வீரம் விளைந்த, வானம் பார்த்த கரிசல் மண்ணின் கேந்திர நகரமாக கோவில்பட்டி திகழ்கின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஓடு வீடுகளாக இருந்த பட்டி நகரமாகியது. இங்குள்ள பயணியர் விடுதிதான் அவ்வட்டாரத்திலேயே அக்காலத்தில் உயர்நிலைப் பள்ளியாகும். இரயிலடியும் அதன் பின் தோன்றிய விவசாயப் பண்ணையும், இப்பகுதியில் பருத்தி அதிகமாக விளைந்துள்ளது, கோவை லட்சுமி மில் குழுமத்தால் நிறுவப்பட்ட லட்சுமி மில்லும், லாயல் மில்லும் இந்த நகரத்திற்கு பெருமை சேர்த்தன. லட்சுமி மில் அகில இந்திய அளவில் நடத்திய ஹாக்கி போட்டி இந்நகரத்திற்கு சிறப்பை சேர்த்தது. இந்நகரத்திற்கென்று நீண்ட வரலாறு உண்டு. கோவில்பட்டியும் எட்டயபுரமும் இரட்டை நகரமாகவே இன்றைக்கும் திகழ்கின்றது. வணிக நகரமாக மட்டுமல்லாமல், பருத்தி, மிளகாய், சிறு தானியங்கள், எள், உளுந்து மற்றும் எண்ணெய்ப் பொருட்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.

முண்டாசுக்கவி பாரதியும், வ.உ.சி.யும் இந்த கந்தக மண்ணில் உலவினர். தன்னுடைய வாழ்க்கையின் சிரமமான நாட்களில் வ.உ.சி. கிழிந்த கோட்டோடு நீதிமன்றத்திற்கு சென்று வழக்கறிஞராக பணியாற்றிய நாட்களும் உண்டு. தன் சொத்தையெல்லாம் விற்று தொழிலாளர் நலன் காத்த வ.உ.சி.க்கு இறுதி காலம் மகிழ்ச்சியானதாக இல்லை. அந்நாட்களை கோவில்பட்டியில் கழித்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் காமராசரும், மடத்துப்பட்டி கோபால் நாயக்கரும் இன்றைய ராஜகோபால் வங்கியில் இருந்து போராட்டத்திற்கான யுக்திகளையெல்லாம் வகுத்தனர். காமராசர் ஆங்கிலேயரால் தேடப்பட்டபோது கோவில்பட்டியில் தங்கியிருந்து, சுதந்திர வேள்விப் பணிகளை செய்த நாட்களும் உண்டு. பொதுவுடைமை தலைவர்களான ஜீவானந்தம், ராமமூர்த்தி, பாலதண்டாயுதம் என பல ஆளுமைகள், இன்றைக்கு நம்மோடு இருக்கும் சங்கரய்யா, நல்லகண்ணு போன்ற தலைவர்கள் அன்றைக்கு யு.ஜி. என்று சொல்லக் கூடிய அண்டர்கிரவுண்டில் பாதுகாப்பாக இருக்க இந்த கரு மண்தான் உதவியது.

பெரியாரும், அண்ணாவும் தூத்துக்குடியிலிருந்து நெல்லை, நெல்லையிலிருந்து தூத்துக்குடி செல்லும்பொழுது இங்கு ஓய்வாக தங்கி நாட்டுக் கோழி குழம்பை ரசித்து உண்பார்கள் என்ற செய்திகளும் உண்டு. ராஜாஜி சுதந்திரா கட்சியைத் துவக்கிய பொழுது, லட்சுமி மில் அதிபர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜி.கே.சுந்தரம், ராஜாஜி, என்.ஜி.ரங்காச்சாரி ஆகியோரை இந்நகரத்திற்கு அழைத்து வந்து மாநாடு நடத்தினார். 

தெற்குச் சீமையில், திருநெல்வேலி மாவட்ட தி.மு.கழக மாநாட்டை கலைஞர் அவர்கள், தனது 26வது வயதில் கோவில்பட்டியில் தலைமை ஏற்று நடத்தினார். 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26,27 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் வேல் வெள்ளைச்சாமி பந்தலில் நடைபெற்றது.

