மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்கள், ஹிட்லர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு நடக்கின்றன. வரலாற்றில் திருவிதாங்கூர் சமஸ்தானம்தான் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது. ஐ.நா. மன்றம் உலகளவில் தூக்குத் தண்டனை கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதன் காரணமாக, இன்றைக்கு பல நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. இப்பொழுதும் இதுகுறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அவரது வாரிசான குருசாமி 27 ஆண்டுகளுக்கு முன் மூன்று முறை தூக்குக் கயிறு முனை வரை சென்று, மேல் முறையீடு, கருணை மனு என அனைத்தும் நிராகரிக்கப்பட்டு நிராயுதபாணியாக இருந்த அவரை, 24 மணி நேரத்தில் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டதை நினைவு கொள்ள வேண்டிய நேரம் இது.

1975இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வைகோ மிசாவில் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அதே சிறையிலிருந்த கைதி குருசாமி, கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படுவதற்காகக் காத்திருந்தார். குருசாமியின் சிலம்பம் சுழற்றும் முறை, தேவராட்டம், ஜக்கம்மா குறித்து பாடிய பாடல்கள், அப்பாவித்தனம் ஆகியவை வைகோவை ஈர்த்தது. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று வைகோ மனதிற்குள் உறுதி செய்தார். 

குருசாமி நாயக்கர் தமிழ்நாட்டு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தால் (வழக்கு எண். எஸ்.சி.87/1975) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். சென்னை உயர்நீதி மன்றமும் தண்டனையை உறுதி செய்தது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் தந்த சிறப்புரிமை முறையீட்டை 1977இல் உச்சநீதிமன்றமும் தள்ளிவிட்டது. குருசாமியின் கருணை மனுக்கள் இந்திய அரசால் (1977 ஜூன் 15, 1981 செப்டம்பர் 15, 1984 ஜூன் 21 ஆகிய நாட்களில்) மும்முறை தள்ளுபடியானது. குடும்பச் சொத்து காரணமாக குருசாமியின் மாமனாருடன் கடும் சண்டை ஏற்பட்டு, அப்போது குருசாமியின் மாமனார் ஆயுதமேந்தி குருசாமியைத் தாக்க வந்தார். குருசாமி தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார். அதனால் அவரது மாமனார் இறந்தார்.

வைகோ மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றவுடன், குருசாமியைக் காப்பாற்ற, அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்ட முறையீடு ஒன்றுடன் சந்தித்தார். சஞ்சீவ ரெட்டி, குருசாமியின் மூதாதையரான வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி நன்கு அறிந்தவர். அவர், 1969இல் நெல்லை மாவட்டத்தில் கயத்தாற்றில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அமைத்த கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைத்தார் என்ற சம்பவங்களை எல்லாம் வைகோ விவரிக்க, குருசாமி கதை கேட்டு குடியரசுத் தலைவர் மனம் இரங்கி இடைக்காலத் தடையும் வழங்கினார். இதனால் சில காலம் குருசாமியின் தண்டனை தள்ளி வைக்கப்பட்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மேல் குறிப்பிட்ட கருணை மனு தள்ளுபடி ஆனது. தூக்கும் முடிவு செய்யப்பட்டது. வைகோ திரும்பவும் ஒரு கருணை முறையீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் 50 பேர் கையெழுத்திட்டு 8 செப்டம்பர், 1981 அன்று குடியரசுத் தலைவரிடம் தந்தார். அதன் நகலை அப்போதைய உள்துறை இணை அமைச்சர் வெங்கட சுப்பையாவிடமும் வழங்கினார். 

இந்தத் தண்டனையை நிறுத்த இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, அப்போதைய மத்திய உள்துறைச் செயலாளர் உள்துறை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்துத் திரும்பவும் தூக்குத் தண்டனைக்கு ஐந்தே நாள்களில் இடைக்காலத் தடை மட்டும் வழங்கி தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. ஆனால், தண்டனையை தள்ளுபடி செய்யவில்லை. 

