நெடிய அகண்ட சாலைகள், விண் உயர்ந்த கட்டடங்கள், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், பல நாட்டு தூதரகங்கள் என வலிமை மிக்க கட்டடங்களைக் கொண்ட டில்லிக்கு,  கடந்த 12.12.2011 அன்று நூற்றாண்டு. 5,000 ஆண்டுகளுக்கான வரலாறு இந்நகரத்திற்கு இருந்தாலும், ஆங்கிலேயர் காலத்திலிருந்து யமுனை நதிக் கரையில் அமைந்த இந்த பரிவாரத்தில் எத்தனையோ ராஜ ரகசியங்கள், சாணக்கிய வேலைகள், மாக்கியவல்லியின் அணுகுமுறைகள் என பல காட்சிகள் அரங்கேறியுள்ளன. பாண்டவரின் தலைநகரான இந்திரபிரஸ்தத்தில்தான் டில்லி அமைந்தது. ஹஸ்தினாபூர் என்றால் யானைகள் வாழும் நகரம் என குறிப்பிடுவர். அந்தளவு படை, சேனைகள் அங்கிருந்தன.

தைமூர், முகம்மது பின் துக்ளக், கில்ஜி வம்ச அரசர்களை டில்லி கண்டது. டில்லி பல இரத்தக் களங்களை கண்டது. இருப்பினும் அங்கு அமைந்துள்ள எழிலார்ந்த கட்டடங்களில் நடந்த இராஜ்ய பணிகளின் சிறப்பால் இன்றும் தனது புனிதத் தன்மையை இழக்காமல் இருக்கின்றது. இன்றைக்கு டில்லியின் மக்கள் தொகை சுமார் 2 கோடிக்கு மேலாகும்.

இந்தியாவில் 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு பின், இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி பார்வையில் கொண்டு வரப்பட்டது. அதற்கு முதல் அரசியாக விக்டோரியா பேரரசியார் பதவியேற்றுக் கொண்டார். அக்காலத்தில் கொல்கத்தா, மும்பை, டில்லி இதில் எதை இந்தியாவின் தலைநகராக ஏற்கலாம் என்ற சிக்கல் இருந்தது. இந்து முஸ்லிம் பிரச்சினையில் கொல்கத்தா கொந்தளித்துக் கொண்டிருந்ததால் அந்நகரம் தலைநகர் பிரச்சினையிலிருந்து நிராகரிக்கப்பட்டது. டில்லி நகரமானது தன்னுடைய நான்கு புறங்களில் விஸ்தரிக்கும் தன்மைக் கொண்டதாக இருந்தது. இதனாலேயே டில்லி தலைநகராக ஏற்கப்பட்டது. 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கல்கத்தாவிலிருந்து, டில்லி தலைநகராக மாற்றப்பட்டது. உடனே, 1911ஆம் ஆண்டு டிசம்பர் 12இல் ஐந்தாம் ஜார்ஜ் டில்லியில் பட்டம் ஏற்றார். தர்பார் மண்டபத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். அதை ஆங்கிலத்தில் எணூஞுச்t ஈடச்ணூஞச்ணூ என்றனர். ஐந்தாம் ஜார்ஜும், அரசி மேரியும் கலந்து கொண்ட, செங்கோட்டை அருகே ஜனத்திரள் முன்பு டில்லி தர்பார் நடைபெற்றது. 3,00,000 மக்கள் இந்த தர்பார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்காக ஒன்பது லட்சம் டாலர்கள் செலவு செய்யப்பட்டன.  ஐந்தாம் ஜார்ஜின் தர்பார் என நடைபெற்ற பேரணி ஐந்து மைல் தூரம் நீடித்தது. இந்தப் பேரணி செங்கோட்டை, ஜூம்மா மசூதி, சாந்தினி சௌக், கிங்ஸ்வே முகாம் வழியே கடந்து சென்றது. ஐந்தாம் ஜார்ஜ் இந்த பேரணியில் கலந்து கொண்டபோது யானையில் ஏற மறுத்து, குதிரையில் ஏறி பயணித்தார். இப்படி கோலாகலமாக விழா நடந்து முடிந்தது. தலைநகர் டில்லியை கட்டமைக்க 20 ஆண்டுகள் ஆகின. அதற்கான செலவு 13.07 கோடி ரூபாய் ஆகும். அன்றைக்கு ஐட்ணீஞுணூடிச்டூ இச்ணீடிtச்டூ என்ற டில்லி தலைநகரின் மக்கள் தொகை 2.3 லட்சமாகும்.

