சமீபத்தில் சிக்கிமில் ஏற்பட்ட நில நடுக்கம் ஒரு பெரிய பூகம்பத்தின் துவக்கம் என்றும், அதுகுறித்து விழிப்புணர்வும், கண்காணிப்பும் தேவையென்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். டில்லியில் நடந்த சிறிய நில நடுக்கத்திற்கு பிறகு 11 நாட்களில் சிக்கிமில் நடந்த பூகம்பம் சொல்ல முடியாத நாசத்தை ஏற்படுத்தியது. அங்கு 116 பேர் மாண்டுள்ளனர். உயர்ந்த இமயத்தின் அடித்தளத்தில் சீறி எழுந்த இந்த துயர சம்பவத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிக்கிமின் மேற்கில் கார்வால் உள்ள இமாச்சலப் பிரதேசத்திலிருந்து துவங்கும் நிலநடுக்க அறிகுறிகள் இமயத்தின் அடிவாரப் பகுதியில் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியில் ஏற்படும் உயர்வு சரிவு, ஆறுகளின் திசை மாற்றம், அவற்றின் வேகம், பூமிக்கடியில் ஏற்படும் பாறைகளின் சிதைவு போன்ற பல காரணங்களால் நில நடுக்கம் உணரப்படுகிறது. பூமிப் பந்தை ஆராயும் தொழில் நுட்பங்களைக் கொண்டு இந்த அசைவுகளை தெரிந்து கொள்கின்றனர்; அந்தளவில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இத்தொழில் நுட்பத்தின் மூலம் பூமியின் அடியில் உள்ள பாறை அமைப்புளை அறிந்து சேதாரங்கள் ஏற்படும் என்று ஆராய்ச்சி செய்த வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 

இமயத்தின் கீழ் பகுதியில் வடக்கு நோக்கி நகரும் ஒரு பாறைத் திட்டு உள்ளது என்றும், ஒரு கட்டத்தில் இந்த பாறைத் திட்டு நகர முடியாமல் வெடிக்கும் பொழுது பூகம்பம், நில நடுக்கம் ஏற்படும் என்றும் அச்சப்படுகின்றனர். சிக்கிமில் இதுவரை 100 கி.மீ. சுற்றளவுக்கு 38 ஆண்டுகளில் 18 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. சிக்கிமில் கூட நில நடுக்க அறிகுறிகள் முன் கூட்டியே தென்பட்டும் அதிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் நம்மிடம் இல்லை. இதற்கெல்லாம் காரணம், அங்கு பாயும் தீஸ்டா நதி 1787இல் கங்கையிலிருந்து பிரிந்து திசை மாறி பிரம்மபுத்திராவுடன் இணைந்ததுதான். 2008இல் கோசி நதியில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு தீஸ்டா நதியின் திசைப் போக்கே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

1933ஆம் ஆண்டு பீகாரில் 33 ஆயிரம் பேரை காவு வாங்கிய 8.4 ரிக்டர் என்ற அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது; அதே பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் மூன்று பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன. 2001இல் பூஜ் நகரில் 20 ஆயிரம் பேர் இந்த பூகம்ப இடரால் மாண்டனர். 2004 சுனாமியால் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா கடற்கரை பகுதிகளில் பெரும் இழப்புகள் ஏற்பட்டது மட்டுமல்லாமல், இயற்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அந்தமானில் கடல் மட்டம் குறைந்தது. 

இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், சிக்கிமில் இருந்து கிழக்கு பகுதிகள் வரை இமயமலையில் 50 கி.மீ. எல்லைக்குட்பட்ட பகுதிகள், பீகாரின் கோசி நதி பாயும் பகுதிகள், வங்கத்தில் தீஸ்டா நதி பாயும் பகுதிகள், அந்தமான் மற்றும் வங்காள விரிகுடா பகுதி, தமிழகத்தின் தென் கிழக்கு கடற்கரை மற்றும் காவிரி ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலை, கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் மும்பை பன்வல் பகுதி, அரபிக் கடல் கொங்கன் கடற்கரை, குஜராத் தாரா, அகமதாபாத், புஜ், பரூஜ், சூரத் போன்றவை இடர் மிகுந்த பகுதிகள் என்று சொல்லப்படுகிறது. இந்த பகுதிகளில்தான் கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்கள்உள்ளன. இங்கு மேலும் சில அணு மின் நிலையங்கள் அமைக்கவும் திட்டங்கள் உள்ளன.

இந்தியாவில் உள்ள நிலநடுக்க வரைபடம் பழமையானதாக இருப்பதோடு இன்று வரை அது இறுதிபடுத்தப்படவில்லை. இது முழுமை பெறாத ஆவணமாக இருப்பதாக செய்திகள் உள்ளன. சரியான ஆவணங்கள் வரைபடங்களைக் கொண்டுதான் அணுமின் திட்டங்கள் போன்ற மெகா திட்டங்களை அமைக்க வேண்டும். நில சரிவின் வகைகள், புவியியல் மாற்றங்கள் போன்றவை பற்றி அன்றைக்கு அன்று உள்ள சூழல்படி மாற்றங்கள் செய்து ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். இது அவசியமானதாகும். பக்ரா நங்கல் அணை கட்டும் பொழுது அமெரிக்க தொழில் நுட்ப அடிப்படையில் பூகம்பம், நில சரிவுகளை எல்லாம் மனதில் கொண்டு 1950இல் திட்டமிட்டதால் இன்று வரை அந்த அணை பாதுகாப்பாக இருக்கின்றது.

