்டு செய்ய முடியவில்லை.

199192ஆம் ஆண்டுகளில், ஒத்தப்பாலம் வருவாய் கோட்டாட்சி அதிகாரி விவசாயிகளை நிலங்களை விட்டு வெளியேறுமாறு திரும்பவும் உத்தரவுப் பிறப்பித்தார். விவசாயிகள் தொடர்ந்து போராடியதால் அப்போதைய காங்கிரஸ் அரசு 1960ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டுவரை பழங்குடிகளிடமிருந்து நிலங்களை விலைக்கு வாங்கிய பத்திரப் பதிவு மட்டும் செல்லும் என்றும், 1986க்குப் பிறகு பழங்குடிகளிடமிருந்து நிலங்கள் வாங்கியிருந்தால் அது செல்லாது என்றும், அவ்வாறு வாங்கியிருந்தால் அந்த நிலங்களை பழங்குடிகளிடம் திருப்பித் தரவேண்டுமென ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதன்பிறகு, ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்டு அரசு நிலம் இல்லாத பழங்குடியினருக்கு அரசாங்க நிலத்தில் பட்டா கொடுத்தது. ஆனால் பட்டா கொடுத்த நிலங்களில் அவர்கள் சென்று வசிக்கவில்லை.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 21.7.2009 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 24.1.1986ஆம் ஆண்டிற்குப் பிறகு பழங்குடிகளிடம் வாங்கிய நிலங்கள் செல்லத்தக்கதல்ல என்றும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தால் அந்த நிலங்களை பழங்குடிகளுக்கு கொடுக்க வேண்டும் தீர்ப்பளித்துவிட்டது. இதுதான் இப்பிரச்சினையின் கடந்த கால வரலாறு.

தற்போது கேரள அரசு அட்டப்பாடி பேக்கேஜ் என்ற பெயரில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து உள்ளனர். அந்தக் குழுவினர் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தமிழ் விவசாயிகளை காவல் துறை துணையுடன் ஏழு நாட்களுக்குள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டுமென அறிவிப்புக் கொடுத்தும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் மீது பொய் வழக்குத் தொடர்ந்தும் நெருக்கடி தருவதால் பலர் தங்கள் உடைமைகளை விட்டு விட்டு கோவை மாவட்டத்தில் தலைமறைவாக தஞ்சம் புகுந்து வாழ வேண்டிய அவல நிலை உருவாகி உள்ளது. போலீஸ் மிரட்டல், அரசு அதிகாரிகளின் தொந்தரவால் பெண்கள் அச்சப்பட்டு அழும் குரல்கள் அட்டப்பாடியில் கேட்கின்றது. இவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னமாக ஆங்காங்கு பிரிந்து ஓடும் நிலை நிலவுகின்றது. இந்த மனித உரிமை மீறலை மத்திய மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும்.

தமிழர்கள் விவசாயம் செய்து வருகின்ற இந்த நிலங்கள், பழங்குடியின மக்களுக்குச் சொந்தமானவை என்றும், பழங்குடியினரின் நிலங்கள் அவர்களுக்கே சொந்தம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழர்கள் தங்களின் நிலங்களை பழங்குடியினரிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும் கேரள அரசு கூறுகிறது. பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தமிழர்கள் ஆக்கிரமிக்கவில்லை. கேரள அரசில் பணியாற்றும் சில அதிகாரிகள் தமிழர்களிடமிருந்து அந்த நிலங்களைப் பெற்று, பழங்குடியின மக்களிடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்ற பெயரால் அவற்றை ஒரு சில பெரிய தனியார் நிறுவனங்களுக்கு வழங்கத்தான் இந்த நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதாகத் தெரிகிறது. அங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பழங்குடியினருக்குச் சொந்தமான 28 ஆயிரம் ஏக்கர் நிலங்களையெல்லாம் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் பறித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு கேரள அரசு அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர் என தெரிகிறது. அந்த நிலங்களைத் திரும்பப் பெற்று பழங்குடியின மக்களுக்கு மீண்டும் வழங்க முயற்சி எடுக்காத கேரள அரசு, தமிழர்கள் வாழும் பகுதியிலே உள்ள நிலங்களை மட்டும் பறிக்க முயற்சிப்பது நியாயமான நடவடிக்கையாகாது.

அட்டப்பாடியில் தமிழர்களை வெளியேற்றுவது நாயர் புலி வாலை பிடித்த கதைதான். கேரளாவின் போக்கு இப்படியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதேநேரம், மலையாளி மக்கள் தமிழக முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவர்கள் இங்கு தேநீர் கடை, உணவு விடுதிகள், பெரிய நகைக் கடைகள் வரை எந்தவித அச்சமுமின்றி வியாபாரம் செய்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த மக்களை பற்றி சற்றும் சிந்திக்காமல், அட்டப்பாடி விவகாரத்தில் கேரள அரசினுடைய நிலைப்பாடு விபரீதமானது என்று புரியாமல், இந்திய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் வரும் என்பதை சற்றும் சிந்திக்காமல், தமிழர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் கேரளாவின் போக்கை கண்டு எச்சரிக்காமல் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது.

ஏற்கனவே மொழிவாரி மாநிலம் அமைந்தபோது தமிழர்களின் பகுதியான நெய்யாற்றங்கரை, பாரசாலை, நெடுமாங்காடு, தேவிகுளம் பீர்மேடு, பாலக்காடு பகுதியில் பல கிராமங்களை இழந்துள்ளோம். அவ்வாறு உரிமைகளை இழந்தாலும் தமிழகம் பெருந்தன்மையாக இன்றும் நடந்து வருகிறது. கேரளாவிற்கு அரிசி, காய்கறிகள், பால், வைக்கோல், இறைச்சி, மீன், மணல் போன்ற அவசியப் பண்டங்களை தமிழகத்திடமிருந்து பெற்று கொண்டு ஒரு நன்றியற்ற பார்வையில் தமிழகத்தைப் பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

அண்டை மாநிலங்களான கர்நாடகத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தில் பல தொழில்களில் ஈடுபட்டு, குறிப்பாக உடுப்பி விடுதிகள் நடத்துகின்றனர். அதுபோல ஆந்திரா, கேரளாவை சேர்ந்தவர்கள் இந்த மண்ணில் எந்தவித இடையூறும் இல்லாமல் வாழும்போது, அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மட்டும் ஏன் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.