காலச் சக்கரங்கள் வேகமாக சுழலுகின்றன. உலகமயமாக்கள் என்ற நிலையில் பழைய மரபுகள், கலாச்சாரங்கள், பூர்வீக நினைவுகள், பண்பாடுகள் போன்றவை நாளுக்கு நாள் மங்கலாகி கொண்டு வருகின்றன. கிராமங்களில் உயர்ந்து வளர்ந்த ஆலமரங்கள், வேம்பு மரங்களுக்குக் கீழ் அமைந்த மேடைகளில் அமர்ந்து பேசிய கிராமிய நாட்டுப்புறக் கதைகள், விடுகதைகள், தெம்மாங்கு பாடல்கள், நாட்டார் பண்பாடுகள், கலைகள் நாளுக்கு நாள் மறைகின்றன. அவற்றை நேரில் பார்த்தவர்களுக்கு, தாங்கள் கேட்ட செய்திகள் திரும்பவும் அமையாதா என்ற ஆதங்கம் அவர்களுக்குள் இன்றும் உள்ளது. அவ்விடங்களில் ஊர் பஞ்சாயத்துகள் கூடி நியாயமான தீர்ப்புகள் வழங்கியது உண்டு. அக்காலத்தில் இருந்த ஊர் கட்டுப்பாடுகள், கிராமிய திருவிழாக்கள் ஆகிய வழிமுறைகள் இன்றைக்கு இல்லை. தொலைக்காட்சி, மேற்கத்திய உணர்வுகள் யாவும் வந்ததால் பழைய முறைகள் மாறி பழங்கதைகளாகி விட்டன. 

முக்கிய அங்கமான நாட்டுப்புற கலைகள் யாவும் நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள், வில்லிசை, பொம்மலாட்டம், தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்ற பல்வேறு கலைகள் இன்று அரிதாகி விட்டன. வயல்வெளிகளில் நாற்று நடும் போதும், களையெடுக்கும் போதும் பாடப்பட்ட குளவைப் பாடல்கள், பயிருக்கு கமளையில் தண்ணீர் இறைக்கும் போது ஆண்கள் பாடும் பாடல்கள் இனிமையான ஏற்ற இறக்கங்களுடன் பல அர்த்தங்களை கொண்டதாக அமைந்திருந்தன. இன்றைக்கு கொல்லங்குடி கருப்பாயி, பறவை முனியம்மா போன்றவர்கள்தான் இந்த பாடல்களை பாதுகாக்கும் எச்சங்களாக உள்ளனர். எந்தவிதமான ஒலிபெருக்கி வசதியும் இல்லாத காலத்தில் விளாத்திகுளம் சுவாமிகள் ஏழு கட்டு, எட்டு கட்டையில் பாடினால், சுற்றியுள்ள எட்டுப்பட்டி கிராமத்து மக்களும் கேட்டு மகிழ்ந்தனர். தெற்கு சீமையில் தேவராட்டக் கலையை கலைமாமணி குமாரராமன், அப்பணசாமி போன்றோர்

“தான.. .. னான னான

னான ணன்னானே னான

டக் டக்பி பீம்

தான னா தான னா ன

தான ணாரி னான னான

டட்ட கோ டட்ட

டட்ட கோ டட்ட

தன்ன னன்ன னானே ணன்ன ணா னானே

னன்ன னான னாம்னே ணன்ன ணன்ன னானே

டக் டக்டக் டகா டக்”

என்ற பாடலுக்கு தக்கவாறு எந்தவித கற்ற இலக்கியமும் இல்லாமல் நடைமுறைக்கு ஏற்றவாறு அடவுகளை மாற்றி ஆடுவதை மக்கள் ரசிப்பார்கள். 

அதுபோல, ரேக்ளா ரேஸ் என்று சொல்லக் கூடிய வண்டிகளின் ஓட்டங்கள் சிறப்பாக இருக்கும். இன்றைக்கும் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிகளில் இப்பந்தயங்கள் இருக்கின்றன. இந்த பந்தயத்தை சாமல்பட்டி திருமால், மிளகுநத்தம் ஜக்கன்னா, பச்சைகுப்பம் கண்ணுசாமி போன்றவர்கள் ஒருகாலத்தில் சிறப்பாக நடத்தினர். இப்போட்டியில் ஈடுபடும் மாடுகளுக்கு பேரீச்சை, எலுமிச்சைப் பழம், வெங்காயம், இஞ்சி, கருப்பட்டி ஆகியவற்றை வெந்நீரில் பிசைந்து கவலம் கவலமாக ஊட்டுவார்கள். அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போன்று எருது கட்டும் விளாத்திகுளம் அருகில் உள்ள தரைக்குடியில் நடைபெறும்.

