சங்கரன்கோவில் நகரத்திலுள்ள நெசவுத் தொழிலாளர்கள், ஒப்பந்த விசைத்தறியாளர்கள் ஆகியோர் கடந்த டிசம்பர் 26 முதல் 9,000 பேர் போராடி வருகின்றனர். தற்போது வழங்கப்படும் கூலி ரூ.120/ ரூ.150/ வரை பெறுவதை, விலைவாசி உயர்வைப் பொறுத்து 40% கூடுதலாக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். 14 தடவை இதுகுறித்து பேசியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. மறியல், கைது என அறப்போராட்டங்கள் நடத்தியும் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

கழக ஆட்சியில் இம்மாதிரி பிரச்சினைகள் வரும்பொழுது இரண்டு நாளில் பேசி தீர்வு காணப்பட்டது உண்டு.

நெசவுத் தொழிலாளர்கள், விசைத்தறியாளர்கள் நலன் கருதி தலைவர் கலைஞர் அவர்களின் 1989 ஆட்சியில் சங்கரன்கோவில் மற்றும் பல்லடத்தில் நெசவாளர்கள் தறி அமைத்து குடிசைத் தொழில் போல் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வளம் கொழிக்கும் வகையில் உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், 500 யூனிட் இலவச மின்சாரமும் நெசவாளர்கட்கு கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.

இவ்வாறு சங்கரன்கோவிலில் போராடும் நெசவுத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தறியாளர்கள், நெசவுத் துணி உற்பத்தியாளர்கள் என முத்தரப்பினரையும் அழைத்துப் பேசி, கழக ஆட்சியில் சுமுக தீர்வு ஏற்பட்டதுபோல் உடனடி தீர்வு காணப்பட வேண்டும்.