மனிதனிடம் மனிதன் காட்டும் மிருகத்தனம்

ஆயிரமாயிரம் பேரை வாட்டி வதைக்கிறது

 மேன் வாஸ்மேடு மௌர்ன் பர்ன்ஸ்


மனித குலத்திற்கு ஒரே வாய்ப்புதான் உள்ளது. அணு ஆயுதங்களா அல்லது அமைதியான வாழ்வா? என்பதுதான் அது.

 முகமது எல். பராடியே (உலக அணுசக்தித் தலைவர்)

கூடங்குளம் போராட்டக் குழுவினரும், தமிழக அமைச்சர், சில கட்சித் தலைவர்களும் டில்லியில் பிரதமரை சந்தித்த பொழுது, பராமரிப்பு பணிகள்தான் கூடங்குளத்தில் நடைபெறுகிறது என்று பிரதமர் சொல்லி உள்ளது வேதனை தருகின்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று முதலில் சொல்லிவிட்டு, இந்தப் போராட்டத்தின் வேகத்தை அறிந்து மறுநாளே தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினார். பிரதமரின் தூதராக நாராயணசாமி கூடங்குளத்திற்கு உடனே சென்று அங்கு போராடும் மக்களை சந்தித்து பேசினார். தமிழக அமைச்சரவையும் ஜெயலலிதா தலைமையில் கூடி அணு மின் நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. ஐ.நா. கூட்டம் முடிந்து பிரதமர் நாடு திரும்பியபின் போராட்டக் குழுவினரை சந்திப்பார் என கூறியதன் விளைவாக இன்று (07.10.2011) பிரதமருடனுனான சந்திப்பு நடைபெற்றது. இது வெறும் ஆறுதலாகவே ஆகிவிட்டது. இப்பிரச்சினையில் தமிழக அரசின் உறுதிமொழிக்கு ஒப்ப என்ன மேல் நடவடிக்கை என்ன என்பது கேள்விக் குறியாகிவிட்டது. 

பிரதமர் கூடங்குளத்தில் பராமரிப்பு பணிகள்தான் நடைபெறுகிறது என முரண்பாடாக எப்படி சொன்னார் என்பது வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது. இன்னும் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் துவங்கப்படாமல் இருக்கும்பொழுது, அங்கு பராமரிப்பு பணிக்கு என்ன தேவை உள்ளது. பிரதமரின் இந்த பதில் பொறுப்பானதா என்பது விளங்கவில்லை. இடிந்தகரையில் இந்த திட்டத்தை எதிர்த்து 12 நாட்கள், 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபொழுது, தினமும் 10,000க்கு மேல் மக்கள் திரளாக போராடியதை தடுக்கவே மத்திய மாநில அரசுகள் பசப்பு உறுதி மொழிகளை கொடுத்தனவா? மின்சார கனவுக்காக மக்களின் பாதுகாப்பும், அமைதியான வாழ்வும் அழியக் கூடங்குளம் திட்டத்தை அனுமதியோம் என்ற போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறுத்த உறுதி மொழிகள் அளிக்கப்பட்டதா? தெற்குச் சீமையில் அமைதியான கடற்கரை பகுதிகளான வேம்பாரிலிருந்து, தூத்துக்குடி, பழைய காயல், புன்னைக் காயல், வீரபாண்டிய பட்டினம், திருச்செந்தூர், ஆலாந்தளை, குலசை, மணப்பாடு, பெரியதாளை, உவரி, கூத்தங்குடி, இடிந்தகரை, பெருமணல், முட்டம் என கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் அரசுகளின் உறுதிமொழிகளை நம்பி செவி சாய்த்தனர். ஆனால் பிரதமர், தன்னை சந்தித்த குழுவினரிடம் தெரிவித்த வார்த்தைகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இனிமேல் துவங்க இருக்கும் ஆலையை பராமரிக்கப் போகிறோம் என்று சிறுபிள்ளையை ஏமாற்றிய கதையாக உள்ளது பிரதமரின் வாக்கு. இதற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