கோவில்பட்டி மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய தலைமையுரை, ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும்கூட, பொருத்தமாகவே விளங்குகிறது என்பதற்காக அவ்வுரையை கலைஞர் அவர்கள் 2003இல் முரசொலியில் மறுபிரசுரம் செய்தார்.  இம்மாநாட்டில் பங்கேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள், “சந்திரமோகன்” நாடகத்திலும் நடித்தார். நாவலர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், இனமானப் பேராசிரியர், ஈ.வி.கே. சம்பத், மதியழகன், என்.வி.நடராசன், என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.இராமசாமி, இராம. அரங்கண்ணல், இளம்பரிதி போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கோவில்பட்டி மாநாடு வெற்றி பெற டபிள்யூ.டி.துரைச்சாமி (மாநாட்டுச் செயலாளர்), பாலகிருஷ்ணன், ஈ.வே.அ.வள்ளிமுத்து (வரவேற்புக் குழுத் தலைவர் அன்றைய நகர்மன்றத் தலைவர்), எஸ்.நடராஜன், கலிங்கன் (துணைச் செயலாளர்கள்), கலைமணி காசி, ஆ.திராவிடமணி (விளம்பரக் குழு உறுப்பினர்), எச்.பி.துரைசாமி (பொருளாளர்) ஆகியோர் மட்டுமன்றி திருநெல்வேலி மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகளும் சேர்ந்து பெரும் பணியாற்றினர்.

ஒரு சமயம் எம்.ஜி.ஆரின். 2248 எண் கொண்ட பிளைமூத் காரில் எம்.ஜி.ஆருடன் அண்ணா நெல்லை நோக்கிப் பயணம் செய்தபொழுது, ஒரு விடியற்காலை பொழுதில் காரை நிறுத்தி தேநீர் அருந்தியபொழுது அங்குள்ள மக்கள் கூடீ தேநீருடன் கோவில்பட்டி சேவையும், கருப்பட்டி மிட்டாயையும் கொடுத்தனர். அப்போது அண்ணாவும் எம்.ஜி.ஆரும் அதை ருசித்து உண்டனர். நெல்லையிலிருந்து திரும்பும் பொழுது அவற்றை வாங்கி அனுப்புமாறு குறிப்பிட்டனர்.

தியாகசீலர் பெருந்தலைவர் காமராசர் அனைவருக்கும் கல்வி வேண்டுமென்று தன் வாழ்நாள் முழுதும் உழைத்த உழைப்புக்கு அடித்தளமாக கல்விக் கூடங்களில் மதிய உணவு திட்டத்தைத் “தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடிய அமரகவி பாரதி பிறந்த எட்டயபுரத்தில் தொடங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஆர்.கே. என அழைக்கப்பட்ட சென்னாகுளம் ரா.கிருஷ்ணசாமி நாயுடு உடன் இருந்தார். இந்தச் சத்துணவுத் திட்டம் ஆரம்பித்ததற்கு ஒரு பின்னணி உண்டு. ‘கல்வி இயக்குநராக இருந்த என்.டி.சுந்தரவடிவேலு கோவில்பட்டிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபொழுது கி.வேங்கடசுப்பிரமணியம் நெல்லை மாவட்டத்தின் கல்வி அதிகாரியாக இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு என்.டி.சுந்தரவடிவேலு தன்னுடைய புதல்வர் திருவள்ளுவரைத் தன்னுடன் அழைத்து வந்தபொழுது, மாலைகளைப் பொது மக்கள் போடும் பொழுது அதைப் பெற்றுக் கொண்டவுடன், அந்த மாலைகளை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதைப் பார்த்து, திருவள்ளுவர் தன் தகப்பனார் என்.டி.எஸ்.ஸிடம் ‘ஏன் அப்பா இந்த மாலைகளை வீண் செய்கிறார்கள்? இதற்கு நன்கொடையாகப் பணத்தை கொடுத்தால், ஏழை மாணவர்களுக்கு உணவு கொடுக்கலாமே’ என்று அறியாப் பருவத்தில் சொன்னதைக் கேட்ட என்.டி.சுந்தரவடிவேலுக்கு இந்தக் கருத்துத் தாக்கத்தை உருவாக்கியது. ஏற்கனவே அன்றைய முதல் காமராசருக்குக்கும் இதுகுறித்து யோசனைகள் இருந்தபொழுது என்.டி.சுந்தரவடிவேலு சென்னைக்குச் சென்றவுடன் ஒன்றுமறியாச் சிறுவன் சொன்னக் கருத்தைச் சொல்லவும், காமராசர் மிக மகிழ்ச்சியோடு ‘ஏற்கனவே என்னுடைய மனதில் இருக்கின்றது. இதை எட்டயபுரத்திலேயே தொடங்கலாம்’ என்று கூறினார் என்பது செய்தி.