கிராமங்களில் இளவட்டக்கல் என்று ஒன்று உண்டு. அது பூமிப் பந்து போன்று பெரிய கல்லாக இருக்கும். ஒரு கிராமத்திற்கு மருமகனாக வந்தவர்க்கு விருந்து வைத்து வழியனுப்பும் போது அவர் இந்த இளவட்டக் கல்லை தூக்கி, தனக்கு பின்னால் போட்டால் அவருக்கு முறையான விருந்து படைக்கப்பட்டது என்று கருதப்பட்டது. மேலும் இது மருமகனின் கௌரவமாகவும் பேணப்பட்டது. இவ்வாறான நாட்டுப்புறத் தரவுகள் கலைகளில் மட்டுமல்லாமல் சமூக அமைப்பிலும், மரபு ரீதியாகவும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நாட்டுப்புறத் தரவுகளில் முக்கியமான அங்கம் நாட்டுப்புறக் கலைகளாகும்.

கிராமிய கலைகளின் கொண்டாட்டங்கள் தை, சித்திரை மாதங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் கொண்டாடப்படுவது உண்டு. தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்திற்கென தனி கலைகள் வளர்ந்தன. அதில் நாட்டுப்புற பாடல்களும் முக்கிய இடம் பிடித்தன.

கழுகுமலை பற்றிய ஊஞ்சலை பாடல்:

கழுகுமலை ஆசாரி நான் பெத்தானுக்கு

ஒரு நல்லூஞ்சல் கொண்டு சாரும்


சங்கரன்கோயிலை பற்றி,

சங்கரனால் கோவிலிலே

நடுச்சந்தியிலே புன்னமரம்

அதிலே அடைகிடக்கும்

அஞ்சுதலைச் செந்நாகம்


தென்காசி நல்லெண்ணெய் சிறப்பை கூறும் வகையில் அமைந்த,

தென்காசி எண்ணெய்க்கு உங்கப்பா

சீட்டெழுதி விட்டாக


கோவில்பட்டியில் பயிர் செய்த பருத்தியை தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்கின்ற வழியில் உழவர்கள் பாடுகின்ற

வண்டியிலே பஞ்சுபொதி

வலது கையில் சாட்டைக் கம்பு

இன்னேரம் போற வண்டி

எங்கே போயி தருகுமைய்யா

தருகுவது தருவைகுளம்

தள்ளுவதும் தூத்துக்குடி

வாங்குறதும் வெள்ளைக்காரன்

சுண்டுறது வெள்ளி ரூபா

போன்ற நாட்டுப்பாடல்கள் ஏராளமாக உள்ளன.

தாலாட்டுப் பாடல்கள், அம்மானை பாடல்கள், மணமக்களை வாழ்த்தும் பாடல்கள், பொங்கல் வைக்கும் பொழுது அதற்கான பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என வகை வகையாக பொருத்தமான பாடல்களை ஒவ்வொரு செயலுக்கும் நாட்டுப்புற மூதாட்டிகளும், பெண்களும் எந்தவித பயிற்சியும் இல்லாமல் தொடர்ந்து தங்கள் முன்னோர்களிடமிருந்து பாடும் முறை இப்போது இல்லாமல் போய்விட்டது.

சங்கக் காலத்திலேயே தோன்றியது தெருக் கூத்தாகும். கூத்தில் ஆட்டத்திற்கேற்ப பாட்டு பாடினர். பாட்டு தொடர் பாட்டானது. அதன் பின் கதை பாட்டானது. கதைப் பாட்டு காட்சி பொருளாகி நாட்டியம், நாடகம் என பிறந்தது. கூத்தும் கானமும் இணைந்ததுதான் தெருக் கூத்து. நாட்டுப்புறப் பாடல்களும், தெருக்கூத்தும் தமிழ்நாட்டுக் கலைகளின் ஆதியும் அந்தமும் ஆகும். இதனை ‘தொகுசொல் கோடியர்’ (அகம் 111) என்று அகநானூறு கூறுகின்றது. கூடிசேர் ஒன்றாயிரு என்துவே தெருக் கூத்தின் இலக்கணமாகும்.