1991இலிருந்து 1931 வரை நடைபெற்ற டில்லி கட்டுமானப் பணிகளை எட்வின் லூட்டியன் வடிவமைத்தார். அவரோடு ஹெர்பர்ட் பேக்கர் உடனிருந்து நகரை நிர்மானிக்கும் பணியில் மும்முரம் காட்டினார். 25 சதுர மைல்கள் அளவில் டில்லி நகரை நிர்மானிக்க திட்டமிடப்பட்டது. பணிகள் துவக்கும்பொழுது டில்லி நகரமே பிரிட்டிஷார் பயன்படுத்தும் டெண்ட் எனப்படும் கூடாரங்களாகவே காட்சியளித்தது. அரசு பரிவார கட்டடங்கள் உயரத்தில் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு, ரைசினா மலைக்கு அருகில் ராஷ்டிரபதி பவனத்தையும், தெற்கு, வடக்கு பிளாக்குகளையும் கட்ட திட்டமிடப்பட்டது. புதுடில்லி தலைநகருக்கு டிசம்பர் 15, 1911இல் கிங்ஸ்வே கேம்ப்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. ராஸ்டிரபதி பவனைக் கட்ட 29,000 பணியாளர்கள் 8 ஆண்டுகள் பணி செய்தனர். 4.5 மில்லியன் செங்கல்லும், 7,500 டன் சிமெண்டும் பயன்படுத்தப்பட்டது. இதைக் கட்ட ரூ.1 கோடியே 4 லட்சம் அன்றைக்கு செலவானது. 20 ஆண்டுகளாக டில்லியை கட்டமைத்தபின், 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் நாள் இந்தியாவின் வைஸ்ராய் லார்டு இர்வின் பிரபு 31 துப்பாக்கித் தோட்டாக்கள் முழங்க இராணுவ மரியாதையுடன் துவக்கி வைத்தார். இந்த கொண்டாட்டங்கள் இரண்டு வாரம் நடைபெற்றது. வைஸ்ராய் தோட்டத்தில் இந்நிகழ்ச்சிக்காக விருந்துகளும், போலோ விளையாட்டுகளும் நடைபெற்றன. இங்கிலாந்தில் உள்ள ராயல் கிராண்ட் நகரமான பாத் என்ற அமைப்பில் டில்லி நிர்மானிக்கப்பட்டது. 

டில்லிப் பல்கலைக் கழகம், ஸ்டீபன் கல்லூரி, இந்து கல்லூரி, ரம்ஜாஸ் கல்லூரி போன்றவை 1922இல் துவக்கப்பட்டது. இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையும் 1924இல் அச்சேறியது. இந்தியா கேட் அமைக்கும் பணி, 1921, பிப்ரவரி 10ஆம் நாள் துவக்கப்பட்டது. டூயூக் அப் கன்னார்ட் இதனை 1931இல் திறந்து வைத்தார்.

இப்படிப்பட்ட வரலாறு டில்லிக்கு இருந்தாலும், நல்லது கெட்டது இணைந்தே டில்லி ராஜபாட்டையில் நடந்தேறி உள்ளன. அரசர் ஆட்சிக் காலத்தில் எவ்வளவோ போர்களை, சண்டைகளை இந்நகரம் கண்டது. ஆனால் பல நன்றும் நடந்தேறின. டில்லியில்தான் அண்ணல் காந்தியும், இந்திரா காந்தியும் கொடியவர்களின் துப்பாக்கி சூட்டில் காலமானார்கள். சோஷலிசத்தை கொண்டு வந்த நேருவும், காட்சிக்கு எளிய சாஸ்திரியும் ஆட்சியில் இருந்தார்கள். இந்தியாவின் அரசியல் சதுரங்கமே டில்லிதான். அந்த அரசியல் சதுரங்க விளையாட்டின் விளைவு காஷ்மீரிலிருந்து  கன்னியாகுமரி வரை எதிரொலிக்கும். 1947இல் பாகிஸ்தான் பிரியும் போது ஏற்பட்ட வேதனைகள்; இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் படேல், சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தது; இந்திரா காந்தியால் வங்கதேசம் பிரிந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி என்ற வரலாற்று நினைவுகளை சொல்லி மாளாது.

இந்தியா பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாசாரங்களைக் கொண்டிருந்தாலும், மனப்பூர்வமாக டில்லி தங்களின் தலைநகர்; தங்களை வசீகரிக்கும் கம்பீரமான நகரம் என்று இந்தியர்கள் அனைவரும் கருதுகின்றனர். அனைத்து மாநில மக்கள் வாழும் நகரமாகிவிட்டது டில்லி. குளிர்காலத்தில் அதிக குளிரும், கோடையில் அதிக வெப்பமும் கொண்ட பூகோளத் தன்மையுள்ள நகரத்தில், மக்கள் நல அரசின் ஆணிவேர் பலமாக உள்ளது. நீண்ட வரலாற்றில் நடந்த நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்திலும் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் டில்லியில் உள்ள மத்திய அரசால் பாரபட்சமில்லாமல் நல்லதே நடக்க வேண்டும் என்கிற அளவில், டில்லியை நாம் அனைவரும் மனமார விரும்புகிறோம். அதனுடைய பரிவாரங்களும், செயல்களும் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும்.