கல்கி அமைத்த எட்டயபுரம் பாரதி மண்டபம் இன்று கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், இலங்கை, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட நன்கொடையிலிருந்து, தன்னுடைய தலையாய பணியாக கல்கி, பாரதி மண்டபத்தை அமைத்தார். அந்நிகழ்ச்சியைப் பற்றி கல்கி குறிப்பிடும் பொழுது, “எட்டயபுரம் கரிசல் மண். மழை பெய்தால் சேறாகி விடும். அன்றைய மராமத்து அமைச்சர் பக்தவத்சலம் உதவியால் சாலைகள் சீரமமைக்கப்பட்டன. திருநெல்வேலி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீ வி.பி.சி.வீரபாகு, வீரத்தியாகி ஸ்ரீ சோமாயஜுலு, காரைக்குடி கம்பன் கழக தலைவர் சா.கணேசன் ஆகியோர் பாரதி மண்டப திறப்பு விழாவிற்கு எனக்கு ஒத்தாசையாக இருந்தனர். மேற்கு வங்க கவர்னர் ராஜாஜி, சென்னை மாகாண பிரதமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் பாரதி ஸ்பெஷல் ரயில் மூலம் சென்னையிலிருந்து கோவில்பட்டி வந்து சேர்ந்தனர்.

திறப்பு விழாவன்று எட்டயபுரம் தடபுடலாக தயாரானது. கமுகு, கூந்தல் பனைகள், மலர் சரங்களை சா.கணேசனே பொறுப்பேற்று இரண்டு நாட்களும் அலங்கரித்தார். விழா துவக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பின், அடிக்கல் நாட்டிய ராஜாஜியே திறந்து வைத்தார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சபாநாயகர் சிவசண்முகம் பிள்ளை, உணவு அமைச்சர் டி.எஸ்.எஸ்.ராசன், அமைச்சர் டானியல் தாமஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், ம.பொ.சிவஞானம், எல்.கிருஷ்ணசாமி பாரதி, மவுலானா சாகிப் என பல்வேறு கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் துறையினர் பங்கேற்றனர். சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமராசருக்கும், ராஜாஜிக்கும் மிகுந்த பிணக்கு இருந்த வேளையில், காமராசர் மேடையில் பேசிவிட்டு, பார்வையாளர் வரிசைக்கு சென்று அமர்ந்து விட்டார். அடியேன் காமராஜரை மேடைக்கு அழைத்து வந்து, ராஜாஜியின் பக்கத்தில் அமர செய்த பொழுது, திரண்ட கூட்டத்திலிருந்து கரவொலி பலமாக கேட்டது. சுமார் 50,000 முதல் ஒரு லட்சம் பேர்கள் வரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம், வில்லுப்பாட்டில் பிச்சைக்குட்டி, செவல் குளம் தங்கய்யா போன்ற இசைவாணர்களும் இங்கிருந்து இயங்கியது உண்டு. கரிசல் இலக்கியத்தின் தலைநகரமே கோவில்பட்டிதான். பெரிய ஆளுமைகள் இங்கிருந்து தோன்றினர். மாம்பழசிங்க கவிராயர், பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், திருக்குறள் ராமையா, குருமலை சுந்தரம் பிள்ளை, குருகுகதாஸ் பிள்ளை, கோணங்கி, சமயவேல், தேவதச்சன், உதயசங்கர், பேராசிரியர் சங்கரவள்ளி நாயகம், தமிழ்ச்செல்வன், கு.பக்தவத்சலம், இளசை அருணா, இளசை மணியன், வித்யாசங்கர், எம்.யுவன், திடவை பொன்னுசாமி என்ற எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் பட்டியல் நீளும்.

கோவில்பட்டியில் தற்போதுள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தின் அருகில் உள்ள எட்டயபுரம் சாலையில் இடது முனைக் கட்டட மாடியில் ‘தமிழன்’ என்ற தனிச் சுற்றோடு வெளியிடப்பட்டது. இதைக் கொண்டுவர கி.ரா. ‘தினத்தந்தி’ சௌந்திர பாண்டியன், கல்வியாளர் கி.வேங்கடசுப்பிரமணியம் போன்றோரின் பணிகள் சிறப்பானது. அதே காலகட்டத்தில் இடைசெவலிலிருந்து கி.ரா. அவர்கள் ‘ஊஞ்சல்’ என்ற சிற்றிதழை நடத்தினார். ஒரு கொயர் நோட்டில் கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி, தி.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன், சுந்தரராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ரசிகமணியின் பேரன் தீப நடராசன் ஆகியோருக்கு இந்த ஏடு சுற்றுக்கு அனுப்பப்பட்டு அவர்களுடைய படைப்பு அதில் எழுதப்பட்டு இறுதியாக கி.ரா.வுக்கு வந்து அடைந்தால் ‘ஊஞ்சல்’ நிறைவுபெறும். இந்த வித்தியாசமான முறையை மிகவும் ரசித்து சில காலம் செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் தினமணி ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் இந்த ஊரின் மருமகனாவார். பல்வேறு மாநிலங்களில் ஆளுநராக இருந்த டாக்டர் ரங்கராஜன், எழுத்தாளர் அநுத்தமா, வாஸந்தி, மாலன் போன்றவர்களுக்கும் கோவில்பட்டி தொடர்பு உண்டு.