கூடங்குளம் திட்டம், விஜயாபதி, செட்டிக்குளம், கூடங்குளம் என்ற கிராமங்களில் உள்ள பருப்பு, பருத்தி பயிர்கள் மற்றும் புளியமரம் நிறைந்த வானம் பார்த்த பூமியில் உள்ள நிலத்தில் வானுயர எழுந்து நிற்கிறது. 1985இல் திட்டமிடப்பட்டு, 1988இல் ஒன்றுபட்ட சோவியத் யூனியனாக இருந்தபொழுது ராஜிவ் காந்தி கோர்பச்சேவ் ஒப்பந்தத்தில் ரஷ்ய தொழில் நுட்பம் மூலம் அணுமின் உற்பத்திக்கு இந்தத் திட்டம் இறுதியாக்கப்பட்டது. அப்பொழுதே போராட்டங்கள் எழுந்தன. அந்தச் சூழலை அறிந்து பிரதமர் ராஜிவ் காந்தி துவக்க விழாவுக்கு வரமுடியாத நிலையும் ஏற்பட்டது. அந்த சமயம்தான் ராஜிவ் காந்தி, எம்.ஜி.ஆர். இறந்தவுடன் தமிழகத்தில் தரை வழியாக சுற்றுப்பயணங்களை பலமுறை மேற்கொண்டார். இந்தப் பிரச்சினையில் உள்ள அபாயங்களை அறிய குழு அமைத்து முடிவுக்கு வரவேண்டும் என 1989இல் அமைந்த தி.மு.க. அரசு குறிப்பிட்டது. இதற்கிடையில் சோவியத் யூனியன் சிதறுண்டு பல்வேறு நாடுகளாக மாறியது. இதனால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது. திரும்பவும் 1997இல் தேவகவுடா பிரதமராக இருந்தபொழுது இரண்டாவது ஒப்பந்தம் கையொப்பமானது. அதற்குப் பிறகு பணிகள் வேகமாக நடைபெற்றன. ரூ.13,500 கோடியில் திட்ட மதிப்பீட்டில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டு விரைவில் செயல்பட இருந்தது.

கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்கும் பொழுது மக்களின் கருத்துகளை அரசு நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், இதுகுறித்தான முழு விவரங்களை மக்களுக்கு புரிதலோடு சொல்லவில்லை. கூடங்குளம் வட்டார மக்களுக்கு 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென்றும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடீநீர் கிடைக்குமென்றும் உறுதி மொழிகள் கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தால், இவ்வட்டார மக்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அது எதுவும் நடைபெறவில்லை. வெறும் 35 பேருக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்கள் எல்லாம் வடபுலத்தைச் சேர்ந்தவர்கள். பேச்சிப் பாறை அணையிலிருந்து குடிநீரும் வரவில்லை. சமீபத்தில் அப்பகுதி மக்களிடம் பேரிடர் வகுப்புகள் நடத்தப்பட்டபொழுது, ஆபத்து வந்தால் மூக்கு, கண், காது ஆகியவற்றை அடைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவ்விடத்திலிருந்து வெளியேறி விடுங்கள் என சொல்லிய பொழுதுதான் அங்குள்ள மக்கள் பீதியுடன் விழித்துக் கொண்டனர். அதன் பின்தான் முச்சந்தி, டீக்கடை பிரச்சாரமாக இருந்த நிலை மாறி, போர் குணத்தோடு எழுந்தனர். இந்த போராட்டத்தில் அம்மக்களின் உரிமைக் குரல் சென்னை கோட்டைக்கும், டெல்லி செங்கோட்டைக்கும் அறைகூவலாக கேட்டது.

