ஆசிரியர் 04.11.2010

தீராநதி

குமுதம்

சென்னை

அன்புடையீர்

வணக்கம்.

கடந்த அக்டோபர் ‘தீராநதி’ இதழில் திரு. தமிழவனின் ‘நேசமணியும் தமிழ்த் தேசியமும்’ என்ற பத்தியைக் குறித்து நவம்பர் இதழில் திரு.தி.க.சி. அவர்களின் கடிதம் வெளியிடப்பட்டது. உண்மையில் குமரி மாவட்டமும், நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டையும் தமிழகத்துடன் இணைந்தது ஒரு நெடிய வரலாறாகும். நேசமணி, தியாகி பி.எஸ். மணி போன்ற ஆளுமைகள் ஆற்றிய பணிகளோடு, இன்னும் பல தியாகிகள் செய்த தியாகத்தை இன்றைக்கு வெளிப்படுத்த வேண்டியது கடமையாகும். 

சங்க காலத்தில் இருந்து தென் குமரி, பாண்டிய அரசின் கீழ் நாஞ்சில் நாடாக திகழ்ந்தது. ‘திவாகரம்’ எனும் நூல் பாண்டிய மன்னனை ‘குமரி சேர்ப்பன்’ என்று குறிப்பிடுகிறது. தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் ‘மதுரைக் காஞ்சி’யில் அவனைக் குமரியோடு இணைத்துக் கூறுகிறது. பிற்காலச் சோழர்களான முதலாம் இராஜராஜன், வீரஇராஜேந்திரன், முதல் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் ஆகியோரின் பெயர்கள் நாஞ்சில் நாட்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.பண்டைய காலத்தின் தமிழக எல்லைகளை தொல்காப்பியமும், சங்கப் புலவர் காக்கைப் பாடினியாரும்,

“வடவேங்கடத் தென்குமரி யாயிடைத்

க்மிழ்கூறு நல்லுலகத்து” (தொல்காப்பியம்)

“வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்

வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென்று

அந்நான்கு எல்லை” (காக்கைப் பாடினியார்)

என குறிப்பிடுகின்றனர். 

இளங்கோவடிகள், குலசேகர ஆழ்வார் போன்ற பண்டைய தமிழ்க் கவிஞர்கள் மலையாள மண்ணில் எப்படி பிறக்க முடியும்? 63 நாயன்மார்களில் ஒருவரான விரல் மீண்ட நாயனார் திருவாங்கூர் செங்காலூரில் பிறந்தவர். மாணிக்கவாசகரும் வைக்கம் சென்று தமிழ்ப் பாக்களைப் புனைந்தார். திருவனந்தபுரம் ஆவன காப்பத்தில் உள்ள 16,17ஆம் நூற்றாண்டு ஓலைச் சுவடிகள் அனைத்தும் தமிழில்தான் உள்ளன. மலையாளத்தில் இல்லை. ஆங்கிலேயர் வங்கத்தை சூழ்ச்சியாக பிடித்தது போன்று, தமிழகத்தையும் பலவாறு கூறு போட்டு பல பகுதிகளாக பிரித்து விட்டனர். 

இந்நிலையில்தான் ஐக்கிய தமிழகம், விசால ஆந்திரம், நவக்கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. ஆனால், நியாயமற்ற முறையில் தமிழகம், ஆந்திரத்திடம் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்த சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, பல்லவநேரி போன்ற பகுதிகளை இழந்தது. கர்நாடகத்திடம் கொல்லேகால், மாண்டியா, கோலார் போன்ற பகுதிகளை இழந்தோம். பெங்களூரு என்பது பண்டைய காலத்தில் வெங்காலூர் என அழைக்கப்பட்டது. பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை போன்ற தமிழ்ப் பகுதிகள் கேரளத்துடன் சேர்க்கப்பட்டன.

குமரியும், செங்கோட்டையும் தமிழகத்தைச் சார்ந்தது. ஆனால், பசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநில பிரிப்புக் குழுவில் உறுப்பினராக இருந்த கே.எம்.பணிக்கர் கேரளாவைச் சார்ந்தவர். எஸ்.எஸ்.குன்ஸ்ரு இந்திக்காரர். இதில் தமிழர் யாரும் இல்லாத காரணத்தால் பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டையில் பாதி என்று பல பகுதிகளை தமிழகம் இழந்துள்ளது. திருத்தணியை மீட்ட ம.பொ.சி. மற்றும் அவரோடு சேர்ந்து போராடிய பலரின் தியாகத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். செங்கோட்டையை தமிழகத்தில் சேர்க்க எம்.எஸ்.கரையாளர் போராடிய போராட்டம் எண்ணிலடங்கா.

