தலைவர் கலைஞர் அவர்கள் ஆறாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கின்றார். பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு 1969இலிருந்து தான் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் தமிழகம் வளம் பெற எவ்வளவோ திட்டங்களை கலைஞர் நடைமுறைப்படுத்தினார். பேருந்துகள் நாட்டுடைமை, அனைத்து கிராமங்களுக்கு மின் இணைப்பு, குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வசதிகள், கண்ணொளித் திட்டம், கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில் கூட செயல்படுத்தப்படாத, இந்தியாவிலேயே முதன் முதலாக கை ரிக்ஷாக்களை ஒழித்த புரட்சிகரமான திட்டம், இந்தியாவுக்கே முன்னுதராணமாக காவலர்களுக்கு வாரியம், மே தினத்திற்கு தொழிலாளர்களுக்கு ஊதியத்தோடு விடுமுறை, இந்தியாவிலேயே கோவையில் முதல் வேளாண்மை பல்கலைக் கழகம், மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதி திட்டம், அனாதை சிறுவர்களுக்கு கருணை இல்லங்கள், சேலம் உருக்காலை திட்டம், நெய்வேலி இரண்டாவது சுரங்கம், சிப்காட் தொழில் வளாகங்கள், விவசாயிகளின் புஞ்சை நிலவரி அறவே நீக்கம், விவசாயத்திற்கு இந்தியாவிலேயே முதன் முதலாக இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்துரிமை, ஆசியாவிலேயே முதன் முதலாக கால்நடை பல்கலைக் கழகம், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி திட்டம், விதவைகளுக்கு மறுமண உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, மகளிர் சுயஉதவி குழுக்கள், மெட்ராஸ் என்பதை சென்னை என்று பெயர் மாற்றியது, கிராமங்களில் கான்கிரிட் சாலைகள், அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், பெரியார் சமத்துவபுர திட்டம், உழவர் சந்தைகள், மதுரையில் உயர்நீதிமன்ற கிளை, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மாதந்தோறும் குறைந்த விலையில் எண்ணெய் மற்றும் சமையல் மளிகை பொருட்கள், அ.தி.மு.க.வினரே அதிக அளவில் பயனடைந்த கிட்டத்தட்ட 23 இலட்சத்து விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி, மாநிலத்தில் பாயும் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், சத்துணவில் வாரம் அய்ந்து நாட்கள் முட்டை, வாழைப் பழங்கள், தொழிற் கல்வி படிப்புக்கு நுழைவு தேர்வு ரத்து, செம்மொழி ஆய்வு மய்யம், அரசு ஊழியர்களை பழிவாங்கும் டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் நீக்கம், 21 இலட்சம் குடிசை வீடுகளை நீக்கி கான்கிரிட் வீடுகளாக மாற்றும் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் என பல்வேறு அற்புதமான திட்டங்கள் தமிழகம் மேம்படுவதற்காக கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப் பட்டுள்ளதை நீண்ட நெடியப் பட்டியலிடலாம். அதுமட்டுமா; மாநில முதல்வர்கள் நாட்டின் விடுதலை நாளில் கொடியேற்றும் உரிமை; மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் குழு அமைத்தது; மாநில சுயாட்சி கோரிக்கை, மாநிலங்களுக்கு அதிக நிதி வருமானத்தை மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு பெற்றது போன்ற பலவற்றை எடுத்துக் கூறலாம்.

மத்திய அரசில் தி.மு.க. இடம் பிடித்ததும், 33 ஆயிரம் கோடியில் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழி பாதைகள், மேம்பாலங்கள், தமிழ் மொழி செம்மொழி என அறிவிப்பு, 150 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த சேதுக் கால்வாய் திட்டம், மெட்ரோ இரயில் திட்டங்கள் போன்ற திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் செயல்படுத்தப் பட்டுள்ளன என்பதையும் நீண்ட வரிசைப்படுத்தலாம். மக்கள் நல அரசாக, மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு என்ற ஜனநாயக தத்துவத்திற்கு ஏற்ப ஜனநாயக நெறிகள், மனித உரிமைகள் பேணி காக்கப்பட்டன. கலைஞர் அவர்கள் 1989 தேர்தல் காலத்தில் சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம் என் குறிப்பிட்டார். அந்த அறவழி பாதையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒப்பற்ற தலைவர் கலைஞர் ஆவார்.

