ஏன் இந்த தலைகுனிவு_
பண்டித நேரு காலத்தில் அணி சேராக் கொள்கை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடுகளை ஒருங்கிணைத்தார். உலக அமைதியை பாதுகாக்கும் தூதனாக இந்தியத் திருநாடு கீர்த்தியைப் பெற்றது. இந்தியாவின் அணி சேராக் கொள்கையை பார்த்து அமெரிக்கா, கடந்த காலத்தில் இருந்த சோவியத் யூனியன் போன்ற உலகின் இரண்டு வல்லரசுகளும் அஞ்சியது மட்டுமல்லாமல், நமது கொள்கைக்கு உரிய கௌரவத்தை கொடுத்தன. இந்தியாவின் அமைதி முயற்சி உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகப் பிரச்சினைகளாக விஸ்வரூபம் எடுத்த சூயஸ் கால்வாய் மற்றும் அயர்லாந்து, போர்ச்சுகல் பிரச்சினைகளில் இந்தியாவின் கருத்துக்கும் ஆதரவுக்கும் தனி மரியாதை இருந்தது. ஒருபுறம் ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா இடம் பெற வேண்டுமென்று உலகளவில் கருத்துக்கள் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் லீக் ஆஃப் நேஷன், ஐ.நா. மன்றம் என்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. லீக் ஆஃப் நேஷன் வெற்றியை ஈட்டாமல் வந்த வேகத்திலேயே போய்விட்டது.
ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? நமக்கு இருந்த கௌரவமும் மரியாதையும் எப்படி காணாமல் போயின? இந்தியாவுக்கு ஏன் இந்த பின்னடைவான அவமான போக்கு? இந்திரா காந்தி இருந்தவரை வெளிநாட்டு கொள்கைகளில் ஒரு தீர்க்கமான அணுகுமுறை இருந்தது. வங்கதேசப் பிரச்சினை, பாலஸ்தீன பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளில் அவருடைய கம்பீரமான அணுகுமுறையும், கருத்தும் உலக அரங்கில் ஆலோசனைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்திராவுக்குப் பின் வெளிநாட்டுக் கொள்கைகளில் முன்னுக்குப் பின் முரணாக மாறுபட்டதற்கு காரணம் வெளியுறவுத் துறையில் இருந்த அதிகார வர்க்கம்தான். ரமேஷ் பண்டாரிகள், தீட்சித்துகள் ஆகியோரின் தவறான ஆலோசனைகளால் நமது வெளியுறவுக் கொள்கையில் தாறுமாறான முடிவுகள் எடுக்கப்பட்டு நாடு தலைகுனியும் நிலை ஏற்பட்டது. இதனால் அணி சேரா நாடுகள் அமைப்பிலும், சார்க் அமைப்பிலும், காமன்வெல்த் அமைப்பிலும், ஐ.நா. அமைப்பிலும் நமது குரல் எடுபடவில்லை.
இலங்கை பிரச்சினையில் நாம் செய்த முதல் தவறு ஜெயவர்த்தனாவுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, அமைதிப் படையை அங்கு அனுப்பியதுதான். அதன் காரணமாக 1990 வரை அங்கு நடைபெற்ற கொடுமைகளும், துயரங்களும் ஈழத் தமிழர்களால் என்றைக்கும் மறக்க முடியாது. தமிழ்ப் பெண்களின் கற்பு சூரையாடப்பட்டது. தமிழர்கள் சொல்லொனாத வேதனையில் அவதிப்பட்டனர். வி.பி.சிங் பிரதமராக வந்தபின், இந்திய அமைதிப் படை இலங்கையிலிருந்து திரும்பப் பெறப்பட்டது. அப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. சென்னைக்கு வந்த இந்திய அமைதிப் படையை வரவேற்க செல்ல மாட்டேன் என்று அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அறிவித்தார். இந்திய அமைதிப் படையால் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், கற்பழிப்புகள் காரணமாக பெரும் தலைகுனிவு இந்தியாவிற்கு ஏற்பட்டது.
அதுபோலவே, தற்போது இலங்கையில் நடைபெறும் சோகமான நிகழ்வுகளை பார்க்கும் பொழுது முண்டாசு கவி பாரதியின் வார்த்தையில் சொல்வதானால், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்றுதான் சொல்ல வேண்டும். ஐ.நா. மன்றமே தனது அறிக்கையில், அங்கு நடைபெற்ற அக்கிரமங்களையும், படுகொலைகளையும் சொல்லியிருக்கின்றது. இதைவிடவா வேறு சாட்சியங்கள் வேண்டும்? இந்தியத் தமிழர்களைப் பொறுத்தவரை ஈழத்தில் நடக்கும் நிலைகளை பார்த்துக் கொண்டு, பாரதி ‘பாஞ்சாலி சபத’த்தில் சொல்லிய ‘பெட்டைப் புலம்பலை’த் தான் வெளிப்படுத்தும் நிலை இருக்கின்றது.