இந்திய விடுதலைக்கு முன்பு, திருவிதாங்கூர் அரசும், மலையாள ஆதிக்க வெறியர்களும் தமிழர்களுக்கு எதிராக நடத்தி வந்த கொடிய ஆட்சியில் தமிழர்களை முற்றிலும் புறக்கணித்தனர். தமிழக் கல்வியும் மறுக்கப்பட்டது. தமிழ்ப் பகுதிகளில், குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் மலையாளிகள் குடியேறுவதை அரசே ஊக்குவித்தது. இதனால் தமிர்களுடைய அச்ச உணர்வும், தமிழ்த் தாயகம் காக்க வேண்டும் என்ற உணர்வும் உருவானது.

மலையாளப் பிரதேச காங்கிரஸ், மலபார் மாகாண காங்கிரஸ் கமிட்டி, கொச்சி பிரஜா மண்டல், திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் என மூன்று பிரிவாகச் செயல்பட்ட மலையாளப் பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடி, ‘காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதிகளைக் கேரள மாநிலமாக ஆக்க வேண்டும்’ என்று தீர்மானம் செய்தனர். இதை பி.எஸ். மணி கடுமையாக எதிர்த்தார். ‘நாஞ்சில் நாட்டையும் சேர்த்து கேரள மாநிலம் அமைக்க காங்கிரஸ் திட்டமிடுவது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும். திருவாங்கூரில் உள்ள தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டோடுதான் இணைக்கப்பட வேண்டும்’ என்று அவர் குரல் கொடுத்தார். இருப்பினும், மாநிலப் பிரிவினையின்போது, தமிழகத்தின் தெற்கு எல்லையான நாஞ்சில் நாடு கேரள மாநிலத்துடன் சேர்க்கப்பட்டு விட்டது. ஆனால் நாஞ்சில் நாட்டு மக்கள், தாய்த் தமிழகத்துடன் சேர வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, போராட்டங்களை நடத்தினர்.

சுந்தரம் பிள்ளை எழுதிய ‘மனோன்மணீயம்’ நாடகமும், கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின் கவிதைகளும், ஆராய்ச்சி அறிஞர் கே.என்.சிவராஜா பிள்ளை தனது ‘வஞ்சிகேசரி’ இதழ் மூலமும், பி.சிதரம்பரம் பிள்ளை ‘தமிழன்’ என்ற பத்திரிகை மூலமூம் நாஞ்சில் நாட்டு மக்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டினார்கள்.

நெய்யூர் காஞ்சான்குழி எம்.குஞ்சன் நாடார் 1923இல் திருவிதாங்கூர் மக்களின் துயர் கண்டு ‘தமிழர் விடுதலைக் காங்கிரஸ்’ என்னும் இயக்கத்தைத் துவக்கி, மலையாளிகளையும் வெள்ளையர்களையும் எதிர்த்தார். எம்.சுப்பிரமணிய நாடார், ஏ.பொன்னம்பல நாடார், கல்லங்குழி பாக்கியநாதன், பரமானந்தம், கருத்துடையான், மாசானமுத்து, தாளக்காவிளை செறியான், சிவஞானம், குளச்சல் பண்டாரவிளை நாராயணன் நாடார் போன்றோர் இவ்வியக்கத்தை நடத்தினர். 1935இல் அப்பாவு ஆசான் தலைமையில் களியக்காவிளையைத் தலைமையகமாகக் கொண்ட ‘தமிழர் கட்சி’ துவக்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு அக்டோபரில் இராஜாக்காமங்கலத்தில் நடந்த கூட்டத்தில், தமிழர்களுக்கெனத் தனி மாவட்டம் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அவருடைய பேச்சு எடுபடாததால், ‘நாஞ்சில் தமிழர் காங்கிரஸ்’ என்ற அமைப்பை உருவாக்கினார். தமிழ் அறிஞரான பி.சிதம்பரம் பிள்ளை அறிவுரையின் பேரில், ‘அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ்’ என மாற்றப்பட்டது. 14.12.1945இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் முதல் அலுவலகம், நாகர்கோவிலில் பி.எஸ்.மணியின் ‘மணிமலர்’ நிலையத்தில்தான் செயல்பட்டது. இந்த அமைப்பு 1946ஆம் ஆண்டு ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ எனப் பெயர் மாற்றப்பட்டு முதல் தலைவராக எஸ்.நத்தானியல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த காலத்தில், காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கேரளத்தில் காங்கிரஸ் தலைவர் கோளப்பன், பட்டம் தாணுப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஏ.கே.கோபாலன் ஆகியோர் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றனர். டில்லியில் பிரதமர் நேருவின் சகா வி.கே.கிருஷ்ணமேனன், வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த கே.பி.எஸ்.மேனன், உள்துறைத் செயலாளராக இருந்த வி.பி.மேனன், துணை அமைச்சராக இருந்த இலட்சுமி மேனன் மற்றும் டில்லியில் மலையாளத் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் கேரள மாநிலத்தை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிகளைக் கைப்பற்றவும் தீவிரமாகப் பணிபுரிந்தனர்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர்கள் ஒன்றுபட்டு ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ என்ற அமைப்பின் கீழ் மொழி உணர்வுடன் போராடினார்கள். 1957ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் பணியால் அரசியல் கட்சிகள் திசைமாறி எல்லைப் பகுதிகளை மீட்க வேண்டும் என்கிற உணர்வு மங்கிப் போனது.