தமிழகத்தை பொறுத்தவரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டம், கொங்கு மண்டலத்தில் வெள்ளக்கோவில், தாராபுரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வுகள் அவ்வப்போது மிரட்டி கொண்டுள்ளன. கடந்த ஜூன் 3ம் தேதி பிற்பகல் சென்னை தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தவர்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர். மீண்டும் ஜூலை 10ம் தேதி மாலை 4 மணி அளவில் கே.கே.நகர், அசோக் நகர் பகுதிகளிலும், 19ம் தேதி திருவல்லிக்கேணி பகுதியிலும் இந்த அதிர்வு ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர். சென்னை, கோவை, கடலூர், தருமபுரி, கல்பாக்கம், சேலம், திருவண்ணாமலை, வேலூர் போன்ற பகுதிகளில் இந்த பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை இருக்கும் என தேசிய பேரிடர் ஆணையம் தகவல்களை வெளியிட்டாலும், அவை யாவும் உறுதியான கணக்கீடா என்பதுதான் இன்றைக்கு உள்ள கேள்வி.

தமிழகத்தில் கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்

நில நடுக்க அளவு (ரிக்டர்)

          பகுதி 5ம் அதற்கு மேலும் 4 முதல் 4.9 3 முதல் 3.9 2 முதல் 2.9

சென்னை ஸ்ரீபெரும்புதூர் 1807, 1818, 1823 1818, 1822 1971

வந்தவாசி 1822

விழுப்புரம் 1819

வேலூர் வாணியம்பாடி

மேட்டூர் சேலம்

(பவானி குடியாத்தம் பகுதி)

1859 1858, 59, 60, 61,

1959, 68, 69, 72, 84 (2 முறை) 1968 (3 முறை)

70, 71, (3 முறை)

1972 (2 முறை)

1973 (3 முறை)

1978, 1984, 1996, 1998 1968, 78

1982 (2 முறை)

1983

1984 (8 முறை)

1988 (2 முறை)

கிருஷ்ணகிரி 1968,71,73,74 1968 (3 முறை)

1969, 70, 71, 72

73, 74 (4 முறை) 1978, 1980, 1995

மன்னார் வளைகுடா 1938, 1993

கோவை 1990 1972 1998 (2 முறை) 2001 1981

கொடைக்கானல் மதுரை திண்டுக்கல் 1956, 

1969 (2 முறை)

திருச்சி 1864

கடலூர் 1968 1963

புதுச்சேரி 2001

உதகை 1882


நில நடுக்கத்தை 12 வகைகளாக பிரித்துள்ளனர். அந்த வகையில் 1 என்றால் உணரப்படாத நிலை; 12 என்றால் நிலத்தின் அமைப்பையே மாற்றிவிடும் அளவுக்கு கடுமையானது. இந்த அளவில் சென்னை மிதமான பட்டியலில் உள்ளதாக கூறுகின்றனர்.

இயற்கையின் சீற்றங்கள் மட்டுமல்லாமல் மானுடத்தின் செயல்பாடுகளும் பூகம்பத்திற்கு காரணமாகின்றன. அளவுக்கு அதிகமான கட்டுமான பணிகளால் வானுயர்ந்த கட்டிடங்கள், வரம்பின்றி மணல் அள்ளுதல், காடுகளை அழித்தல், நகர்மயமாக்கல், ஆழமாக துளைகள் போட்டு தண்ணீரை எடுத்தல் என்ற இயற்கைக்கு மாறான செயல்களால் பூமி சமநிலையை இழக்கின்றது. நீர் நிலைகளில் தண்ணீரை தேக்கி வைக்காமல் கடலில் கலக்கவிடுவதால் கடல் மட்டம் உயர்கிறது. மலைகளை பிளக்கும்பொழுதும் பூமியில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இப்படிதான் பூமி நடுக்கம் எடுத்து இடர்மிகுந்த சோதனைகள் வருகின்றது. சுற்றுச்சூழல் தானே என்று அலட்சியமாக இல்லாமல் அதை மதித்து இயற்கையின் அருட்கொடைகளை பேணி காத்து மானுடம் வாழ்ந்தால் இந்த பூமி தழைக்கும்.

இயற்கை நமக்கு எவ்வளவோ அற்புதங்களையும், அரிய செல்வங்களையும் வழங்கி உள்ளது. அதனால்தான் இயற்கையை வணங்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் இயற்கையை போற்றுவதற்காக தை திருநாளில் பொங்கலிட்டு இயற்கையை போற்றுகிறோம். நகர்மயமாக்கல், செல்வம் ஈட்டல் என்ற அளவில் தனி மனிதனின் பேராசை, சமுதாயத்தில் போட்டி பொறாமைகள் என்பதாலே இயற்கை செல்வங்கள் அழிகின்றன. மனிதன் என்பவனுக்கு குறிப்பிடத்தக்க ஆண்டுகள்தான் ஆயுள். ஆனால் இயற்கையின் வரங்களான மலை, நதி, காடு, கடல் இவையாவும் என்றைக்கும் நிரந்தரமானது. அவற்றை அழித்து, தான் வாழ வேண்டுமென்று மனிதன் ஆசைப்படுவதால்தான் இந்த இயற்கை அழிவுகள். யானைகள் கிராமங்களுக்குள் வந்து அட்டகாசம் செய்வதற்கு யார் காரணம்? அவற்றின் வலசைகள் (வழித்தடங்கள்) அனைத்தையும் மனிதன் ஆக்கிரமித்ததால், அவை கூட்டம் கூட்டமாக திசை தவறி மனிதர்கள் வாழும் இடத்திற்கு வருகின்றன. அது அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் அனைவருக்கும் நல்லது. அந்த வகையில் பூகம்பம், நில அதிர்வுகள், பேரிடர்கள் போன்றவற்றை ஓரளவு தடுக்க வேண்டுமென்றால் மானுடமும் தன்னுடைய பொறுப்புணர்ந்து கடமையாற்ற வேண்டும்.