உள்நாடு என்ற ஒன்றுபட்ட வட, தென் ஆர்க்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தெருக்கூத்து கதைகள் பாரத கதைகளாக இருந்தன. சில இடங்களில் இராமாயணக் கதைகளும் நடத்தப்ட்டன. பல்லவர் காலத்திலேயே இந்த தெருக் கூத்துக்கள் காஞ்சி நகரில் சிறப்பாக நடந்தேறின. செங்கல்பட்டு மாவட்ட கருங்குழி கிராமத்தில் எட்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதிலிருந்து வரும் வருமானத்தை இம்மாதிரியான தெருக்கூத்துக்களுக்கு இன்று மானியமாக வழங்கி வருகின்றனர். தெற்கத்தி கூத்து என்பது தென் ஆர்க்காடு, புதுவை போன்ற பகுதிகளில் ஆடப்படுவதாகும். வட ஆர்க்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆடப்படுவது வடக்கத்தி கூத்தாகும். இந்த கூத்துகளில் மெட்டு வகை, உடையலங்காரம், முடியலங்காரம், கூத்து கதை ஆகியவைகளை கொண்டு தெற்கத்தி கூத்து, வடக்கத்தி கூத்து என வகைப்படுத்தப்பட்டது.

தெருக்கூத்துக்கு கட்டைக் கூத்து ஜோகனா மரியா குரியான் என்ற ஹாலந்து ஆய்வாளர் பெயர் சூட்டினார். தெருக் கூத்து என்பது பொருத்தமான பதமில்லை. கட்டைக் கூத்து என்று அழைப்பதுதான் அதற்கு சிறப்பு என்று இந்த ஆய்வாளர் கூறுகிறார். தமிழகத்தில் வட மாவட்டங்களில் நடைபெறும் தெருக் கூத்துக்களை ஆய்வு செய்தவர் இவர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு நேரங்களில் அறிஞர் அண்ணா கூட்டங்கள் முடித்து விட்டு செல்லும் பொழுது, எங்காவது தெருக் கூத்து நடைபெற்றால் எந்தவித ஆரவாரமுமில்லாமல், தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு அமைதியாக இரவு முழுவதும் கண்விழித்து ரசிப்பார். அதுபோன்றே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் தெருக் கூத்தை பார்ப்பது உண்டு.

பாவை கூத்து என்பது மரப்பாவை கூத்து, தோல் பாவைக் கூத்து என வகைபடுத்தப்பட்டது. மரப்பாவை கூத்து வட மாவட்டங்களில் வழக்கத்தில் இருந்தது. மரத்தாலான பொம்மைகளை செய்து நடத்துவது மரப்பாவை கூத்தாகும். தோலில் படம் வரைந்து காட்டுவது தோல் பாவைக் கூத்தாகும். மரப்பாவை கூத்து தஞ்சை, மதுரை, சேலம் மாவட்டங்களில் அதிகம் உண்டு. 

சேலம் மாவட்டத்தில் குறிப்பாக இராமாயாண கூத்தாகவோ, சமூக கதைகளை கொண்ட கூத்தாகவோ இருந்தன. சேலம் வட்டாரத்தில் உள்ள சீரகப்பாடி, காரவள்ளி, கரட்டூர், கவுண்டாபுரம் போன்ற பகுதிகளில் மரப்பாவை கூத்துக் குழுக்கள் உள்ளன. சீரகப்பாடியைச் சேர்ந்த செம்மலை என்பவர் இதில் முக்கிய பங்காற்றியுள்ளார். சேலம் மாவட்ட பாவைக் கூத்துக்கும், தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நடத்தப்படும் பாவை கூத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. சேலம் மாவட்டத்தில் பாவைக் கூத்து தெருக் கூத்து பாணியில் இருக்கும். குமரி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் பாவைக் கூத்தை வித்தியாசமாக நடத்துவர். பாவை கூத்தை இயக்க நால்வர் தேவைப்படுவர். கூத்தின் இடையிடையே நகைச்சுவைகளும் புகுத்தப்பட்டிருக்கும். இக்கூத்துக்கு சுதிப் பெட்டி, முகவீணை, மிருதங்கம், ஜால்ரா போன்றவை தேவை. சின்ன படையாட்சி என்பவர் வட மாவட்டங்களில் நல்லதங்காள், லவகுசா, அரிச்சந்திரா, மார்கண்டேயன் கதைகளை நடத்தி வந்தார். இதுமட்டுமல்லாமல் விராட பருவம், பாஞ்சாலி சபதம், கர்ணன், பவளக்கொடி, சாகுந்தல திருமணம், ஆரவள்ளி, கண்ணன் பிறப்பு, இரணியன் பிரகலாதன், கட்டபொம்மன் கதை போன்ற கதைகள் இந்த பாவைக் கூத்தில் இடம் பெற்றன.