இந்த அணுமின் நிலைய இயக்குநர் பாலாஜி, கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாவது தலைமுறையின் தொழில் நுட்பத்தால் இத்திட்டம் நிறுவப்பட்டது; அதனால் ஆபத்து இல்லை என்று கூறினாலும், அது வெறும் ஒப்புக்கு சொல்கிற வாதமாக உள்ளது. பல அணு விஞ்ஞானிகளும் இதே கருத்தை சொல்கின்றனர். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. இன்னொரு பக்கத்தையும் பார்த்து முடிவுக்கு வருவதே நல்லது. அந்த வகையில் இத்திட்டத்தால் ஏற்படும் பாதக விஷயங்களை அலச வேண்டியது அவசியமே. விஞ்ஞானிகள் தங்களுடைய கருத்துகளை சொன்னாலும், இயற்கையை எதுவும் விஞ்ச முடியாது என்பதுதான் நியதி. கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.

சோவியத் நாட்டில் உக்ரைனின் செர்னோபிலில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு எவ்வளவு சேதாரம்? 15 வருடங்களுக்கு முன்னால் 3,50,000 பேர் அங்கிருந்து வெளியேறினர். 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கதிர் வீச்சால் லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். புற்று நோய் வந்து தொடர்ந்து மரண வாயில் வரை சென்றனர். அதே நாட்டில் பெறப்பட்ட இந்த தொழில் நுட்பம் எப்படி பாதுகாப்பாக இருக்கும். செர்னோபில் கதிர் வீச்சு தாக்கம் இன்றும் உக்ரைனில் உள்ளது. இந்த நாசகார சக்தியை நாமே நமக்காக வாங்கிக் கொள்ள வேண்டுமா என்பதுதான் கேள்வி. ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வெடிப்பை விட 40 மடங்கு செர்னோபில் கதிர்வீச்சு அதிகமானது. உலக அளவில் நாடுகள் அணு உலை வேண்டாம். முடிந்தளவு காற்றாலை, சூரிய சக்தி, கடல், குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியுமா என நினைக்க ஆரம்பித்து விட்டன. சுவிடன், பின்லாந்து, ஆஸ்திரியா, நார்வே, பல்கேரியா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஸ்லோவேனியா போன்ற நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் அணு உலைகளை தவிர்க்க வேண்டுமென கூறுகின்றன. பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அணு உலை திட்டத்திற்கு தாங்கள் கொண்டிருந்த ஆதரவு நிலையை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன. மேலைநாடுகள் தங்களிடம் நிலக்கரி வளம் இல்லையென்றாலும் காற்றாடி, கடல் நீர், தாவரக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறைக்கு மாற்றி கொண்டன. 20 ஆண்டுகள் கட்டமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து, 1000 ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அணு உலைகளின் உற்பத்தி வெறும் 4 சதவீதம் என்பதற்காக ஜெர்மனி 2022க்குள் அனைத்து அணு உலைகளையும் மூட முடிவு செய்துவிட்டது. அப்படிப்பட்ட ஆபத்தான அணு உலைகளை நாம் மட்டும் அமைக்க வேண்டுமா?

