தலைவர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் நாட்டுடைமையாக்கப்பட்ட பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின், 1950இல் வெளியிடப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி வீரசரிதம் என்ற இரண்டு தொகுதிகளை தலைவர் கலைஞர் அவர்களின் அணிந்துரையுடன் மூன்றாம் பதிப்பாக அடுத்த மாதம் உயிர்மை பதிப்பகம் மூலம் வெளியிட இருக்கின்றோம். அந்த நூலுக்காக மேலும் சில விவரங்களை அறிய பாஞ்சாலங்குறிச்சி சென்றபொழுது, கேரள பத்தினம்திட்டாவைச் சேர்ந்த எஸ்.முரளிதரன் என்பவரை சந்திக்க நேர்ந்தது. அவர் டில்லி ஜே.என்.யூ.வில் படித்தவர். ஜெயப்பிரகாஷ் நாராயண் மீது பற்று கொண்டவர். அரசியல், தத்துவம், பொருளாதாரம் பற்றி மலையாளம் கலந்த ஆங்கிலத்தில் ஆழமாக பேசினார். அவர் நாளந்தா, காசி, அஜந்தா, எல்லோரா, மாமல்லபுரம் என்று ஊர் சுற்றி வரும் ஒரு நாடோடி. பார்ப்பதற்கு எளியவராக இருந்தாலும் மெத்த படித்தவர். தம்மை ஏதாவது பேருந்து நிலையத்தில் சேர்த்து விடுங்கள் என அவர் கேட்டதற்காக,   தூத்துக்குடி வரை பிரயாணம் செய்த பொழுது தமிழக அரசியலையும், தலைவர் கலைஞர் அவர்கள் குறித்தும் பேசியது மிக ஆச்சரியத்தைத் தந்தது.

அவர் குறிப்பிட்டது: அரசியலில் நீண்ட நெடுங்காலமாக ஒருவர் துருவ நட்சத்திரமாக, ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருந்தாலும், நிதானத்துடன் மக்கள் பணியாற்றுபவர் கலைஞர் மட்டும் தான். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் கலைஞரை சுற்றியே தமிழக அரசியல் உள்ளது என்று பல செய்திகளோடு பேசியது வியப்பைத் தந்தது. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்பொழுது, எவரும் சாதிக்காத திட்டங்களை நடைமுறைபடுத்தியது மட்டுமல்லாமல், மற்ற மாநில முதல்வர்களுக்கு முன்னோடியாக தலைவர் கலைஞர் அமைந்துள்ளார் என்று முரளிதரன் குறிப்பிட்டார். கை ரிக்ஷா முறையை ஒழித்து சைக்கிள் ரிக்ஷா வழங்கியது, தொழுநோயாளிகளுக்கு பாதுகாப்பு திட்டம், குடிசை மாற்று வாரியம், கண்ணொளி திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்   பம்பு செட், உழவர் சந்தை, அவசர ஊர்தி 108, இலவச தொலைக்காட்சி, கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என அனைத்து திட்டங்களையும் பற்றி அண்டைய மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பட்டியல் போட்டு பெருமையாக பேசியதை கேட்டபொழுது மகிழ்ச்சியாக இருந்தது.

இன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்களின் வயதுக்கு ஒப்ப இந்திய அரசியலில் வாஜ்பாய் ஒருவர் மட்டும்தான் இருக்கின்றார். இன்றைக்கும் ஆட்சி லகானை தன்னிடம் லாவகமாக வைத்துக் கொண்டு, சுறுசுறுப்பாக மக்கள் பணியாற்றுவது மட்டுமல்லாமல் இலக்கிய பணி, கட்சி நிர்வாகம் என அனைத்தையும் கவனிப்பது எளிதான செயலல்ல. அதை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துவது கலைஞர் ஒருவரால்தான் முடியும் என முரளிதரன் குறிப்பிட்டார். மேலும் கடந்த காலங்களில், காஷ்மீரில் ஷேக் அப்துல்லா, வங்கத்தில் ஜோதிபாசு, ஒரிசாவில் பட்நாயக், எங்கள் மாநிலத்தில் ஈ.எம்.எஸ்., கருணாகரன், ஆந்திரத்தில் சில காலம் என்.டி.ராமாராவ், ராஜஸ்தானில் மோகன்லால் சுகாடியா என மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்வர்கள் இருந்தனர். ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் ஒரே நோக்கில் கடமையை ஆற்றியது கலைஞர் ஒருவர் மட்டுமே. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து அரசியலையும் இலக்கியத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பது கலைஞர் அவர்களின் சிறப்பம்சம். எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஈ.எம்.எஸ்.ஸின் எழுத்துக்கள் ஒருபுறமிருந்தாலும், கலைஞரின் எழுத்துகள் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்று குறிப்பிட்டார். இவ்வாறெல்லாம் முரளிதரன் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி குறிப்பிட்டு, கலைஞருக்கு நிகர் கலைஞரே என கூடஞுணூஞு டிண் ணணிணஞு tணி ட்ச்tஞிட ஓச்டூச்டிஞ்ச்ணச்ணூ; tடஞுணூஞு ணஞுதிஞுணூ தீச்ண், tடஞுணூஞு ணஞுதிஞுணூ தீடிடூடூ ஞஞு என ஆங்கிலத்தில் சொன்னபொழுது மிகவும் பெருமையாக இருந்தது.

தமிழகத்தில் நேற்று வரை அரிதாரம் பூசி இன்று வீதியில் வந்து மக்களுக்கு இலவச போதனைகள் சொல்பவர்கள், கலைஞரின் முகவரி பெற்று அரசியலுக்கு வந்தவர்கள் பேசும் பேச்சுகளும், தன்னிடம் உள்ள கொடிய குறைகளை மறைத்து தினமும் நித்தம் அறிக்கை மூலம் பிதற்றுகின்ற சிலரும் தமிழ்நாட்டில் இருக்கும்பொழுது, முரளிதரன் போன்ற பிற மாநிலத்தை சேர்ந்தவர் தலைவர் கலைஞர் அவர்களை பற்றிய உண்மைகளை பேசுவதுதான் மெய்யான நிலை. என்றைக்கும் வாய்மையே வெல்லும் என்பதுதான் இயற்கை நெறி.

கதிரவனை பார்த்து எது குரைத்தாலும் கதிரவனின் ஒளியை மறைக்க முடியாது. நேற்று முளைத்த காளான் போன்று பலர் வந்து ஆயிரம் பிதற்றினாலும், அக்கப்போர்கள் செய்தாலும் தலைவர் கலைஞர் அவர்கள் அதையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, முதல்வராக, கோடிகணக்கான உடன்பிறப்புகளுக்கு வழிகாட்டியாக, போராளியாக, இந்திய அரசியல் வானில் முதுபெரும் தலைவராக விளங்குகின்றார். பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, ஜெயபிரகாஷ் நாராயண், ஷேக் அப்துல்லா, காயிதே மில்லத், லோகியா, இந்திரா காந்தி போன்ற பல ஆளுமைகளிடம் நட்பு கொண்டிருந்து, இன்றைக்கு உள்ள புதிய தலைமுறைகளையும் சந்தித்துக் கொண்டிருப்பது தலைவர் கலைஞர் அவர்கள் மட்டுமே. இதனால் தான் தலைவர் கலைஞருக்கு நிகர் கலைஞரே என்ற நிலை குன்றின் மேல் விளக்காக என்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.