இதற்கிடையே குருசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்தவர்தானா கட்டபொம்மன் பரம்பரை தானா என்ற உண்மையைக் கண்டறியும்படி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டது. உண்மையைச் சரி பார்க்கும் பணி முடிய ஓராண்டானது. அதுவரை அவரது தூக்குத் தண்டனை தள்ளிப் போட்டு, அந்த நிம்மதி ஓராண்டுதான் நீடித்தது. சஞ்சீவ ரெட்டிக்குப் பின் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங்கின் செயலகம், கருணை மனுவைத் தள்ளுபடி செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் நேரடி வாரிசு என்பதற்காகக் கொலைக் குற்றவாளி எவருக்கும் தண்டனையைக் குறைக்க முடியாது என்று காரணம் காட்டிவிட்டது.

ராஷ்டிரபதி பவனிலிருந்து உள்துறை அமைச்சகம் மூலம், 1984 ஜூன் 14 அன்று, குருசாமிக்கு 21 ஜூன் 1984 காலையில் தூக்கு நாளாக தேதியும், அதிகாலையில் நேரமும் மீண்டும் குறிக்கப்பட்டு தாக்கீது வந்துவிட்டது. இந்த செய்தியை சென்னையிலிருந்த வைகோவுக்கு நெல்லையில் இருந்து நண்பர் குட்டி என்ற சண்முகசிதம்பரம் தெரிவித்தார். உடனே வைகோ இந்த கட்டுரையாளரிடம் இதுகுறித்து விவாதித்தார். மறைந்த சீனியர் வழக்கறிஞர் என்.டி.வானமாமலையை இரவென்று பாராமல் அவரை எழுப்பி இப்பிரச்சினையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். அந்த ஆலோசனையின்படி டெல்லி உச்சநீதிமன்றத்துக்கும், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் பாளையங்ககோட்டை சிறையில் இருக்கும் குருசாமி தன்னைக் காப்பாற்ற தந்திகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதனடிப்படையில் தந்திகள் குருசாமியிடமிருந்து முறையாக வந்து சேர்ந்தன. அந்த தந்திகளையே மனுக்களாக்கி விசாரிக்க அனுமதி கோர வேண்டும்.

இருப்பதோ இரண்டு நாட்கள். அதற்குள் அந்த தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் என்று அனைத்து மட்டங்களிலும் நிராகரிக்கப்பட்டு, இனி வேறு வழி இல்லை என்ற நிலை இருந்தது. என்ன செய்வது? முயற்சி செய்து பார்ப்போம் என்று நான், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மகாராஷ்டிராவிலிருந்து வந்த சந்தூர்கர் அப்போதுதான் பொறுப்பேற்று, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். மாலைப் பொழுதாகி விட்டது. இருப்பினும் எப்படியாவது இந்த வழக்கை விசாரிக்க அனுமதி வாங்கியாக வேண்டும் என்ற கடினமான சூழ்நிலை. அவரை சந்தித்த இக்கட்டுரையாளர், ‘நீதிபதி அவர்களே, குருசாமி நாயக்கரின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். அவர் சென்னை உயர்நீதி மன்ற பதிவாளருக்கு பாளையங்ககோட்டை சிறையிலிருந்து தந்தி அனுப்பி உள்ளார். அந்த கோரிக்கைத் தந்தியை ஏற்று வழக்கு எண் கொடுத்து உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதி தர வேண்டும்’ என கேட்க சென்றபொழுது, நம்பிக்கை என்பது இக்கட்டுரையாளருக்கு துளியளவும் இல்லை. இருந்தாலும் முயற்சி செய்வோம் என்ற நிலையில் தான் தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டார். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீதிபதி, இக்கட்டுரையாளர் கூறிய முழுமையான விவரங்களை கேட்டறிந்தார். மனிதாபிமானத்துடன் சட்டத்தில் வழி இருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் அதன் பலன் உரியவருக்கு கிடைக்க வேண்டும் என்ற அனுமதியை நீதிபதி அளித்த போது இக்கட்டுரையாளருக்கு ஆறுதலையும், நிம்மதியையும் தந்தது.