24.1.1946இல் நத்தானியல் தலைமையில் இரா.வேலாயுதப் பெருமாள், பி.எஸ்.மணி ஆகியோர் கொண்ட தூதுக்குழு சென்னைக்குச் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜர், எம்.பக்தவத்சலம், தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், துணை ஆசிரியர் ஏ.என்.சிவராமன், கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ப.ஜீவானந்தம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.எஸ்.சகோதரர்கள் ஆகியோரைச் சந்தித்து திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மீண்டும் நத்தானியல் தலைமையில் ஒரு தூதுக்குழு சென்னை சென்று தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரையும் சந்தித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர்கள் மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி ஆவர். சாம் நத்தானியல், பொன்னப்ப நாடார், பி.ராமசாமி பிள்ளை, ஏ.ஏ.ரசாக், தாணுலிங்க நாடார், ஏ.காந்திராமன், வி.தாஸ் போன்ற போர்க்குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை உருப்பெற்று வலுவடைந்தது. நேசமணியின் தொடர் போராட்டம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பி.எஸ்.மணி, அழைப்பு இருந்தாலும் அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்கும் சென்று, குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக் கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். மணியின் கோரிக்கையைப் பலர் காதில் வாங்கிக் கொள்ளாமல், அவரைத் தவிர்த்தபொழுதுகூட அதற்காகச் சற்றும் கவலைப்படாமல் அவர் தொடர்ந்து போராடினார். ம.பொ.சி. அவர்களுடைய ஆதரவு கிடைக்கப் பெற்றது. திருத்தணி போராட்டத்தின் போது ம.பொ.சி.யாருடன் மங்கலக்கிழர், கே.விநாயகம், செங்கல்வராயன், சொ.மு.ஜனார்தனம், சி.வி.சீனிவாசன், சோ.ம.சாமிநாதன், அம்மையப்பன், அ.லூயிஸ் போன்றோர் எண்ணற்ற தியாகங்களை செய்தனர்.

1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லைச் சிக்கலில், சிரோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை தினமணி கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு அதேபோல ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக் கூடாது? என்று நியாயம் கேட்டார் மணி.

1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல் அமைச்சரும், அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல், கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும், எந்தச் சமரச திட்டதிற்கும் தயார் இல்லை என்றும் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்டத் தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்களுக்கு முன்னால் மறியல், பொதுக் கூட்டங்கள் நாள்தோறும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று பதினாறு தமிழர்கள் போலீஸாரால் சுடப்பட்டு மாண்டனர்.

1954ஆம் ஆண்டில் தேவிகுளம் பீர்மேடு பகுதியில் தமிழர்களைத் திட்டமிட்டு வெளியேற்றும் நிலைமையை ஆராய நேசமணி தலைமையில் மூவர் குழு சென்றது. அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்தும் குரல் கொடுத்தார். திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணிக் கைதைக் கண்டித்து பேரணி நடத்தினார். இதனைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் நடந்தன. குஞ்சன் õடார் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் சிறைப்பட்டனர். கேரள அரசு கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது. இந்தப் போராட்டத்தின்போது 8.8.1954 அன்று நாகர்கோவில், செங்கோட்டை நீதிமன்றங்களின் முன்பாக தி.மு.க. தொண்டர்கள் பேரறிஞர் அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று மறியல் போராட்டம் நடத்தி கைதானார்கள்.