ஆனால், 1991, 2001 என்ற இரண்டு முறை தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா பொறுப்புக்கு வந்தவுடன் தனது ஆட்சியை, எவ்வாறு மக்கள் விரோத ஆட்சியாக நடத்தினார் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவருடைய நடவடிக்கையை திரும்பிப் பார்த்தால் ரண வேதனைகள் தான் ஏற்படும். பாரதி குறிப்பிட்டவாறு பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்தான் அரசாளும் என்ற வரிகள்தான் நினைவுக்கு வரும். ஜெயலலிதா ஆட்சியில் நடந்தவைகளை தமிழக வாக்காளர்கள் இந்நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில், தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களை நடு இரவில் வீடு புகுந்து தாக்கி கைது செய்தது; இந்த நிகழ்வை குருவாயூர் கோவிலிலிருந்து கொண்டு ஜெயலலிதா செல்போனில் அகந்தையோடு ரசித்தார்; நினைவில் வாழும் முரசொலி மாறன், தளபதி, டி.ஆர்.பாலு ஆகியோர் தாக்குதலுக்குள்ளானது;

 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியின் கார் திண்டிவனம் அருகே தாக்கப்பட்டது; அவரை பற்றி தரக்குறைவான விமர்சனங்களை ஜெயலலிதா செய்தார்.

 அவரது ஆட்சி காலத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னை விமான நிலையத்திலும், அவர் தங்கியிருந்த ஓட்டலிலும் வன்முறையாளர்கள் தாக்க முயற்சிகள் நடந்தன;

 சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வாதாட வந்த சுப்பிரமணியம் சுவாமி, அ.தி.மு.க மகளிர் அணியினரால் சொல்ல முடியாத அளவில் அநாகரிகமாக நடத்தப்பட்டார்;

 மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி செல்லும் வழியில் அவரது கார் மறிக்கப்பட்டு, முட்டைகளை எறிந்து தாக்குதலுக்குட்பட்டது;

 பகலில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது;

 அண்ணாப் பல்கலைக் கழக துணை வேந்தர் ஆனந்தகிருஷ்ணன் அவரது வீட்டிலேயே தாக்கப்பட்டார்;

 ஜெயலலிதா அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க போகிறார் என்பதற்காக மூத்த வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம் தாக்கப்பட்ட சம்பவம்;

 அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தூத்துக்குடி ரமேஷ், மதுராந்தகம் சொக்கலிங்கம், உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன் தாக்கப்பட்டனர்; மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுதர்சனம் கொலை; காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சட்டமன்ற விடுதிக்குள்ளேயே தாக்கப்பட்டார்; இவையாவும் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றது;

 உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம். சீனிவாசன், ஏ.ஆர். இலட்சுமணன் மீது தேவையற்ற சர்ச்சைகள், நடவடிக்கைககள்;

 பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்ட தாக்குதல்கள்;

 தமிழகத்தை தலைகுனிய வைத்த, 100 கோடி ரூபாய் செலவில் தான் திருமணம் செய்து வைத்த வளர்ப்பு மகன் மீது ஹெராயின் வைத்திருந்ததாக வழக்குப் போட்டது;

 குடந்தை மகாமகம் குளத்தில் தோழியோடு சென்றபோது ஏற்பட்ட மரணங்கள், துயர சம்பவங்கள்;

 தன் தோழி சசிகலாவிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், தோழியை ஒதுக்கிவிட்டேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது;

 ஆளுயர கட்அவுட்கள், பேரவைத் தலைவரை தன் காலில் விழ செய்தது; தோழியை பேரவை துணைத் தலைவர் இருக்கையில் அமரச் செய்தது;

 தன்னுடைய அமைச்சசரவையில் இருந்த அமைச்சர்களை திடீர் திடீரென மாற்றுவதும், தூக்கியெறிவதும் போன்ற அவலமான நிகழ்வுகள்;

 எம்.ஜி.ஆரின் புகழை மறைக்க செய்தது. அவருடைய துணைவியார் வி.என். ஜானகி அம்மாள் மீது கடும் விமர்சனங்களை வைத்தது; அதுபோன்று மறைந்த இராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் மீது ஜெயலலிதா வைத்த கடுமையான விமர்சனங்கள், சொற்களை மறக்க முடியுமா?

 தோழமை கட்சி என்று பாராமல் 1999 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை திண்டிவனத்தில் மணிகணக்கில் காக்க வைத்து அந்த கூட்டத்திற்கே செல்லாமல் சோனியாவை புறக்கணித்தது;

 தஞ்சை டெல்டா விவசாயிகள் எலிக்கறி உண்ட அவலமான நிலை ஏற்பட்டது;

 பொடா சட்டத்தின் கீழ் வைகோ, பழ.நெடுமாறன் போன்றவர்களை பகை உணர்வோடு சிறையிலடைத்தது;

 கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் மூன்று பேர் கொடூரமாக, பட்டப் பகலில் எரித்துக் கொல்லப்பட்டது;

 மதுரையில் இளம் பெண் செரினா கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டது;

 மத்திய அரசில் அமைச்சராக இருந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அருணாசலத்தை தான் பயணிக்கும் விமானத்திலிருந்து மதுரையிலேயே இறக்கி விட்டது;

என ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் அவர் நடந்து கொண்ட அராஜகமான நடவடிக்கைகளையும் நீண்ட பட்டியலிடலாம். கலைஞரின் சரித்திர சாதனைகளையும், ஜெயலலிதாவின் இந்த அராஜகங்களின் பட்டியலையும் பார்த்தாலே மனசாட்சி உள்ளவர்கள் பதில் அளிப்பார்கள்.