நடிகமணி டி.வி.நாராயணசாமி இம்மண்ணில் பிறந்தார். திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லிக்கு சொந்த மண் கோவில்பட்டி. அற்புதமான ஓவியங்கள் வரைந்த கொண்டல்ராஜ் கோவில்பட்டிக்கு புகழைத் தேடித் தந்தார்.

கோவில்பட்டி பஸ் நிலையத்தில் எப்போதும் ஒரு பைத்தியம் காணப்படுவார். சேஷ்டைகள் செய்வார். ஆனால் யாரையும் துன்பப்படுத்தியதில்லை. அந்த வருடத் திருவிழாவில் பெரும் கூட்டம். காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாயன இசை வா! வா! என்று அழைப்பது போல் உருகி வாசித்துக் கொண்டிருந்தார். வாசிப்பு முடிந்ததும் அந்த பைத்தியக்காரர் எதையோ கையில் மறைத்துக்கொண்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டு மேடையை நோக்கிச் சென்றார். மக்களும், விழா ஏற்பாடு செய்தவர்களும் பதட்டமடைந்து ‘ஏதும் ஆகிவிடக் கூடாதே’ என்று பரபரப்புடன் இருந்தனர். அவர் கையிலுள்ள பொருளை நேராக அருணாசலத்திடம் வழங்கிவிட்டு வணங்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார். அவர் வழங்கியது ‘எட்டணா நாணயம்’. அதை மகிழ்ச்சியுடன் வாங்கி காருகுறிச்சியார் இரு கண்களிலும் ஒற்றிக் கொண்டு உணர்ச்சிவசப்பட்டார். சபை பலத்த கரகோஷத்தால் ஆரவாரம் செய்தது. ‘எட்டணா’ எவ்வளவு மதிப்புப் பெற்றது என்பதை அந்த இசை மேதை போற்றினார். அன்றிலிருந்து காருகுறிச்சியார் பஸ் நிலையத்தைக் கடக்கும் போது அந்தப் பைத்தியக்காரர் அவரைப் பார்த்து கையசைப்பார். காருகுறிச்சியும் கையசைப்பார். பைத்தியக்காரர் துள்ளிக் குதித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அதை ஏற்றுக் கொள்ளுவார்.

நாதகலாநிதி காருகுறிச்சி அருணாசலம் 7.4.1964 அன்று மறைந்தார். அவருடைய நினைவிடம் கோவில்பட்டி கடலையூர் சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. அவருடைய சிலையை நடிகர் ஜெமினிகணேசன், மங்கையர் திலகம் சாவிரித்திரி ஆகியோர் வழங்க, அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எம்.ராஜேந்திரன் 8.7.1967 அன்று செல்லையாத் தேவர் தலைமையில் திறந்து வைத்தார்.

கோவில்பட்டி தொழிற் சங்கங்கள், விவசாயப் போராட்டங்கள் என பல களங்கள் அமைந்த இடமாகும். விவசாயப் போராட்டம் கோவையிலும், கோவில்பட்டியிலும்தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுச்சியோடு தோன்றியது. மறைந்த நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம், தமிழகத்தில் இங்குதான் எழுச்சியோடு இருந்தது. போராட்டக் களங்களில் விவசாயிகள் துப்பாக்கி ரவைகளுக்கு துணிந்து மார்பை காட்டி, தேக்கு மரத்திற்கு ஒப்பான தங்களது தேகத்தை போராட்ட வாழ்க்கையில் சாவுக்கு ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியைச் சொன்னால் பெரிய வரலாறாகி விடும். பொதுவுடைமை இயக்கத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சோ. அழகிரிசாமி இந்த தொகுதிக்கு சிறப்பு சேர்த்தார். இவ்வட்டாரம் வானம் பார்த்த பூமி என்பதால் வாழ்க்கையே போராட்டமாகும். போராடிதான் வாழ வேண்டி உள்ளது. விவசாயிகள் நிலை குறித்து, கி.ரா. கூறுவதுபோல, “விவசாயி கிணறு வெட்டுவதற்கு அரசு கடன் வாங்கி, (இலஞ்சம் போக எஞ்சியதை) அதனால் ஒன்றுக்கும் பயனில்லாமல் போக, சொந்தத் தோட்டத்தையும், கடனில் கட்டிய கிணற்றையும் விற்று கூலி விவசாயி ஆக, இழிந்து போவதில் இருந்து மாற்றம் ஏற்படாது.”