குமரிப் பகுதிகளில் 11.8.1954 அன்று ‘தமிழர் விடுதலை நாளாகக்’ கொண்டாடப்பட்டது. அன்று தமிழர் பகுதிகளில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அரசு அலுவலகங்களின் முன்னால் மறியல் போராட்டம் தொடர்ந்தது. புதுக்கடை யில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, கலைந்து ஓடிய மக்களை வழிமறித்துக் காவல் துறையினர் வெறிகொண்டு தாக்கினர். இதேபோன்று தொடுபட்டி, மார்த்தாண்டம் பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத் தளபதியான குஞ்சன் நாடார் சிறைப்பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் வைத்துக் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார். அதனாலேயே அவர் உயிர் துடிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் மீறி, ‘திரும்பி வந்தால் மகன்’ என்று பச்சை இரத்தத்தால் எழுதி வைத்துவிட்டு, இரண்டு மாத காலம் வீட்டை விட்டுத் தலைமறைவாக இருந்த குமரி மாவட்ட இளைஞர்களும், மாணவர்களும் எல்லைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட போராட்டத் தளபதிகள் போலீசாரின் குண்டாந்தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்து போராட்டத்தை நடத்தி வந்த பி.எஸ்.மணியை, திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீசார் கைது செய்து, திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டங்கள் நடத்திய கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழப் பகுதிகளைத் திரும்பவும் தமிழகத்தில் சேர்க்க அனைத்துக் கட்சி ஊர்வலம் சென்னையில் நடைபெறுவதற்கு முதல் நாள் ஜீவா கைது செய்யப்பட்டார். சென்னையில் காவல் துறை கண்ணீர் புகை வீச்சு, கல்வீச்சு என்ற பதட்ட நிலையில் சென்னைக் கடற்கரைக்கு மக்கள் பேரணி சென்றது. பி.டி.ராஜன் தலைமை தாங்கினார். அண்ணா கலந்து கொண்டார்.

பசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட மாநில எல்லைகள் மறுசீரமைப்பு ஆணையம் அளித்த பரிந்துரைகளின் பேரில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் 21.11.1955 முதல் 26.11.1955 வரை ஐந்து நாட்கள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பல கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் பதில் அளித்து ஆற்றிய உரையின் சில பகுதிகள்:

கோவை மாவட்டத்தைச் சார்ந்த கொள்ளகால் காட்டுப் பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் காட்டுவாசிகளாக இருப்பினும் அவர்கள் பேசும் மொழி தமிழ் மொழியாகும். இதனை ஆணையத்திடம் சுட்டிக்காட்டி இப்பகுதி தமிழகத்தோடு இணைய வேண்டும் என்றோம். இருப்பினும் நிர்வாக வசதி என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதுபோன்றே கொள்ளேகாலம் தாலுகா கர்நாடகா மாநிலத்திற்கு அளிக்கப்பட்டதை நாம் தடுக்கவில்லை. அனாலும், இதன் தென்பகுதியில் உள்ள வனப்பகுதி கிராமங்களில் முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்கின்றனர். எனவே, தென்பகுதியை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று நாம் கோரியதை கமிஷன் ஏற்க மறுத்துவிட்டது. மற்ற மாநிலங்களில் தாலுகாக்களை பிரிக்க சம்மதித்த கமிஷன் இங்கு அதனை ஏற்கவில்லை.

தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை போன்ற ஐந்து பகுதிகளை சென்னை மாகாணத்தோடு சேர்க்க சம்மதித்த கமிஷன், நெய்யாற்றங்கரை, சித்தூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இணைக்க மறுத்துவிட்டது. சித்தூரின் ஒரு பகுதியான, திருவாங்கூர் கொச்சி மாகாணத்தை ஒட்டி உள்ள உள்ள 14 கிராமங்களில் 72 சதவிகிதம் தமிழர்கள் வாழ்கின்றனர். சித்தூர், மலபார் மாவட்டத்தில் தமிழ் பேசும் பகுதிகளில் வாழம் மக்கள் பண்பாடு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் கோவை மாவட்ட மக்களோடு இணைந்துள்ளனர். எனவே இப்பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும்.

தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளில் வாழும் 57 சதவிகித தமிழர்கள் உள்ளனர் என்பதை கமிஷன் ஏற்க மறுத்துவிட்டது. மேலும் இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் தமிழர்களே அதிகளவில் இருக்கிறார்கள். பீர்மேடுவில் உள்ள பெருவந்தானம், தேவிகுளத்தில் உள்ள பள்ளிவாசல் போன்ற பகுதிகளில் மட்டுமே மலையாளிகள் பெரும்பான்மையினராக உள்ளனர். இங்கு அதிகளவில் மலையாளிகள் குடியேறி இருப்பதை கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளது. காடாக கிடந்த இப்பகுதிகளை தமிழர்கள் தங்களது உழைப்பால் வளம் கொழிக்கும் பகுதியாக மாற்றினர். இதன் பின்னரே இங்கு மலையாளிகள் குடியேறி, தமிழர்கள் உழைப்பால் விளைந்த பயனை அறுவடை செய்தனர் என்பதுதான் உண்மையாகும். மதுரையிலிருந்துதான் இப்பகுதிகளுக்கு செல்ல சாலைகள் இருந்தன. திருவாங்கூரிலிருந்து செல்ல சாலை வசதிகள் கிடையாது. திருவாங்கூர் திவானாக சர்.சி.பி.இராமசாமி இருந்தபோது தான் இப்பகுதிகளுக்கு திருவாங்கூரிலிருந்து சாலைகள் போடப்பட்டன.

தமிழக முதல்வர் காமராஜர், திருவாங்கூர் கொச்சி உள்ளடக்கிய சமஸ்தான முதல்வர் பனம்பள்ளி கோவிந்தமேனன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளத்துடனும், கன்னியாகுமரி செங்கோட்டை பகுதிகள் தமிழகத்துடனும் இணைக்கப்பட்டன. தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை கேரளத்தோடு இணைத்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளம் பெரியாறு அணையை கைப்பற்ற எடுத்த முயற்சிக்கு காமராஜர் இடம் கொடுக்காமல் தடுத்தார். தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை நகரம் ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. இப்பகுதியை கன்னியாகுமரி மாவட்டம் என அறிவிக்க நேசமணி காமராஜரிடம் கோரிக்கை வைத்தார். காமராஜரும் அதனை ஏற்று, 1.11.1956இல் நாகர்கோவிலில் இணைப்பு விழா நடைபெற்றது. அதேநாளில் செங்கோட்டை இணைப்பு விழா பி.டி.ராஜன் தலைமையில் செங்கோட்டையில் நடைபெற்றது. இவ்விழாவில் அன்றைய அமைச்சர் சி.சுப்பிரமணியம் கலந்து கொண்டார். பின்னர் செங்கோட்டை திருநெல்வேல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவிற்று பி.எஸ்.மணி அழைக்கப்படவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை அழைத்து குமரி மாவட்ட இணைப்பு விழாவை பி.எஸ்.மணி நடத்தினார்.

இப்படி தியாகம் செய்து போராடிய தியாகிகளினால் நாம் இழந்த ஒரு சில பகுதிகளையே மீட்க முடிந்தது. 1956 நவம்பர் 11ஆம் நாள் இன்றைக்குள்ள சென்னை மாநிலமாக அமைந்தது. அது ஒரு தீபாவளி நாளாக அமைந்தது. அன்றைக்கு அதை துக்கமாக கொண்டாடுவதா, மகிழ்ச்சியாக கொண்டாடுவதா என கேள்விகள் எழும்பின. இந்த இழப்பீட்டினால்தான் கேரளத்துடன் முல்லைப் பெரியாறு, குமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாறில் துவங்கி வடக்கே கோவை மாவட்டம் வரை உள்ள நதி நீர் பிரச்சினைகள், கர்நாடகத்தோடு ஒக்கேனக்கல், காவிரி பிரச்சினை, ஆந்திரத்தோடு பாலாறு, பொன்னையாறு மற்றும் பழவேற்காடு ஏரி பிரச்சினை போன்றவை தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்திற்கு தலை வலியாக இருந்து வருகின்றது. இச்சூழலில் நாம் இழந்த பகுதிகளில் தற்போது அங்கு வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவாவது நமது முயற்சிகள் வேண்டும்.