ஒயிலாட்டம் தமிழர் கலைகளில் சிறப்பான இடம் பெற்ற ஒன்றாகும். ஒயிலாட்டத்திற்கு எட்டு பேர் இருந்தால் விறுவிறுப்பாக இருக்கும். முதல் ஆட்டத்தை தொடங்கி வைப்பவர் அவரே பாடுவார். பின் பாட்டை ஒருவர் பாடுவார். கச்சைக் கட்டிக் கொண்டு கைகளை பாவ்லா போட்டு ஆட்டம் தொடங்கும். இவ்வாட்டத்தை ஆண்களே அதிகமாக ஆடி உள்ளனர். அண்ணாமலை செட்டியாரின் காவடி சிந்து கவிதைக்கு ஏற்றவாறு இந்த ஆட்டம் இருக்கும். இத்தகைய ஆட்டம் குறிப்பாக விளாத்திகுளம், முத்தையாபுரம், வேலுடுபட்டி, கோடாங்கி பட்டி, தாராபுரம் போன்ற கொங்கு நாட்டு வட்டாரத்தில் மதுரையை ஒட்டிய கிராமப் புறங்களில் சிறப்புற நடைபெற்று வந்தன. ஒயிலாட்டத்திற்கு பயிற்சி கொடுப்பதற்காகவே இப்பகுதிகளில் வாத்தியார்கள் இருந்தனர்.

கணியான் கூத்து எனும் கலையில் ஆட்டத்திற்கு ஏழு பேர் இடம் பெறுவர். இதில் தலைமையேற்பவர் ஒரு பாடகர். அவர் புலவர் அல்லது அன்னாவி என்று அழைக்கப்படுவார். பின் பாட்டுக்கு ஒருவர்; ஜால்ரா ஒருவர்; ஆட்டக்காரர்கள் இருவரும் பெண் வேடமிட்டு ஆடுவர். கணியான் கூத்து தெய்வத்தின் எதிரிலும் ஆடுவது உண்டு. சுடலைமாடன் கோவில் கொடையில் இந்த கணியான் கூத்து இடம் பெறும். இதேபோன்று, உடுக்கைக் கூத்து என்பது ஒருவரே உடுக்கை அடித்துக் கொண்டு பாடுவதாகும். அல்லது ஒரு ஆணும் பெண்ணும் உடுக்கை அடித்துக் கொண்டு பாடுவது. திருச்சி, கரூர் மாவட்டங்களில் காத்தவராயன் கதை உடுக்கை அடித்து பாடுவது உண்டு. கணியான் கூத்து குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நடைபெறுகின்றன. இரவு மூன்று மணிவரை கூட இந்த கூத்து நடைபெறும்.

வில்லிசை, தாரை ஊதுதல், கோலாட்டம், பின்னல் கோலாட்டம், தப்பட்டை அடித்தல், நையாண்டி மேளம், கும்மி, ஒயில் கும்மி, பொய்க்கால் குதிரை என்ற புரவி ஆட்டம், மார்கழி மாதத்தில் நடத்தப்படும் அரையர் நடனம், புதுவையில் நடக்கும் பொடிக்கலி ஆட்டம், தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் பாகவத மேளா, குரவைக் கூத்து, மதுரை உருமி மேளம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடக்கும் காலைக் கூத்து, மயிலாட்டம், நொண்டி சிந்து, மோடியாட்டம், சிலம்பம் போன்றவை பழந்தமிழர்களின் கலைகளாகும்.