1989இல் சூடான் நாட்டில், முஸ்லிம் கிறித்துவர்கள் என மத ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டு உலகின் 193ஆவது நாடாக அது உருவானது. இலங்கை பிரச்சினையில், வட்டுக்கோட்டையில் 1976ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி தந்தை செல்வா கூட்டிய தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் ‘சக வாழ்வு முடியாது. தனி வாழ்வு தான்’ என்று தமிழ் ஈழத்துக்கு வித்திட்டார். செல்வாவின் இந்த கருத்துக்கு இலங்கையில் இருந்த 78.4 விழுக்காடு தமிழர்கள் தங்களின் ஆதரவை வாக்குகள் மூலம் அளித்தனர். இன்றுவரை இதன் நியாயங்கள் ஊமையாகவே இருக்கின்றன. ஈழத் தமிழர்களின் துயரத்திற்கான உண்மையான காரணங்கள் உறங்குகின்றன. செக்கோஸ்லோவேகியா, தெற்கு தைமூர், வட அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, பயாவ்ரா, பாசுக், எரித்திரியா, மேற்கு இரியான், திபெத், கொசாவா போன்ற நாடுகளின் பிரச்சினைகளுக்கெல்லாம் இந்தியா ஆதரவு குரல்களை எழுப்பியும், எழுப்பிக் கொண்டும் இருக்கின்றது. ஆனால் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் மட்டும் தெளிவான, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லாததுதான் கொடுமையிலும் கொடுமை. இந்திய அமைதிப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அட்டகாசங்கள் வரலாற்றில் கரும்புள்ளியாக பதிந்து விட்டது.
‘தமிழர்களின் ரத்தம் இங்கே பரிமாறப்படும்’ என்று 1983இல் நடைபெற்ற இனப்படுகொலையை எவராலும் மறுக்க முடியுமா? இலங்கை அரசு தமிழர்களுக்கு செய்த அரச பயங்கரவாதத்தை கண்டித்து இந்தியாவின் ஒருமித்த குரலாக ஒலித்த பிரதமர் இந்திராவின் குரலை மறக்க முடியுமா? மறைக்க முடியுமா? அதன்பின் நடந்த சம்பவங்களால் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை இழந்தது. ஜெயின் கமிஷன் என காட்சிகள் நடந்தேறின. இதற்கெல்லாம் காரணம் ஒருபுறம் துன்பியல் என்று சொல்லப்பட்டாலும், மானிட உயிர்களையும், மானிட உரிமைகளையும் காக்க வேண்டியது நமது அடிப்படை கடமையாகும். அதுதான் மனித நாகரிகமுமாகும். அப்படியான சிந்தனை ஏன் இன்னும் வரவில்லை. ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் நமது குளறுபடியான கொள்கைககளால்தான் இவ்வளவு தலைகுனிவுகளும் நமக்கு ஏற்பட்டன.
ஈழத்தில் அமைதிப் படை செய்த அதே மாதிரியான அவலங்கள் இன்றைக்கு காங்கோவிலும் நடந்தேறியுள்ளன. அங்கு சென்ற ஐ.நா. அமைதிப் படையில் இந்தியாவைச் சேர்ந்த 3,896 இராணுவ வீரர்கள் இருந்தனர். அந்நாட்டில் வறுமையும், அறியாமையும் இருந்தாலும், கனிம வளங்கள் புவியியல் ரீதியாக அதிகம். 1998இலிருந்து நடக்கும் உக்கிரமான உள்நாட்டுப் போரில் எட்டு ஆப்பிரிக்க நாடுகள், 25 ஆயுதமேந்திய குழுக்களாக ஈடுபட்டுள்ளன. அங்கு நடந்த போர் களத்தில் இதுவரை இலட்சகணக்கான மக்கள் மாண்டுள்ளனர். காங்கோவில் பாலியல் வன்முறைகள் சகட்டுமேனிக்கு நடந்துள்ளன. இரண்டு லட்சம் பெண்களின் கற்பு சூரையாடப்பட்டுள்ளது. 2003இல் சர்வதேச முயற்சியால் காங்கோவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இடைக்கால அரசு ஏற்பட்டது. அங்கு எவருடைய பாதுகாப்பிற்காக ஐ.நா.வின் சார்பில் இந்திய இராணுவத்தினர் சென்றார்களோ, அவர்களுக்கே பாதகம் செய்து விட்டனர் என்ற கடுமையான குற்றச்சாட்டுகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே முணுமுணுக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இதனால் சர்வதேச அளவில் இந்தியா தலைகுனிவை சந்திக்க வேண்டியதானது. இந்த குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு உண்மையென நிரூபிக்கப்பட்டது. இந்திய அரசு, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என ஐ.நா.மன்ற பொதுச் செயலாளர் பான் கி மூன் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய இன குறியீடுகள் இருப்பது தெரியவர, உண்மை வெளுத்து, இன்றைக்கு இந்தியாவுக்கு உலக அளவில் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் அமைதிப் படை இலங்கைச் சென்றபொழுதும் இதுபோன்ற பிரச்சினை எழுந்தது. காஷ்மீரத்திலும், இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களிலும் தீவிரவாதிகள் என்ற பெயரில், இந்திய படை மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்று அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்தன.