கடந்த 2011 மார்ச்சில் ஜப்பானின் புகுஷிமாவில் ஏற்பட்ட சுனாமியால் யுரேனியம் உருகி, கதிர் வீச்சு ஏற்பட்டு கடல் நீர் மூழ்கிய பின்னும் வெப்பத்தின் தாக்கத்தால் மனித இனம் அழிந்ததை மறக்க முடியுமா? இன்றைக்கும் கதிர்வீச்சால் (22.09.2011) புகுஷிமாவில் 10 பேர் பலியாகி உள்ளனர் என்ற செய்தி வந்துள்ளது. இது தொடர்கதையாகவே உள்ளது. விஞ்ஞானத்தில் மேம்பட்ட நாடுகளே பாதிக்கப்படும்பொழுது, நமக்கு அபாயகரமான இந்தச் சூழல் தேவைதானா என்பதுதான் இன்றைக்குள்ள கேள்வி. ஆயிரம் சப்பைக் கட்டுகள் சொல்லலாம். நாட்டின் வளர்ச்சி, மக்கள் தேவைகளை பூர்த்தி செய்தல் என்று. மின்சாரத்திற்காக மக்களல்ல; மக்களுக்காகத்தான் மின்சாரம் என்பதை உணர வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் 3.5 சுற்றளவு கொண்ட உருளைகளில் யுரேனியம் அடைக்கப்பட்டு உலைகளின் மத்தியில் வைக்கப்படுன்றது. அதிலிருந்து அணு பிளப்பதால் அதிக வெப்பம் வெளிப்படும். இந்த வெப்பத்தை நீரில் செலுத்தி, அதிலிருந்து ஜெனரட்ரில் உள்ள மின்காந்த கம்பிகள் மூலம் மின்சாரம் பெறப்படும். ஒரு அணு பன்மடங்கு பிளந்து கொண்டே இருப்பதால், யுரேனியம் உள்ள உலையிலிருந்து அதிகமாக வெப்பம் உருவாகும். தற்போது இந்த உலைகளை குளிர்விப்பதற்காக திரவ உலோகம் பயன்படுத்தப் படும். இந்நிலையில் சுற்றுச் சூழலை பாதிக்கக் கூடிய கழிவுகள் வெளியேறும். யுரேனிய உருளை சுமார் 18 மாதங்களுக்கொருமுறை மாற்றி, அவற்றை பெரிய நீர் நிலைகளில் அடைத்து விடும். இதனால் கதிரியக்கம் ஏற்படும். அதை எங்கே விடுவது? மண்ணில் புதைக்க வேண்டும் அல்லது கடலின் ஆழத்தில் கொண்டு போய் போட வேண்டும். இருப்பினும் கூட அதன் தாக்கம் 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து கொண்டே இருக்கும். அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஒருபக்கம் அணு ஆலை வெடித்தாலோ, சேதமானாலோ பெரும் ஆபத்து உண்டாகும். அதேபோல இந்த ஆலை செயல்பட ஆரம்பித்தால் வெளியேறும் அணுக் கழிவுகளாலும் பெரும் பிரச்சினை ஏற்படும். முதலில் அணுக் கழிவுகள் ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்படும் எனவும், பின்னாளில் அது இங்கேயே மறுசுழற்சி செய்யப்படும் என கூறுகின்றனர். வெளியேறும் 900 டன் கழிவுகளை பாதுகாப்பது பெரும்பாடாகும். இதை 24,000 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும். சாதாரண சின்ன அளவு புளுட்டோனியத்திலிருந்து கோடிகணக்கான மக்களுக்கு புற்றுநோய் மட்டுமல்லாமல் வேறு ஆபத்துகளும் ஏற்படும். இந்த கழிவுகளை பலமான கான்கிரிட்டுகள் அமைத்து பூமிக்கு கிழே புதைத்தாலும் கதிரியிக்கம் தணியும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஒருபக்கம் அணு உலையால் பயங்கர விபத்து ஏற்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள்; மறுபக்கத்தில் அணு உலை செயல்பட்டு அதனால் வரும் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள். இப்படிப்பட்ட வம்புகள் நமக்கு வேண்டுமா? 

இந்தியாவில் உள்ள அணு உலைகள்

பெயர் மாநிலம் அணு உலைகள் எண்ணிக்கை உற்பத்தி மையம் உற்பத்தித் திறன் (மெகாவாட்)