குமரி மாவட்டத்தில் வேம்படி மாடன் கதை, அகஸ்தீஸ்வரம் பகுதியில் நடக்கும் கூளம் கொண்டான் கதை, மணக்குடியில் நடக்கும் வெங்கல்ராசன் கதை, சேர்வைக்காரன் கதை, வெள்ளைக்காரன் கதை, வீராச்சியம்மாள் கதை போன்றவை கொண்டாடப்பட்டன. தென் தமிழகத்தில் கூத்துக்கள் முத்துப்பட்டன் கதை, கட்டபொம்மன் கதை, பேச்சியம்மன் கதை, பூச்சியம்மன் கதை, கான் சாகிப், பகவதியம்மன் போன்ற கதைகளை ஒட்டிய நாட்டுப்புறப் பாடல்கள், நந்துனி பாட்டு, உரியடி ஒயில் கும்பம், நையாண்டி மேளம், பாஸ்கா, களிறு பயிற்சி போன்றவையும்; மதுரை, ஆண்டிப்பட்டி, திண்டுக்கல் வட்டாரங்களில் பேச்சியம்மன், பிரமலைக் கள்ளருடைய வரலாற்று பாடல்கள் போன்றவை பிரசித்திப் பெற்றவை. இராமநாதபுரம், சிவகங்கை வட்டாரத்தில் மருது சகோதரர்கள், சேதுபதி புகழ்பாடும் நாட்டுப்புறப் பாடல்களும், கதைகளும் கூத்துக்களாக நடத்தப்படுவதுண்டு. செட்டி நாட்டில் சிலம்பு கண்ணகிக் கதை, நாட்டுப்புற குல தெய்வங்கள் குறித்து தரவு பாடல்கள் பாடப்பட்டன; கொங்கு மண்டலத்தில் அண்ணன்மார் கதை, காத்தவராயன் கதை, பன்னாரி அம்மன் கதை, பொம்மலாட்டம், உடுக்காட்டம், நாடகக் கூத்து லாவணி, தொலைச் சிந்து, பெரிய மேளம்; நீலகிரி மாவட்டத்தில் இருளர்கள் நடத்தும் நாடகங்கள், இசைப் பாடல்கள் சிறப்புற விளங்கின. பாரம்பரியமிக்க இசை கருவிகளை கொண்டு ஆடிப் பாடுவது இன்றைக்கும் மரபில் உள்ளது. இதற்கு சான்றாக ஒரு பாடல்:

ஆடாடோ நவிலே ஆடிவா நவிலே

இச்சிக் கொம்பிலே அறுதடு நவிலே

சக்கெ கொம்பிலே அறுதடு நவிலே

வட தமிழகத்தில் திரௌபதி அம்மன், பெரியாண்டவர், ஊத்தாண்டவர், கன்னிமார், எல்லையம்மன் மற்றும் கானாப் பாட்டு, தெருக் கூத்து, ராஜ மேளம், உடுக்குப் பாட்டு; நீலகிரியை ஒட்டிய மலைப் பகுதிகளில் தும்பிப் பாட்டு, திரளிப் பாட்டு, குறத்தைக் களி, கைத்தடியாட்டம், கோலாட்டம்; கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மாதா, அந்தோணியார், குட்டியாண்டவர், ஏழு கன்னியர் கதைகள், ஐலசா ராகத்தில் படகு ஓட்டத்தில் பாடும் மீனவப் பாடல்கள், கரவலா பாட்டு, கப்பல் பாட்டு, கோலப் பாட்டு, வேளம் போன்றவை தமிழ்க் கலைகளாக சிறப்புற்றிருந்தன. ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான பாடல்களும் நீண்ட குளவியிட்டு பாடுவார்கள். குழந்தைகள் பிறந்தாலும், குடும்பத்தில் மரணத்தின் பிடியில் சிக்கிய மூத்தவர்களைப் பற்றி பாடும் பாட்டிலும் இசை ஏற்ற இறக்கங்கள் உண்டு.

அக்காலத்தில் தஞ்சை சூலமங்கலம் அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் சன்னிதியில் கீற்று கொட்டகை அமைத்து ருக்மாங்கதன், உமாபரணியம், பிரகலாதா போன்ற பாகவத நாடகங்கள் விடிய விடிய நடைபெறும். 19ஆம் நூற்றாண்டில் மெலட்டூர் வெங்கட்ராம சாஸ்திரி பாகவத மேளாவை சிறப்பாக நடத்தி வந்தார். சாலியமங்கலம், ஒரத்தநாடு, ஊத்துக்காடு, வடுவூர் போன்ற பகுதிகளில் பாகவத மேளாவை அப்போது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் ஆதரித்தார். அதேபோன்று கதாகாலட்சேபம் ராமச்சந்திர மூர்க்குபாலவால் தஞ்சை மண்ணில் பரவ ஆரம்பித்தது. காமாட்சி பாய் சாகிப் அரி கதையை தஞ்சை மேல ராஜ வீதியில் கதாகாலட்சேபம் பாடி முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். கதாகாலட்சேபம் கவின் கலையாகும். தஞ்சை வெங்கடசாமி நாயுடு இந்த கதாகாலட்சேபம் வளர ஆதரவு நல்கினார். மராட்டிய முறையிலிருந்து தமிழ் கலைக்கு இக்கதாகாலட்சேபம் மாற்றப்பட்டது. மராட்டியத்திலிருந்த லாவணி என்பது தஞ்சை மாவட்டத்தில் இசைப்பாட்டாக மாற்றப்பட்டது. லாவணி என்பது, ஒருவர் வினா இசையில் எழுப்ப, மற்றவர் இசை வடிவத்தில் பதில் அளிப்பதாகும்.