மணிப்பூரில் மனோரமா என்ற பெண் பாதுகாப்புப் படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் மணிப்பூரே கொதித்தெழுந்தது. இந்திய இராணுவம் மணிப்பூர் பெண்களை மானபங்கப்படுத்துகிறது என்ற முழக்கங்களும், பேனர்களும் தெருக்களில் வைக்கப்பட்டன. இந்த கொடுமையை எதிர்த்து உடம்பில் துணி எதுவும் இல்லாமல் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். துளி நீர் கூட பருகாமல் உண்ணாவிரதத்தை ஷர்மிளா என்ற பெண்மணி நடத்தினார். பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட மனோரமாவுக்கு நீதி கேட்டு மணிப்பூர் மக்கள் போர் குணத்தோடு போராடும் காட்சியை இன்றைக்கு பார்க்கின்றோம்.
காஷ்மீரத்திலும் 1989இலிருந்து சுமார் 10,000 பெண்கள் நமது பாதுகாப்புப் படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் உள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் இரண்டு பெண்கள் அங்கு இத்தகைய பலாத்காரத்துக்குள்ளாகியுள்ளனர். இந்திய அமைதிப் படை இலங்கையில் நடத்திய அட்டூழியங்கள் கல்வெட்டுகளாக தமிழ்ப் பெண்கள் மனதில் பதிந்து விட்டன. இத்தகைய குற்றச்சாட்டுகளையெல்லாம் இந்திய இராணுவம் எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இராணுவத்தினரின் அத்துமீறல்கள், அது பெரிய அளவில் இருந்தால் மட்டுமே விசாரிக்கப்படுகிறது. இராணுவத்தினரின் மீதான புகார்கள் சரிவர பதிவு செய்யப்படுவதில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர். அதையும் மீறி பதிவு செய்யப்படுகின்ற புகார்களின் மீது சந்தேகத்திற்குரிய வகையிலேயே விசாரணைகள் நடத்தப்படுகின்றது. இத்தகைய புகார்களில் பெரும்பாலனவை விசாரிக்க தகுந்தவை இல்லை என்று தெரிவிக்கப் படுவதோடு, இவை இராணுவத்தின் நன்மதிப்பை குறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சாட்டப்படுகின்ற போலியான குற்றச்சாட்டுகள் என்றும் இந்திய இராணுவம் கூறுகிறது.
இந்திய இராணுவத்தின் மீது நம் அனைவருக்கும் மதிப்பும், மரியாதையும் உண்டு என்பதில் சந்தேகமில்லை. அதனுடைய கம்பீரத்தையும், அது கடந்த காலங்களில் நடத்திய சாகசங்களையும், வீரத்தையும் யாரும் மறுக்கவில்லை. நாட்டைப் பாதுகாக்கின்ற வீரர்கள் மீது குற்றம் சொல்கின்ற நோக்கம் எவருக்கும் மனதளவில் கூட தோன்றாது. இந்திய சீன போர், இந்தியா பாகிஸ்தான் போர், வங்கதேசம் உதயம், கார்கில் போர் போன்றவற்றில் இந்திய இராணுவத்தின் வீர, தீர, பராக்கிரமத்தை அனைவரும் நன்றியோடு பார்ப்பது மட்டுமல்லாமல், வீர வணக்கம் செலுத்தவும் கடமைப் பட்டுள்ளோம். பனிப் படர்ந்த மலைகளில் இரவு பகல் என்று பாராமல், நாட்டை காக்கும் ஜவான்கள்தான் நமது பெருமைக்குரியவர்கள் என்ற கருத்தை நாம் மனதில் வைத்துள்ளோம். நம்முடைய இராணுவம் நம்மை பல வகையிலும் பெருமைப்படுத்தியுள்ளது. ஆனால், இராணுவத்தின் மீது மறுக்க முடியாத பழி சொற்கள் வரும்பொழுது வெட்கி தலை குனிய வேண்டிய நிலைமை நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்றது. ஏன் இந்த தலைகுனிவு என்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்து கடமைகளை நேர்மையுடன் ஆற்றி, அவச்சொல், அவமானங்கள் ஆகியவற்றிலிருந்து தங்களை வெளியேற்றிக் கொண்டு, நாட்டின் கௌரவத்தை உயர்த்த வேண்டியது இராணுவத்தின் பொறுப்பாகும்.