மறுநாள் நீதிபதிகள் வி.இராமசாமி, டேவிட் அன்னுசாமி ஆகியோரிடம் காலை 10.30 மணிக்கு அவர்கள் உயர்நீதிமன்றத்தின் 3ஆவது நீதிமன்றத்தில் அமரும்பொழுது விவரத்தை சொல்லி அனுமதி பெற்றாகி விட்டது. உயர்நீதிமன்ற பதிவாளர் பரிந்துரையின்டி, நீதிமன்ற அலுவலகம் தந்திக்கு உரிய வழக்கு எண் கொடுத்து வழக்கு முறைப்படுத்தப்பட்டது. எந்தவித மனுக்கள், பிராதுகள், ஆவணங்கள் இல்லாமல், இதுமாதிரி வெறும் இரண்டு வரி தந்தியை மட்டும் வைத்து வழக்கு எண் கொடுத்து, வழக்கு நடத்துவது வித்தியாசமாக தெரிகிறது. இவ்வாறு நடைபெறுவது எங்களுக்கு இதுதான் முதல் முறை என்று உயர்நீதிமன்ற அலுவலர்கள் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டனர். மதியம் இடைவேளைக்கு பிறகு 2.30 மணிக்கு வழக்கு வருகின்றது. வழக்கில் எவ்வித கட்டணமும் வாங்காமல் என்.டி.வானமாமலை ஆஜரானார். என்.டி.வானமாமலை நீதிபதிகளிடம் தந்தியை ரிட் மனுவாகப் பாவித்து குருசாமிக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க இடைக்காலத் தடை வேண்டும் என்று வாதாடினார். அவரோடு வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் உடன் ஆஜரானார். அப்போது பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்த, பின் நீதிபதியான பத்மினி ஜேசுதுரை அழைக்கப்பட்டார். இந்த வழக்கில் பங்கேற்ற அனைவரும் பாஞ்சாலங்குறிச்சியோடு தொடர்பு கொண்ட திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்தவர்கள். விசாரணை முடிந்து இறுதியில் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் செல்பேசி, தொலைநகல் (பேக்ஸ்) போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் கிடையாது. உத்தரவு குறிப்பிட்ட காலத்துக்குள் பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளுக்கு செல்ல வேண்டும். எனவே, நீதிபதிகள் பப்ளிக் பிராசிக்யூட்டரிடம் தமிழக அரசு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் (அப்போது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம்), பாளையங்கோட்டை சிறை நிர்வாகத்திடமும் உடனே இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததை தெரிவித்து, குருசாமியின் மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்ற ஆணையை தெரிவித்து, அன்று மாலை 4.30 மணிக்கு கோர்ட்டு கலையும் போது இதுகுறித்த கருத்துகளை, நீதிமன்றத்தில் பப்ளிக் பிராசிக்யூட்டர் தெரிவித்தவுடன், அந்த கருத்துகள் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என்ற விவரமான ஆணையை பிறப்பித்தனர். அன்றைக்கு 24 மணி நேரத்தில், தொங்கிக் கொண்டிருந்தத் தூக்குக் கயிறை தூக்கிலிட்டது பெரும் செயலாக அப்போது பட்டது. இந்த பிரச்சினையை எப்படி தீர்த்தோம்? எப்படி சாதித்தோம்? என்பதை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்னால் சாதித்த இந்த அனுபவம், முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்ற படிப்பினையை தந்தது. 

இவ்வழக்கு தூக்குத் தண்டனை வழக்கானதால், அப்போது பல நண்பர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் என பலர் ஆர்வமாக விசாரித்தனர். குறிப்பாக பழ.நெடுமாறன், இரா.செழியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவரான ஏ. நல்லசிவம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ப.மாணிக்கம், சோ.அழகிரிசாமி எம்.எல்.ஏ., இலங்கைத் தமிழ் தலைவர்கள் அ.அமிர்தலிங்கம் தம்பதியினர், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன், பாரிஸ்டர் கரிகாலன், படைப்பாளர்கள் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி போன்றோர் மட்டுமல்லாமல்; விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பாலசிங்கம், பேபி சுப்பிரமணியன் (இளங்குமரன்), பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போன்ற எனக்கு நெருக்கமான பலர் இதுகுறித்து அக்கறையுடன் ஆர்வம் காட்டினர்.

அதைப்போன்றே, டில்லியில் உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் கார்க் ஆஜரானார். ஆனால் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பிரச்சினையில் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்பார்ப்பு என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்போடு கடமைகள் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்ததை தொடர்ந்து, இது நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது என மூத்த வழக்கறிஞர் கோவிந்த சுவாமிநாதன் என்.டி.வியிடம் குறிப்பிட்டார்.