நமது நாட்டுப்புறக் கலைகள் பற்றியத் தரவுகளை இவ்வாறு பலவகைப்படுத்தலாம். தணிகை மலையிலிருந்து தென் கடல் குமரி வரை பரந்த தமிழகத்தில் வட்டாரத்திற்கேற்ப இந்த கலைகள் இருந்தன. இந்தக் கலைகளை வளர்த்த பல கலைவாணர்கள் தற்போது நம் நினைவில் இல்லை. அவர்கள் எல்லாம் இந்த கலையை நம்பி ஏழ்மையில் வாடினார்கள். தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் அந்தந்த ஊர் மண் மணத்தை சொல்கின்ற இயற்கையின் அருட்கொடைகளாக அமைந்தன. அந்த கலைகள் மறையக் கூடாது; சாகக் கூடாது; சிரஞ்சீவியாக, சீதனமாக, விதை நெல்லாக இன்றைக்கும் தமிழ் கூறும் நல்லுலகில் இருக்க வேண்டும். இவையே நம்முடைய கலாச்சாரத்தின் ஆணி வேர்களாகும். இன்றைக்கு எவ்வளவோ திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்கள் வந்தாலும் இவையாவும் கிராமிய கலை என்ற கலையில் வளர்ந்தவைகளாகும். இருப்பினும் சில ஆர்வலர்கள் கலை இலக்கிய இரவு மேடைகள் அமைத்து நாட்டுப்புற கலைகளை நடத்தி வருவது ஒரு முனையில் வரவேற்பை பெற்று வருகின்றது. எளிய, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அனைவரையும் கவரக் கூடிய கிராமிய கலைஞர்கள் இன்றைக்கும் நம்மிடையே இருக்கின்றனர். அவர்களின் கலை திறமைகள், நாட்டுப்புறப் பாடல்களின் இசை வண்ணம் இன்றும் குடத்தில் இட்ட விளக்காக உள்ளது.

இந்த கலைகள் யாவும் தொலைக்காட்சியில் அரிய கலைகளாக காட்டப்படுகின்ற நிலைதான் இன்றைக்கு உள்ளது. இக்கலைகளுக்குரிய ஊக்குவிப்புகள் இருக்க வேண்டும். இவற்றை எப்படி பாதுகாக்க போகின்றோம் என்பதற்கான காரண, காரியங்களை அறிய வேண்டிய நிலை இருக்கின்றது. பல்கலைக் கழகங்களில் இதுகுறித்து ஆராய்ச்சிகளும், இருக்கைகளும் அமைந்தாலும் இதற்கான பாதுகாப்பிற்கு உரிய முயற்சிகள் வேண்டும். குறிப்பாக மதுரைப் பல்கலைக் கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நாட்டுப்புறத் துறை போன்ற அமைப்புகள் இந்த அரிய கலைகளை பாதுகாக்க இதயசுத்தியோடு நடவடிக்கை எடுப்பதை நாம் பாராட்ட வேண்டும். சென்னை சங்கமம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இக்கலைகளை சென்னை நகரத் தெருக்கள் மற்றும் பூங்காக்களில் ஆண்டுக்கொருமுறை நடத்தி வருகிறார். நம் வீட்டு சாளரத்தை திறந்து வைத்து வெளிக் காற்று வர அனுமதிக்கலாம். ஆனால் அந்த காற்றே வீட்டில் உள்ள பொருட்களை புயல் போல் அடித்து கீழே தள்ளுகின்ற நிகழ்வாக இருக்கக் கூடாது. முண்டாசுக்கவி பாரதி குறிப்பிட்டவாறு வெளியில் உள்ள கலைகள் நம்மை நோக்கி வரலாம். அதுவே நம்மை ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது. பாப் பாடல்கள் போன்ற வெளிநாட்டு பாடல்களை நாம் ரசிக்கலாம். அவைகள் யாவும் நமது கலைகளாகி விடாது.