தாராப்பூர் மகாராஷ்டிரா 4 10 யூனிட்டுகள் 1400

ராஜஸ்தான் ராஜஸ்தான் 6 21 யூனிட்டுகள் 1180

கல்பாக்கம் தமிழ்நாடு 2 3 யூனிட்டுகள் 440

கைகா கர்நாடகம் 4 10 யூனிட்டுகள் 880

நரோரா உத்தரப்பிரதேசம் 2 3 யூனிட்டுகள் 440

காக்ராபார் குஜராத் 2 3 யூனிட்டுகள் 440

மெத்த அணு உலைகள்

மொத்த உற்பத்தி 20

4780

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள வி.வி.இ.ஆர்.100 போன்ற உலைகள் நம்பகத்தன்மையற்றது. இந்த அணு உலைகளில் உள்ள கொதிகலன்கள் எதிர்காலத்தில் கொலைக்கலன்களாக மாறிவிடக் கூடாது. இந்தியாவில் 20 அணு உலைகள் அணு உற்பத்தி சம்பந்தமான கேந்திரங்கள் இருந்தாலும், தாராபூர் பழமையானது. அங்கும் தமிழகத்தில் உள்ள கல்பாக்கத்தில் உள்ள நிலையத்தாலும் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பால் எலும்பு சம்பந்தமான புற்றுநோய்கள், ஜீரண கோளாறுகள், மர்மமான மரணங்கள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. காய்காவில் உள்ள மற்றொரு அணு உலையில் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை ஓரத்திலிருந்து சுரண்டை வரை நில அதிர்வுகளும், பூமிக்குக் கீழ் வெப்ப பாறை குழம்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளன. அவ்வாறு நில அதிர்வுகள் ஏற்பட்டால் கூடங்குளத்திற்கும் சேர்ந்துதான் அந்த பாதிப்பு வரும். நான்குநேரியில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மனும், மகேந்திரகிரியில் உள்ள அணு மின் சம்பந்தமான கேந்திரமும் அருகில் உள்ளன. இவை இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் வடக்கே மதுரை, கிழக்கே வங்கக் கடலில் சுனாமி, தெற்கே இலங்கை, மேற்கே திருவனந்தபுரம், மேற்குத் தொடர்ச்சி மலை என சேதாரம் ஏற்பட்டால் தாங்க முடியுமா? எதிர்காலத்தில் மீள முடியாத சோக நிகழ்வுகள் ஏற்படும். போபாலில் கார்பைடு நிறுவனத்தில் என்ன நடந்தது? இன்றைக்கு வரை அதிலிருந்து மீள இயலவில்லை. 

கூடங்குளத்தில், ஐயோடின் 131, 132, 133 ஐசோடோப்புகள் வெளிப்பட்டாலே ரோண்டியம், டிரைடிரியம், டெலுரியம் போன்றவை வெளிப்படும். இந்த கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பைத் தீர்க்கவே முடியாது. இப்படியான நடவடிக்கைகளில் நமக்கு வேண்டுமா? இங்குள்ள மக்கள் கடலை நம்பித்தான் வாழ்கின்றனர். இந்த ஆலையால் மீன் வளமும் பாதிக்கும். கூடங்குளத்தில் நடைபெற்ற சாதாரண சோதனை ஓட்டத்திற்கே அந்த வட்டார மக்கள் பயந்தனர். குழுந்தைகள் கதறி அழுதனர். இப்படி தினமும் சகிக்க முடியாத சத்தம் கேட்டால் எப்படி மக்கள் கூடங்குளம் பகுதியில் வாழ முடியும். வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கின்ற திட்டத்தை எதிர்த்துதான் அங்குள்ள மக்கள் போர்க்கோளம் பூண்டனர். தொலைவிலிருந்து அணு உலை குறித்து ஆயிரம் சமாதானங்கள் சொல்லலாம்.

உலகத்தில் இன்றைக்கு அணு உலை ஆலைகள் மூடப்பட்டு கொண்டு வரும்பொழுது நாம் மட்டும் கடையைத் திறப்பது வேதனைத் தருகிறது. மேற்கு வங்கத்தில் ரஷ்ய நாட்டின் அணு மின் நிலையம் வருவதை மம்தா பானர்ஜி நிறுத்திவிட்டார். கேரளத்தில் மக்கள் எழுச்சியால் அணு மின் நிலையம் வருவது தடைப்பட்டது. ஆந்திரத்திலும், மகாராஷ்டிராவிலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு இருக்கும்பொழுது நாம் மட்டும் கூடங்குளத்திற்கு ஆமாம் சாமி போடுவது சரிதானா? கொதித்தெழும் மக்களுக்கு எதிராக கொதிக்கும் கூடங்கூளம் கூடாது என்று ஒருமித்த குரலாக இருக்க வேண்டும்.