இந்நிலையில், தற்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஈயடிச்சான் காப்பி போல வெளியிடப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் 2011 தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை நினைவுகூர்வது அவசியம்.

2001 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் 41 வாக்குறுதிகளை அ.தி.மு.க. வழங்கியது. கல்வியில் ஒரு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமனம் செய்வோம்; வேலை தேடி அலைய வேண்டிய நிலையை அறவே நீக்குவோம்; தமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளையும் இணைத்து ஒருங்கிணைந்த ஒரு தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் அமைப்போம்; அனைத்துப் பள்ளிகளிலும் இணையதள வசதியை ஏற்படுத்துவோம்; கோப்புகள் யாவும் ஒரு வாரத்துக்குள் பைசல் செய்யப்படும்; அரசு அதிகாரிகளுடைய மரியாதையை உயர்த்துவோம்; கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும்; தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் அறவே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுகிகளை அள்ளி வீசினார் ஜெயலலிதா.

அரசு ஊழியர்களின் மரியாதையை உயர்த்துவோம் என்று சொன்னார்கள். ஆனால், என்ன நடந்தது? எஸ்மா, டெஸ்மா சட்டங்களைக் கொண்டு வந்து நள்ளிரவில் வீடு புகுந்து அரசு அதிகாரிகளை கைது செய்தார் ஜெயலலிதா. ஆட்சிக்கு வந்தபிறகு, வாக்குறுதிகள் எதையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை.

ஆனால், கலைஞர் அப்படியல்ல. சொல்வதை எல்லாவற்றையும் செய்கிறார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? சொன்ன சொல்லை அ.தி.மு.க. காப்பாற்றுமா? ஆட்சிக் கட்டிலில் இருந்தபோது ஜெயலலிதா எத்தனை அந்தர் பல்டிகளை அடித்துள்ளார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

2006 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வழங்கிய உறுதிமொழிகள் அனைத்தையும் அப்படியே நிறைவேற்றியுள்ளார் கலைஞர். தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் தமிழகத்திற்கு மட்டுமன்றி மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடித் திட்டங்களாக அமைந்துள்ளன.

தி.மு.க.வின் 2011 தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகிறது. இலவச கிரைண்டர், மிக்சி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்பவை உட்பட பல வாக்குறுதிகள் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன. அதைக் கண்டு பொறுக்க முடியாமல் அலறியடித்துக் கொண்டு தி.மு.க.வின் தேர் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது. அதை நம்புவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளிகள்அல்ல. 1991, 2001 சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. என்ன வாக்குறுதிகள் கொடுத்தது? ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த உண்மைகள் யாவும் எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. நல்ல திட்டங்கள் தமிழகத்தில் ஈடேற; தமிழகம் வளம் பெற; தங்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும் ஜெயலலிதா ஆட்சிக்கு தமிழக வாக்காளர்கள் நிச்சயமாக வாக்களிக்காமல் புறக்கணிப்பர்.  

தலைவர் கலைஞர் அவர்கள், இந்திய திருநாட்டின் அரசியல் களத்தில் 70 ஆண்டுகளுக்கு சொந்தக்காரர்; தி.மு.க.வையும், தமிழகத்தையும் சோதனை காலத்தில் வழி நடத்தியவர்; அவர் வயதில் இன்று வாஜ்பாய் போன்ற ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். ஆனாலும் கலைஞர் மட்டுமே இன்றும் இளைஞர் போல பணியாற்றுவதன் பயனால் தமிழகம் வளம் பெறுகிறது. எப்போதும், எவரும் அவரை சந்திக்கலாம். முதல்வர், தி.மு.க. தலைவர், முத்தமிழறிஞர், பத்திரிகையாளர், மனித நேய பண்பாளர் என பன்முக தன்மையை தன்னகத்தே கொண்டுள்ள தலைவர் கலைஞர் அவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. இந்தியாவின் மூத்தத் தலைவரான கலைஞரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி, தி.மு.க. ஆட்சி திரும்பவும் ஆறாவது முறையாக மலர தமிழக வாக்காளர்கள் உதயசூரியனுக்கு ஆதரவளிப்பார்கள்.