இடைக்கால உத்தரவுக்குப் பின் இக்கட்டுரையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விரிவான பொதுநல முறையீடு மனுவை தன் பெயரில் கையொப்பமிட்டு தாக்கல் செய்தார். அந்த பிரமாண வாக்குமூலத்தில், 

1. ‘அரிதினும் அரிதான வழக்கு’ (கீச்ணூஞுண்t ணிஞூ கீச்ணூஞு இச்ண்ஞு) களில்தான் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

2. சமுதாயத்தில் கண்ணியம் என்ற மதிப்பிடப்படும் மதிப்பீடுகளுக்குக் கருணைக் காட்டலாம். 

3. ஆயுள் தண்டனை என்பது போதவே போதாது என்ற வழக்குகளில் மட்டும் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

4. உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி, தூக்குத் தண்டனைக் கொட்டடியில் குற்றவாளி நீண்டகாலம் அடைக்கப்பட்டு கிடப்பதைக் கருதி, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்ற தீர்ப்பு ஒப்பிடப்பட்டது.

என கூறப்பட்டிருந்தது. இதனுடன், குருசாமியின் நன்னடத்தை குறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கூடக் கைதிகள் 150 பேரும் ஜெயிலர்களும் தந்த சான்றிதழ்களும் இணைக்கப் பட்டிருந்தன. இத்தனை பரபரப்புகளுக்கு இடையேயும் நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையோடும், வேதனையோடும் காத்திருந்த ஒரே மனிதன் குருசாமிதான். இறுதியாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இறுதி விசாரணை நடந்து முடிந்து, நீதிபதிகள் வி.இராமசாமியும் டேவிட் அன்னுசாமியும் தீர்ப்பைப் படித்தனர்.

“தொழில் முறைக் கொலைகாரர்களே தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிக்கப் படுகிறார்களென்றால், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் வாரிசும் தூக்கு மேடை ஏறுவதிலிருந்து காக்கப்படுவதும் நியாயமே. மரண தண்டனையைத் தள்ளுபடி செய்கிறோம். அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது!” என்றது அந்தத் தீர்ப்பு!

நீதிபதிகள் தம் தீர்ப்பில் விஷ ஊசி வழக்கில் டி.வி.வைத்தீஸ்வரனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இருந்தனர். (அஐகீ 1983, குஇ 361) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டாண்டு காலத்திற்கு மேல் தாமதம் ஆகுமானால், அரசியல் சட்ட 21ஆவது பிரிவை எடுத்துக்காட்டி, அதுவே (அந்தத் தாமதமே) மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதனுக்குப் போதுமானது என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது.

செர்சிங்குக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் எடுத்துக்காட்டப் பட்டது (அஐகீ 1983, குஇ 405). அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டிருந்தால் அத்தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்று தீர்மானிப்பதில் அந்த தாமதமும் முக்கியமான பரிசீலனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாண்டுக் காலத்திற்கு மேலான தாமதமே தூக்குத் தண்டனையைக் குறைக்க போதுமானதாகிவிட்டது என்றும், மரண தண்டனை அரிதினும் அரிதாகத்தான் தரப்பட வேண்டும் என்றும் பச்சன் சிங்குக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது (அஐகீ 1980, குஇ 898).

மேற்குறிப்பிட்ட தீர்ப்புகள் குருசாமிக்கு சாதகமாக இருந்ததால், தூக்குக் கயிற்றிலிருந்து விடுதலைக் கிடைத்தது. தனிமைக் கொட்டடியில் வாடிய மரண தண்டனைக் கைதியின் உயிரைக் காக்க ஏழாண்டுகள் நடந்த போர் வீணாகவில்லை. குருசாமி தனது ஆயுள் தண்டனையை ‘கன்விக் வார்டர்’ ஆகக் கழித்து பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலை ஆகி தன் குடும்பத்தோடு ஒட்டப்பிடாரத்திற்கு அருகே வாழ்ந்து, மறைந்தார்.

குருசாமி தூக்கிலிடப்பட்டிருந்தால், அவரும் தம் மூதாதையரைத் தேடிக் கல்லறைக்குத்தான் போயிருப்பார். ஏனெனில், இந்தியாவின் சட்ட நீதி வரலாற்றில் ஒரு முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் இல்லை; இல்லை மூன்று முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட் ஒருவர் உயிர் காப்பாற்றப்பட்டது இதுவே முதன் முறை! தூக்குத் தண்டனை விவாதப் பிரச்சினையில் குருசாமியின் வழக்கும் இன்றைக்கு ஒரு கரு பொருளாகிவிட்டது.