அணு உலைகளை முழுமையாக கட்டமைப்பதற்கு 20 ஆண்டுகளாகின்றன. ஆனால் இவற்றின் ஆயுட்காலமோ வெறும் 40 ஆண்டுகள்தான். இதில் ஏதாவது விபத்தோ கதிரியக்கமோ ஏற்பட்டால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து கொண்டிருக்கும்.

****

வேலி கருவேலி மரங்களை எரித்து, ஆவியாக்கி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை தமிழகத்தின் கோவை மாவட்ட, பல்லடத்தில் உள்ள சுல்தான்பேட்டையில் இயங்கி வருகிறது. அதே போன்று ஆலைகளை தமிழகத்தின் மற்ற பஞ்சாயத்துகளில் துவக்கி மின்சாரத்தை பெற முடியும். இத்தகைய ஆலைகளை அதிக அளவில் துவக்க ஆந்திர அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

*****

நாகர்ஜுனசாகர் (ஆந்திரா), கைக்கா (கர்நாடகா), பூதகான்கெட்டு (கேரளா) ஆகிய இடங்களில் அணுமின் நிலையம் அமைக்கலாம் என கூறப்பட்டு, அங்குள்ள மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. அதேசமயம், 1992இல் கூடிய தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைத்து அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை பங்கு போட்டு கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

****

உலக அளவில் அணுமின் உற்பத்திக்கென அதிக அளவில் உதவி செய்யப்பட்டாலும், அதன் உற்பத்தி என்னவோ நான்கு சதவீதம் மட்டுமே.

****

கூடங்குளத்தை சுற்றி சுமார் 3 கி.மீ. வரை கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.

****

இந்நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுகளை ரஷ்யாவுக்கு எடுத்து செல்லலாம் என்று சொல்லப்பட்டு, இந்தியாவிலேயே மறுசுழற்சி செய்யப்படும் என்று கூறப்படுவதுடன், அதற்கான உலையும் கூடங்குளத்திலேயே அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையம் 30 ஆண்டுகள் செயல்பட்டால் 900 டன் கழிவுகளை வெளியேற்றும். இதனை 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு நாம் பாதுகாத்தாக வேண்டிய சூழல் உருவாகும். இல்லையேல் கடுமையான விளைவுகள் ஏற்படும். இந்த கழிவுகளிலிருந்து அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் புளூட்டோனியம் கிடைக்கிறது. 3 டீஸ்பூன் புளுட்டோனியத்தைக் கொண்டு சுமார் 900 கோடி பேருக்கு புற்று நோயை உருவாக்கலாம்.

*****

கூடங்குளத்தில் அமையவிருந்த இந்த அணு மின் நிலையத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் அங்கிருந்து 140 கி.மீ. வரை உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் பாதிக்கப்படும். இந்த வகையில் திருநெல்வேலி 77 கி.மீ., தூத்துக்குடி 115 கி.மீ., சாத்தூர் 140 கி.மீ., கேரளத்தின் திருவனந்தபுரம் 140 கி.மீ. என அனைத்து நகரங்களும் அழிவின் எல்லைக்குள் வருகின்றன.

*****

அணுக் கழிவிலிருந்து எரிபொருளை பிரித்தெடுக்க பல ஆண்டுகாலம் ஆகலாம் என்பதால், அதற்கு பதிலாக காங்கிரிட்களை கொண்டு சமாதி போன்று அமைக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் 130 ஆண்டுகளுக்கு பிறகுதான் கதிரியக்கம் தணியும். இந்திய அணு உலைகளில் உள்ள கழிவுகளை அழிக்க நம்முடைய விஞ்ஞானிகள் இன்று வரை வழி கண்டுபிடிக்கவில்லை என்பது அதிர்ச்சியான செய்தியாகும். விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற்ற ஜெர்மனி 2022க்குள் அனைத்து உலைகளையும் மூட முடிவு செய்துள்ளது. இத்தாலியில் 90 சதவீத மக்கள் அணு உலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.